என் மலர்tooltip icon

    பாகிஸ்தான்

    • சுற்றுலாப் பயணிகள் 18 பேர் லாகூரில் இருந்து பனி படர்ந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
    • விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கல்.

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள கில்கிட் பால்டிஸ்தான் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

    டயமர் மாவட்டத்தில் உள்ள தளிச்சி பகுதிக்கு அருகே காரகோரம் நெடுஞ்சாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் 18 பேர் லாகூரில் இருந்து பனி படர்ந்த மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.

    இதில், மூன்று பெண்கள், ஒரு குழந்தை மற்றும் ஒரு ஆண் உள்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்த 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளார். மேலும், விபத்துக்கான காரணம் கண்டறிய விசாரணை நடத்தவும் உத்தரவிட்டார்.

    • முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது.
    • நடுத்தர கால பொருளாதார சவால்களை உடனடியாக சமாளிக்க உதவும்.

    பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வர பாகிஸ்தான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதில் சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எப்.) கடன் வழங்கும்படி கோரிக்கை விடுத்தது. கடன் வழங்க ஐ.எம்.எப். பல்வேறு நிபந்தனைகளை விதித்ததையடுத்து பேச்சு வார்த்தை நடத்தி வந்தது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது.

    முதல் கட்டமாக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.9,800 கோடி) வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள தொகை அடுத்த 9 மாதங்களில் வழங்கப்படும். இது தொடர்பாக பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் கூறும்போது, இந்த கடன் உதவி பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் ஒரு முக்கிய படியாகும். இது நடுத்தர கால பொருளாதார சவால்களை உடனடியாக சமாளிக்க உதவும்" என்றார்.

    • ஒரே ஒருவர் மட்டும் சுவர் ஏறிக் குதித்து உயிர் தப்பியிருக்கிறார்.
    • வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்ததால் தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.

    லாகூர்:

    பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம், லாகூர் நகரில் இன்று அதிகாலையில் ஒரு வீட்டில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவி வீடு முழுவதும் பற்றி எரிந்ததால், வீட்டினுள் தூங்கிக்கொண்டிருந்தவர்களால் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தி, மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சர்ந்த கணவன், மனைவி, குழந்தைகள் உள்பட 10 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். ஒரே ஒருவர் மட்டும் சுவர் ஏறிக் குதித்து உயிர் தப்பியிருக்கிறார்.

    தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டில் இருந்த பிரிட்ஜ் கம்ப்ரசர் வெடித்ததால் தீப்பிடித்ததாக தெரியவந்துள்ளது.

    இந்த விபத்து பற்றி விரிவான விசாரணை நடத்த பஞ்சாப் இடைக்கால முதல்வர் மோஷின் நக்வி உத்தரவிட்டிருக்கிறார்.

    • அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஆகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும்.
    • மறுவருடம் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் குழந்தையான சிந்து பிறந்துள்ளார்.

    பாகிஸ்தானின் லர்கானா பகுதியை சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்கள், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருக்குமே பிறந்த தேதி ஒரே நாளாகும். அதாவது ஆகஸ்ட் 1-ந் தேதி அன்று இந்த 9 பேருமே பிறந்துள்ளனர்.

    இது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தை சேர்ந்த 5 குழந்தைகள் இந்த சாதனையை வைத்திருந்தனர். அவர்கள் பிப்ரவரி 20-ந் தேதி பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர். தற்போது அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

    அமீர் அலி- குதேஜாவின் திருமண நாளும் ஆகஸ்ட் 1 என்பது கூடுதல் சிறப்பாகும். இவர்கள் 1991-ம் ஆண்டு தங்களது பிறந்தநாள் அன்று திருமணம் செய்து கொண்டனர். மறுவருடம் ஆகஸ்ட் 1-ந் தேதி முதல் குழந்தையான சிந்து பிறந்துள்ளார். அடுத்தடுத்த குழந்தைகள் பிறப்பும் ஆகஸ்ட் 1-ந் தேதியாக இருந்ததை கடவுளின் பரிசு என்று தம்பதியினர் கூறினார்கள்.

    • உலக கோப்பை தொடரில் பல்வேறு நாடுகளின் அணிகள் பங்கேற்கின்றன. போட்டி அட்டவணையும் வெளியானது.
    • உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவில் 5 போட்டிகளில் விளையாடுகிறது பாகிஸ்தான்.

    லாகூர்:

    50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபரில் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் 5 போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியாவில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா என்பதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது.

    இதற்காக பாகிஸ்தான் அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் பாகிஸ்தான் விளையாட்டுத்துறை மந்திரி, வெளியுறவுத் துறை மந்திரி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு எடுக்கும் முடிவின் அடிப்படையிலேயே இந்தியாவில் நடக்கும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்குமா, பங்கேற்காதா என்பது தெரியவரும்.

    இந்நிலையில், பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பையில் இந்தியா பங்கேற்காவிட்டால், இந்தியாவில் நடைபெறும் உலக கோப்பையில் பாகிஸ்தான் பங்கேற்காது என அந்நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி இஷான் மசாரி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்த விவகாரத்தில் என் கருத்து என்னவென்றால் ஆசிய கோப்பையை பொதுவான மைதானத்தில் (பாகிஸ்தான் அல்லாமல் இலங்கையில்) விளையாட வேண்டுமென இந்தியா கோரிக்கை வைக்கும்போது, உலக கோப்பையையும் பொதுவான மைதானத்தில் (இந்தியாவில் அல்லாமல் இலங்கை போன்ற பிற நாடுகளில்) விளையாட வேண்டுமென நாங்கள் கோரிக்கை விடுப்போம். இந்த விவகாரத்தில் 11 மந்திரிகள் கொண்ட குழு ஆலோசனை நடத்தி முடிவை பிரதமர் ஷெரிப்பிடம் தெரிவிப்போம் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு செல்லுமா என்பது குறித்து பிரதமர் தான் இறுதி முடிவு எடுப்பார் என தெரிவித்தார்.

    • கடந்த மே மாதம் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
    • தற்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து இம்ரான்கானுக்கு எதிரான வழக்குகள் 150-ஐ நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், தெக்ரீக்-இ-இன்சாப் தலைவருமான இம்ரான் கான் மீது ஊழல், கொலை, பயங்கரவாதம், தேச துரோகம் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    கடந்த மே மாதம் இம்ரான் கான் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அம்மாதம் 8 மற்றும் 9-ந் தேதிகளில் பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சம்பவங்கள் தொடர்பாக இம்ரான் கான் ஆதரவாளர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் இம்ரான் கான் மீது ராணுவ தலைமையகம் தாக்குதல் நடத்தப்பட்டது தொடர்பாக 3 வழக்குகளும், வன்முறை சம்பவங்கள் தொடர்பாக 3 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது. தற்போது பதிவு செய்யப்பட்ட வழக்குகளுடன் சேர்த்து இம்ரான் கானுக்கு எதிரான வழக்குகள் 150-ஐ நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • நிலநடுக்கத்தால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை
    • இந்தோனேசியாவில் சுனாமி அச்சுறுத்தல் இல்லை

    பாகிஸ்தானில் இன்று காலை 5 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நிலஅதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 170 ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் சேதம் ஏற்பட்டதாக தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

    அதேவேளையில் இந்தோனேசியாவில் 5.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஜகர்த்தா நேரப்படி நள்ளிரவு 12.13 மணிக்கு (இந்திய நேரப்படி இன்று அதிகாலை 1.48) ஏற்பட்டுள்ளது. தனிம்பார் தீவு மாவட்டத்தின் வடமேற்கில் 207 கி.மீட்டர் தொலைவில் 131 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கும் ஏற்பட்டுள்ளது.

    இதனால் சுனாமி அலை உருவாவதற்கான வாய்ப்புகள் இல்ல எனவும் தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது.
    • கடந்த மார்ச் மாத நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் தற்போது வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளது. இதனால் அங்கு பணவீக்கம், விலை உயர்வு போன்றவற்றால் ஏழைகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனை சமாளிப்பதற்காக உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்றவற்றிடம் கடன்களை வாங்கி வருகிறது.

    அதன்படி கடந்த மார்ச் மாத நிலவரப்படி சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் 5-வது இடத்தில் பாகிஸ்தான் உள்ளது. சுமார் ரூ.3 லட்சம் கோடியுடன் அர்ஜென்டினா இந்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

    இந்தநிலையில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட சர்வதேச நாணய நிதியத்திடம் மேலும் 3 பில்லியன் டாலர் (சுமார் ரூ.24 ஆயிரம் கோடி) கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டு உள்ளது. இந்த கடனை பெறும்போது சர்வதேச நாணய நிதியத்திடம் அதிகம் கடன் பெற்ற 4-வது நாடாக பாகிஸ்தான் மாறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏழு தொழில் அதிபர்கள் கொண்ட குழுவுடன் ஜாக் மா பாகிஸ்தான் சென்றிருந்தார்
    • தனிப்பட்ட பயணம், அரசு அதிகாரிகளை சந்திக்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது

    இணையதள வர்த்தக விற்பனையில் முன்னணியில் உள்ள சீனாவின் பன்னாட்டு நிறுவனமான அலிபாபா குழுமத்தின் நிறுவனரும், உலகின் பிரபல கோடீஸ்வரர்களில் ஒருவருமான ஜாக் மா, ஜூன் 29 அன்று பாகிஸ்தான் நாட்டிற்கு பயணம் செய்து அங்கு 1 நாள் தங்கியும் இருந்திருக்கிறார் எனும் செய்தி வெளிவந்திருக்கிறது.

    பாகிஸ்தானின் முதலீட்டு வாரியத்தின் (BOI) முன்னாள் தலைவர் முஹம்மது அஸ்பர் அஹ்சன், ஜாக் மா ஜூன் 29 அன்று லாகூர் வந்து 23 மணி நேரம் தங்கியதாகவும், அவர் வருகையின் நோக்கம் ரகசியமாக இருக்கும். அதேவேளையில் வரும் நாட்களில் இது பாகிஸ்தானுக்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தலாம் என அஹ்சன் நம்புவதாக செய்திகள் தெரிவிக்கினறன.

    மாவின் வருகை கண்டிப்பாக தனிப்பட்ட நோக்கங்களுக்காக என்று தெளிவுபடுத்திய அஹ்சன், சீனத் தூதரகத்திற்கு கூட ஜாக் மாவின் வருகை குறித்த விவரங்கள் தெரியாது என ட்வீட் செய்திருக்கிறார்.

    ஜாக் மாவின் வருகையின்போது, அரசு அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடனான தொடர்புகளைத் தவிர்த்து விட்டதாகவும், அவர் ஒரு தனியார் இடத்தில் வசித்ததாகவும், ஜெட் ஏவியேஷன் நிறுவனத்திற்கு சொந்தமான VP-CMA என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் ஜெட் மூலம் ஜூன் 30 அன்று புறப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

    5 சீனர்கள், 1 டென்மார்க நாட்டு தனிநபர் மற்றும் 1 அமெரிக்க குடிமகன் அடங்கிய 7 தொழிலதிபர்கள் கொண்ட குழுவும் ஜாக் மா உடன் சென்றிருக்கிறது. அவர்கள் நேபாளத்தில் இருந்து ஹாங்காங்கின் வணிக விமானப் பிரிவில் இருந்து தனி விமானம் மூலம் பாகிஸ்தானுக்கு வந்ததாக தெரிகிறது.

    சில நாட்களாகவே மா மற்றும் அவரது குழுவினர், பாகிஸ்தானில் வணிகம் செய்ய வாய்ப்புகளை ஆராய்வதாக சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன. அவ்வாறு அவர் வரும்பொழுது பல்வேறு வர்த்தக சபைகளைச் சேர்ந்த முக்கிய தொழிலதிபர்களையும், அதிகாரிகளையும் சந்திக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், அவரின் இந்த சந்திப்பில், எந்தவொரு குறிப்பிட்ட வணிக ஒப்பந்தமும் செய்யப்பட்டதாகவோ அல்லது சந்திப்பு நடந்ததாகவோ எந்த செய்தியும் உறுதிப்படுத்தப்படவில்லை.

    பாகிஸ்தானின் மென்பொருள் துறை சங்கத்தின் (P@SHA) தலைவர் ஜோஹைப் கான் கூறியதாவது:-

    இது ஜாக் மாவின் தனிப்பட்ட வருகையாக இருந்தாலும், சுற்றுலா கண்ணோட்டத்தில் பாகிஸ்தானின் நற்பெயரை அதிகரிக்க உதவியது. பாகிஸ்தான் அதிகாரிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவருடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்திருக்க வேண்டும். தகவல் தொழில்நுட்ப உலகில் அவரது அனுபவத்தைப் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற்றிருந்திருக்கலாம்.'' என்றார்.

    வீழ்ச்சியடைந்து வரும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தாலும், அங்கு அதிகரித்து வரும் விலைவாசி மற்றும் வேலையின்மை ஆகியவற்றின் பின்னணியிலும், ஜாக் மாவின் இந்த வருகை பல யூகங்களுக்கு வழி செய்திருப்பதால், பொருளாதார வல்லுனர்கள் நிலைமையை கூர்ந்து கவனித்து வருகின்றனர்.

    • மாகாண துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

    வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் திருமணம் தொடர்பான தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் உறவினர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்த சம்பவம் மலகாண்ட் மாவட்டத்தின் பட்கேலா தாலுகாவில் நிகழ்ந்துள்ளது. அவர்களது வீட்டிற்குள் நுழைந்த உறவினர்கள் சிலர் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

    இதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் மற்றும் ஆறு ஆண்கள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.

    திருமண தகராறே இந்த கொடூர கொலைக்கு காரணம் என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்த தகவல் கிடைத்ததும், மாகாண துணை ராணுவப் படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, சடலங்களை பிரேதப் பரிசோதனைக்காக பத்கேலா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும், கொலையாளிகளை கைது செய்ய மாவட்டத்தின் அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களும் சீல் வைக்கப்பட்டன.

    குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகளை விரைவுபடுத்துமாறு காபந்து முதல்வர் முகமது ஆசம் கான் காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும் அவர், "குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கப்படும்" என்று கூறினார்.

    • அமெரிக்க-இந்திய கூட்டறிக்கையில் தவறான குறிப்புகள் இருப்பதாக அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டது.
    • இந்தியா எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக மாற்றியுள்ளது” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சென்ற வாரம் அமெரிக்காவில் சுற்று பயணம் மேற்கொண்டார். அப்பொது அவரும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் இணைந்து பாகிஸ்தான் நாட்டின் பயங்கரவாத ஆதரவிற்கு எதிராக ஒரு கூட்டறிக்கை வெளியிட்டனர். இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

    நேற்று மாலை அமெரிக்க துணைத் தூதர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வரவழைக்கப்பட்டு, ஜூன் 22ம் தேதி அமெரிக்க-இந்திய கூட்டறிக்கையில், தேவையற்ற, ஒருதலைப்பட்சமான மற்றும் தவறான குறிப்புகள் இருப்பதாகவும், அதுகுறித்து பாகிஸ்தானின் கவலைகள் மற்றும் அதிருப்தி குறித்து தெரிவிக்கப்பட்டது என பாகிஸ்தான் தெரிவித்தது.

    பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு நன்றாக முன்னேறி வருவதாகவும், பாகிஸ்தான்-அமெரிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த, பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை மையமாகக் கொண்ட சூழலை உருவாக்குவது அவசியம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையானது, பாகிஸ்தானை எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடாக சித்தரித்துள்ளது என்று பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியது குறிப்பிடத்தக்கது.

    • அல் ஆசியா ஆலை ஊழல் வழக்கில் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
    • மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் பெற்று லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப் இப்போது வரை நாடு திரும்பவில்லை.

    லாகூர் :

    பனமாகேட் ஊழல் வழக்கில் கடந்த 2017-ம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போதைய பிரதமர் நவாஸ் ஷெரீப்பை தகுதி நீக்கம் செய்து, அந்த நாட்டு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வழங்கியது.

    அதை தொடர்ந்து நவாஸ் ஷெரீப் மீதான பல்வேறு ஊழல் வழக்குகளை அந்த நாட்டின் தேசிய பொறுப்புடமை கோர்ட்டு விசாரிக்க தொடங்கியது.

    இதில் அல் ஆசியா ஆலை ஊழல் வழக்கில் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் மருத்துவ சிகிச்சைக்காக ஜாமீன் பெற்று லண்டன் சென்ற நவாஸ் ஷெரீப் இப்போது வரை நாடு திரும்பவில்லை.

    ஆனாலும் அவர் மீதான ஊழல் வழக்குகளை தேசிய பொறுப்புடமை கோர்ட்டு தொடர்ந்து விசாரித்து வருகிறது. அந்த வகையில் 37 ஆண்டுகளுக்கு முன்பு லஞ்சம் வாங்கி கொண்டு அரசு நிலத்தை தனியாருக்கு விற்றதாக நவாஸ் ஷெரீப்புக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கும் விசாரிக்கப்பட்டு வந்தது.

    இந்த வழக்கின் மீதான இறுதி விசாரணை நேற்று நடந்தது. அப்போது அரசியல்வாதிகள் மீதான வாழ்நாள் தடையை நீக்கும் வகையில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தை சுட்டிக்காட்டி இந்த வழக்கில் இருந்து நவாஸ் ஷெரீப்பை விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

    ×