என் மலர்
உலகம்
- மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன
- 80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்
இந்தோனேசியாவை சேர்ந்த தீவு பிரதேசம், சுமத்ரா (Sumatra island).
மேற்கு சுமத்ரா பகுதியில் உள்ள பெசிசிர் செலடான் (Pesisir Selatan) பகுதியில் பெய்து வந்த கடும் மழையால், திடீர் வெள்ளமும், அதை தொடர்ந்து நிலச்சரிவும் ஏற்பட்டது.
இதில் தற்போது வரை குறைந்தது 19 பேர் உயிரிழந்தனர் என்றும் 7 பேரை காணவில்லை என்றும் தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (National Disaster Management Agency) தெரிவித்துள்ளது.
இந்த சரிவினால் மலையில் இருந்த பெரிய மரங்கள் பெயர்ந்து விழுந்தன; பெரிய பாறைகள் உருண்டு விழுந்தன. இவற்றால் நதிக்கரையோர கிராமங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கோடோ XI டருசான் (Koto XI Tarusan) பகுதியில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது.

80 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்; 14 வீடுகள் மண்ணில் புதைந்து விட்டன.
20 ஆயிரம் பேர்களின் வீடுகள் மேற்கூரை வரை முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
மின்சாரத் தடை, சாலைகளில் ஓடும் வெள்ள நீர், குப்பைகள் போன்றவற்றால் மீட்பு குழுவினர் கடும் சிரமத்திற்கிடையே சிக்கியுள்ள மக்களை மீட்க முயன்று வருகின்றனர்.
பெருமளவு மலைப்பிரதேசங்களை கொண்ட இந்தோனேசியாவில் வெள்ள அபாய பகுதிகள் ஏராளமாக உள்ளன.
அடிக்கடி ஏற்படும் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் மழையால் ஏற்படும் வெள்ளம் போன்றவற்றால் லட்சக்கணக்கான மக்கள் துன்பப்படுவது அங்கு தொடர்கதையாகி வருகிறது.
கடந்த 2023 டிசம்பர் மாதம் திடீர் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மேலும், டோபா எனும் ஏரிக்கருகே ஒரு ஓட்டல் முற்றிலும் சேதமானது.
- சில வருடங்களாக, பாகிஸ்தானில் பல இடங்களில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன
- தற்போது வரை குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ளது, கைபர் பக்துங்க்வா (Khyber Pakhtunkhwa) பிராந்தியம்.
இதன் தலைநகரம், பெஷாவர் (Peshawar).
கடந்த சில வருடங்களாக, பாகிஸ்தானில் பல இடங்களில் பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இன்று காலை, இந்நகரில் போர்ட் பஜார் (Board Bazaar) பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன.
இச்சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்; ஒருவர் பலத்த காயமடைந்தார்.
காயமடைந்தவர் அங்குள்ள லேடி ரீடிங் மருத்துவமனையில் (Lady Reading Hospital) அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வெடித்த குண்டுகள், 4லிருந்து 5 கிலோகிராம் வரை எடை கொண்டவை என்றும் நடைபெற்றது ஒரு தற்கொலைப்படை தாக்குதல் என தெரிய வந்துள்ளதாகவும் காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.
தற்போது வரை குண்டு வெடிப்பிற்கு எந்த பயங்கரவாத அமைப்பினரும் பொறுப்பேற்கவில்லை.
அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையின் முக்கிய பிரிவு அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷரீப், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். பயங்கரவாதத்தை வேருடன் அழிக்க நாங்கள் உறுதியுடன் உள்ளோம்" என தெரிவித்தார்.
பெஷாவர் நகரை மையமாக வைத்து "பாகிஸ்தானி தலிபான் குழு" (TTP) என அழைக்கப்படும் பயங்கரவாத அமைப்பினர் செயல்பட்டு வந்தனர் என்பதும் சுமார் 1 மாதத்திற்கு முன்பாக பலூசிஸ்தான் நகரில் நிகழ்ந்த இரட்டை குண்டுவெடிப்பில் சுமார் 30 பேர் உயிரிழந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- மெட்டா-வின் கீழ் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்கள் இயங்கி வருகின்றன
- கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்
உலகெங்கும் பிரபலமாக உள்ள சமூக வலைதளங்களில், அமெரிக்காவின் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய இரு தளங்கள் முன்னணியில் உள்ளன.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் தங்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து கொள்வதால் அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும், தங்கள் கருத்துகள் மக்களை எளிதில் சென்றடைய இவற்றை பயன்படுத்துகின்றனர்.
மெட்டா எனும் அமெரிக்காவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் இந்த 2 தளங்களும் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய 2 தளங்களுக்கும் ஈரானில் தடை நிலவுகிறது.
ஆனாலும், பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் இவற்றை பெருமளவில் "விபிஎன்" (VPN) மூலம் பயன்படுத்துகின்றனர்.
இந்நிலையில், ஈரானின் முக்கிய தலைவர்களில் ஒருவரான 84-வயதாகும் "அயதுல்லா அலி கமேனி" (Ayatollah Ali Khamenei) பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய தளங்களில் வைத்திருந்த சமூக வலைதள கணக்குகளை, கடந்த மாதம், மெட்டா நீக்கியது.

இதற்கு உலகம் முழுவதும் உள்ள கமேனி ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
தற்போது இது குறித்து ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஒசைன் அமிர்-அப்தொல்லாகியான் (Hossein Amir-Abdollahian) தெரிவித்ததாவது:
கருத்து சுதந்திரத்திற்கு எதிராகவும், கமேனியின் கோடிக்கணக்கான ஆதரவாளர்களை அவமானப்படுத்தும் விதமாகவும் மெட்டாவின் இந்த நடவடிக்கை உள்ளது.
கமேனியின் இன்ஸ்டாகிராம் கணக்கில் அவரை 50 லட்சத்திற்கும் மேல் பயனர்கள் பின் தொடர்கின்றனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான நிலை கொண்டவர் கமேனி.
கருத்து சுதந்திரம் குறித்து மேற்கத்திய நாடுகள் பெருமளவு பிரசாரங்கள் செய்கின்றன.
ஆனால், அவை வெற்று முழக்கங்கள் என தற்போது தெளிவாகி விட்டது.
தனது நடவடிக்கை மூலம் அவர்களின் மறைமுக அரசியல் உள்நோக்கங்கள் வெற்றி பெற மெட்டா உதவுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- 1990களில் ஏமனில் உருவானது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு
- எந்த வணிக கப்பலுக்கும் சேதம் ஏற்படவில்லை என அமெரிக்க அறிவித்தது
கடந்த அக்டோபர் 7 அன்று, தெற்கு இஸ்ரேல் பகுதியில், வான்வழியாகவும், தரை வழியாகவும் நுழைந்த பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாதிகள், 1500க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய பொதுமக்களை கொன்றனர்; பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்டவர்களை பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றனர்.
இந்த பயங்கரவாத செயலுக்கு பதிலடி தரும் விதமாக பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் ஹமாஸ் பயங்கரவாதிகளை இஸ்ரேலிய ராணுவப் படை (Israeli Defence Forces) வேட்டையாடி வருகிறது. மேலும், பிணைக்கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேலியர்களை, ராணுவம் தேடி வருகிறது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்கின்றன.
ஹமாஸ் அமைப்பினருக்கு ஈரான், லெபனான், கத்தார் போன்ற அரபு நாடுகள் ஆதரவளிக்கின்றன.

இந்நிலையில், 1990களில் ஏமன் பகுதியில் உருவான ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு, கடந்த நவம்பர் மாதம் முதல் பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக, செங்கடல் (Red Sea) பகுதியில், இஸ்ரேலுடன் வர்த்தக போக்குவரத்தில் ஈடுபட்டு வரும் வணிக கப்பல்களை குறி வைத்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றது.
ஹவுதிகளுக்கு பதிலடி தரும் விதமாகவும், வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பாகவும், அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட சுமார் 20 மேற்கத்திய நாடுகளின் கப்பல் படை, செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், செங்கடல் பகுதியில், "புரொபெல் ஃபார்ச்சூன்" (Propel Fortune) எனும் கப்பலை தாக்க வந்த ஹவுதி அமைப்பினரின் 28 டிரோன்களை, அமெரிக்க கூட்டுப்படை சுட்டு வீழ்த்தியது.
இந்த நடவடிக்கையில் வணிக கப்பல்களுக்கோ அல்லது அமெரிக்க கூட்டுப்படையின் கப்பல்களுக்கோ எந்த சேதமும் ஏற்படவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஹவுதிக்களின் தாக்குதல்களினால், செங்கடல் பகுதி வழியாக பயணித்த பெரும்பாலான வணிக கப்பல்கள் தென் ஆப்பிரிக்கா வழியாக சுற்றிச் செல்கின்றன.
ஹவுதிக்கள் இயங்கும் பகுதிகளை குறி வைத்து அமெரிக்க-இங்கிலாந்து கூட்டுப்படை தாக்குதல் நடத்தி தாக்கி வருகின்றது. ஆனாலும், ஈரானின் மறைமுக உதவியுடன் ஹவுதி அமைப்பினர் செங்கடல் பகுதி வழியாக பயணிக்கும் கப்பல்களை தாக்குவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
- வீட்டில் இருந்து வெளியே சென்ற பெலின் கோஜா மாயமானார்.
- அவர் பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் பாதிப்புக்கு உள்ளானவர் என தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
இந்தியாவை சேர்ந்த பெரின் கோஜா (25) என்ற பெண், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்தார்.
இந்நிலையில், குயின்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து வெளியே சென்ற பெலின் கோஜா மாயமாகி உள்ளார். அவர் பைபோலார் டிஸ்ஆர்டர் நோய் பாதிப்புக்கு உள்ளானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாயமான பெலின் கோஜாவை போலீசார் தேடி வருகின்றனர்.
அவரது புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவரை பற்றி தகவல் தெரிவித்தால் போலீசாருக்கு உடனே தகவல் அளிக்கும்படி பொதுமக்களை போலீசார் கேட்டுக் கொண்டனர்.
- மாணவர், "வை ஃபை" தொடர்புக்கு உக்ரைனுக்கு ஆதரவாக பெயரிட்டிருந்தது தெரிய வந்தது
- "போர்" என அழைப்பது கூட ரஷியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
கடந்த 2022 பிப்ரவரி மாதம் 24 அன்று, ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் ஆக்கிரமித்தது. ரஷியாவை எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் போரிட்டு வருகிறது.
இரு தரப்பிலும் கடுமையான உயிர் சேதம் மற்றும் பொருட்சேதம் தொடர்ந்தாலும், 2 வருடங்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ரஷிய தலைநகர் மாஸ்கோவில் உள்ள மாஸ்கோ பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படித்து வந்த மாணவர் ஒருவர் தனது "வை ஃபை" (wi-fi) தொடர்புக்கு, உக்ரைனை ஆதரிக்கும் வகையில் பெயரிட்டிருந்ததாக அந்நாட்டு அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அதிகாரிகள், மாணவரின் பல்கலைக்கழக தங்குமிடத்தில் சோதனையிட்டனர். அங்கு அவரது கணினியையும் "வை ஃபை" (wi-fi router) கருவியையும் பரிசோதித்ததில் "ஸ்லேவா உக்ரைனி" என அந்த மாணவர் இணைய தொடர்புக்கு பெயரிட்டிருந்தது தெரிய வந்தது.
"உக்ரைனுக்கு புகழ் சேரட்டும்" (Glory to Ukraine) எனும் பொருள்படும் வகையில் இப்பெயர் இருந்ததால், அவரை ரஷிய காவல்துறை கைது செய்தது.
வழக்கு விசாரணைக்கு பிறகு, பயங்கரவாதத்துடன் தொடர்பு படுத்த கூடிய குற்றச்செயலாக இதனை நீதிமன்றம் கருதியது.
இதையடுத்து, நீதிமன்றம் அந்த மாணவருக்கு 10-நாள் சிறைத்தண்டனை வழங்கியது.
ரஷியாவிற்கும் உக்ரைனுக்கும் நடக்கும் போரை, "சிறப்பு ராணுவ நடவடிக்கை" என்றுதான் ரஷியர்கள் அழைக்க வேண்டும் எனும் சூழ்நிலை ரஷியாவில் நிலவுகிறது. மாறாக, "போர்" என அழைப்பது கூட ரஷியாவில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போரை எதிர்த்தும், உக்ரைனுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு கருத்து தெரிவித்தும் வந்த நூற்றுக்கணக்கான ரஷியர்கள் அந்நாட்டில் தண்டிக்கப்பட்டு வருகின்றனர்.
- மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.
- கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து டிரோன்களை மாலத்தீவு அரசு வாங்கியது.
மாலி:
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார். சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டிய அவர் அந்நாட்டுடன் ராணுவம் ஒத்துழைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில், கடல் பகுதியில் ரோந்து பணிக்கு துருக்கியிடம் இருந்து டிரோன்களை மாலத்தீவு அரசு வாங்கியுள்ளது. துருக்கி நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை அடுத்து முதல் முறையாக ராணுவ டிரோன்கள் மாலத்தீவுக்கு கொண்டு வரப்பட்டன.

அந்த டிரோன்கள் தற்போது நூனு மாபாரு சர்வதேச விமான நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
விரைவில் டிரோன்கள் செயல்பாடு தொடங்கும் என்று கூறப்படுகிறது. எத்தனை டிரோன்கள் வாங்கப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படவில்லை.
- மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார்.
- பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது.
அபுஜா:
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் பல்வேறு ஆயுதக்குழுவினர் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் அந்நாட்டின் வடக்கு நகரமான குரிகாவில் உள்ள பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் சிலர் வந்தனர். அவர்கள் துப்பாக்கி முனையில் 280-க்கும் மேற்பட்ட மாணவர்களை கடத்தி சென்றனர். மாணவர்களை மீட்க உள்ளூர் மக்கள் பயங்கரவாதிகளுடன் போராடியுள்ளனர்.
ஆனால் அவர்களை துப்பாக்கியைக் காட்டி பயங்கரவாதிகள் மிரட்டினர். இதில் ஒருவர் சுடப்பட்டதாகவும் தெரிகிறது. மாணவர்களை கடத்தப் பட்டதை அந்த மாகாண கவர்னர் உபாசானி உறுதிப்படுத்தினார். கடந்த ஜனவரி மாதம் இப்பள்ளியின் முதல்வரைக் கொன்றதாகவும், அவரது மனைவியைப் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்துக்கு இதுவரை எந்த குழுவும் பொறுப்பேற்கவில்லை. இதுகுறித்து நைஜீரியா அதிபர்போலா டினுபு கூறும்போது, கடத்தப்பட்ட குழந்தைகளை மீட்கும் நட வடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். அவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்றார். பயங்கரவாதிகள் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைக் கடத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்த பிறகு கடத்தியவர்களை விடுவிக்கிறார்கள்.
கடந்த 2014-ம் ஆண்டு நைஜீரியாவின் வடக்கு மாகாணமான போா்னோவின் சிபோக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கடத்திச் செல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் அதிா்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பித்தக்கது.
- கிராம பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் திபெத்திய மொழி கற்று தரப்பட்டது
- திபெத்திய அடையாளத்தையே சீனா, அழிக்க முயல்வதாக சமூகவியலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்
திபெத்திய பீடபூமியின் (Tibetan plateau) பெரும் பகுதியை உள்ளடக்கிய கிழக்கு ஆசிய நாடு, திபெத். இந்நாடு சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
திபெத்தின் கிராம பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் திபெத்திய மொழியை கற்றுவித்து வந்தன.
ஆனால், இந்த முறையை மாற்றி, திபெத்தில் உறைவிட பள்ளி (boarding school) முறையை சீனா புகுத்தியது.
அங்குள்ள உறைவிட பள்ளிகளில் பயிற்சி மொழியாக இருந்த திபெத்திய மொழிக்கு பதிலாக சீனா, சீன மொழியை அப்பள்ளிகளில் கட்டாயமாக்கி உள்ளது.
எதிர்காலத்தில் இந்த குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும், சீனாவில் பெரும்பான்மையாக பேசப்படும் மொழியான மாண்டரின் (Mandarin) எனும் சீன ஆட்சி மொழியில் உரையாடவும், உயர் கல்வி கற்கவும் எளிதாக இருக்கும் என்று இதற்கு சீனா காரணம் கூறி வருகிறது.

"சீனாவின் உண்மையான நோக்கம் திபெத்திய அடையாளத்தை மிக குறைந்த வயது சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களின் மனதில் இருந்து அழிக்க முயல்வதுதான். இந்த நோக்கத்திற்கு சீனா கல்வியை ஒரு கருவியாக பயன்படுத்துகிறது. பாடத்திட்டத்தை இவ்வாறு மாற்றியமைத்துள்ளதன் மூலம் ஒரு நாட்டின் மக்கள் தொகை முழுவதும், எதிர்காலத்தில், தங்கள் மொழியையும், கலாச்சாரத்தையும் மறக்கும் நிலை தோன்றி விடும்" என திபெத்தை சேர்ந்த சமூகவியலாளர் கூறினார்.
உறைவிட பள்ளிகளில் தங்கியிருந்து வீடு திரும்பும் போது தங்கள் தாய்மொழியை அக்குழந்தைகள் மறக்கும் நிலை ஏற்படுவதாக அங்குள்ள நிலைமையை நேரில் கண்ட சமூகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திபெத்திய கலாச்சாரத்தை அழிப்பதில் சீனா ஈடுபட்டு வருவதாக நீண்டகாலமாகவே மனித் உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.
- உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தற்கொலை செய்யவில்லை என்றும் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவை சேர்ந்த ஆபாச பட நடிகை சோபியா லியோன் (வயது 26). இவர் தனது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்பது உறுதியாக தெரியவில்லை.

மியாமியில் இருக்கும் தனது வீட்டில் வசித்து வந்த நடிகை சோபியாவை தொடர்பு கொள்ள இயலாததால், காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடிகையின் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அவர் மர்மமான முறையில் உயிரிழந்தவாறு சடலமாக மீட்கப்பட்டார். பின், அவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் அவர் தற்கொலை செய்யவில்லை என்றும் வீடு புகுந்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் ஆபாச பட துறையில் இந்த ஆண்டில் நான்கு நடிகைகள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2008 முதல் 2013 வரை ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் ஜனாதிபதியாக பதவி வகித்தார்.
- ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தான் ஜனாதிபதியாக 2-வது முறை பதவியேற்க உள்ளார்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி நடந்த பொதுத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் 93 இடங்களிலும், நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோ சர்தாரியின் பாகிஸ்தான் மக்கள் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.
இதில் நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சிகள் கூட்டணி அரசை அமைத்துள்ளன. பிரதமராக நவாஸ் ஷெரீப் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றார்.
இதற்கிடையே நவாஸ் ஷெரீப், பிலாவல் பூட்டோ கட்சி கூட்டணி சார்பில் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அவருக்குப் போட்டியாக எதிர்க்கட்சிகள் சார்பில் பஷ்துன்க்வா மில்லி அவாமி கட்சித் தலைவர் மக்மூத்கான் அஷ்காஸ் களமிறங்கினார். இவருக்கு இம்ரான்கானின் கட்சி ஆதரவு தெரிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு பாராளுமன்றத்திலும் அனைத்து மாகாண சட்டசபைகளிலும் நேற்று நடைபெற்றது. இதில் ஆசிப் அலி சர்தாரிக்கு 255 வாக்குகள் கிடைத்தன. அவருக்கு எதிராக நிறுத்தப்பட்ட முகமது கான் அசாக்சாய்க்கு 119 வாக்குகள் கிடைத்தன. இதன்படி அதிக வாக்குகளைப் பெற்ற ஆசிப் அலி சர்தாரி பாகிஸ்தானின் 14-வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆசிப் அலி சர்தாரி ஞாயிற்றுக்கிழமை அன்று முறைப்படி அதிபராக பதவியேற்றுக் கொள்வார் என தெரிவிக்கப்பட்டது.
- முதியவர்கள், தங்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்களை காண வர வேண்டும் என விரும்புவார்கள்
- 5 லட்சம் பவுண்டு மதிப்புள்ள சொத்தில் 50 பவுண்டுகள் மட்டுமே எழுதி வைத்தார்
இந்திய வாழ்க்கை முறையில் குடும்ப உறவுகளின் மேன்மை மிகவும் போற்றப்படுகிறது.
பணி, தொழில், திருமணம் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தாத்தா பாட்டி போன்றவர்களை விட்டு விட்டு தொலைதூரம் வருபவர்கள், இந்தியாவில் பண்டிகைக்கால விடுமுறைகளில் உறவினர்களை காண சொந்த ஊர்களுக்கு செல்வது வாடிக்கை.
உலகெங்கும் வயதானவர்களுக்கு தங்கள் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகள் தங்களை பார்க்க அடிக்கடி வர வேண்டும் என்பது விருப்பம்.
இங்கிலாந்தில் ராணுவத்தில் பணியாற்றியவர் ஃபிரெடரிக் வார்டு (Frederick Ward). இவரது மகன் ஃபிரெடரிக் ஜூனியர் 2015ல் காலமானார்.
மகனின் மரணத்திற்கு பிறகு ஃபிரெடரிக்கின் பேரக்குழந்தைகள் ஃபிரெடரிக்கை பார்க்க வரவில்லை.
நுரையீரல் சிக்கலால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
தன்னை பார்க்க பேரக்குழந்தைகள் வருவதில்லை என்பதால் அவர்களுக்கு வெறும் 50 பவுண்டுகள் மட்டுமே உயில் எழுதி வைத்தார்.
5 லட்சம் பவுண்டு மதிப்புள்ள சொத்தில் 50 பவுண்டுகள் மட்டுமே தங்களுக்கு எழுதி வைத்ததற்காக அந்த உயிலுக்கு எதிராக அவரது பேரக்குழந்தைகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், பார்க்க வராத பேரன்களுக்கு சொத்தில் பங்கில்லை என ஃபிரெடரிக் எடுத்த முடிவு சரியானது என்றும் அவரது பார்வையில் அது நியாயமானதுதான் என்றும் தீர்ப்பளித்தது.
உறவுகளுக்கு மதிப்பளிக்காமல் சொத்திற்கு மட்டுமே மதிப்பளிக்கும் தற்கால சந்ததியினருக்கு இது நல்ல பாடம் என சமூக வலைதளங்களில் இந்த தீர்ப்பு குறித்து பயனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.






