என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • இவரது பயிற்சி காலத்தில் வங்கதேசத்திற்கு எதிராக முதல் முறை டெஸ்ட் தொடரை இழந்தது பாகிஸ்தான்.
    • பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக அக்யூப் ஜாவித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணி பயிற்சியாளராக ஜேசன் கில்லெஸ்பி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த சில முடிவுகள் அவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

    தற்போது பாகிஸ்தான் ஒயிட்பால் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒயிட்பால் தொடர் முடிந்ததும் வரும் 26-ம் தேதி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்க உள்ளது.

    இந்நிலையில், பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஜேசன் கில்லஸ்பி ராஜினாமா செய்துள்ளார்.

    இந்த வருடம் தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கில்லெஸ்பியை 2 ஆண்டுக்கு டெஸ்ட் அணி பயிற்சியாளராக நியமித்தது.

    இவரது பயிற்சி காலத்தில் வங்கதேசத்திற்கு எதிராக முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியது.

    புதிய தலைமை பயிற்சியாளராக அக்யூப் ஜாவித் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் கேரி கிரிஸ்டன் சில மாதங்களுக்கு முன் விலகியது குறிப்பிடத்தக்கது.

    • புரோ கபடி லீக் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது.
    • இதில் யுபி யோதாஸ் 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    புனே:

    11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் இரண்டாம் கட்ட லீக் ஆட்டங்கள் உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் நடைபெற்றது.

    புரோ கபடி லீக்கின் மூன்றாம் கட்ட லீக் ஆட்டங்கள் மகாராஷ்டிராவின் புனே நகரில் நடந்து வருகிறது.

    இந்நிலையில், இன்று இரவு 8 மணிக்கு நடந்த முதல் போட்டியில் தபாங் டெல்லி, தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

    இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய டெல்லி 33-27 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 9-வது வெற்றியைப் பதிவு செய்தது.

    மற்றொரு போட்டியில் யுபி யோதாஸ், பெங்கால் வாரியர்ஸ் அணிகள் 31-31 என்ற புள்ளிக்கணக்கில் சமனிலை பெற்றன.

    • முதலில் ஆடிய வங்கதேசம் 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்கள் எடுத்தது.
    • 6வது விக்கெட்டுக்கு இணைந்த மஹமதுல்லா-ஜேகர் அலி ஜோடி 150 ரன்கள் சேர்த்தது.

    செயிண்ட்கிட்ஸ்:

    வங்கதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் இரு போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் வென்று தொடரைக் கைப்பற்றியது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி செயிண்ட் கிட்சில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, வங்கதேசம் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சவுமியா சர்க்கா அரை சதமடித்து 73 ரன்னில் அவுட்டானார். கேப்டன் மெஹிதி ஹசன் 77 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய மஹமதுல்லா, ஜேகர் அலி ஜோடி 6வது விக்கெட்டுக்கு 150 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    இறுதியில், வங்கதேசம் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 321 ரன்களை எடுத்துள்ளது. மஹமதுல்லா 84 ரன்னும், ஜேகர் அலி 62 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 322 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.

    • இங்கிலாந்து தொடரின்போது சில முடிவுகள் எடுக்க கில்லெஸ்பிக்கு நேரம் கொடுக்கப்படவில்லை.
    • துணை பயிற்சியாளரின் பதவிக்காலத்தை நீடிக்க பாகிஸ்தான் மறுத்துவிட்டது.

    பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கில்லெஸ்பி உள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்த சில முடிவுகள் கில்லெஸ்பிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

    பாகிஸ்தான் ஒயிட்பால் அணி தற்போது தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. ஒயிட்பால் தொடர் முடிவடைந்த உடன் வருகிற 26-ந்தேதி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணியுடன் துபாய் வழியாக கில்லெஸ்பி தென்ஆப்பிரிக்கா செல்ல வேண்டும். ஆனால் கில்லெஸ்பி குறித்து எந்த தகவலும் இல்லை எனத் தெரிகிறது. அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக நம்பப்படுகிறது.

    இந்த வருடம் தொடக்கத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கில்லெஸ்பியை இரண்டு வருடத்திற்கு டெஸ்ட் அணி பயிற்சியாளராக நியமித்தது. வங்கதேசத்திற்கு எதிராக முதன்முறையாக டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிராக தொடரை கைப்பற்றியது.

    இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது சில முடிவுகளை எடுக்க பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு கால அவகாசம் கொடுக்காததால் கில்லெஸ்பி அதிப்தி அடைந்துள்ளார். துணை பயிற்சியாளர் டிம் நீல்சனின் பதவிக் காலத்தை நீடிக்காததால் வருத்தத்தில் இருந்துள்ளார்.

    • உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
    • குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.

    13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து ஆட்டங்களும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.

    இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

    14வது சுற்றுகள் கொண்ட இந்த தொடரில் 7.5 புள்ளிகள் பெற்று குகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.

    18 வயதிலேயே குகேஷ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். பட்டம் வென்ற நிலையில், குகேஷ் ஆனந்த கண்ணீர் சிந்தியுள்ளார்.

    உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது குறித்து குகேஷ் கூறியதாவது:-

    உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது 2 வருட தீவிர பயிற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதுகிறேன்.

    உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டிக்கு உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் தயாராகி வந்தேன்.

    ஒவ்வொரு செஸ் வீரருக்கும் உள்ள கனவுதான் இன்று எனக்கு நனவாகியுள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.
    • கடைசி சுற்றில் டிங் லிரெனை வீழ்த்தி உலக செஸ் சா்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.

    இந்திய கிராண்ட்மாஸ்டர் குகேஷ், நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்றது.

    13 சுற்றுகள் முடிவில் குகேசும், லிரெனும் தலா இரண்டு சுற்றுகளில் வெற்றி பெற்று இருந்தார்கள். மற்ற அனைத்து சுற்றுகளும் டிராவில் முடிந்தன. இதனால், இருவரும் தலா 6½ புள்ளிகளுடன் சமநிலையில் இருந்தார்கள்.

    இந்நிலையில், இன்று 14-வது மற்றும் கடைசி சுற்று நடந்தது. இதில் குகேஷ், கருப்பு நிற காய்களுடன் விளையாடி சீன வீரரை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார். 58 வது காய் நகர்த்தலுக்குப் பிறகு டிங் லிரென் தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். இதனால் 18 வயதில் உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று குகேஷ் சாதனைப் படைத்துள்ளார். 14 -வது சுற்றில் சுமார் 4 மணி நேரம் போராடி குகேஷ் வெற்றியை ருசித்துள்ளார்.

    • பாலின சர்ச்சையில் சிக்கிய இமானே கெலிஃப் முதலிடத்தில் உள்ளார்.
    • 10-வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டரான ரோட்ரி உள்ளார்.

    2024 முடிவடைந்து புதிய ஆண்டு (2025) விரைவில் பிறக்க உள்ள நிலையில், 2024-ம் ஆண்டு உலகில் அதிகம் தேடப்பட்ட விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் 2 இந்திய விளையாட்டு வீரர்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளனர். குறிப்பாக அவர்கள் கிரிக்கெட் வீரர்கள் ஆவர்.

    இந்த பட்டியலில் முதல் வீரராக பாலின சர்ச்சையில் சிக்கிய அல்ஜீரிய குத்துச்சண்டை வீராங்கனையான இமானே கெலிஃப் என்பவர் உள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் மகளிர் குத்துச்சண்டை 66 கிலோ எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், சீன வீராங்கனை யாங்க் லியூவை வீழ்த்தி தங்கம் வென்று அசத்தினார். 

    2-வது இடத்தில் முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் உள்ளார். இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை குத்துச்சண்டை போட்டிக்கு திரும்பினார். ஆனால் அந்த போட்டியில் தோல்வியை தழுவினார். போட்டிக்கு முன்னர் எதிராளியை கண்ணத்தில் அறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    3-வது இடத்தில் ஸ்பெயின் அணியின் இளம் வீரர் லமின் யமால் உள்ளார். 17 வயதில் கோல் அடித்த வீரர் என்ற பீலேவின் சாதனையை யமால் முறியடித்தார். இவர் கோல் அடித்து கொண்டாடிய போது ரசிகர்களால் இனவெறி தாக்குதல் நடத்தினர். யுரோ கோப்பையை வென்ற அணியில் இவர் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    4-வது இடத்தில் அமெரிக்காவின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை சிமோன் பைல்ஸ் உள்ளார். இவர் பாரிஸ் ஒலிம்பிக் பெண்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் 'புளோர்' பிரிவு பைனலில் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 

    இதன்மூலம் ஒலிம்பிக் அரங்கில் சிமோன் பைல்ஸ் வென்ற 11-வது பதக்கம் இதுவாகும். இதுவரை 7 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் வென்றுள்ளார்.

    5-வது இடத்தில் மைக்கெல் டைசன் உடன் குத்துச்சண்டையில் மோதிய ஜேக் பால் (27) உள்ளார். இவர் அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஆவார். இவர் கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார்.

    இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார். மைக் டைசனுக்கு எதிரான போட்டியில் ஜேக்பால் 79-73 என்ற புள்ளிக் கணக்கில் டைசனை வீழ்த்தினார்.

    6-வது இடத்தில் ஸ்பெயினின் கால்பந்து வீரர் நிகோ வில்லியம்ஸ் உள்ளார். இவர் லமைன் யமலுடன் இணைந்து, யூரோ 2024-ல் சிறப்பான ஆட்டக்காரர்களில் ஒருவராக இருந்தார்.

    ஜெர்மனியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றபோது, இறுதிப் போட்டியில் ஸ்பெயினுக்கு வில்லியம்ஸ் முக்கியமான கோல்களை அடித்தார்.

    7-வது இடத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா உள்ளார். ரோகித் சர்மா , விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி போன்ற முக்கிய கிரிக்கெட் வீரர்கள் இருந்த போதிலும் அதிகம் தேடப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரராக ஹர்திக் பாண்டியா உள்ளார்.

    இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ரோகித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக மாற்றியதற்காக கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டபோது நட்சத்திர ஆல்ரவுண்டராக கவனத்தை ஈர்த்தார்.

    8-வது இடத்தில் அமெரிக்க கோல்ப் வீரர் ஸ்காட்டி ஷெஃப்லர் உள்ளார். இவர் 2024-ம் ஆண்டு உலகின் அதிக ஊதியம் பெறும் கோல்ஃப் வீரர்களில் முதலிடத்தில் இருந்தார்.பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஆண்கள் கோல்ஃப் தனிநபர் ஸ்ட்ரோக் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்றார்.

     9-வது இடத்தில் இந்திய ஆல்-ரவுண்டர் ஷஷாங்க் சிங் உள்ளார். இவர் 2024-ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஒரு சிறந்த நட்சத்திரமாக உருவெடுத்தார். ஆரம்பத்தில் பஞ்சாப் கிங்ஸ் பெயர் குழப்பத்தில் அவரை ஏலத்தில் எடுத்தது. இந்த சர்ச்சைகள் மற்றும் விமர்சகர்களை தனது பேட்டிங்கின் மூலம் வாயடைக்க வைத்தார்.


    அவரது பஞ்சாப் அணியின் மிகவும் மதிப்புமிக்க வீரர்களில் ஒருவராக மாற்றியது. ஐபிஎல்லில் அவர் முக்கியத்துவம் பெறுவது அந்த ஆண்டின் மிகவும் ஆச்சரியமான கதைகளில் ஒன்றாகும்.

    10-வது இடத்தில் மான்செஸ்டர் சிட்டியின் மிட்ஃபீல்டரான ரோட்ரி உள்ளார். 2024-ம் ஆண்டுக்கான பலோன் டி'ஓர் விருதை வென்றார், இது கால்பந்து உலகில் விவாதத்தையும் சர்ச்சையையும் தூண்டியது. ரியல் மாட்ரிட்டின் வினிசியஸ் ஜூனியர் இந்த மரியாதைக்கு தகுதியானவர் என்று பலர் கூறினர். இதனால் ரியல் மாட்ரிட் பலோன் டி'ஓர் விழாவை புறக்கணித்தது.


    சர்ச்சைகள் இருந்தபோதிலும், ரோட்ரியின் அருமையான விளையாட்டு , இந்த சீசனில் அவர் செயல்ப்பட்ட விதம் அவரை பலோன் டி'ஓர் வெற்றியாளராக அவரது சாதனை கவனத்தை ஈர்த்தது.

    • ரோகித் கொஞ்சம் அழுத்தத்தில் இருக்கிறார்.
    • ஸ்டம்ப் லைன் அவருக்கு அதிகமான தொல்லையை கொடுக்கிறது.

    அடிலெய்டு:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் முடிவில் 1-1 என்ற கணக்கில் தொடர் சமனில் உள்ளது.

    கேப்டனாக மட்டுமின்றி பேட்டிங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தாத ரோகித் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் அந்த போட்டியில் தம்முடைய ஓப்பனிங் இடத்தை ராகுலுக்கு விட்டுக் கொடுத்த அவர் மிடில் ஆடரில் களமிறங்கி சுமாராக விளையாடினார். எனவே ரோகித் பார்முக்கு திரும்ப வேண்டுமெனில் மீண்டும் தொடக்க வீரராக விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி, கவாஸ்கர் போன்ற முன்னாள் வீரர்கள் ஆலோசனை தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் இந்திய அணிக்காக தனது ஓப்பனிங் இடத்தை தியாகம் செய்து ரோகித் தொடர்ந்து மிடில் ஆர்டரில் விளையாடுவதே சரியான முடிவு என்று புஜாரா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நியூசிலாந்துக்கு எதிராக பெரிய ரன்கள் குவிக்காத ரோகித் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் நன்றாக தொடங்கவில்லை. எனவே அவர் கொஞ்சம் அழுத்தத்தில் இருக்கிறார். ஆனால் தன்னுடைய ஆட்டத்தை நன்றாக தெரிந்த ரோகித் சர்மா போன்றவர் நேர்மறையாக இருந்து தன்னுடைய புட் ஒர்க்கில் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும்.

    அவருடைய கால் நகர்வு கொஞ்சம் பெரிதாக இருந்தால் அது அவருக்கு உதவும். மேலும் ஸ்டம்ப் லைன் அவருக்கு அதிகமான தொல்லையை கொடுக்கிறது. அதனாலேயே அவர் போல்டு அல்லது எல்பிடபுள்யூ முறையில் அதிகமாக அவுட்டாகிறார். எனவே அந்த லைனில் அவர் வலைப்பயிற்சியில் அதிகமாக வேலை செய்ய வேண்டும். ஏனெனில் அவுட் சைடு ஆப் ஸ்டம்ப் பந்துகளில் அவர் நன்றாக விளையாடுகிறார்.

    அதே போல இந்திய அணியில் ராகுல், ஜெய்ஸ்வால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அவர் தொடர்ந்து 6-வது இடத்தில் விளையாட வேண்டும். ஏனெனில் முதல் போட்டியில் அவர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர். சுப்மன் கில் 3-வது இடத்தில் விளையாடுவார். எனவே நீண்ட கால திட்டத்தை கருத்தில் கொண்டு ரோகித் தொடர்ந்து 6-வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்.

    என்று புஜாரா கூறினார்.

    • இந்திய அணியினர் நேற்று அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு புறப்பட்டு சென்றனர்.
    • அப்போது அடிலெய்டில் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பஸ் மூலம் விமான நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    பிரிஸ்பேன்:

    இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், அடிலெய்டில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ள நிலையில், தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி பிரிஸ்பேனில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக இந்திய அணியினர் நேற்று அடிலெய்டில் இருந்து பிரிஸ்பேனுக்கு புறப்பட்டு சென்றனர்.

    அப்போது அடிலெய்டில் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து பஸ் மூலம் விமான நிலையம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 10 மணியளவில் விமானம் புறப்படும் என்ற நிலையில் இந்திய வீரர்கள் அனைவரும் 8.30 மணிக்கே ஓட்டலில் இருந்து பஸ்சில் ஏறினர்.

    ஆனால் தொடக்க ஆட்டக்காரரான ஜெய்ஸ்வால் மட்டும் தனது அறையை விட்டு வெளியேறவில்லை. அவர் வராததால் கோபமடைந்த ரோகித் சர்மா, பஸ்சில் இருந்து இறங்கி பாதுகாப்பு அலுவலரிடம் அவரை கண்டுபிடிக்க அறிவுறுத்தினார். சிறிது நேர விவாதத்திற்குப் பிறகு, அனைவரும் பேருந்தில் அமர்ந்தனர். அவர் இல்லாமல் பஸ் விமான நிலையத்திற்கு சென்றது.

    சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு, யஷஸ்வி ஹோட்டல் லாபிக்கு வந்து பார்த்தார். அவர் இல்லாமல் பேருந்து ஏற்கனவே புறப்பட்டுவிட்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், அணி நிர்வாகம் அவருக்கு ஒரு காரை ஏற்பாடு செய்திருந்தது. மேலும் அணியின் மூத்த பாதுகாப்பு அதிகாரி யஷஸ்வியுடன் காரில் விமான நிலையத்திற்கு புறப்பட்டார்.

    பொதுவாக, நேரத்தை கண்டிப்பாக கடைபிடிக்கும் யஷஸ்வி, இதுபோன்ற தவறுகளை செய்ய மாட்டார், ஆனால் சில தெரியப்படாத காரணங்களால், லாபியை சரியான நேரத்தில் அடைய முடியவில்லை. 

    • இரு தரப்புக்கும் சரிசம அளவில் ஆடுகளம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள்.
    • கடந்த முறை இந்திய அணி இங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதால் கூடுதல் நம்பிக்கையோடு களம் இறங்குவார்கள்.

    பிரிஸ்பேன்:

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ள நிலையில் 3-வது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள கப்பா ஸ்டேடியத்தில் நாளை மறுதினம் (சனிக்கிழமை) தொடங்குகிறது. கடந்த முறை இந்திய அணி இங்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றதால் கூடுதல் நம்பிக்கையோடு களம் இறங்குவார்கள்.

    பிரிஸ்பேன் ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பது குறித்து பிட்ச் பராமரிப்பாளர் டேவிட் சந்துர்ஸ்கி கூறுகையில், 'ஒவ்வொரு முறையும் இந்த ஆடுகளத்தை நல்ல வேகத்துடன், பவுன்ஸ் இருக்கும் வகையிலேயே தயாரிக்கிறோம். கப்பா ஆடுகளம் என்றாலே வேகப்பந்து வீச்சுக்கு உகந்த வேகமும், பவுன்சும் இருக்கும் என்பதை அறிவார்கள். அந்த பாரம்பரிய தன்மை மாறாமல் அப்படியே இந்த முறையும் அமைக்க முயற்சிக்கிறோம்.

    பேட்ஸ்மேன்கள், பந்து வீச்சாளர்கள் இரு தரப்புக்கும் சரிசம அளவில் ஆடுகளம் ஒத்துழைக்க வேண்டும் என்பதே எங்களது குறிக்கோள். எல்லாவற்றுக்கும் ஏற்றது போல் இருக்கும் என நம்புகிறேன். கடந்த இரு நாட்கள் இங்கு மழை பெய்துள்ளது. ஆனால் போட்டிக்கு 3 நாட்கள் இருப்பதால் அதற்குள் ஆடுகளத்தை சரியான முறையில் தயார் செய்து விடுவோம் ' என்றார்.

    • இந்திய அணி கடைசி லீக்கில் இன்று தாய்லாந்துடன் மோதுகிறது.
    • அரைஇறுதி வாய்ப்பை பெற இதில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    மஸ்கட்:

    9-வது பெண்கள் ஜூனியர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் 'ஏ' பிரிவில் இடம்பிடித்துள்ள நடப்பு சாம்பியன் இந்திய அணி நேற்று தனது 3-வது லீக்கில் 1-2 என்ற கோல் கணக்கில் சீனாவிடம் தோல்வியை தழுவியது.

    சீன அணியில் ஜின்சுவாங் டான் 32-வது நிமிடத்திலும், லிஹாங் வாங் 42-வது நிமிடத்திலும் கோல் போட்டனர். இந்திய அணியில் தீபிகா 56-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார். நடப்பு தொடரில் இந்திய அணி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும். முதல் இரு ஆட்டங்களில் வங்காளதேசம் மற்றும் மலேசியாவை வென்று இருந்தது.

    இந்திய அணி கடைசி லீக்கில் இன்று தாய்லாந்துடன் மோதுகிறது. அரைஇறுதி வாய்ப்பை பெற இதில் இந்தியா கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

    • 2034-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான உரிமத்துக்கு வளைகுடா நாடான சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்தது.
    • சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    சூரிச்:

    23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை 2026-ம் ஆண்டில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இதில் மொத்தம் 48 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்த நிலையில் 2030 மற்றும் 2034-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை போட்டியை நடத்தும் உரிமத்தை எந்த நாட்டுக்கு வழங்குவது என்பது குறித்து சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் (பிபா) தலைமையகத்தில் நேற்று 'பிபா' நிர்வாக கமிட்டியினர் கியானி இன்பான்டினோ தலைமையில் ஆலோசித்தனர். இதில் 'பிபா'வின் 211 நாட்டு உறுப்பினர்கள் ஆன்லைன் மூலம் கலந்து கொண்டனர்.

    இதன் முடிவில் 2030-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நடத்தும் வாய்ப்பு ஸ்பெயின், போர்ச்சுக்கல், மொராக்கோ ஆகிய நாடுகளுக்கு வழங்கப்பட்டது. உலகக் கோப்பை தொடங்கி 100 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், 2030-ம் ஆண்டு உலகக்கோப்பையில் 3 ஆட்டங்கள் மட்டும் அர்ஜென்டினா, பராகுவே, உருகுவே ஆகிய நாடுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தென்அமெரிக்க நாடான உருகுவேயில் தான் முதலாவது உலகக்கோப்பை போட்டி 1930-ம் ஆண்டு நடந்தது நினைவு கூரத்தக்கது.

    2034-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கான உரிமத்துக்கு வளைகுடா நாடான சவுதிஅரேபியா மட்டுமே விண்ணப்பித்து இருந்தது. பிபா உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் அந்த நாட்டுக்கு 2034-ம் ஆண்டு போட்டியை நடத்தும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. சவுதிஅரேபியா உலகக் கோப்பை போட்டியை நடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும்.

    இதனை சர்வதேச கால்பந்து சம்மேளனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    ×