என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் அணி வெளிநாட்டில் சிறந்த அணியாக உருவெடுத்து வருகிறது என நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையே ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் இரண்டு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது.

    3-வது போட்டி நாளை ஹாமில்டனில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடலாம் என்ற நோக்கத்தில் இந்தியா களம் இறங்கும். அதேவேளையில் தோல்வியடைந்தால் தொடரை இழக்க நேரிடும், அதனால் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நோக்கத்தில் நியூசிலாந்து களம் இறங்கும்.

    இந்நிலையில் இந்தியா சொந்த மண்ணில் விளையாடுவதை விட வெளிநாட்டு மண்ணில் சிறந்த அணியாக உருவெடுத்துள்ளது என்று நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டிம் சவுத்தி கூறுகையில் ‘‘இந்தியா சிறப்பாக விளையாடி வருகிறது. அவர்கள் சிறந்த அணி. அந்த அணியில் உள்ள அனைவரும் உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக உள்ளனர். முதல் போட்டியில் நாங்கள் போட்டியை நெருங்கி வந்தோம். ஆனால், 2-வது போட்டியில் ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட்டோம்.

    இந்தியாவுக்கு எதிராக விளையாடும்போது எப்போதுமே கடினமானதாக இருக்கும் என்பது எங்களுக்கு தெரியும். சொந்த மண்ணில் விளையாடுவதுபோல் வெளிநாட்டு மண்ணிலும் சிறந்த அணியாக உருவெடுத்து வருகிறார்கள். இந்தியாவை வீழ்த்த வேண்டுமென்றால், நாங்கள் டாப் ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியதை தேவை என்பது எங்களுக்குத் தெரியும்’’ என்றார்.
    ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் மெதுவாக பந்து வீசியதால் தென்ஆப்பிரிக்காவுக்கு அபராதத்துடன் 6 புள்ளிகள் பறிக்கப்பட்டது.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை அறிமுகம் செய்துள்ளது. இதன்கீழ் முன்னணி அணிகள் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. 2019 முதல் 2021 வரை விளையாடும் போட்டிகளை கணக்கில் கொண்டு முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும்.

    தென்ஆப்பிரிக்கா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் தென்ஆப்பிரிக்கா 1-3 என படுதோல்வியடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாலும் மற்ற போட்டிகளில் எந்தவித போட்டியும் இன்றி தோல்வியை ஒப்புக்கொண்டது.

    ஜோகன்னஸ்பர்க்கில் நேற்றுடன் முடிவடைந்த கடைசி போட்டியில் தென்ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் மூன்று ஓவர்கள் குறைவாக வீசியது. ஐசிசி விதிப்படி ஒரு ஓவருக்கு தென்ஆப்பிரிக்கா வீரர்களுக்கு தலா 20 சதவீதம் சம்பளத்தில் இருந்து அபராதமாக பிடித்தம் செய்யப்படும். அதன்படி ஒவ்வொரு வீரர்களுக்கும் 60 சதவீதம் அபராதமாக பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

    அத்துடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளிகளில் ஆறு குறைக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்கா இதுவரை 7 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று 30 புள்ளிகள் பெற்றிருந்தது. தற்போது 6 புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதால் 24 புள்ளிகள் பெற்றுள்ளது.
    இந்திய அணி பயணிக்கும் பஸ்சில் டோனியின் இருக்கையில் தற்போது யாரும் அமருவது கிடையாது. அவரை அணி மிகவும் இழப்பதாக சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.
    ஹாமில்டன்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் ஐந்து டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 2 டெஸ்டில் விளையாடுகிறது.

    5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளும் மோதும் 3-வது டி20 போட்டி நாளை (ஜனவரி 29) ஹாமில்டனில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில், 3-வது டி20 போட்டியில் பங்கேற்க இந்திய அணி வீரர்கள் பஸ் மூலமாக ஹாமில்டன் நகருக்கு சென்றனர். 

    வீரர்கள் பஸ்சில் பயணம் செய்து கொண்டிருந்தபோது சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் சக வீரர்களிடம் கேலி கிண்டலுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது போன்ற ஒரு வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோவில் அணி வீரர்கள் பும்ரா, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், கோலி உள்பட ஒவ்வொருவருடனும் சாஹல் உற்சாகமாக பேசி மகிழ்ந்தார்.

    டோனி மற்றும் சாஹல் 

    வீடியோவின் இறுதியில் மகேந்திர சிங் தோனி வழக்கமாக அமர்ந்திருக்கும் பஸ்சின் கடைசி ஜன்னலோர இருக்கைக்கு அருகே அமர்ந்த சாஹல், ''இதுதான் 'லெஜெண்ட்’ டோனி பஸ்சில் வழக்கமாக அமர்ந்திருக்கும் இருக்கை. தற்போது இதில் யாரும் அமர்வது கிடையாது. நாங்கள் அவரை மிகவும் இழந்துள்ளோம்’’ என தெரிவித்தார்.

    உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த பிறகு டோனி எந்த சர்வதேச போட்டிகளிலும் விளையாடவில்லை. 

    மேலும், இந்திய கிரிக்கெட் அணிக்காக அக்டோபர் 2019 முதல் செப்டம்பர் 2020 வரை காலகட்டத்திற்கான ஒப்பந்த வீரர்கள் (சீனியர் வீரகள்) பட்டியலில் மகேந்திர சிங் டோனியின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் இளையோர் உலக கோப்பை தொடரின் காலிறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா 233 ரன்களே அடித்துள்ளது.
    19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் சூப்பர் லீக் காலிறுதி 1-ல் இந்தியா - ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்துகின்றன.

    டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சக்சேனா 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த திலக் வர்மா 2 ரன்னில் ஏமாற்றம் அளித்தார். அதிக அளவில் நம்பிய கேப்டன் பிரியம் கார்க் 5 ரன்னில் ஸ்டம்பை பறிகொடுத்தார். இதனால் இந்தியா 54 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது.

    விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள்

    அடுத்து வந்த விக்கெட் கீப்பர் ஜுரெல் 15 ரன்னில் வெளியேறினார். ஒருபக்கம் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் 62 ரன்னில் வெளியேறினார். அதன்பின் வந்த வீர் 25 ரன்களும், பிஷ்னோய் 30 ரன்களும் சேர்த்தனர்.

    அங்கோலேகர் ஆட்டமிழக்காமல் 55 ரன்கள் சேர்க்க இந்திய இளையோர் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 233 ரன்கள் சேர்த்துள்ளது.

    அரைசதம் அடித்த பிஷ்னோய்

    இந்த ரன்னுக்குள் ஆஸ்திரேலியாவை கட்டுப்படுத்தினால் மட்டுமே இந்தியா சாம்பியன் பட்டத்தை நினைத்து பார்க்க முடியும்.
    வெஸ்ட் இண்டீஸ் கேப்டனான பொல்லார்டு இங்கிலாந்து டி20 பிளாஸ்ட் தொடரில் நார்தம்ப்டன்ஷைர் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி ஆல்-ரவுண்டர் பொல்லார்டு. இவர் தற்போது வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருக்கிறார்.

    இவர் இங்கிலாந்து டி20 பிளாஸ்டில் இடம் பிடித்துள்ள நார்தம்ப்டன்ஷைர் அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கிரிக்கெட் மற்றும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் டி20 லீக் என ஒட்டுமொத்தமாக 499 போட்டிகளில் பொல்லார்டு விளையாடியுள்ளார். நார்தம்ப்டன்ஷைர் அவர் விளையாட இருக்கும் 30-வது அணியாகும்.

    அந்த அணிக்காக பொல்லார்டு 8 போட்டிகளில் விளையாடுகிறார். முதல் போட்டி ஜூன் 5-ந்தேதி நடக்கிறது.
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடர அரை இறுதிக்கு முன்னேறினார்.
    மெல்போர்ன்:

    ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் மற்றும் அமெரிக்கா வீரர் டென்னிஸ் சாண்ட்ரென் மோதினர்.

    ஆண்கள் பிரிவில் நடந்த ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 3ம் இடத்தில் உள்ள ரோஜர் பெடரர் 6-3 2-6 2-6 7-6(8) 6-3 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்ரெனை வெளியேற்றி அரை இறுதிக்கு முன்னேறினார். 

    ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரை இறுதி சுற்றில் ரோஜர் பெடரர் 15-வது முறையாக முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
    ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆஸ்லே பார்டி மற்றும் அமெரிக்காவை சேர்ந்த கெனின் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
    மெல்போர்ன்:

    கிராண்ட் சிலாம் போட்டிகளில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இன்று காலை நடந்த பெண்கள் ஒற்றையர் கால் இறுதி ஆட்டம் ஒன்றில் உலகின் முதல்நிலை வீராங்கனையான ஆஸ்லே பார்டி (ஆஸ்திரேலியா)-ஏழாவது வரிசையில் உள்ள கிவிட் டோவா (செக்குடியரசு) மோதினார்கள்.

    இதில் ஆஸ்லே பார்டி 7-6 (8-6), 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றார். கடந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை கைப்பற்றிய அவர் முதல் முறையாக ஆஸ்திரேலிய ஓபன் அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறார்.

    மற்றொரு கால்இறுதி ஆட்டத்தில் 14-வது வரிசையில் உள்ள சோபியா கெனின் (அமெரிக்கா) - ஜாபெர் (துனிசியா) மோதினார்கள். இதில் கெனின் 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வென்றார்.

    அவர் முதல் முறையாக கிராண்ட் சிலாம் போட்டிகளில் அரை இறுதிக்கு தகுதி பெற்று உள்ளார். அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்லேபார்டி- கெனின் மோதுகிறார்கள்.

    உலகின் 2-வது நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா), அதிக கிராண்ட் சிலாம் பட்டம் பெற்றவரான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) மோதும் கால் இறுதி ஆட்டங்கள் பிற்பகலில் நடக்கிறது.

    3-வது வரிசையில் உள்ள பெடரர் அமெரிக்க வீரர் சான்ட் கிரனையும், நடப்பு சாம்பியனான ஜோகோவிச் கனடாவை சேர்ந்த ரோனிக்கையும் கால் இறுதியில் சந்திக்கிறார்கள்.
    நியூசிலாந்து அணிக்கு எதிரான பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்தது.
    ஆக்லாந்து:

    இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதின.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 1-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது. நியூசிலாந்து அணியில் மேகன் ஹல் 3-வது நிமிடத்திலும், கடைசி கட்டத்திலும் கோல் அடித்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்தார். இந்திய அணியில் சலீமா 15-வது நிமிடத்தில் ஒரு கோல் திருப்பினார்.

    இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து மேம்பாட்டு அணியை 4-0 என்ற கணக்கில் வீழ்த்தி இருந்தது. இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது ஆட்டம் நாளை நடக்கிறது.
    அமெரிக்க முன்னாள் கூடைப்பந்து வீரர் கோபே பிரையன்ட் மறைவுக்கு தெண்டுல்கர், விராட்கோலி உள்பட விளையாட்டு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    புதுடெல்லி:

    அமெரிக்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் தேசிய கூடைப்பந்து சங்க (என்.பி.ஏ.) போட்டியில் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் அணிக்காக 20 ஆண்டுகளாக விளையாடி தனது அபாரமான ஆட்டத்தின் மூலம் அதிக புள்ளிகள் குவித்து ரசிகர்களின் உள்ளத்தில் நீங்கா இடத்தை பிடித்தவர் கோபே பிரையன்ட். 2016-ம் ஆண்டில் ஓய்வு பெற்ற அமெரிக்க கூடைப்பந்து வீரரான (வயது 41) அவர் தனது மகள் ஜியானாவை போட்டியில் பங்கேற்க (வயது 13) லாஸ் ஏஞ்சல்சில் இருந்து ஹெலிகாப்டரில் அழைத்து சென்ற போது நேர்ந்த விபத்தில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை பரிதாபமாக பலியானார். அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர்.

    ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அமெரிக்க கூடைப்பந்து அணியில் 2 முறை (2008, 2012) அங்கம் வகித்தவரும் 18 முறை என்.பி.ஏ. ஆல் ஸ்டார் பட்டம் வென்றவருமான கோபே பிரையன்ட் மறைவுக்கு அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள விளையாட்டு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து இருக்கிறார்கள்.

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலி தனது இரங்கல் பதிவில், ‘இந்த செய்தி எனது மனதை பாழாக்கி விட்டது. சிறுவயதில் அதிகாலையில் எழுந்து அவர் களத்தில் நிகழ்த்தும் சாகசங்களை பார்த்த விஷயங்கள் நினைவுக்கு வருகிறது. வாழ்க்கை கணிக்க முடியாததாகவும், நிலையற்றதாகவும் இருக்கிறது. மகளுடன் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த செய்தி மனதை உடைத்து விட்டது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்’ என்று தெரிவித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் சகாப்தம் சச்சின் தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘கோபே பிரையன்ட், அவரது மகள் மற்றும் சிலர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது பதிவில், ‘கோபே மற்றும் அவரது மகள் இறந்த செய்தி மிகுந்த வேதனையை அளிக்கிறது. பலருக்கும் உத்வேகம் அளித்த அவர் ஒரு சகாப்தம். இந்த விபத்தில் பலியான அனைவரது குடும்பத்தினருக்கும் இரங்கலை தெரிவிக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா தனது இரங்கல் பதிவில், ‘விளையாட்டு உலகுக்கு இது மோசமான நாள். கூடைப்பந்தின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவர் விரைவில் போய் விட்டார். கோபே பிரையன்ட் அவரது மகள் ஜியானா மற்றும் விபத்தில் உயிரிழந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடையட்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேன் வார்னே, தென்ஆப்பிரிக்க வீரர் ரபடா, வெஸ்ட்இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், இந்திய முன்னாள் வீரர்கள் வி.வி.எஸ்.லட்சுமண், யுவராஜ்சிங், முகமது கைப், வெஸ்ட்இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சேமி, இந்திய வீரர்கள் ஆர்.அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, ஸ்ரேயாஸ் அய்யர், இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உள்பட பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
    இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசாவின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்துள்ளது.
    ஹராரே:

    ஜிம்பாப்வே அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற் ஜிம்பாப்வே முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான தொடக்கம் தரவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன. பிரெண்டன் டெய்லர் அரை சதமடித்து 62 ரன்னில் அவுட்டானார். அப்போது ஜிம்பாப்வே அணி 4 விக்கெட் இழப்புக்கு 133ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பொறுப்பாக ஆடிய சிக்கந்தர் ராசா அரை சதமடித்தார்.  அவர் 72 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 159 ரன்கள் எடுத்தது. நிதானமாக ஆடிய கேப்டன் சீன் வில்லியம்ஸ் சதமடித்து அசத்தினார். அவர் 107 ரன்னில் வெளியேறினார்.

    முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்கு 352 ரன்கள் எடுத்துள்ளது. சக்பாவா 31 ரன்னிலும், முடோம்போடி 19 ரன்னிலும் அவுட்டாகாமல் உள்ளனர்.

    இலங்கை அணி சார்பில் சுரங்கா லக்மல், தனஞ்செயா டி சில்வா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
    ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    போட்செஸ்ட்ரூம்:

    13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்கு உட்பட்டோருக்கான) போட்டி தென்ஆப்பிரிக்காவில் கடந்த 17-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

    16 அணிகள் இடையிலான இந்த போட்டியில் லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, நியூசிலாந்து (ஏ பிரிவு), வெஸ்ட்இண்டீஸ், ஆஸ்திரேலியா (பி பிரிவு), வங்காளதேசம், பாகிஸ்தான் (சி பிரிவு), ஆப்கானிஸ்தான், தென்ஆப்பிரிக்கா (டி பிரிவு) ஆகிய அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறின.

    இந்த நிலையில் போட்செஸ்ட்ரூமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், 4 முறை உலக கோப்பையை கைப்பற்றிய அணியுமான இந்தியா, 3 முறை கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

    பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணி லீக் ஆட்டங்களில் 90 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையையும், 10 விக்கெட் வித்தியாசத்தில் ஜப்பானையும், 44 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தையும் தொடர்ச்சியாக வீழ்த்தியது.

    இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜெய்ஸ்வால், திவ்யனாஷ் சக்சேனா, திலக் வர்மா, கேப்டன் பிரியம் கார்க் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். பந்து வீச்சில் ரவி பிஷ்னோய், ஆதர்வா அன்கோல்கர், கார்த்திக் தியாகி, ஆகாஷ்சிங் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    ஆஸ்திரேலிய அணியும் வலுவானதாக உள்ளது. அந்த அணி முதலாவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீசிடம் வீழ்ந்தது. அடுத்த 2 ஆட்டங்களில் நைஜீரியா, இங்கிலாந்து அணிகளை சாய்த்து கால்இறுதிக்குள் நுழைந்தது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மெக்கன்சி ஹார்வி பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார். பந்து வீச்சில் கனோர் சுல்லி, தன்வீர் சங்ஹா ஆகியோர் அசத்தி வருகின்றனர். இரு அணிகளும் அரை இறுதிக்கு முன்னேற முனைப்பு காட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.
    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் வழக்கமாக இரவு ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கும். அதனை 30 நிமிடம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

    கூட்டம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இரவு ஆட்டங்கள் தொடங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரவு 7.30 மணிக்கு போட்டியை தொடங்குவது குறித்து விவாதித்தோம். அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடந்த வருடங்களை போல் இந்த முறையும் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த முறை 5 நாட்களில் மட்டுமே இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகிறது. அவை முறையே மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். இறுதிப்போட்டி மும்பையில் நடைபெறும்.

    போட்டியின்போது பவுலர்கள் வீசும் பந்து பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட்டில் தாக்கி தலையில் அதிர்வு ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்கும் முறை மற்றும் நோ-பாலை ஆடுகள நடுவருக்கு பதிலாக 3-வது நடுவர் முடிவு செய்யும் புதிய விதிமுறை ஆகியவை இந்த போட்டியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் நல நிதி கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியை பழைய தேர்வு கமிட்டி தேர்வு செய்து விட்டது. மார்ச் மாதம் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியை புதிய தேர்வு குழுவினர் தேர்வு செய்வார்கள். தேர்வு குழு உறுப்பினர்களுக்கான நேர்காணல் விரைவில் நடைபெறும். கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் மதன்லால், சுலக்‌ஷனா ஆகியோர் இருப்பார்கள். கம்பீருக்கு பதிலாக மாற்று நபர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஹர்திக் பாண்ட்யா இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. அவர் உடல் தகுதியை எட்ட சிறிது காலம் பிடிக்கும்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    ×