search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கங்குலி
    X
    கங்குலி

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றமில்லை- கங்குலி அறிவிப்பு

    ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடங்கும் நேரத்தில் மாற்றம் செய்யப்படவில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மார்ச் 29-ந் தேதி முதல் மே 24-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் வழக்கமாக இரவு ஆட்டம் இரவு 8 மணிக்கு தொடங்கும். அதனை 30 நிமிடம் முன்னதாக இரவு 7.30 மணிக்கு தொடங்கலாமா? என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்ய ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

    கூட்டம் முடிந்த பிறகு இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இரவு ஆட்டங்கள் தொடங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இரவு 7.30 மணிக்கு போட்டியை தொடங்குவது குறித்து விவாதித்தோம். அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை. கடந்த வருடங்களை போல் இந்த முறையும் இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும். இந்த முறை 5 நாட்களில் மட்டுமே இரண்டு ஆட்டங்கள் அரங்கேறுகிறது. அவை முறையே மாலை 4 மணி மற்றும் இரவு 8 மணிக்கு தொடங்கி நடைபெறும். இறுதிப்போட்டி மும்பையில் நடைபெறும்.

    போட்டியின்போது பவுலர்கள் வீசும் பந்து பேட்ஸ்மேன்கள் ஹெல்மெட்டில் தாக்கி தலையில் அதிர்வு ஏற்பட்டு விளையாட முடியாமல் போனால் அவருக்கு பதிலாக மாற்று வீரர் களம் இறங்கும் முறை மற்றும் நோ-பாலை ஆடுகள நடுவருக்கு பதிலாக 3-வது நடுவர் முடிவு செய்யும் புதிய விதிமுறை ஆகியவை இந்த போட்டியில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஐ.பி.எல். போட்டி தொடங்குவதற்கு 3 நாட்களுக்கு முன்பாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் நல நிதி கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி நடைபெறும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.

    நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியை பழைய தேர்வு கமிட்டி தேர்வு செய்து விட்டது. மார்ச் மாதம் நடைபெறும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியை புதிய தேர்வு குழுவினர் தேர்வு செய்வார்கள். தேர்வு குழு உறுப்பினர்களுக்கான நேர்காணல் விரைவில் நடைபெறும். கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் மதன்லால், சுலக்‌ஷனா ஆகியோர் இருப்பார்கள். கம்பீருக்கு பதிலாக மாற்று நபர் விரைவில் அறிவிக்கப்படுவார். ஹர்திக் பாண்ட்யா இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை. அவர் உடல் தகுதியை எட்ட சிறிது காலம் பிடிக்கும்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    Next Story
    ×