என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ஹாமில்டன் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காத இந்திய அணிக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியசிலாந்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டியின்போது இந்திய அணி ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் நான்கு ஓவர்களை வீசி முடிக்கவில்லை. ஐசிசி விதிப்படி குறிப்பிட்ட நேரத்திற்குள் வீசி முடிக்காத ஒவ்வொரு ஓவருக்கும் அந்த அணியின் வீரர்களுக்கு போட்டிக்கான சம்பளத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். அதனடிப்படையில் இந்திய அணி வீரர்களுக்கு தலா 80 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிராக கடைசி இரண்டு டி20 போட்டிகளிலும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    நியூசிலாந்துக்கு எதிராக 347 ரன்கள் போதுமானது என்று நினைத்தோம், பந்து வீச்சும் சிறப்பாக சென்றபோது, டாம் லாதம் வெற்றியை பறித்துவிட்டார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 347 ரன்கள் குவித்தது.

    பின்னர் 348 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. 33-வது ஓவர் வரை ஆட்டம் இந்தியாவின் கையில் இருந்தது. அதன்பின் ராஸ் டெய்லர் - டாம் லாதம் ஜோடி சிறப்பாக விளையாட நியூசிலாந்து 48.1 ஒவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ராஸ் டெஸ்லர் - டாம் லாதம் ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 79 பந்தில் 138 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    போட்டியில் தோல்வியடைந்தது குறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில் ‘‘நியூசிலாந்து அணி மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 347 ரன்கள் போதுமான என்று நினைத்தோம். குறிப்பாக நாங்கள் தொடக்கத்தில் சிறப்பாக பந்து வீசினோம். போட்டியை டாம் லாதம் எங்களிடம் இருந்து பறித்துவிட்டார். மிடில் ஓவர்களில் இருவரையும் எங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை.

    நாங்கள் நல்ல முறையில்தான் பீல்டிங் செய்தோம். ஒரு கேட்ச்-ஐ விட்டோம். இன்னும் முன்னேற்றம் காண்பது அவசியம். ஒரு வாய்ப்பை பற்றி சிந்தித்துக் கொண்டிருக்க முடியாது.

    எங்களை விட நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்தனர். இதனால் இன்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு அவர்கள் தகுதியானவர்கள். இரண்டு அறிமுக தொடக்க வீரர்களும் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார்கள். இதை அவர்கள் தொடர்வார்கள் என்று நம்புகிறேன். ஷ்ரேயாஸ் அய்யரின் சதம் அற்புதம். கேஎல் ராகுல் ஆட்டம் சூப்பர்’’ என்றார்.
    ஹாமில்டனில் இந்தியாவுக்கு எதிராக 348 ரன்களை எட்டியதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் நியூசிலாந்து அதிகபட்சமான இலக்கை எட்டி சாதனைப் படைத்துள்ளது.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 347 ரன்கள் குவித்தது. அதன்பின் 348 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து 48.1 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 348 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    ராஸ் டெய்லர் - டாம் லாதம் ஜோடி 138 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. ராஸ் டெய்லர் 109 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதற்கு முன் நியூசிலாந்து 2007-ல் ஹாமில்டனில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலா் 347 இலக்கை எட்டிப்பிடித்ததுதான் அந்த அணியின் அதிகபட்ச சேஸிங்காக இருந்தது. தற்போது இந்தியாவுக்கு எதிராக 348 இலக்கை எட்டிப்பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

    2007-ல் ஆக்லாந்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 337 ரன்களும், 2018-ல் டுனெடினில் நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 336 இலக்கையும் எட்டிப்பிடித்துள்ளது.
    இளையோர் உலக கோப்பை அரையிறுதியில் பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்ததை ஒருபோதும் மறக்க மாட்டேன் என ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.
    U19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது.

    அதன்பின் இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது பெற்ற ஜெய்ஸ்வால் கூறுகையில் ‘‘பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசியதன் மூலம் எனது கனவு நனவாகியுள்ளது. எனது நாட்டிற்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக உலக கோப்பையில் அடித்த இந்த சதத்தை ஒருபோதும் மறக்க மாட்டேன்’’ என்று கூறினார்.
    முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 347 ரன்கள் குவித்த போதிலும் டெய்லர் மற்றும் டாம் லாதம் அதிரடியால் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா ஷ்ரேயாஸ் அய்யர் (103), கேஎல் ராகுல் (88 அவுட் இல்லை), விராட் கோலி (51) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 50 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்க 347 ரன்கள் குவித்தது.

    பின்னர் 348 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், ஹென்றி நிக்கோல்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 15.4 ஓவரில் 85 ரன்னாக இருக்கும்போது மார்ட்டின் கப்தில் 41 பந்தில் 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பிளண்டெல் 9 ரன்னில் வெளியேறினார். 3-வது விக்கெட்டுக்கு நிக்கோல்ஸ் உடன் ராஸ் டெய்லர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. நிக்கோல்ஸ் 82 பந்தில் 78 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது நியூசிலாந்து 28.3 ஓவரில் 171 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது டெய்லர் 38 பந்தில் 39 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

    4-வது விக்கெட்டுக்கு டெய்லர் உடன் டாம் லாதம் ஜோடி சேர்ந்தார். அப்போது நியூசிலாந்தின் வெற்றிக்கு 126 பந்தில் 177 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இந்தியா வெற்றி பெறும் என ரசிகர்கள் நினைத்தனர்.

    34-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் இருந்து ராஸ் டெய்லர் - டாம் லாதம் ஜோடி இந்தியாவின் பந்து வீச்சை துவம்சம் செய்ய ஆரம்பித்தது. டாம் லாதம் இந்த ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். ராஸ் டெய்லர் 5-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 45 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் நியூசிலாந்து 14 ரன்கள் சேர்த்தது.

    சர்துல் தாகூர் வீசிய அடுத்த ஓவரில் 12 ரன்கள் சேர்த்தது. ஷமி வீசிய அடுத்த ஓவரில் 13 ரன்களும், ஜடேஜா வீசிய அடுத்த ஓவரில் 15 ரன்களும், 38-வது ஓவரில் 11 ரன்களும் அடித்தது. பும்ரா வீசிய 39-வது ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி டாம் லாதம் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 9 ரன்கள் அடித்தது.

    40-வது ஓவரை ஷர்துல் தாகூர் இந்த ஓவரில் 22 ரன்கள் விளாசியது. நியூசிலாந்து 34-வது ஓவரில் இருந்து 40-வது ஓவர் வரை 42 பந்தில் 96 ரன்கள் குவித்தது. இந்த ஜோடி அதிரடியால் ஆட்டத்தை இந்தியாவின் கையில் இருந்து தட்டிப்பறித்தது நியூசிலாந்து. இதனால் கடைசி 10 ஓவர்களில் 52 ரன்களே தேவைப்பட்டது.

    சதம் அடித்த ராஸ் டெய்லர் 108 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருக்க நியூசிலாந்து 48.1 ஓவரில் 348 ரன்களை எட்டி நான்கு விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாம் லாதம் 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 69 ரன்கள் எடுத்தார்.

    இந்திய அணி சார்பில் ஷர்துல் தாகூர் 9 ஓவர்களில் 80 ரன்களும், குல்தீ யாதவ் 10 ஒவர்களில் 84 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.
    பொருளாதார நெருக்கடியை சமாளித்து கிரிக்கெட்டில் சிறப்பான வீரராக உயர்ந்துள்ள இந்திய இளையோர் அணி பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலை வெகுவாக பாராட்டியுள்ளார் சோயிப் அக்தர்.
    U19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது.

    அதன்பின் இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    ஜெய்ஸ்வால் ஏற்கனவே மும்பை அணிக்காக இரட்டை சதம் விளாசியுள்ளார். பானி பூரி விற்றுக் கொண்டே கிரிக்கெட்டில் சிறந்த வீரராக வளர்ந்து வந்துள்ள அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் புகழாரம் சூட்டியுள்ளார்.

    ஜெய்ஸ்வால் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதி போட்டி குறித்தும் சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிறப்பான முயற்சி, ஆனால் இறுதி போட்டிக்கு முன்னேறும் வகையில் அதுபோதுமானது அல்ல.

    பாகிஸ்தான் இளைஞர்களின் பீல்டிங் பரிதாபகரமானதாக இருந்தது. இருந்தாலும் அவர் 19 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தாலும், பீல்டிங் செய்யும்போது டைவ் அடிக்க முடியாதா?. பாகிஸ்தான் இளையோர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள் அல்ல. அதேவேளையில் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் சொல்லியாக வேண்டும்.

    அவர்கள் போட்டியை முழுமையாக வென்றார்கள். பாராட்டுவதற்கு தகுதியானது இந்திய அணி. வருங்காலத்தில் சில வீரர்கள் இந்திய தேசிய அணியில் இடம் பெறுவார்கள் என்பதை உறுதியாக கூறலாம். இந்தியாவின் எதிர்காலம் சரியான கைகளில் உள்ளது என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் கிரிக்கெட் விளையாடுவதற்காக கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்து பால் பண்ணையில் தூங்கியுள்ளார். U19 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். காலையில் பானி பூரி விற்றுள்ளார். அவருடன் விளையாடும் சக வீரர்களுக்கு இவரே அதை பரிமாறியுள்ளார்.

    சதாரணமான சிறுவனாக இருந்த அவர், எப்படி தனது இடத்திற்காக போராடியிருப்பார் என்பது குறித்து நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. அவர் ஏதாவது ஒரு அணிக்கு செல்ல இருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளது. அவர் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிப்பார். இது உறுதி. அதேபோல் சக்சேனாவும் சிறப்பாக விளையாடினார்.

    ஜெய்ஸ்வால் வாழ்க்கையில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் பாடம் கற்றுக் கொள்வது அவசியம். அவர் திறமைக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு பின்னால் பணம் ஒடிக் கொண்டிருக்கிறது’’ என்றார்.
    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கேஎல் ராகுல் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்குவார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனான கேஎல் ராகுல் குறிப்பிட்ட ஒரு இடத்தில் நிரந்தரமாக களம் இறக்கப்படாமல் எந்த இடத்திலும் களம் இறக்கப்படுகிறார். விக்கெட் கீப்பிங் பணியுடன் அதை சிறப்பாக செய்து வருகிறார்.

    தவான் இல்லாததால் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் தொடக்க வீரராக களம் இறக்கப்பட்டார். ஆனால் ஒருநாள் தொடரில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறக்கப்படுவார் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில் தொடக்க வீரர் வரிசையில் இருந்து கேஎல் ராகுலை கீழே இறக்குவது சிறந்ததாக இருக்காது என்று கவுதம் காம்பிர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவுதம் காம்பிர் கூறுகையில் ‘‘கேஎல் ராகுலை டாப் ஆர்டர் வரிசையில் இருந்து கீழே இறக்கப்பட்டால் இது சிறந்ததாக இருக்காது. இந்தியா ராகுல், அகர்வால் காம்பினேசனுடன் சென்றால், ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக பணியாற்றலாம். இந்திய கிரிக்கெட் அணியின் சொத்து கேஎல் ராகுல். விக்கெட் கீப்பராக அவர் சிறப்பாக வகையில் செயல்படுகிறார். ஆனால், 50 ஓவர் கிரிக்கெட்டில் அவரை விக்கெட் கீப்பராக செயல்பட வைக்கக்கூடாது. அப்படி செய்தால் அவர் மீது அதிகமான சுமை ஏற்படும்’’ என்றார்.
    நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் கே.எல் ராகுலின் சிறப்பான ஆட்டத்தால் இந்திய அணி 347 ரன்கள் குவித்தது.
    ஹாமில்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

    இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது,

    தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சற்று அதிரடியாக ஆடினர். ஆனால் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. பிரித்வி ஷா 20 ரன்களிலும் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் விராட் கோலி ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி இணைந்தது. 

    ஷ்ரேயஸ் ஐயர்

    நிதானமாக ஆடிய கோலி அரைசதம் (51 ரன்கள்) கடந்த நிலையில் ஆட்டமிழந்தார். இதையடுத்து கே.எல் ராகுல் களமிறங்கினார். ஒரு புறம் ஷ்ரேயஸ் ஐயர் நிதானமாக ஆட மறு முனையில் கே.எல் ராகுல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.  

    சிறப்பாக விளையாடிய ஷ்ரேயஸ் ஐயர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அவர் 107 பந்துகளில் 11 போர்கள் மற்றும் ஒரு சிக்சர் உள்பட 103 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். மற்றொருபுறம் அதிரடியாக விளையாடிய ராகுல் 64 பந்துகளில்  6  சிக்சர்கள் மற்றும் 3 ஃபோர்கள் உள்பட 88 ரன்கள் குவித்தார்.

    முடிவில், இந்திய அணி 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது. 348 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி ஆட்டத்தை தொடர உள்ளது. 
    மகளிர் ஹாக்கி போட்டியின் 4-வது ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
    ஆக்லாந்து:

    இந்திய பெண்கள் ஹாக்கி அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் ஆக்லாந்தில் நேற்று நடந்த 4-வது ஆட்டத்தில் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர் கொண்டது.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வெற்றிக்கான கோலை கேப்டன் ராணி ராம்பால் 47-வது நிமிடத்தில் அடித்தார்.
    இங்கிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டி காக் சதத்தால் தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    கேப்டவுன்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 4 டெஸ்ட் கொண்ட தொடரை இங்கிலாந்து 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் கேப்டவுனில் நேற்று பகல்- இரவாக நடந்தது.

    முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 258 ரன் எடுத்தது. டென்லே 87 ரன்னும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), கிறிஸ்வோக்ஸ் 40 ரன்னும் எடுத்தனர். ‌ஷம்சி 3 விக்கெட்டும், ஹென்ட்ரிக்ஸ், பெகுலுவாயோ, சுமுட்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். 259 ரன் இலக்குடன் தென்ஆபிரிக்க அணி பின்னர் களம் இறங்கியது.

    கேப்டன் குயின்டன் டி காக் சதத்தால் தென் ஆப்பிரிக்கா 259 ரன் இலக்கை எடுத்து எளிதில் வெற்றிபெற்றது. தென் ஆப்பிரிக்கா 47.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 259 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

    குயின்டன் டி காக் 113 பந்தில் 11 பவுண்டரி, 1 சிக்சருடன் 107 ரன் எடுத்தார். அவரது 15-வது சதமாகும். மற்றொரு தென் ஆப்பிரிக்க வீரர் பவுமா சதத்தை தவற விட்டார். அவர் 103 பந்தில் 98 ரன் எடுத்தார். இதில் 5 பவுண்டரிகளும், 2 சிக்சரும் அடங்கும்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது ஒருநாள் போட்டி வருகிற 7-ந்தேதி டர்பனில் நடக்கிறது.
    நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்யும் இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
    ஹாமில்டன்:

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது.

    இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்று வருகிறது.  முன்னதாக இப்போட்டியில் டாஸ் வென்ற  நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

    இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இளம் வீரர்களான பிரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் சற்று அதிரடியாக ஆடினர். ஆனால் மிகப்பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. பிரித்வி ஷா 20 ரன்களிலும் அகர்வால் 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து கேப்டன் விராட் கோலி ஷ்ரேயஸ் ஐயர் ஜோடி இணைந்தது. முதல் 10 ஓவர்களுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்ததால் இருவரும் நிதானமாக ஆடி வருகின்றனர்.

    சிறப்பாக விளையாடிய கேப்டன் விராட் கோலி அரைசதம் கடந்தார். ஷ்ரேயஸ் ஐயர் 37 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி 28 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 
    மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் ஜெர்மனி வீரர் யான்னிக் மாடெனை இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் நேர்செட்டில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
    புனே:

    3-வது மகாராஷ்டிர ஓபன் டென்னிஸ் போட்டி புனேயில் நடந்து வருகிறது. இதில் 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 122-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன், ஜெர்மனி வீரர் யான்னிக் மாடெனை சந்தித்தார்.

    பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் குணேஸ்வரன் 7-6 (7-4), 7-6 (7-5) என்ற நேர்செட்டில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் அர்ஜூன் காதே 2-6, 4-6 என்ற நேர்செட்டில் செக்குடியரசு வீரர் ஜிரி வெஸ்லியிடம் தோல்வி கண்டு வெளியேறினார்.

    ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் லியாண்டர் பெயஸ் (இந்தியா)-மேத்யூ எப்டென் (ஆஸ்திரேலியா) இணை 6-2, 7-6 (7-5) என்ற நேர்செட்டில் திவிஜ் சரண் (இந்தியா)-அர்டெம் யூரிவிச் சிடாக் (நியூசிலாந்து) ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

    ×