search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சோயிப் அக்தர், ஜெய்ஸ்வால்
    X
    சோயிப் அக்தர், ஜெய்ஸ்வால்

    U19 உலக கோப்பை அரையிறுதியில் அசத்திய ஜெய்ஸ்வால்-க்கு அக்தர் புகழாரம்

    பொருளாதார நெருக்கடியை சமாளித்து கிரிக்கெட்டில் சிறப்பான வீரராக உயர்ந்துள்ள இந்திய இளையோர் அணி பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலை வெகுவாக பாராட்டியுள்ளார் சோயிப் அக்தர்.
    U19 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 172 ரன்னில் சுருண்டது.

    அதன்பின் இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால், சக்சேனா ஆகியோர் விக்கெட் இழக்காமல் சேஸிங் செய்து அணியை வெற்றி பெற வைத்தனர். இடது கை பேட்ஸ்மேனான ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார்.

    ஜெய்ஸ்வால் ஏற்கனவே மும்பை அணிக்காக இரட்டை சதம் விளாசியுள்ளார். பானி பூரி விற்றுக் கொண்டே கிரிக்கெட்டில் சிறந்த வீரராக வளர்ந்து வந்துள்ள அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தரும் புகழாரம் சூட்டியுள்ளார்.

    ஜெய்ஸ்வால் குறித்தும், இந்தியா - பாகிஸ்தான் அரையிறுதி போட்டி குறித்தும் சோயிப் அக்தர் கூறுகையில் ‘‘அரையிறுதி வரை முன்னேறிய பாகிஸ்தான் அணிக்கு என்னுடைய வாழ்த்துக்கள். சிறப்பான முயற்சி, ஆனால் இறுதி போட்டிக்கு முன்னேறும் வகையில் அதுபோதுமானது அல்ல.

    பாகிஸ்தான் இளைஞர்களின் பீல்டிங் பரிதாபகரமானதாக இருந்தது. இருந்தாலும் அவர் 19 வயதிற்கு உட்பட்டவர்களாக இருந்தாலும், பீல்டிங் செய்யும்போது டைவ் அடிக்க முடியாதா?. பாகிஸ்தான் இளையோர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதியானவர்கள் அல்ல. அதேவேளையில் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு வாழ்த்துகள் சொல்லியாக வேண்டும்.

    அவர்கள் போட்டியை முழுமையாக வென்றார்கள். பாராட்டுவதற்கு தகுதியானது இந்திய அணி. வருங்காலத்தில் சில வீரர்கள் இந்திய தேசிய அணியில் இடம் பெறுவார்கள் என்பதை உறுதியாக கூறலாம். இந்தியாவின் எதிர்காலம் சரியான கைகளில் உள்ளது என்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

    இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் கிரிக்கெட் விளையாடுவதற்காக கிராமத்தில் இருந்து மும்பைக்கு வந்து பால் பண்ணையில் தூங்கியுள்ளார். U19 கிரிக்கெட்டில் இரண்டு சதங்கள் அடித்துள்ளார். காலையில் பானி பூரி விற்றுள்ளார். அவருடன் விளையாடும் சக வீரர்களுக்கு இவரே அதை பரிமாறியுள்ளார்.

    சதாரணமான சிறுவனாக இருந்த அவர், எப்படி தனது இடத்திற்காக போராடியிருப்பார் என்பது குறித்து நாம் கற்பனை செய்து பார்க்கலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 2 கோடி ரூபாய்க்கு மேல் கொடுத்து ஏலம் எடுத்துள்ளது. அவர் ஏதாவது ஒரு அணிக்கு செல்ல இருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். அவருக்கு கிரிக்கெட் மீது ஆர்வம் உள்ளது. அவர் இந்திய சீனியர் அணியில் இடம் பிடிப்பார். இது உறுதி. அதேபோல் சக்சேனாவும் சிறப்பாக விளையாடினார்.

    ஜெய்ஸ்வால் வாழ்க்கையில் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் பாடம் கற்றுக் கொள்வது அவசியம். அவர் திறமைக்கு பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறார். தற்போது அவருக்கு பின்னால் பணம் ஒடிக் கொண்டிருக்கிறது’’ என்றார்.
    Next Story
    ×