என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இங்கிலாந்தில் இருந்து திரும்பிய கிரிக்கெட் ஜாம்பவான்களான சங்ககரா, ஜேசன் கில்லெஸ்பி ஆகியோர் முன்னெச்சரிக்கை காரணமாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
    சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தப்படியாக ஐரோப்பா நாடுகள் கொரோனா வைரசுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடிவிட்டன. கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் போலீசிடம் தங்களுடைய தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் பெரும்பாலான மக்கள் வெளிநாடு பயணங்கள் குறித்த தங்களது தகவல்களை அளிப்பதில்லை என்று அரசு கவலை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககரா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘எனக்கு கொரோனா நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. அதுபோன்ற ஏதும் இல்லை என்றாலும், நான் அரசின் வழிமுறைகளை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.

    நான் கடந்த ஒருவாரத்திற்கு முன் லண்டனில் இருந்து இலங்கை திரும்பினேன். வந்ததும் மார்ச் 1-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரைக்கும் வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியர்கள் போலீசில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர்களை அவர்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். நான் எனது பெயரை போலீசில் பதிவு செய்துவிட்டது, தனிமைப்படுத்திக் கொண்டேன்” என்றார்.

    மேலும், இந்த கொரோனா வைரசால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    வெளிநாடுகளில் இருந்து வந்த மூன்று பேர் கொரோனா அறிகுறி இருந்ததை அதிகாரிகளிடம் அவர்கள் மறைத்துவிட்டதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது என்று சங்ககரா தெரிவித்துள்ளார்.

    கில்லெஸ்பி

    அதேபோல் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி் இங்கிலாந்தில் சசக்ஸ் அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். இங்கிலாந்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் மே 28-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் சொந்தநாடு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. இதனால் கில்லெஸ்பி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதேபோல் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
    ஸ்பெயின் நாட்டில் நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து வருவதால் லா லிகா கால்பந்து போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
    சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. முதலில் இத்தாலி நாட்டில் பரவியது. இதன் தாக்கத்தை அறியாமல் ஐரோப்பா நாடுகள் கால்பந்து லீக்குகளை தொடர்ந்து நடத்தி வந்தன. குறுகிய நாட்களுக்குள் ஸ்பெயின், பிரான்ஸ் என விஸ்வரூபம் எடுத்து பரவத்தொடங்கியது.

    இதனால் போட்டிகளை ரசிகர்கள் யாருமின்றி பூட்டிய மைதானத்திற்குள் வைத்து நடத்தின. ஆனால் கொரோனா வைரஸ் கட்டுங்கடங்காத வகையில் ருத்ரதாண்டவம் ஆட அனைத்து லீக்குகளும் தள்ளி வைக்கப்பட்டன.

    ஸ்பெயின் நாட்டில் நடத்தப்படும் உலகளவில் முன்னணி லீக்கான லா லிகா கால்பந்து போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டன. ஏப்ரல் முதல் வாரத்திற்குள் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துவிடும். அதன்பிறகு போட்டியை நடத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தது.

    ஆனால் ஸ்பெயின் நாட்டில் இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வரை சகஜ நிலை திரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லா லிகா மற்றும் ஸ்பெயின் கால்பந்து பெடரேசன் இணைந்து காலவரையின்றி லா லிகா கால்பந்து லீக் போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
    அகாடமியில் 30 வீரர்கள் தங்கும் அளவில் உள்ள வளாகத்தை கொரோனா சிகிச்சைக்காக வழங்க தயாராக இருக்கிறோம் என புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
    இந்தி்யாவில் நாளுக்குநாள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியா முழுவதும் பாதித்தவர்களின் எண்ணிக்கை 400-ஐ தாண்டிய நிலையில் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் ஒரு நபர் பாதிக்கப்பட்டுள்ளார். சந்தேகத்தின்பேரின் பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    வரும் இரண்டு வாரங்கள் மிகவும் சவாலானதாக இருக்கும் என கூறப்படுகிறது. ஒருவேளை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து புதுச்சேரியில் சிகிச்சை அளிக்க போதுமான இட வசதி இல்லை என்றால் எங்கள் அகாடமியில் உள்ள 30 பேர் தங்கும் அளவிற்கு உள்ள வளாகத்தை சிகிச்சை பெறுவதற்காக வழங்க தயாராக இருக்கிறோம் என புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது,

    ‘‘புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்திற்கு சொந்தமான அகாடமி துதிபேட்டில் உள்ளது. இந்த அகாடமியின் உள்ளே இரண்டு அணிகளைச் சேர்ந்த 30 வீரர்கள் தங்கும் அளவில் சமையல் மற்றும் சாப்பாடு அறை வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள வளாகம் உள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாங்கள் கிரிக்கெட் போட்டிகளை நிறுத்தியுள்ளோம்.

    கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெறுபவர்களில் 30 பேருக்கு இங்கு வைத்து மருத்துவம் பார்க்க முடியும். லட்சுமி மெடிக்கல் காலெஜ் உடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் தேவைப்பட்டால் எங்களை அணுகலாம்”என புதுச்சேரி மாநில கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.
    கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில், ஊடரங்கு போன்ற நடவடிக்கைகளில் அரசின் விதிமுறைகளை மீறும் பொதுமக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுதம் கம்பிர் வலியுறுத்தியுள்ளார்.
    கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் இந்த மாதம் தொடக்கத்தில் மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. ஆனால் கடந்த வாரத்தில் இருந்து கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே உள்ளன.

    இதனால் பிரதமர் மோடியின் வேண்டுகோள்படி நேற்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை நாடுமுழுவதும் பொதுமக்கள் சுயஊரடங்கை கடைபிடித்தனர். இதனால் நாடு முழுவதும் முக்கியமான சாலைகள் வெறிச்சோடின. பிரதமர் மோடி மாலை ஐந்து மணிக்கு மருத்துவர்களுக்கு நன்றி கூறும் விதமாக பொதுமக்கள் கைகளை தட்டி அல்லது மணி அடித்து ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனக்கூறியிருந்தார்.

    ஆனால் பொதுமக்கள் ஐந்து மணிக்குப்பிறகு மிகப்பெரிய அளவில் ஒன்றாக பொது இடங்களில் கூடி திருவிழா போன்று இதை கொண்டாடினர். அத்துடன் அதை வீடியோ எடுத்தும் வெளியிட்டிருந்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் 2-ம் கட்ட நிலையில் உள்ளது. சமூக பரவல் என்ற 3-ம் நிலையை எட்டிவிடக்கூடாது என்பதற்கான எடுக்கப்பட்ட அரசின் முயற்சி இந்த சம்பவத்தால் சீர்குலைந்தது.

    மேலும் வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்ட மக்கள் ஜாலியாக வெளியில் சுற்றுகின்றனர். இதனால் பெரிய ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதை கட்டுப்படுத்த டெல்லி, ராஜஸ்தான் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அரசின் வழிமுறைகளை கடைபிடிக்காதவர்களை தனிமைப்படுத்த வேண்டும் அல்லது ஜெயில் அடைக்க வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பா.ஜனதா எம்.பி.யும் ஆன கவுதம் காம்பிர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து கவுதம் கம்பிர் டுவிட்டர் பக்கத்தில் ‘‘நீங்கள் செல்வதுடன் உங்களுடைய குடும்பத்தை கூட அழைத்துச் செல்வீர்கள். தனிமைப்படுத்துதல் அல்லது ஜெயில்... ஒட்டுமொத்த சமூதாயத்திற்கும் ஆபத்தாக இருக்காமல் வீட்டிலேயே தங்கியிருங்கள். வேலை மற்றும் தொழில் ஆகியவற்றிற்கான போராட்டம் மட்டுமே இது அல்ல. உயிருக்கும் சேர்த்துதான். உங்களை போன்றவர்களால் அத்தியாவசிய சேவைகள் வழங்கப்படுவது தடைபட்டுவிடக் கூடாது. ஊடரங்கை பின்பற்றுங்கள்... ஜெய் ஹிந்த்” என பதிவிட்டுள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்த ஷிவ்நரைன் சந்தர்பால், விராட் கோலிதான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் எனத் தெரிவித்துள்ளார்.
    இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித், இங்கிலாந்தின் ஜோ ரூட், நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் ஆகியோர் இந்த தலைமுறையின் சிறந்த வீரர்களாக கருதப்படுகிறார்கள். இதில் விராட் கோலி மூன்று வடிவிலான கிரிக்கெட்டில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவர் மூன்றிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

    இந்நிலையில் விராட் கோலிதான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் சந்தர்பால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சந்தர்பால் கூறுகையில் ‘‘விராட் கோலிதான் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அவருடைய ஆட்டத்தின் எல்லா அம்சங்களிலும் கடினமாக பயிற்சி மேற்கொண்டிக்கிறார். அதன் முடிவை அவரது ஆட்டம் வெளிப்படுத்துகிறது.

    அவர் உடற்தகுதியில் அதிக கவனம் செலுத்துகிறார். அதுபோல் கிரிக்கெட் திறனை வளர்க்கும் வகையில் அதிக பயிற்சி மேற்கொள்கிறார். கடின உழைப்பின் மீது அவர் கவனம் செலுத்தி, எப்போதுமே சிறப்பாக விளையாட வேண்டும் என விரும்பும் வீரர்களில் அவர் ஒருவர் என்பதை நம்மால் பார்க்க முடியும்.

    நீண்ட காலத்திற்கு சிறந்த ஆட்டத்தை தொடர்வது எளிதான காரியம் அல்ல. அதற்காக அவரை நாம் பாராட்டியே ஆக வேண்டும். உங்களுடைய பயிற்சியின் மீது நீங்கள் கவனம் செலுத்தினால், அதன் ரிசல்ட் கண்டிப்பாக வெளிப்படும்” என்றார்.
    ‘புல் ஷாட்’ அடிப்பதில் யார் வல்லவர் என்று நான்கு பேர் படத்தை வெளியிட்டு கேள்விகேட்டிருந்த ஐசிசி-யை இந்திய அணி தொடக்க பேட்ஸ்மேன் ரோகித் சர்மா கிண்டல் செய்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா - தென்ஆப்பிரிக்கா, இலங்கை - இங்கிலாந்து இடையிலான போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இனிமேல் கிரிக்கெட் எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை.

    இதனால் கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் போன்றோர் தங்களது கடந்த கால சிறந்த தருணங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஐசிசி) தன்னுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் சர் விவியன் ரிச்சர்ட்ஸ், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிப்ஸ், இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆகியோரின் படத்தை பதவிட்டு ‘புல் ஷாட்’ அடிப்பதில் இந்த நான்கு சிறந்த  பேட்ஸ்மேகளில் உங்களுக்கு பிடித்தவர் யார்? என ரசிகர்களிடம் கேள்வி கேட்டிருந்தது.

    இதற்கு பதில் அளித்த இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா யாரோ ஒருவடையது இங்கு மிஸ்சிங்? என்று ட்ரோல் செய்துள்ளார்.

    ரோகித் சர்மா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இங்கே யாரோ ஒருவரைடையது மிஸ்சிங்?. வீட்டில் இருந்து வேலை செய்வது மிகவும் எளிதல்ல என்று நினைக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்கள் விளாசியுள்ள ரோகித் சர்மாவும் ‘புல் ஷாட்’அடிப்பதில் வல்லவர். பெரும்பாலான சிக்சர்களை அவர் புல் ஷாட் முறையில் விளாசியிருப்பார். இதனை மனதில் வைத்துதான் ஐசிசியை ட்ரோல் செய்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் பீல்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதர், வீரர்கள் உடலை ‘பிட்’ஆக அப்படியே வைத்திருப்பதற்காக வீட்டில் இருந்தே பயிற்சி அளித்து வருகிறார்.
    இந்தியா - தென்ஆப்பரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 12-ந்தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நடக்க இருந்தது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில் லக்னோ, கொல்கத்தாவில் நடைபெற இருந்த ஆட்டங்கள் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்பட்டது.

    அதன்பின் பிசிசிஐ அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளையும் ரத்து செய்தது. இதனால் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்களுடைய உடலை ‘பிட்’ஆக வைத்திருப்பதில் மற்ற அணி வீரர்களை விட மிகப்பெரிய அளவில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

    மயங்க் அகர்வால்

    தற்போது அனைத்து உடற்பயிற்சி கூடங்களும் மூடப்பட்டுள்ளதால் பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் வீட்டில் இருந்தே வீரர்களுக்கு கற்றுக் கொடுக்க முடிவு செய்தார். அதன்படி வீரர்கள் தங்களுடைய வீட்டில் உடற்பயிற்சி மேற்கொள்வதை வீடியோ எடுத்து ஸ்ரீதருக்கு அனுப்பி வைக்கின்றனர். அதில் ஏதாவது சரிசெய்ய வேண்டுமென்றால் ஆலோசனை வழங்குகிறார்.
    கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் கிடைத்துள்ள இந்த இடைவெளியை கிரிக்கெட் வீரர்கள் தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என பொல்லார்டு தெரிவித்துள்ளார்.
    கொரோனோ வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக உள்ளூர், சர்வதேச என அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர். குறிப்பாக உலகளவில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் அதிக அளவிலான வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகிறார்கள்.

    இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள நேரத்தை தங்களை சுயபரிசோதனை செய்து கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் ஒயிட்-பால் கிரிக்கெட் அணி கேப்டன் பொல்லார்டு கூறுகையில் ‘‘கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கிரிக்கெட் வாழ்க்கை குறித்து சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும், மனதளவிலும், உடல் அளவிலும் ஆரோக்கியத்தை அப்படியே தக்கவைத்துக்கொள்ள பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இது தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு அதை வெளிப்படுத்துவற்கு சரியான நேரம். இந்த நேரத்தில் கிரிக்கெட் வாழ்க்கையில் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம், கிரிக்கெட் வாழ்க்கை முன்னோக்கி எடுத்துச்செல்ல நாம் விரும்புவது என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

    சிறிய காயம் காரணமாக பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை புறக்கணித்த நேரத்தில் உடற்தகுயில் கவனம் செலுத்தி அடுத்த தொடர்களுக்கு என்னை தயார்படுத்திக் கொண்டேன்” என்றார்.

    வெஸ்ட் இண்டீஸ் இங்கிலாந்துக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜூன் 4-ந்தேதியில் இருந்து விளையாட இருக்கிறது. ஆனால் கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக தொடர் நடைபெறுமா? என்பது சந்தேகமே...
    கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள், தடகள சங்கங்கள், வீரர்-வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    டோக்கியோ:

    32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை ஒத்தி வைக்க வேண்டும் என்று பல்வேறு நாடுகள், தடகள சங்கங்கள், வீரர்-வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

    சமீபத்தில் அமெரிக்க நீச்சல் சங்கம், ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.

    ஆனால் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவித்து இருந்தது. ஓரிரு மாதங்களில் நிலைமை சரியாகி விட் டால் ஒலிம்பிக்கை நடத்தி விடலாம் என்று போட்டி அமைப்பாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

    இதற்கிடையே ஜப்பான் நாட்டு பிரதமர் ஷின்சோ அபே, பாராளுமன்றத்தில் பேசும்போது, “கொரோனா வைரஸ் அச்சறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்தபடி இருக்கும் நிலையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைப்பதை தவிர வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் கூறும்போது, முழு நிறைவான ஒலிம்பிக் போட்டியை நடத்தவே ஜப்பான் விரும்புகிறது. ஆனால் இது கடினமானது என்று தோன்றுகிறது.

    முதலில் நாம் வீரர்களை பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. எனவே ஒலம்பிக் போட்டியை ஒத்தி வைப்பது தவிர்க்க முடியாததாகவே படுகிறது” என்றார்.

    இந்த நிலையில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டி குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விரைவில் ஆலோசனை நடத்த உள்ளது.

    இதுகுறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பாஹ் கூறியதாவது:-

    ஒலிம்பிக் போட்டி குறித்து நான்கு வாரங்களுக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும். இதில் போட்டியை ஒத்தி வைப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

    அதே வேளையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யும் திட்டமில்லை. போட்டியை ரத்த செய்வது, எந்தவொரு பிரச்சினையையும் தீர்க்காது அல்லது யாருக்கும் உதவாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நிர்வாக குழு வலியுறுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுக் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படும் நிலையில் ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதியை பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர்.
    சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜப்பானிலும் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்து வருகிறது. இதனால் ஜூலை மாதம் 24-ந்தேதி தொடங்கு ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வரை நடைபெற இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் தொடர் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச ஒலிம்பிக் சங்கம் இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை.

    ஜப்பான் எப்படியாவது போட்டியை நடத்திவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை ஜப்பான் வெகுவாக தடுத்துவிட்டது. இதனால் ஒலிம்பிக் போட்டியை நடத்தி விடலாம் என்பதில் நம்பிக்கையில் உள்ளது. ஒருவேளை ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்பட்டால் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்படும். இதனால் மற்ற நாடுகளுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் ஜப்பான் நடவடிக்கைகைள் எடுத்து வருகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன் கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் நகரில் முதன்முதலாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ஆனால் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் ஊர்வலம் ரத்து செய்யப்பட்டது. அதன்பின் ஒலிம்பிக் ஜோதிக்கான பேட்டனை ஜப்பான் தனி விமானம் மூலம் கிரீஸ் நாட்டில் இருந்து சொந்த நாட்டுக்கு கொண்டு வந்தது.

    இந்நிலையில் ஒலிம்பிக் ஜோதி மியாகியில் உள்ள செண்டை நிலையத்தில் ஏற்றப்பட்டது. அப்போது கொரோனோ வைரஸ் தொற்றை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே இடத்தில் திரண்டு இந்த நிகழ்ச்சியை பார்த்து ரசித்தனர்.

    ஒலிம்பிக் ஜோதி

    பெரும்பாலான மக்கள் முகமூடி இல்லாமல் வந்திருந்தனர். சிலர் மட்டுமே முகமூடி அணிந்திருந்தனர். உலகமே அச்சத்தி்ல் இருக்கும் நேரத்தில் ஜப்பானில் மட்டும் இப்படி ஒன்று கூடிய விவகாரம் உலக நாடுகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதற்கிடையில் கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதில் ஜப்பான் வெளிப்படைத்தன்மையாக இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுவரை ஜப்பானில் 1101 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். 215 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக யாரும் பாதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.-
    மற்ற வீரர்கள் போன்று மிகப்பெரிய அளவில் அறிவிப்பது போன்று அல்லாமல் எந்தவித ஓசையின்றி அமைதியாக தனது ஓய்வு முடிவை டோனி அறிவிப்பார் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்எஸ் டோனி இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை ஒருநாள் தொடருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாமல் உள்ளார். இந்த இடைவெளியில் இந்திய கிரிக்கெட் நிர்வாகம் ரிஷப் பண்ட் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரை தயார் செய்து வருகிறது.

    ஐபிஎல் சீசன் 2020-ல் சிறப்பாக விளையாடினால் எம்எஸ் டோனிக்கு டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கும் வாய்ப்புள்ளதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவித்தனர்.

    ஆனால் கொரோனா வைரஸ் நோயால் ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதிக்குள் நிலைமை கட்டுக்குள் வர வாய்ப்பில்லை. இதனால் ரத்து செய்யப்படலாம். அல்லது நீ்ண்ட நாட்கள் தள்ளிப்போகலாம். இதனால் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை.

    டோனி
    இந்நிலையில் மற்ற வீரர்களை போன்று மிகப்பெரிய அறிவிப்போடு எம்எஸ் டோனி ஓய்வு பெறாமல் அமைதியாக வெளியேறுவார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ‘‘டி20 உலக கோப்பையில் எம்எஸ் டோனி விளையாடுவதை நான் பார்க்க விரும்பினேன். தற்போதுள்ள நிலையில் அது நடக்க வாய்ப்பில்லை. அணி அவரை விட்டு நகரத் தொடங்கிவிட்டது. எம்எஸ் டோனி மற்றவர்களை போன்று மிகப்பெரிய அளவில் ஓய்வு முடிவை அறிவிக்கமாட்டார். அவர் ஓசையின்றி அமைதியான முறையில் ஓய்வு பெறுவார் என்று கருதுகிறேன்’’என்றார்.
    ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த கால்பந்து கிளப்பான ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் உரிமையாளர் கொரோனா வைரஸ் தாக்கி பிலியானார்.
    மாட்ரிட்:

    ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தப்படியாக ஸ்பெயின் மற்றும் பிரான்ஸில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    ஸ்பெயின் நாட்டின் முன்னணி கால்பந்து கிளப் அணி ரியல் மாட்டிரிட். இந்த அணியின் முன்னாள் உரிமையாளர் லொரென்ஜோ சான்ஸ்.

    76 வயதான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் மருத்துவதுமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    அவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது உயிரிழந்துள்ளதாக உள்ளூர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

    லொரென்ஜோ சான்ஸ் 1995 முதல் 2000 வரை ரியல் மாட்ரிட் அணியின் உரிமையாளராக இருந்தார். அப்போது ரியல் மாட்ரிட் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியிருந்தது. ஒரு முறை லா லிகாவை வென்றிருந்தது.

    ×