என் மலர்tooltip icon

    விளையாட்டு

    கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் ஹாக்கி அணிகள் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
    பெங்களூரு:

    ஜப்பான் நாட்டு தலைநகர் டோக்கியோவில் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் ஒலிம்பிக் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு இந்திய ஆண்கள் ஹாக்கி அணியும், பெண்கள் ஹாக்கி அணியும் ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இந்த முறை ஏதாவது ஒரு பதக்கம் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இவ்விரு அணியினரும் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

    தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் தலைவிரித்தாடுகிறது.

    கொரோனா அச்சம் ஒரு பக்கம் கலங்கடித்தாலும், இந்திய ஆக்கி அணிகளின் பயிற்சிக்கு பாதிப்பு இல்லை. பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய (சாய்) மையத்தில் இவர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கொரோனா பரவாமல் தடுக்க இங்கு பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் உரிய அங்கீகார அட்டை இல்லாத யாரும் அனுமதிக்கப்படுவதில்லை.

    ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆண்கள் ஆக்கி அணி தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தையும், பெண்கள் அணி நெதர்லாந்தையும் சந்திக்கும் வகையில் போட்டி அட்டவணை அமைந்துள்ளது. இவ்விரு ஆட்டங்களும் ஜூலை 25-ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா வைரஸ் தொற்று பீதி காரணமாக அயர்லாந்து-வங்காளதேசம் இடையில் நடைபெற இருந்த ஒருநாள் மற்றும் டி20 தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    வங்காளதேசம் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருந்தது. இந்தத் தொடர் இம்மாத இறுதியில் தொடங்குவதாக இருந்தது.

    தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தி வருவதால் இருநாட்டு கிரிக்கெட் போர்டுகளும் இணைந்து தொடரை தள்ளிவைக்க முடிவு செய்துள்ளது.

    இதனால் அயர்லாந்து-வங்காளதேசம் இடையிலான கிரிக்கெட் தொடர் வரும் மே மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
    இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த போட்டியையும் மே 28-ந்தேதி வரை நடத்த வேண்டாம் என்று கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. அங்கு உயிரிழப்பும் ஏற்பட்டு பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து இங்கிலாந்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. கால்பந்து போட்டிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் இங்கிலாந்து கிக்கெட் வாரியமும் கொனோரா வைரஸ் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் நடத்த வேண்டாம் என்று முடிவு செய்து இருக்கிறது.

    இதையடுத்து இங்கிலாந்தில் உள்ளூர் கிரிக்கெட் உள்ளிட்ட எந்த போட்டியையும் மே 28-ந்தேதி வரை நடத்த வேண்டாம் என்று உத்தரவிட்டுள்ளது.

    கவுண்டி கிரிக்கெட் போட்டி தொடர் 7 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 24-ந் தேதி ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    மும்பை:

    13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு போட்டிகளை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் பீதியால் மத்திய அரசு விதித்துள்ள லிசா கட்டுப்பாடுகளால் விளையாட்டு வீரர்கள் ஏப்ரல் 15-ந் தேதி வரை ஐ.பி.எல். போட்டி தொடரில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது.

    இதையடுத்து இந்திய கிரிக்கெட் வாரியம் தீவிர ஆலோசனை நடத்தியது. ஐ.பி.எல். அணி உரிமையாளர்களுடன் ஆலோசித்தது. அதன்பின் ஐ.பி.எல். தொடரை ஏப்ரல் 15-ந் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.

    இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருவதையொட்டி ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு ஐ.பி.எல். போட்டி தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகமும் உண்டாகி இருக்கிறது.

    இதற்கிடையே ஐ.பி.எல். போட்டி நடத்துவது குறித்து ஏப்ரல் 15-ந் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும் என்று மத்திய விளையாட்டு துணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.

    வருகிற 15-ந்தேதி வரை எந்த போட்டியும் நடத்த கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில் 13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் வருகிற 24-ந் தேதி ஐ.பி.எல். அணியின் உரிமையாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இது குறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தரப்பில் கூறும்போது, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் மற்றும் ஐ.பி.எல். அணி உரிமையாளர்கள் வருகிற 24-ந்தேதி போட்டி தொடர் குறித்து ஆலோசிக்க உள்ளனர்.

    கொரோனா வைரஸ் காரணமாக கிரிக்கெட் வாரிய அலுவலகம் மூடப்பட்டுள்ளது. அதேபோல் ஆலோசனை கூட்டம் ஓட்டலிலும் நடத்தப்படவில்லை. எனவே செல்போனில் ‘கான்பரன்ஸ் கால்’ மூலம் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அணி உரிமையாளர்கள் ஆலோசித்து முடிவு செய்துள்ளனர்.

    இதில் 2020-ம் ஆண்டு ஐ.பி.எல்.போட்டியின் செயல்முறை மற்றும் சூழ்நிலை குறித்து விவாதிக்கப்படுகிறது என்றார்.
    இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் பி.கே.பானர்ஜி மரணம் அடைந்தார். அவரது மறைவிற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா:

    இந்திய கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான பிரதீப் குமார் பானர்ஜி வயது முதிர்வு காரணமாக மூச்சுத் திணறல், இருதய கோளாறு, நிமோனியா, முடக்கு வாதம் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 2-ந் தேதி முதல் கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசத்தின் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பகலில் மரணம் அடைந்தார்.

    மறைந்த 83 வயதான பி.கே. பானர்ஜிக்கு, பவுலா, பூர்ணா என்ற 2 மகள்கள் உள்ளனர். அவருடைய இளைய சகோதரர் பிரசுன் பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் எம்.பி.யாக உள்ளார். தனது 16 வயதில் சந்தோஷ் கோப்பை கால்பந்து போட்டியில் அறிமுகமான பி.கே.பானர்ஜி 1955-ம் ஆண்டு முதல் 1967-ம் ஆண்டு வரை இந்திய அணிக்காக விளையாடினார். அவர் 84 சர்வதேச போட்டிகளில் விளையாடி 65 கோல்கள் அடித்துள்ளார்.

    1962-ம் ஆண்டில் ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்து இருந்த அவர் 1958, 1966-ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டியிலும் பங்கேற்றுள்ளார். 1956-ம் ஆண்டு மெல்போர்னில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் 4-வது இடம் பிடித்த இந்திய அணியில் இடம் பெற்ற அவர், 1960-ம் ஆண்டு ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை கவனித்தார். அர்ஜூனா மற்றும் பத்மஸ்ரீ விருதுகளை பெற்ற அவர் 2004-ம் ஆண்டில் சர்வதேச கால்பந்து சங்கத்தின் (பிபா) ஆர்டர் ஆப் மெரிட் என்னும் உயரிய விருதை தன்வசப்படுத்தினார்.

    காயம் காரணமாக 1967-ம் ஆண்டு கால்பந்து போட்டியில் இருந்து ஒய்வு பெற்ற பானர்ஜி, மோகன் பகான் கிளப் அணியின் பயிற்சியாளராகவும், இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். 1970-ம் ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியின் பயிற்சியாளராகவும் இருந்தார்.

    இந்திய கால்பந்தின் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்கிய பி.கே.பானர்ஜி மறைவுக்கு, மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, அகில இந்திய கால்பந்து சம்மேளன பொதுச்செயலாளர் குஷால் தாஸ், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, இந்திய கிரிக்கெட் வீரர் விருத்திமான் சஹா உள்பட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஆசிய கால்பந்து கூட்டமைப்பு சார்பிலும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    ஜோர்டான் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் இத்தாலியில் பயிற்சி மேற்கொண்ட மேரி கோம் தன்னைத்தானே தனிமைப் படுத்தியுள்ளார்.
    இந்தியாவின் முன்னணி குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம். இவர் சமீபத்தில் ஜோர்டானில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான ஆசிய தகுதிச்சுற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மேரி கோம் தகுதிப் பெற்றார்.

    ஜோர்டானுக்கு செல்லும் முன் இத்தாலியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இதனால் மேரி கோம் ஜோர்டானில் இருந்து வந்தபின் தன்னைத்தானே அவர் தனிமைப்படுத்திக் கொண்டார்.

    அப்போது எந்தவித மன அழுத்தமும் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேரி கோம் கூறுகையில் ‘‘சுமார் ஒரு மாதம் எனது குழந்தைகளிடம் இருந்து தனித்து இருந்த பின்னர், தற்போது நான் அமைதியாக இருக்கிறேன். எனது பயிற்சியை செய்து கொண்டிருக்கிறேன். எனது உடற்தகுதியில் அக்கறை எடுத்துக் கொண்டு குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறேன்.

    நான் எதையும் பற்றி யோச்சிகாமல் எனது குடும்பத்துடன் இருக்கிறேன். இதுதான் தனிமைப்படுத்துதலின் சிறந்த பகுதி. என்னுடைய வேண்டுகோள் என்னவெனில், எவரும் பீதி அடைய வேண்டாம் என்பதுதான். உங்களுடைய குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க முடியும் என்றால், முயற்சி செய்து உடன் இருங்கள்.

    என்னை பொறுத்த வரைக்கும் தனிமைப்படுத்தியிருந்த நேரத்தில் சுதந்திரமாக இருந்ததாக உணர்கிறேன்’’ என்றார்.
    வீரர்களின் பாதுகாப்பிற்காக தொடரை ரத்து செய்ததால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு நன்றி தெரிவித்துள்ளது.
    இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த 12-ந்தேதியில் இருந்து நேற்று முன்தினம் 18-ந்தேதி வரை நடைபெற இருந்தது. இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருந்த முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

    இதனால் தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் சொந்த நாடு திரும்பியுள்ளனர். அவர்கள் முன்னெச்சரிக்கை காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டனர்.

    இந்நிலையில் பெரும் நெருக்கடிக்கு இடையில் தொடரை ரத்து செய்த இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டு நன்றி தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட் போர்டின் இடைக்கால தலைமை நிர்வாகி ஜேக்யூஸ் ஃபால் கூறுகையில் ‘‘எங்களது வீரர்களை உடனடியாக சொந்த நாடு திரும்புவதற்கு அனுமதித்த பிசிசிஐ-க்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த முடிவை எடுப்பது எளிதானது அல்ல. இதனால் இந்தியாவுக்கு மிகப்பெரிய நிதி இழப்பு ஏற்பட்டிருக்கும்.

    கடினமான நேரத்தை அவர்கள் புரிந்து கொண்டதற்காக நாங்கள் அவர்களுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறோம். இந்த சூழ்நிலையில் வீரர்கள் முதலில் சொந்த நாடு திரும்பியுள்ளனர்’’ என்றார்.
    ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடி தெரிவித்த அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கேட்டுக்கொண்டுள்ளார்.
    கொரோனா வைரசான ‘கோவிட்-19’ தொற்று நோய் இந்தியாவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 4 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 200-ஐ நெருங்கிவிட்டது.

    இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

    மக்கள் தங்களை தனிமைப்படுத்துவதன் மூலமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும். என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதனால் வருகிற 22-ந்தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த ஊரடங்கை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த நிலையில் பிரதமர் மோடியின் அறிவுரையை பொறுப்புள்ள குடிமக்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாம் அனைவரும் போராட வேண்டும். அதற்காக மிகவும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் செயல்பட வேண்டும்.

    நாம் அனைவரும் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும். பாதுகாப்பு குறித்து பிரதமர் மோடி தெரிவித்த அறிவுரையை அனைவரும் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இதேபோல இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் மோடியின் அறிவுரையை பாராட்டியுள்ளார்.

    கொரோனா வைரஸ் காரணமாக ஐ.பி.எல். போட்டி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், வீரர்கள் பயிற்சி பெறாமல் தங்கள் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகிறார்கள்.
    கொரோனா விழிப்புணர்வு செய்தி பெரும்பாலான இந்திய ரசிகர்களுக்கு சென்றடையும் வகையில் ‘இந்தி’யில் டுவிட் செய்துள்ளார் கெவின் பீட்டர்சன்.
    கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. கிரிக்கெட், கால்பந்து போன்ற விளையாட்டு போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தனிமனிதனும் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என வல்லுனர்கள் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

    பிரபல கிரிக்கெட் வீரர்கள் தங்களால் முயன்ற அளவிற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரும், தற்போது வர்ணனையாளராகவும் உள்ள கெவின் பீட்டர்சனுக்கு எப்போதுமே இந்தியா மீது அக்கறை உண்டு.

    அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்திய மக்களுக்கு கெவின் பீட்டர்சன் கொரோனா குறித்த விழிப்புணர்வு கருத்தை வெளிப்படுத்த விரும்பினார். ஆங்கிலத்தில் பதிவிட்டால் இந்தியாவில் உள்ள பெரும்பாலான ரசிகர்களுக்கு படிக்க கஷ்டாக இருக்கும் நினைத்த அவர், இந்தி ஆசிரியரை வைத்து இந்தியில் தனது கருத்து பதிவிட்டுள்ளார்.
    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் ஸ்டாஃப் என 128 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
    கொரோனா அச்சுறுத்தலால் உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் 2-வது வாரத்தில் தவிர்க்க முடியாத முக்கியமான போட்டிகள் மட்டும் ரசிகர்கள் யாருமின்றி நடத்தப்பட்டது.

    ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியதால் பிளே-ஆஃப் சுற்று போட்டிகளை ரத்து  செய்து அதை அரையிறுதி ஆட்டங்களாக மாற்றியது. அரையிறுதி ஆட்டங்களையும், இறுதி போட்டியையும்  ரசிகர்கள் யாருமின்றி நடத்த முடிவு செய்தது.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மிகப்பெரிய அளவில் கிளம்பியதால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் வீரர்கள் மற்றும் ஸ்ஃடாப், போட்டி அதிகாரிகள், ஒளிபரப்பாளர்கள், அணி உரிமையாளர்கள் என 128 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என பாகிஸ்தான் சூப்பர் லீக் தெரிவித்துள்ளது.
    ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா? என்பது குறித்து ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்புதான் முடிவு எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரிண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று பீதி அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    பெரும்பாலான முடிவுகள் மார்ச் 31-ந்தேதிக்கு பின் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய மந்திரி ரிஜிஜு கூறுகையில் ‘‘ஐபிஎல் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். பிசிசிஐ மத்திய அரசுக்குக்கீழ் இல்லை. ஆனால் இது விளையாட்டை பற்றியது அல்ல. மக்கள் பாதுகாப்பை பற்றியது. ஏப்ரல் 15-ந்தேதிக்குப்பின் நாட்டின் சூழ்நிலையை பொறுத்து புதிய ஆலோசனைகள் வழங்கப்படும்’’ என்றார்.
    தங்கள் நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்த முன்வரும்படி இங்கிலாந்துக்கு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டு இருக்கிறது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 4-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது ஆகும்.

    ஆனால் கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்த தொடர் திட்டமிட்டபடி தொடங்க வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரும் தள்ளிப்போகும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் செப்டம்பர் மாதம் வரை மாற்று போட்டி அட்டவணையை உருவாக்கவும் வாய்ப்பில்லை.

    இந்த நிலையில் டெஸ்ட் தொடரை தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடும்படி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. கொரோனாவின் சீற்றம் வெஸ்ட் இண்டீசில் பெரிய அளவில் இல்லை. ஒரு சிலரே இந்த வைரசால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜானி கிரேவ் கூறுகையில், ‘‘இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டாம் ஹாரிசனிடம் கடந்த சில தினங்களில் இரண்டு முறை பேசியுள்ளேன். அப்போது அவரிடம் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி நடந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம், முடிந்த அளவுக்கு ஆதரவாக, உதவிகரமாக இருப்போம் என்று உறுதி அளித்தேன். மேலும் உங்களுக்கு சவுகரியமாக இருப்பதாக உணர்ந்தால், வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீசிலேயே நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினேன்

    தற்போதைய சூழலை நாங்கள் சாதகமாக எடுத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. கடினமான இந்த காலக்கட்டத்தில் கிரிக்கெட் சமூகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    கிரிக்கெட் உலகத்துக்கும், கரீபியன் தீவுக்கும் (வெஸ்ட் இண்டீஸ்) நீண்ட பாரம்பரிய உறவு உண்டு. அது மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இங்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். எல்லா வகையிலும் நாங்கள் உதவிகரம் நீட்ட தயார் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெளிவுப்படுத்தி உள்ளோம். இதேபோல் ஜூலை 30-ந்தேதி தொடங்கும் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரையும் எங்கள் நாட்டில் நடத்திக்கொள்ள முன்வந்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
    ×