என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்ற வீரர்கள் மற்றும் ஸ்டாஃப் என 128 பேருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்துள்ளது.
    கொரோனா அச்சுறுத்தலால் உலகில் உள்ள அனைத்து விளையாட்டுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மார்ச் 2-வது வாரத்தில் தவிர்க்க முடியாத முக்கியமான போட்டிகள் மட்டும் ரசிகர்கள் யாருமின்றி நடத்தப்பட்டது.

    ஆனால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் இறுதி கட்டத்தை எட்டியதால் பிளே-ஆஃப் சுற்று போட்டிகளை ரத்து  செய்து அதை அரையிறுதி ஆட்டங்களாக மாற்றியது. அரையிறுதி ஆட்டங்களையும், இறுதி போட்டியையும்  ரசிகர்கள் யாருமின்றி நடத்த முடிவு செய்தது.

    இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மிகப்பெரிய அளவில் கிளம்பியதால் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் ரத்து செய்யப்பட்டது. வெளிநாட்டைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்ததால்தான் போட்டி ரத்து செய்யப்பட்டது என்று கூறப்பட்டது.

    இந்நிலையில் வீரர்கள் மற்றும் ஸ்ஃடாப், போட்டி அதிகாரிகள், ஒளிபரப்பாளர்கள், அணி உரிமையாளர்கள் என 128 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் யாருக்கும் தொற்று இல்லை என பாகிஸ்தான் சூப்பர் லீக் தெரிவித்துள்ளது.
    ஐபிஎல் 2020 சீசன் நடைபெறுமா? என்பது குறித்து ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்புதான் முடிவு எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரிண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று பீதி அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

    பெரும்பாலான முடிவுகள் மார்ச் 31-ந்தேதிக்கு பின் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில் விளையாட்டு போட்டிகள் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    இந்நிலையில் இந்த வருடத்திற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுவது குறித்து ஏப்ரல் 15-ந்தேதிக்கு பின்னரே முடிவு எடுக்கப்படும் என மத்திய விளையாட்டுத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மத்திய மந்திரி ரிஜிஜு கூறுகையில் ‘‘ஐபிஎல் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15-ந்தேதிக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நாம் பார்க்க வேண்டும். பிசிசிஐ மத்திய அரசுக்குக்கீழ் இல்லை. ஆனால் இது விளையாட்டை பற்றியது அல்ல. மக்கள் பாதுகாப்பை பற்றியது. ஏப்ரல் 15-ந்தேதிக்குப்பின் நாட்டின் சூழ்நிலையை பொறுத்து புதிய ஆலோசனைகள் வழங்கப்படும்’’ என்றார்.
    தங்கள் நாட்டில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை நடத்த முன்வரும்படி இங்கிலாந்துக்கு, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட திட்டமிட்டு இருக்கிறது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 4-ந்தேதி லண்டன் ஓவலில் தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது ஆகும்.

    ஆனால் கொரோனா பாதிப்பு எதிரொலியாக இந்த தொடர் திட்டமிட்டபடி தொடங்க வாய்ப்பில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ளூர் போட்டிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரும் தள்ளிப்போகும் என்பதில் சந்தேகமில்லை. மேலும் செப்டம்பர் மாதம் வரை மாற்று போட்டி அட்டவணையை உருவாக்கவும் வாய்ப்பில்லை.

    இந்த நிலையில் டெஸ்ட் தொடரை தங்கள் நாட்டுக்கு வந்து விளையாடும்படி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. கொரோனாவின் சீற்றம் வெஸ்ட் இண்டீசில் பெரிய அளவில் இல்லை. ஒரு சிலரே இந்த வைரசால் அங்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதுகுறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ஜானி கிரேவ் கூறுகையில், ‘‘இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாகி டாம் ஹாரிசனிடம் கடந்த சில தினங்களில் இரண்டு முறை பேசியுள்ளேன். அப்போது அவரிடம் சூழ்நிலைக்கு தகுந்தமாதிரி நடந்து கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம், முடிந்த அளவுக்கு ஆதரவாக, உதவிகரமாக இருப்போம் என்று உறுதி அளித்தேன். மேலும் உங்களுக்கு சவுகரியமாக இருப்பதாக உணர்ந்தால், வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீசிலேயே நடத்துவதற்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறினேன்

    தற்போதைய சூழலை நாங்கள் சாதகமாக எடுத்துக் கொள்ள முயற்சிக்கவில்லை. கடினமான இந்த காலக்கட்டத்தில் கிரிக்கெட் சமூகத்தினர் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    கிரிக்கெட் உலகத்துக்கும், கரீபியன் தீவுக்கும் (வெஸ்ட் இண்டீஸ்) நீண்ட பாரம்பரிய உறவு உண்டு. அது மட்டுமின்றி ஆண்டு முழுவதும் இங்கு கிரிக்கெட் விளையாட முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சமாகும். எல்லா வகையிலும் நாங்கள் உதவிகரம் நீட்ட தயார் என்பதை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் தெளிவுப்படுத்தி உள்ளோம். இதேபோல் ஜூலை 30-ந்தேதி தொடங்கும் இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரையும் எங்கள் நாட்டில் நடத்திக்கொள்ள முன்வந்துள்ளோம்’’ என்று தெரிவித்தார்.
    கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் ஓரிரு மாதங்களில் சரியாகிவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
    32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. இந்த பிரபஞ்சத்தையே ஆட்டிபடைக்கும் கொரோனா வைரசின் அசுரவேக தாக்குதல் தீவிரமடைந்து வருவதால், ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா அல்லது தள்ளிப்போகுமா? என்ற கேள்வி நீண்டு கொண்டே போகிறது. இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் அதற்குள் நிலைமை சரியாகி போட்டியை நடத்துவதற்குரிய சாதகமான சூழல் உருவாகி விடும் என்று ஜப்பான் அரசாங்கம் நம்புகிறது.

    இது தொடர்பாக இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் மூத்த நிர்வாகி ஒருவர் நேற்று கூறியதாவது:-

    கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பெரும் சீரழிவை ஏற்படுத்தி விட்டது. ஆனால் ஓரிரு மாதங்களில் இந்த மோசமான நிலைமை சரியாகிவிடும் என்று நம்புகிறோம். கொரோனா உருவான இடமான சீனாவில் ஏற்கனவே அது கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. எனவே ஒலிம்பிக் போட்டி திட்டமிட்ட நேரத்தில் எந்தவித இடையூறும் இன்றி நடைபெறும் என்று எதிர்பார்க்கிறோம்.

    ஆனால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் (ஐ.ஓ.சி.) தான் எங்களது தலைமை அமைப்பு. அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அதை நாங்கள் பின்பற்ற வேண்டும். அவர்கள் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று அறிவித்தால், அதன் பிறகு எத்தகைய மிரட்டல் இருந்தாலும் நாங்கள் போட்டியில் பங்கேற்றுதான் ஆகவேண்டும்.

    கொரோனா பரவலால் ஒலிம்பிக் போட்டிக்கு எங்களது வீரர், வீராங்கனைகள் தயாராகுவது உண்மையிலேயே பாதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலான ஒலிம்பிக் தகுதி சுற்று போட்டிகள், சோதனை போட்டித் தொடர்கள், வெளிநாட்டில் நடக்க இருந்த பயிற்சி முகாம்கள் இவை எல்லாம் கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்டு இருக்கின்றன. சில ரத்தாகியுள்ளன.

    ஆனால் இந்தியா மட்டுமல்ல, எல்லா நாடுகளும் இதே நிலைமையை தான் எதிர்கொண்டு இருக்கின்றன. போட்டியில் களம் இறங்கும் ஒவ்வொரு நாடும் இதே பாதிப்பில் உள்ளன. எனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 10 அல்லது அதற்கு மேற்பட்ட பதக்கம் வெல்வோம் என்று இப்போதும் எதிர்பார்க்கிறோம்.

    எங்களது வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகுவதையும், அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். மேலும் இந்த கடினமான தருணத்தில் மத்திய அரசுடனும், டோக்கியா ஒலிம்பிக் கமிட்டியினருடனும், ஐ.ஓ.சி.யுடனும் ஒருங்கிணைந்து பணியாற்றுகிறோம்.

    இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.

    இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைமை அலுவலகம் டெல்லியில் உள்ளது. இந்த அலுவலகத்தில் வேலைசெய்யும் ஊழியர்களை வருகிற திங்கட்கிழமை முதல் வீட்டில் இருந்து பணியாற்றும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் எங்களது ஊழியர்களின் பாதுகாப்பு விஷயத்தில் ‘ரிஸ்க்’ எடுக்க விரும்பவில்லை என்று ஒலிம்பிக் சங்க உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

    இதற்கிடையே டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டின் ஒருங்கிணைப்பு கமிஷன் உறுப்பினர் அளித்த பேட்டியில் ‘‘ஒலிம்பிக் போட்டி செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்துக்கு தள்ளிப்போக வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்கிறீர்கள். தற்போதைய தருணத்தில் எதுவும் சாத்தியமே’’ என்றார்.
    ஆஸ்திரேலியா சென்று திரும்பிய நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ள கிரிக்கெட் வீரர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர்.
    நியூசிலாந்து கிரிக்கெட் அணி சமீபத்தில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா சென்றது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் கொரோனா வைரஸ் காரணமாக முதல் ஆட்டம் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்டது. எஞ்சிய ஆட்டங்கள் ரத்து செய்யப்பபட்டன.

    ஆஸ்திரேலியாவில் இருந்து அவசரமாக நாடு திரும்பிய நியூசிலாந்து வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

    அந்நாட்டு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன்ஸ் உத்தரவின்படி 15 வீரர்கள் மற்றும் அணியின் உதவியாளர்கள் 14 நாட்களுக்கு தனிமைப் படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

    இந்த சுற்றுப் பயணத்தின்போது நியூசிலாந்து வீரர் பெர்குசனுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டது. ஆனால் பரிசோதனை முடிவில் அவரை கொரோனா தாக்கவில்லை என்பது தெரியவந்தது.

    தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட இந்தியா வந்தது. தரம்சாலாவில் நடைபெற இருந்த முதல் ஆட்டம் மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. கொரோனா வைரஸ் காரணமாக எஞ்சிய இரண்டு ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்து.

    நாடு திரும்பிய தென் ஆப்ரிக்க வீரர்களும் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா குறித்து யாரும் பீதியடைய வேண்டாம், அதே வேளையில் பொய்யான செய்திகளையும் பரப்ப வேண்டாம் என்று இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியான்டர் பயஸ் அறிவுறுத்தி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய டென்னிஸ் ஜாம்பவான் லியான்டர் பயஸ் தனது டுவிட்டர் பதிவில் ‘தற்போது நாம் உலகையே உலுக்கும் ஆட்கொல்லி தொற்றுக்கு எதிரான போராட்டத்தை சந்தித்து வருகிறோம். நமது சமுதாயத்தின் நலனை காப்பதில் நம் அனைவரின் பங்கும் அவசியம். உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டியது முக்கியம். யாரும் பீதியடைய வேண்டாம், அதே வேளையில் பொய்யான செய்திகளையும் பரப்ப வேண்டாம். நம்மை சுற்றியுள்ளவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு செய்திகளை எடுத்து சொல்ல வேண்டும்.

    கொரோனா பரவலை தடுப்பதில் சிறந்த வழிமுறை என்னவென்றால், அடிக்கடி நமது கைகளை கழுவ வேண்டும். அதே நேரம் கைகளை கழுவியவுடன் தண்ணீர் குழாயை அடைக்க மறந்து விடாதீர்கள். ஏனெனில் தண்ணீரையும் சேமிக்க வேண்டும். மொத்தத்தில் பொறுப்புள்ள குடிமகனாக இருந்து கொரோனாவை விரட்டுவோம்’ என்று பதிவிட்டு இருக்கிறார். இந்த ஆண்டுடன் டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ள 46 வயதான பயஸ், 8-வது முறையாக ஒலிம்பிக் போட்டியில் களமிறங்க உள்ளார்.

    அதேபோல் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய மல்யுத்த வீரர் பஜரங் பூனியா தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக கைகழுவும் விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு கூறுகையில், ‘மல்யுத்த வீராங்கனை கீதா போகத், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் ஆகியோரின் சவாலை ஏற்று வீடியோவை வெளியிட்டு உள்ளேன். அதேபோல் மற்ற மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சங்கீதா போகத், இந்திய கால்பந்து அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா, முன்னாள் ஆக்கி வீரர் சந்தீப் சிங் ஆகியோரும் எனது விழிப்புணர்வு சவாலை ஏற்று தாங்களும் கைகழுவும் வீடியோவை டுவிட்டரில் பதிவிட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரும் கொரோனா விழிப்புணர்வு பிரசாரத்தில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.


    ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தயாராகும்படி வீரர்களுக்கு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அறிவுறுத்தியுள்ளது.
    ஏதென்ஸ்:

    32வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24ந்தேதி முதல் ஆகஸ்டு 9ந்தேதி வரை நடத்தப்படுகிறது.  ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுமைக்கும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

    இதனால் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது பற்றிய சந்தேகம் எழுந்தது.  இந்நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் நிர்வாகிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.  இதில் ஒலிம்பிக் போட்டி நடைபெற 4 மாதங்கள் உள்ள சூழலில், போட்டியை ரத்து செய்வது குறித்து தற்போது முடிவு எடுக்க தேவையில்லை என தீர்மானிக்கப்பட்டது.

    அதனால் ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள ஏதுவாக தயாராகும்படி விளையாட்டு வீரர்களை அறிவுறுத்தியுள்ளது.  ஒலிம்பிக் போட்டி ரத்தானால் ஜப்பானுக்கு ஏறக்குறைய ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.  எனினும், 56 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்து இருக்கும் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் ஜப்பான் அரசாங்கமும் எல்லாவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக ஒலிம்பிக் தீபம் கிரீஸ் நாட்டின் விளையாட்டு மந்திரியிடம் இருந்து ஜப்பானின் முன்னாள் நீச்சல் வீராங்கனை இமோட்டோ நவோக்கோவிடம் ஒப்படைக்கப்பட்டது.  இதன் பின்னர் ஒலிம்பிக் தீபம் டோக்கியோ நகருக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
    கொரோனா வைரஸ் தொற்று பீதி நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை ஒரே நேரத்தில் வாங்கி குவிப்பது நியாயம் அல்ல என டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின். இவர் பாகிஸ்தானில் நடைபெற்ற சூப்பர் லீக் டி20 தொடரில் விளையாடினார். கொரோனா வைரஸ் தொற்று அசுரவேகத்தில் பரவத் தொடங்கியதால் நாக்-அவுட் சுற்று போட்டிகள் (இரண்டு அரையிறுதி, இறுதி போட்டி) ரத்து செய்யப்பட்டன.

    டேல் ஸ்டெயின் ஓட்டலில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். தற்போது சொந்த நாடு திரும்பியுள்ளார். கொரோனா பீதியால் தென்ஆப்பிரிக்காவில் மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    பீதி நிலவுவதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்கின்றனர். இதனால் அனைவருக்கும் அந்த பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் தட்டுப்பாட்டால் விலையும் அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அவசர காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிப்பது நியாயம் அல்ல என்று டேல் ஸ்டெயின் தனது வேதனையை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘அத்தியாவசிய பொருட்களை மொத்தமாக வாங்கி வைப்பது சரியான வழி அல்ல என்பதை நாம் முடிவு செய்ய வேண்டும். அனைவருக்கும் தேவையான பொருட்களை இப்படி வாங்குவது நியாயம் அல்ல. நான் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்றிருந்தேன். அங்கு அனைவரும் டாய்லெட் பேப்பர்களை வாங்கிச் சென்றனர். நமக்கு என்ன வேண்டுமோ? அதை மட்டும் வாங்க வேண்டும். எல்லாமே அவசியம் என்று நாம் கருதக்கூடாது என்றார்.’’ என்றார்.
    ஏப்ரல் 15-ந்தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை பிசிசிஐ நடத்தினால் டேவிட் வார்னர் பங்கேற்பார் என அவரது மானேஜர் தெரிவித்துள்ளார்.
    ஐபிஎல் 2020 சீசன் வருகிற 29-ந்தேதி தொடங்குவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று பீதியால் ஏப்ரல் 15-ந்தேதி வரை தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    எந்தவொரு கிரிக்கெட் போட்டிகளும் தற்போது நடைபெறவில்லை. இதனால் வீரர்கள் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். கொரோனா வைரஸ் தொற்று ஏப்ரல் 15-ந்தேதிக்குள் கட்டுப்படுத்தப்பட்டால் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ அனைத்து கட்ட முயற்சிகளையும் எடுக்கும்.

    இந்நிலையில் பிசிசிஐ ஐபிஎல் போட்டியை நடத்தினால் பங்கேற்பேன் என்று டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.

    டேவிட் வார்னர் சார்பில் அவரது மானேஜர் எர்ஸ்கைன் கூறுகையில் ‘‘பிசிசிஐ இந்த சீசனை நடத்துவதில் உறுதியாக இருந்தால், வார்னர் விளையாடுவார். இதற்கிடையில் ஆஸ்திரேலிய அரசு நான்காம் நிலை பயணத்தடையை விதித்துள்ளது. நான்காம் நிலை என்பது எந்தவொரு நபரும் வெளிநாடுகளுக்கு  செல்லக்கூடாது என்பதுதான்.

    ஒருவேளை பிசிசிஐ ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் டேவிட் வார்னர் பங்கேற்பார். விஷயங்கள் வியத்தகு முறையில் மாறும். அதற்கு சில மணி நேர இடைவேளி போதுமானது. பதில் என்பது உங்களது எண்ணத்தை மாற்றுவதுதான்’’ என்றார்.

    ஐபிஎல் போட்டியில் விளையாட 17 ஆஸ்திரேலிய வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் டேவிட் வார்னர், பேட் கம்மின்ஸ், ஸ்மித் போன்றோர் முக்கியமானவர்கள்.
    ‘சைமண்ட்’ஐ குரங்கு என்று ஹர்பஜன் சிங் திட்டியதால் ஏற்பட்ட இனவெறி சர்ச்சை எனது கேப்டன்ஷிப்பில் மோசமான தருணம் என்று ரிக்கி பாண்டிங் நினைவு கூர்ந்துள்ளார்.
    அனில் கும்ப்ளே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2008-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட்  தொடரில் விளையாடியது. இதில் சிட்னியில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலிய அணியின் ஆல்-ரவுண்டர் சைமண்ட்-ஐ ‘குரங்கு’ என்று திட்டியதாக எழுந்த சர்ச்சை இனவெறி பிரச்சினையாக உருவெடுத்தது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய போட்டி நடுவர், ஹர்பஜன் சிங் 3 டெஸ்ட் போட்டியில் விளையாட தடைவிதித்தார்.

    இதனால் கோபமடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் எஞ்சிய போட்டி தொடரில் விளையாடாமல் நாடு திரும்பப்போவதாக எச்சரிக்கை விடுத்தது. இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலையிட்டது.

    ஹர்பஜன் சிங்குக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து செய்யப்பட்ட அப்பீலை விசாரித்த கமிஷனர் அவருக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கியதுடன், போட்டி கட்டணத்தில் 50 சதவீதத்தை அபராதமாக விதித்தார். இதனால் ஹர்பஜன் சிங் தண்டனையில் இருந்து தப்பினார். இதன் காரணமாக சமரசம் அடைந்த இந்திய அணி தொடர்ந்து விளையாடியது. இந்த தொடரை அஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கேப்டன்ஷிப்பில் நிகழ்ந்த சம்பவங்கள் குறித்து அளித்த ஒரு பேட்டியில், ‘‘சைமண்ட்-ஐ குரங்கு என்று ஹர்பஜன் சிங் திட்டியதால் எழுந்த இனவெறி சர்ச்சை எனது கேப்டன்ஷிப்பில் மிகவும் மோசமான தருணமாகும்.

    கடந்த 2005-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடர் தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்றாகும். இருப்பினும் அந்த போட்டி தொடர் எனது கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் குரங்கு சர்ச்சை விவகாரத்தில் என்னால் எதையும் கட்டுப்படுத்த முடியவில்லை. அது ஒரு மோசமான தருணம். அந்த சம்பவம் குறித்து நீண்ட நாட்களுக்கு பேசப்பட்டது.

    இந்த பிரச்சினை காரணமாக அடுத்த டெஸ்ட் போட்டியில் எங்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அடுத்து பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று எதிர்பார்த்தோம். ஆனால் முடிவில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். அந்த தோல்விக்கு பிறகு சில நாட்கள் இன்னும் மோசமாகி கொண்டே போனது.

    சைமண்ட்ஸ், ஹர்பஜன் சிங் விவகாரம்

    2005-ம் ஆண்டு நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடரை எளிதில் முழுமையாக வெல்வோம் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நாங்கள் நினைத்தபடி நடக்கவில்லை. அந்த தொடரை (1-2) இழந்தது கடினமான நிகழ்வாகும். 2010-11-ம் ஆண்டில் கண்ட ஆஷஸ் தோல்வி பெரிய அளவில் பாதிக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

    ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலிய அணி 77 டெஸ்ட் போட்டியில் விளையாடி 48-ல் வெற்றியும், 228 ஒருநாள் போட்டியில் ஆடி 164-ல் வெற்றியும் பெற்றது குறிப்பிடத்தக்கது.
    ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்ட ஒலிம்பிக் தீபத்தை பெறுவதற்காக ஜப்பானில் இருந்து சிறப்பு விமானம் கிரீஸ் சென்றுள்ளது.
    32-வது ஒலிம்பிக் விளையாட்டு போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடக்க இருக்கிறது. கொரோனா வைரசின் கோரப்பிடி உலகம் முழுவதும் பெரும் கலக்கத்தை உருவாக்கி விட்டதால் ஒலிம்பிக் போட்டி நடக்குமா? நடக்காதா? என்று அவ்வப்போது சர்ச்சை கிளம்புகிறது.

    ஆனால், ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டப்படி நடத்துவதில் உறுதியுடன் இருக்கிறோம். இன்னும் 4 மாதங்கள் இருப்பதால் இப்போதைக்கு எந்த கடினமான முடிவும் (ரத்து அல்லது தள்ளிவைப்பது) எடுக்கப்போவதில்லை என்று சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் அறிவித்துள்ளது. ஒலிம்பிக் போட்டி ரத்தானால் ஜப்பானுக்கு ஏறக்குறைய ரூ.97 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

    ஆனாலும் 56 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்து இருக்கும் ஒலிம்பிக் வாய்ப்பை நழுவ விட்டு விடக்கூடாது என்பதில் ஜப்பான் அரசாங்கமும் எல்லாவிதமான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

    வழக்கமாக ஒலிம்பிக் தொடங்குவதற்கு முன்பாக ஒலிம்பிக் தீபம் அது பிறந்த நாடான கிரீஸ் நாட்டின் ஒலிம்பியா நகரில் ஏற்றப்படுவது வழக்கம். இதன்படி கடந்த 12-ந்தேதி ஒலிம்பிக் தீபம் ஒலிம்பியாவில் பாரம்பரிய முறைப்படி ஏற்றப்பட்டது. பிறகு ஒலிம்பிக் தீபம் ஒரு வாரம் கிரீஸ் நாட்டில் தொடர் ஓட்டமாக எடுத்து செல்லப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா அச்சத்தால் ஒலிம்பிக் ஜோதியின் தொடர் ஓட்டம் ஓரிரு நாட்களுடன் நிறுத்தப்பட்டது.

    இந்த நிலையில் ஒலிம்பிக் தீபத்தை பெற்றுக்கொள்வதற்காக ஜப்பானில் இருந்து ‘டோக்கியோ 2020’ என்ற பெயருடன் சிறப்பு விமானம் நேற்று கிரீஸ் நாட்டுக்கு புறப்பட்டது. முதலில் ஒலிம்பிக் ஒருங்கிணைப்பு கமிட்டி தலைவர் யோஷிரோ மோரி, ஒலிம்பிக் மந்திரி செய்கோ ஹஷிமோட்டோ மற்றும் முன்னணி நிர்வாகிகள் அங்கு செல்வதாக இருந்தது. ஆனால் கொரோனா பயத்தால் ஒலிம்பிக் குழுவினர் யாரும் செல்லவில்லை.

    ஏற்கனவே கிரீசுக்கு சென்றிருந்த ஒலிம்பிக் அதிகாரிகள் இன்று தீபத்திற்குரிய பேட்டனை பெற்றுக்கொண்டு அங்கிருந்து ஜப்பானுக்கு திரும்புகிறார்கள்.

    இதற்கிடையே சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் செய்தி தொடர்பாளர் நேற்று அளித்த பேட்டியில், ‘‘கொரோனா தாக்கத்தால் தற்போது அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. அதை சமாளிக்க அசாத்தியமான தீர்வு தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் வீரர்கள் இடையே எதிர்மறை எண்ணம் ஏற்படாத வகையில் அதற்குரிய தீர்வு காண ஒலிம்பிக் கவுன்சில் முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறது.

    மேலும் போட்டியின் ஒருமைப்பாட்டுக்கும், வீரர்களின் பாதுகாப்புக்கும் பங்கம் வராத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். ஆனாலும் தற்போதைய சூழலுக்கு ஏற்ப தெளிவான ஒரு தீர்வு கிடைக்கவில்லை’ என்றார்.

    ஒலிம்பிக் கவுன்சிலின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஒலிம்பிக் சாம்பியனான கிரீஸ் நாட்டின் போல்வால்ட் வீராங்கனை கேத்ரினா ஸ்டீபானிதி கூறுகையில், ‘‘ஒலிம்பிக் கவுன்சில் வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர், பொதுமக்களின் சுகாதார விஷயத்தில் தொடர்ந்து ரிஸ்க் எடுக்க விரும்புகிறது. இப்போது எங்களை அபாயகட்டத்துக்கு தள்ளுகிறார்கள்.

    ஒருவேளை ஒலிம்பிக் போட்டி நடக்காவிட்டால் அடுத்து என்ன முடிவு செய்வீர்கள் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். ஏனெனில் நாங்கள் கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில்தான் பயிற்சி எடுத்து வருகிறோம்’ என்றார்.
    அமெரிக்காவை சேர்ந்த முன்னணி கூடைப்பந்து வீரர் கெவின் டுரன்ட், பிரான்ஸ் கால்பந்து வீரர் பிளஸ் மட்டுடி ஆகியோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் கோரதாண்டவம் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருவதுடன், பலத்த பாதிப்பையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரசின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டுவைக்கவில்லை. சர்வதேச விளையாட்டு போட்டிகள் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வீடுகளில் முடங்கி கிடக்கும் வீரர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பது வெளிஉலகுக்கு தெரியவந்துள்ளது.

    அமெரிக்காவில் புகழ்பெற்ற என்.பி.ஏ. கூடைப்பந்து போட்டி கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் தள்ளிவைக்கப்பட்டு இருக்கும் நிலையில் இந்த போட்டி தொடரில் புரூக்ளின் நெட்ஸ் அணிக்காக விளையாடிய நட்சத்திர வீரர் கெவின் டுரன்ட் உள்பட அந்த அணியில் இடம் பிடித்திருந்த 4 வீரர்களுக்கு கொரோனா நோய் பாதிப்பு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

    புரூக்ளின் நெட்ஸ் அணியின் வீரர்கள் மற்றும் அந்த அணியுடன் சமீபத்தில் விளையாடிய எதிரணியில் இடம் பெற்ற வீரர்கள் மற்றும் வீரர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களும் ஜாக்கிரதையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 31 வயதான கெவின் டுரன்ட் உள்ளிட்ட 4 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். அந்த அணியின் மற்ற வீரர்களும் தங்களை தானே தனிமைப்படுத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் இத்தாலியை சேர்ந்த கால்பந்து கிளப்பான யுவென்டஸ் அணிக்காக விளையாடி வரும் நடுகள வீரர் பிளஸ் மட்டுடியும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார். 2018-ம் ஆண்டு உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த 32 வயதான பிளேஸ் மாட்டுடிக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தாக்கம் இருப்பது தெரியவந்தது.

    இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது என்று யுவென்டஸ் கிளப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே யுவென்டஸ் அணி வீரர் டேனியல் ருகானிக்கு (இத்தாலி) முதலில் கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது அவருக்கு நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை என்று மறுக்கப்பட்டு இருக்கிறது.
    ×