என் மலர்
விளையாட்டு
கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் ஓராண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய போட்டியாக கருதப்படும் ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு ஜப்பான் டோக்கியோ நகரில் ஜூலை மாதம் 24-ந்தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 9-ந்தேதி வரை நடைபெற இருந்தது.
ஆனால் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மெல்லமெல்ல விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்தது. பிப்ரவரி மாதத்தில் இருந்து உலகையே அச்சுறுத்தும் அளவிற்கு வீறுகொண்டு பரவியது. தற்போது இந்த வைரசால் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் போட்டியை தள்ளி வைப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தீவிர ஆலோசனை நடத்தி வந்தது. இதற்கிடையே கனடா, ஆஸ்திரேலியா தங்கள் நாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுப்பமாட்டோம் என்று அறிவித்தது. மேலும் பல நாடுகள் இதே முடிவை எடுக்க இருந்தன.
இந்நிலையில் ஜப்பான் பிரதமர் தீவிர ஆலோசனை நடத்தினார். பின்னர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை ஓராண்டுக்கு தள்ளி வைக்கலாம் என ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஒலிம்பிக் கமிட்டிக்கு பரிந்துரை செய்தார்.
இதை ஏற்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஓராண்டுக்கு தள்ளி வைப்பதாக ஒலிம்பிக் கமிட்டி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கொரோனா வைரசால் நுரையீரல் பாதிப்பால் இங்கிலாந்தில் உள்ள தனது மனைவியின் உயிருக்கு ஆபத்து என்று நியூசிலாந்தில் சிக்கியுள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் பரிதாபமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. பெரும்பாலான நாடுகள் விமான போக்குவரத்தை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கிலாந்தில் வசித்து வரும் நியூசிலாந்தின் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் தற்போது நியூசிலாந்தில் சிக்கியுள்ளார். விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் இங்கிலாந்தில் உள்ள மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக அஞ்சுகிறார்.
நியூசிலாந்தின் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இயன் ஓ'பிரைன். இவர் தனது மனைவி, மனைவின் தாயார் (வயது 80) மற்றும் இரு குழந்தைகளுடன் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர் மென்டல் ஹெல்த் பிரச்சனை தொடர்பாக சிகிச்சை பெறுவதற்காக நியூசிலாந்து வந்துள்ளார். தற்போது கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவத்தால் இங்கிலாந்து திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தை காண முடியாமல் இருக்கும் ஓ'பிரைன் இதுகுறித்து சுறுகையில் ‘‘என்னுடைய மிகப்பெரிய கவலை என்னுடைய மனைவியின் நுரையீரல் கண்டிசனை குறித்துதான். ஒருவேளை கொரேனா வைரஸ் காரணமாக அவருக்கு சளி போன்ற ஏதாவது தொற்று ஏற்பட்டு விட்டால், அவரது உயிருக்கு உத்தரவாதம் கிடையாது.
இந்த வைரஸ் எனது மனைவியை கொன்றுவிடும். எனது இரண்டு குழந்தைகள் மற்றும் அவரது 80 வயது அம்மா ஆகியோரை அவர் கவனிக்க வேண்டியுள்ளது. மன அழுத்தத்தை அவரிடம் இருந்து விலக்க வேண்டிய நிலையில், தற்போது அவருக்கு மேலும் நெருக்கடியை உண்டாக்குவதாக உணர்கிறேன்.
விமானங்களை வாங்கும் அளவிற்கான வசதி இருந்த போதிலும், அவைகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மிகவும் கடினமான சூழ்நிலையாக இருக்கிறது. ஆனால், இதுகுறித்து நான் குற்றம்சாட்டவில்லை. இதைவிட மக்கள் கடினமான சூழ்நிலையை எதிர்கொண்டு வருகிறார்கள். இது என்னுடைய மனைவியின் உடல்நலம் குறித்து கவலைப்படுவதுதான். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தற்போதுதான் நியூசிலாந்து வந்துள்ளேன். கொரோனா வைரஸ் தொற்று மொத்தமாக அனைத்தையும் திருப்பி போட்டுவிட்டது” என்றார்.
ரசிகர்கள் என்னை விராட் கோலி என அழைப்பதைவிட பாபர் அசாம் என அழைப்பதையே விரும்புகிறேன் என பாகிஸ்தான் இளம் வீரர் ஹைதர் அலி தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் அணியின் இளம் நட்சத்திர பேட்ஸ்மேன் ஹைதர் அலி. தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 19 வயதிற்கு உட்பட்டோருக்கான 50 ஓவர் உலக கோப்பையில் மிகவும் சிறப்பாக விளையாடினார். அதேபோல் பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் சிறப்பாக ஆடினார்.
இவர் அடிக்கும் ஷாட்டுகள் அனைத்தும் முற்றிலும் கிரிக்கெட் ஷாட்டாக உள்ளது. வருங்காலத்தில் பாகிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியில் முன்னணி வீரராக திகழ்வார்கள் என்று கருதப்படுகிறது. இவரை பாகிஸ்தானின் விராட் கோலி என அழைக்கின்றனர்.
ஆனால், ரசிகர்கள் அவரை பாகிஸ்தானின் விராட் கோலி என்று அழைக்கின்றனர். ஆனால் ரசிகர்கள் என்னை அப்படி அழைப்பதை விரும்பவில்லை. பாபர் அசாம் என்று அழைப்பதையே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹைதர் அலி கூறுகையில் ‘‘ஒரு பேட்ஸ்மேனால் ஒருபோதும் அவருடைய ரோல் மாடலாக மாற முடியாது. ஆனால், அவர்கள் விளையாடுவதுபோல் சில ஷாட்டுகளை காப்பி அடித்து அதில் முன்னேற்றம் காண முடியும். எனக்கு நானே சிறப்பாக முன்னேற விரும்புகிறேன். ரசிகர்கள் என்னை பாபர் அசாம் என்று அழைக்க வேண்டும். விராட் கோலி என்று அழைக்கக்கூடாது. ஏனென்றால், பாபர் அசாம் அற்புதமான ஷாட்டுகளை அடித்து வருகிறார்.
என்னால் விராட் கோலியாக முடியாது. ஆனால், பயிற்சியின் மூலம் அவரை போன்று ஷாட்டுகளை அடிக்க கத்துக்கொள்ள முடியும். நான் ஹைதர் அலி. ஆகவே, நான் ஹைதர் அலியாக மட்டுமே ஆக முடியும்’’ என்றார்.
பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ஊழியர்கள் தங்குவதற்காக கராச்சி உயர் செயல்திறன் மையத்தை கொடுக்க கிரிக்கெட் போர்டு சம்மதம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் உலகளவில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் பாகிஸ்தானில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 800-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவர்கள், நர்ஸ்கள் மற்றும் ஊழியர்கள் ஓய்வின்றி சிகிச்சை அளித்து வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவ ஊழியர்கள் வீடுகளில் இருந்து மருத்துவமனைக்கு வந்து மீண்டும் வீடுகளுக்கு செல்வது கடினமாக உள்ளது.
இதனால் சிந்து மாகாண அரசு கராச்சியில் உள்ள ஹானிஃப் முகமது உயர் செயல்திறன் மையத்தை தற்காலிகமாக மருத்துவ ஊழியர்கள் தங்குவதற்கான விடுதியாக மாற்றித்தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தது. இந்த கோரிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஏற்று விடுதியாக மாற்ற சம்மதம் தெரிவித்துள்ளது.
‘‘இந்த சவாலான மற்றும் கடினமான நேரத்தில் மருத்துவ ஊழியர்கள்தான் நமது ஹீரோக்கள். கொரோனா வைரசால் அவர்கள் மற்றவர்களின் உயிர்களை காப்பாற்ற தங்கள் உயிர்களை பணயம் வைத்து கடினமாக உழைத்து வருகிறார்கள்.
ஹனிஃப் முகமது உயர் செயல்திறன் மையத்தை தற்காலிக விடுதியாக மாற்ற மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவிக்கிறது. இங்கிருந்து அவர்கள் இன்னும் அதிகமான வகையில் பணியாற்ற முடியும்’’ என்று பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தெரிவித்துள்ளது.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்கள் வாங்க டெல்லி அரசுக்கு எம்.பி.க்கள் நிதியில் இருந்து ரூ. 50 லட்சம் ஒதுக்க தயாராக இருப்பதாக கவுதம் கம்பிர் உறுதியளித்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த 36 மணி நேரத்தில் இந்தியாவில் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
இதனால் தலைநகரான டெல்லியில் உச்சக்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலமைச்சர் கெஜ்ரிவால் ஊடரங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். ஏழை மக்களுக்கு ரேசன் பொருட்கள் உள்பட வழங்க ஆணையிட்டுள்ளார்.
கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சிகிச்சை அளிப்பதற்கான உபகரணங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுமோ? என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அப்படி ஏற்பட்டால் உபகரணங்கள் வாங்க டெல்லி அரசுக்கு எம்.பி.க்கள் நிநிதியில் இருந்து 50 லட்சம் ரூபாயை ஒதுக்க தயாராக இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய பா.ஜனதா கட்சி சார்பில் எம்.பி.யாக இருப்பவருமான கவுதம் கம்பிர் உறுதியளித்துள்ளார்.
டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு கவுதம் காம்பிர் எழுதிய கடிதத்தில் ‘‘இந்த கொடிய கொரோனோ வைரஸ் தொற்றில் இருந்து மக்களையும், நகரத்தையும் காப்பாற்ற நாம் ஒன்றிணைந்து மேற்கொண்ட முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும். ஒருவேளை சிகிச்சைக்கான உபகரணங்கள் வாங்க வேண்டிய தேவை ஏற்பட்டால் எம்.பி.க்கள் நிவாரண நிதியில் இருந்து 50 லட்சம் ரூபாய் ஒதுக்க தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேவைகளைப் பற்றி எனது அலுவலகத்திற்குத் தெரியப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரிகளை தயவுசெய்து அமர்த்துங்கள் என்றும், என்னால் மற்ற உதவிகளும் செய்ய முடியும் என்றால் அதையும் எனக்கு தெரியப்படுத்துங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ரத்தானால் நான்கு ஆண்டுகால உழைப்பு வீணாகும் என இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 24-ந்தேதி முதல் ஆகஸ்டு 9-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைவதால் ஒலிம்பிக் போட்டி தள்ளிப்போகக்கூடிய சூழல் உருவாகி வருகிறது. உலக விளையாட்டு வீரர்களுக்கான குரூப்பும் ஒலிம்பிக்கை ஒத்திவைக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளது.
இந்த போட்டிக்கு ஆயத்தமாகி வரும் இந்திய பளுதூக்குதல் வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டியை ரத்து செய்யவோ அல்லது தள்ளிவைக்கவோ கூடாது என்று வலியுறுத்தியுள்ளார். மீராபாய் சானு நேற்று அளித்த பேட்டியில், ‘‘டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடக்காவிட்டால் கடந்த 4 ஆண்டுகளாக நாங்கள் மேற்கொண்ட தீவிர பயிற்சி, கடின உழைப்பு அனைத்தும் வீணாகி விடும். எனவே ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் பிரார்த்திக்கிறேன். எனக்காக ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்’’ என்றார்.
காமன்வெல்த் விளையாட்டில் 2 பதக்கம் வென்றவரான மணிப்பூரைச் சேர்ந்த 25 வயதான மீராபாய் சானு 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இடத்தை உறுதி செய்த இந்திய இளம் துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெர் அளித்த பேட்டியில், ‘‘கொரோனா தாண்டவமாடும் தற்போதைய சூழலில் அணித் தேர்வுக்கான தகுதி சுற்று போட்டிகள் தள்ளிவைக்கப்பட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்களை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நான் வீட்டில் தற்போது ரிலாக்சாக இருக்கிறேன். தற்போதைய சூழல் நான் போட்டிக்கு தயாராகுவதையோ அல்லது மனரீதியாகவோ எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. நான் தொடர்ந்து யோகா, தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபடுகிறேன். அது தான் துப்பாக்கி சுடுதலில் பதற்றமின்றி நிதானமாக செயல்பட உதவும். ஒலிம்பிக் போட்டி எப்போது நடந்தாலும் அது மிகப்பெரியது தான். எனவே நாங்கள் அதற்கு ஏற்ப தயாராக இருக்க வேண்டும். திட்டமிட்டபடி நான் ஒலிம்பிக் போட்டிக்கு என்னை தயார்படுத்தி வருகிறேன்’ என்றார்.
கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை அனுப்ப மாட்டோம் என கனடா மற்றும் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அமெரிக்க நீச்சல் சங்கம், நார்வே ஒலிம்பிக் சங்கம், பிரான்ஸ் நீச்சல் சங்கம், அமெரிக்க தடகள சம்மேளனம், உலக தடகள சம்மேளனம் ஆகியவை ஒலிம்பிக் போட்டியை தள்ளிபோட வேண்டும் என்று ஏற்கனவே வற்புறுத்தி இருந்தன.
இந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக ஜூலை 24-ந்தேதி தொடங்க இருக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கனடா அணி பங்கேற்காது என்று கனடா ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆகியவை அறிவித்துள்ளன. அத்துடன் இந்த போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளன. ஒலிம்பிக் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கும் முதல் நாடு கனடாவாகும்.
இதுகுறித்து கனடா ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கனடா வீரர்கள் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் மற்றும் அரசு ஆகியவை இணைந்து டோக்கியோ ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் போட்டிக்கு கனடா அணியை அனுப்ப வேண்டாம் என்று எடுத்து இருக்கும் கடினமான முடிவுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்போம். அத்துடன் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைத்தால் அதனை மீண்டும் நடத்துவதற்கான முழு உதவிகளையும் அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். அதேநேரத்தில் இந்த போட்டியை தள்ளி வைப்பதால் உருவாகும் சிக்கல்களையும் நாங்கள் உணர்ந்து இருக்கிறோம். வீரர், வீராங்கனைகளின் நலன் மற்றும் உலக சமூகத்தினரின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தது வேறு எதுவுமில்லை.
இது வீரர்களின் நலன் சார்ந்தது மட்டுமல்ல. இது பொது சுகாதாரம் சம்பந்தப்பட்ட விஷயமாகும். இந்த போட்டிக்காக வீரர்கள் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடைய குடும்பம் மற்றும் கனடா மக்களும் பாதிப்பை சந்திக்க வேண்டியது வரலாம். கனடா அரசு அறிவித்துள்ள பொது சுகாதார அறிவுரைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்குடன் ஒலிம்பிக் போட்டியை தள்ளி வைக்கும் முடிவை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலும், சர்வதேச பாரா ஒலிம்பிக் கவுன்சிலும் எடுக்கும் என்று நம்புகிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி கூட்டம் சிட்னியில் டெலிகான்பரன்ஸ் மூலம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், உலகளவில் தற்போது நிலவும் இக்கட்டான சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப வேண்டாம் என்று ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலிய ஒலிம்பிக் கமிட்டி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் நிலவும் கடினமான சூழ்நிலையில் ஆஸ்திரேலிய அணியை ஒரு இடத்தில் ஒன்று கூட வைக்க முடியாது. வீரர்கள் தங்களது சொந்த நலனுக்கும், தங்களை சுற்றி உள்ளவர்களின் நலனுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியது அவசியமானதாகும். இந்த தருணத்தில் வீரர்கள் அனைவரும் வீடு திரும்புவதுதான் சரியானதாக இருக்கும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான்-யூசுப் பதான் சகோதரர்கள் 4 ஆயிரம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குகிறார்கள்.
புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது.
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பிரபலங்கள் மக்களுக்கு வீடியோ மூலம் விளக்கி வருகிறார்கள். தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் பதான் சகோதரர்கள் முகக்கவசங்களை வழங்குகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான்-யூசுப் பதான் ஆகியோர் 4 ஆயிரம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குகிறார்கள்.
இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். நாங்கள் உதவுவதற்கு மேலும் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு வெளியிட்டுள்ள வழகாட்டுதல்களை பின்பற்றுங்கள் அல்லது சிறைக்கு செல்லுங்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் காம்பீர் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-ஐ நெருங்கிவிட்டது.
கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை பிரபலங்கள் மக்களுக்கு வீடியோ மூலம் விளக்கி வருகிறார்கள். தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று விழிப்புணர்வு செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே கொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு உதவும் வகையில் பதான் சகோதரர்கள் முகக்கவசங்களை வழங்குகிறார்கள். முன்னாள் கிரிக்கெட் வீரர்களான இர்பான் பதான்-யூசுப் பதான் ஆகியோர் 4 ஆயிரம் முகக்கவசங்களை நன்கொடையாக வழங்குகிறார்கள்.
இதுதொடர்பான வீடியோவையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர். நாங்கள் உதவுவதற்கு மேலும் தயாராக இருக்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க அரசு வெளியிட்டுள்ள வழகாட்டுதல்களை பின்பற்றுங்கள் அல்லது சிறைக்கு செல்லுங்கள் என்று முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா எம்.பி.யுமான கவுதம் காம்பீர் எச்சரித்துள்ளார்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா இருந்திருந்தால் இந்தியா 0-2 என தொடரை இழந்த முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும் என மெக்கிளேனகன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டி20 போட்டிகள், மூன்று ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடியது. முதலில் நடைபெற்ற டி20 தொடரை இந்தியா 5-0 எனக் கைப்பற்றியது. 5-வது போட்டியின்போது ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தொடரில் இருந்தும் அவர் விலகினார்.
அதன்பின் நடைபெற்ற ஒருநாள் தொடரை 0-3 எனவும், டெஸ்ட் தொடரை 0-2 எனவும் இந்தியா இழந்தது. டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா இருந்திருந்தால் தொடரின் முடிவு வேறுமாதிரி இருந்திருக்கும் என நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் மெக்கிளேனகன் தெரிவித்துள்ளார்.
தற்போது கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் வீட்டில் முடங்கிக் கிடக்கும் கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்களுடன் உரையாடி பொழுதை கழித்து வருகின்றன.
மெக்கிளேகனிடம் ரசிகர் ஒரு கேட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு மெக்கிளேனகன் பதில் அளித்துள்ளார். இந்தத் தொடரில் விராட் கோலி நான்னு இன்னிங்சிலும் சேர்த்து 38 ரன்கள் மட்டுமே அடித்தார். நியூசிலாந்து தொடரில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என 11 இன்னிங்சில் 218 ரன்கள் அடித்திருந்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களால் செல்லமாக ‘குட்டி தல’ என அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவுக்கு இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி விளையாடியவர் சுரேஷ் ரெய்னா. தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் எம்எஸ் டோனியை ‘தல’ என்றும், சுரேஷ் ரெய்னாவை ‘குட்டி தல’ என்றும் அழைத்து வருகின்றனர்.
சுரேஷ் ரெய்னா - பிரியங்கா ஜோடிக்கு ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு கிரேசியா எனப் பெயரிட்டுள்ளனர். இந்நிலையில் இன்று அவர்களுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்தக் குழந்தைக்கு ரியோ எனப் பெயரிட்டுள்ளனர். ஆண்குழந்தை பிறந்துள்ளதை சுரேஷ் ரெய்னா தனது டுவிட்டர் பதிவுபு மூலம் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் இருந்து திரும்பிய கிரிக்கெட் ஜாம்பவான்களான சங்ககரா, ஜேசன் கில்லெஸ்பி ஆகியோர் முன்னெச்சரிக்கை காரணமாக தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்தப்படியாக ஐரோப்பா நாடுகள் கொரோனா வைரசுக்கு அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான நாடுகள் தங்கள் நாட்டின் எல்லைகளை மூடிவிட்டன. கடந்த வாரத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து திரும்பியவர்கள் போலீசிடம் தங்களுடைய தகவல்களை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என இலங்கை அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும் பெரும்பாலான மக்கள் வெளிநாடு பயணங்கள் குறித்த தங்களது தகவல்களை அளிப்பதில்லை என்று அரசு கவலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் இங்கிலாந்தில் இருந்து இலங்கை திரும்பிய கிரிக்கெட் ஜாம்பவான் சங்ககரா தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சங்ககரா கூறுகையில் ‘‘எனக்கு கொரோனா நோய்க்கான எந்த அறிகுறியும் இல்லை. அதுபோன்ற ஏதும் இல்லை என்றாலும், நான் அரசின் வழிமுறைகளை கடைபிடித்துக் கொண்டிருக்கிறேன்.
நான் கடந்த ஒருவாரத்திற்கு முன் லண்டனில் இருந்து இலங்கை திரும்பினேன். வந்ததும் மார்ச் 1-ந்தேதியில் இருந்து 15-ந்தேதி வரைக்கும் வெளிநாடுகளில் இருந்து இலங்கை திரும்பியர்கள் போலீசில் தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். அத்துடன் அவர்களை அவர்களாகவே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான். நான் எனது பெயரை போலீசில் பதிவு செய்துவிட்டது, தனிமைப்படுத்திக் கொண்டேன்” என்றார்.
மேலும், இந்த கொரோனா வைரசால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
வெளிநாடுகளில் இருந்து வந்த மூன்று பேர் கொரோனா அறிகுறி இருந்ததை அதிகாரிகளிடம் அவர்கள் மறைத்துவிட்டதை இலங்கை அரசு உறுதி செய்துள்ளது என்று சங்ககரா தெரிவித்துள்ளார்.

அதேபோல் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லெஸ்பி் இங்கிலாந்தில் சசக்ஸ் அணியின் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார். இங்கிலாந்தில் அனைத்து கிரிக்கெட் போட்டிகளும் மே 28-ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் அவர் சொந்தநாடு திரும்பியுள்ளார். ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயம் என அரசு அறிவித்துள்ளது. இதனால் கில்லெஸ்பி தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டார். இதேபோல் ஏராளமான கிரிக்கெட் பிரபலங்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டனர்.
ஸ்பெயின் நாட்டில் நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்து வருவதால் லா லிகா கால்பந்து போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் மெல்லமெல்ல ஐரோப்பா நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. முதலில் இத்தாலி நாட்டில் பரவியது. இதன் தாக்கத்தை அறியாமல் ஐரோப்பா நாடுகள் கால்பந்து லீக்குகளை தொடர்ந்து நடத்தி வந்தன. குறுகிய நாட்களுக்குள் ஸ்பெயின், பிரான்ஸ் என விஸ்வரூபம் எடுத்து பரவத்தொடங்கியது.
இதனால் போட்டிகளை ரசிகர்கள் யாருமின்றி பூட்டிய மைதானத்திற்குள் வைத்து நடத்தின. ஆனால் கொரோனா வைரஸ் கட்டுங்கடங்காத வகையில் ருத்ரதாண்டவம் ஆட அனைத்து லீக்குகளும் தள்ளி வைக்கப்பட்டன.
ஸ்பெயின் நாட்டில் நடத்தப்படும் உலகளவில் முன்னணி லீக்கான லா லிகா கால்பந்து போட்டிகளும் தள்ளிவைக்கப்பட்டன. ஏப்ரல் முதல் வாரத்திற்குள் கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வந்துவிடும். அதன்பிறகு போட்டியை நடத்திக் கொள்ளலாம் என திட்டமிட்டிருந்தது.
ஆனால் ஸ்பெயின் நாட்டில் இதுவரை 33 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2180-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்தாலும் ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் வரை சகஜ நிலை திரும்பாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லா லிகா மற்றும் ஸ்பெயின் கால்பந்து பெடரேசன் இணைந்து காலவரையின்றி லா லிகா கால்பந்து லீக் போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.






