என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி தலைசிறந்த வீரர்களில் ஒருவர். அவரைப்போன்று வளர முயற்சி செய்வேன் என்று பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பவர் விராட் கோலி. இவர் மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். மூன்றிலும் 50-க்கு மேல் சராசரி வைத்துள்ளார்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் இளம் வீரர் பாபர் அசாம். இவர் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தற்போது டெஸ்ட் போட்டிகளிலும் குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார்.

    தொடர்ச்சியாக இதுபோன்று விளையாடினால் விராட் கோலியை போன்ற சிறந்த வீரராக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.

    இந்நிலையில் விராட் கோலி சிறந்த வீரர்களில் ஒருவர். அவரைப்போன்று சிறந்த வீரராக முயற்சி செய்வேன் என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பாபர் அசாம் கூறுகையில் ‘‘விராட் கோலி தலைசிறந்த வீரர்களில் ஒருவர். நான் அவருக்கு பின்னால்தான் இருக்கிறேன். நான் இன்னும் அதிகமான சாதனைகளை எட்ட வேண்டியுள்ளது. அவரை போன்று சிறந்த வீரராக முயற்சி செய்வேன். பாகிஸ்தான் அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து சாதனைப் படைக்க வேண்டும்’’ என்றார்.
    எல்லா காலக்கட்டத்திலும் சிறந்த 11 பேர் கொண்ட அணியில் சேவாக்கிற்கு இடம் கொடுக்காததால், வாசிம் ஜாபரிடனம் ஹர்பஜன் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் வாசிம் ஜாபர். அவரது டுவிட்டர் பக்கத்தில் ஒரு நாள் போட்டிகளில் ஆல் டைம் வீரர்கள் பற்றிய ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார். அதற்கு ஹர்பஜன் சிங் ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார்.

    முன்னாள் இந்திய அணியின் பேட்ஸ்மேன் வாசிம் ஜாபர். இவர் டுவிட்டர் பக்கத்தில் எல்லா காலகட்டத்திலும் ஒருநாள் போட்டிகளில் அசத்துபவர்களைக் குறிப்பிட்டுச் சொல்வது போல 11 வீரர்கள் கொண்ட பட்டியலைத் தயார் செய்து பதிவிட்டிருந்தார்.

    அந்தப் பட்டியலில் முதலிடத்தில் சச்சின் டெண்டுல்கரும், நான்காம் இடத்தில் விராட் கோலியும், ஆறாம் இடத்தில் யுவராஜ் சிங்கும், எட்டாம் இடத்தில் ஜடேஜா மற்றும் ஹர்பஜன் சிங்கும் பதினொன்றாம் இடத்தில் பும்ராவும் இடம் பெற்றிருந்தனர்.

    மேலும் இது தன்னுடைய தனிப்பட்ட கருத்து என்றும் அவர் கூறியிருந்தார். இதனைத் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஹர்பஜன் சிங் ‘‘இந்தப் பட்டியலில் சேவாக் இல்லையா?’’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

    அதற்கு பதிலளித்த வாசிம் வீருவை உள்ளே கொண்டு வர இதில் நீங்கள் யாரை கைவிடூவிர்கள் என கேள்வி எழுப்பினார். இந்தப் பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    வாசிம் ஜாபர் தேர்வு செய்துள்ள அணி:-

    1. சச்சின் தெண்டுல்கர், 2. சவுரவ் கங்குலி, 3. ரோகித் சர்மா, 4. விராட் கோலி, 5. யுவராஜ் சிங், 6. எம்எஸ் டோனி (விக்கெட் கீப்பர்/கேப்டன்), 7. கபில்தேவ், 8. ஜடேஜா/ஹர்பஜன் சிங், 9. அனில் கும்ப்ளே, 10. ஜாகீர் கான், 11. பும்ரா.
    ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று ஒயிட்-பால் கிரிக்கெட்டில் போட்டிகளில் விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
    கொரோனா வைரஸ் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது. கொரோனாவுக்குப் பிறகு இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே அடுத்த மாதம் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது.

    இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் இலங்கை சென்று தலா மூன்று ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட பிசிசிஐ சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இருந்தாலும் இலங்கை அரசு இதுவரை அனுமதி அளிக்கவில்லையாம். அனுமதி பெற்றவுடன் அதற்கான வேலைகளை இலங்கை கிரிக்கெட் போர்டு செய்யும். மேலும், குறிப்பிட்ட ரசிகர்களை மைதானத்திற்கு அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.

    மேலும், பாகிஸ்தானில் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை டி20 தொடரையும் நடத்த இலங்கை தயாராகி வருகிறது.
    டோனி கவனத்தை சிதறடிக்கும் எந்த வி‌ஷயத்திலும் சிக்கி கொள்ளமாட்டார். எது முக்கியமோ அதனை மட்டுமே நினைத்து கொண்டிருப்பார் என கேன் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி குறித்து இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு வீரர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.

    டோனி குறித்து நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்சன் ஸ்டார் ஸ்போட்ஸ் நிகழ்ச்சியில் கூறியதாவது:-

    டோனி கவனத்தை சிதறடிக்கும் எந்த வி‌ஷயத்திலும் சிக்கி கொள்ளமாட்டார். எது முக்கியமோ அதனை மட்டுமே நினைத்து கொண்டிருப்பார். எது மிக முக்கியமோ அதில் தீவிர கவனம் செலுத்துவார். அவர் தனிச்சிறப்பானவர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதே நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கும் டோனி குறித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    2003-2004-ம் ஆண்டுகளில் நான் முதல் முதலாக டோனியுடன் வெளிநாடு கிரிக்கெட் தொடருக்கு சென்றேன். அவர் அமைதியானவர் பழகுவதற்கு எளிமையானவர். அவர் கோபத்தை வெளிப்படுத்தி நான் அதிகம் பார்த்ததே இல்லை. அப்போது பார்த்ததற்கும் இப்போது நான் பார்ப்பதற்கும் டோனியிடம் வெள்ளை முடி தெரிவது மட்டுமே வித்தியாசம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வீரர் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக கமிட்டி நேற்று அனுமதி அளித்தது.
    துபாய்:

    சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆடும் லெவன் அணியில் இடம் பெற்றுள்ள வீரர் யாருக்காவது கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டால் அவருக்கு பதிலாக மாற்று வீரரை பயன்படுத்த ஐ.சி.சி.யின் தலைமை நிர்வாக கமிட்டி நேற்று அனுமதி அளித்தது. எத்தகைய வீரர் (பவுலர் அல்லது பேட்ஸ்மேன்) பாதிக்கப்படுகிறாரோ அதற்கு ஏற்ற மாற்று வீரரையே பயன்படுத்த வேண்டும். 20 ஓவர் மற்றும் ஒரு நாள் போட்டிகளுக்கு இந்த விதிமுறை பொருந்தாது.

    எச்சில் மூலம் கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் பந்து மீது எச்சிலை தேய்க்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்ற பரிந்துரைக்கும் ஐ.சி.சி. ஒப்புதல் அளித்துள்ளது. இனி வரும் டெஸ்ட் போட்டிகளில் இது அமல்படுத்தப்படும். தடையையும் மீறி பந்தை பளபளப்பு செய்ய எச்சிலால் தேய்த்தால் இன்னிங்சில் இரண்டு முறை எச்சரிக்கை விடுக்கப்படும். அதன் பிறகும் தொடர்ந்து எச்சிலை பந்து மீது தேய்த்துக் கொண்டே இருந்தால் சம்பந்தப்பட்ட அணியின் பவுலரை தண்டிக்கும் விதமாக பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன் பெனால்டியாக வழங்கப்படும். டெஸ்ட் போட்டிகளில் தற்காலிகமாக உள்ளூர் நடுவர்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் நடைபெறுமா என்பது குறித்து ஐ.சி.சி. மீண்டும் இன்று ஆலோசனை நடத்த உள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) போர்டு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இதில் பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்து முடிவு எடுக்கப்படுகிறது.
    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ம் தேதி முதல் நவம்பர் 15-ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் ஆஸ்திரேலியாவில் விதிக்கப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக இந்த போட்டியை திட்டமிட்டபடி அங்கு நடத்துவதில் சிக்கல் நிலவுகிறது.

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தை பொறுத்தவரை அடுத்த ஆண்டு இந்தப் போட்டியை நடத்த விரும்புகிறது. ஆனால் 2021-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தும் உரிமத்தை இந்தியா பெற்றிருக்கிறது.

    எனவே, இந்தியாவில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிப்போனால் இந்த பிரச்சினை சரியாகி விடும். ஆனால் இதை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்றுக்கொள்ளுமா என்பது உறுதியாக தெரியவில்லை.

    இதுதொடர்பாக, இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமாலிடம் கேட்டபோது, ‘முதலில் இந்த ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடக்குமா? நடக்காதா? என்பது குறித்து ஐ.சி.சி. முறைப்படி அறிவிக்கட்டும். 20 ஓவர் உலக கோப்பை போட்டி விஷயத்தில் தொடர்ந்து இழுத்தடிக்காமல் விரைவில் தெளிவான முடிவு மேற்கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் அடுத்த கட்ட திட்டமிடலில் கவனம் செலுத்த முடியும்’ என தெரிவித்தார்.
    டெல்லி மருத்துவமனை டெல்லி மக்களுக்கே என்ற முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு முட்டாள்தனமானது என பா.ஜ.க. எம்.பி., கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கொரோனா காலகட்டத்தில், டெல்லி அரசின் மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் டெல்லி மக்களுக்கே சிகிச்சை அளிக்கப்படும் என்று முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். இதற்கு பல்வேரு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், டெல்லி மருத்துவமனை டெல்லி மக்களுக்கே என்ற முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவிப்பு முட்டாள்தனமானது என பா.ஜ.க. எம்.பி., கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஆளுநர் நல்ல முடிவெடுத்தார். டெல்லி மருத்துவமனைகளில் பிற மாநில நோயாளிகளுக்கு இடமில்லை என்ற உத்தரவு முட்டாள்தனமானது, இந்தியா என்பது ஒன்று. நாம் இந்த தொற்றை ஒன்றிணைந்தே எதிர்த்துப் போராட வேண்டும் என பதிவிட்டுள்ளார்.
    இனவெறி தாக்குதல் பிரச்சினையை எதிர்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி கூறியிருந்த நிலையில், அப்படி ஏதும் இல்லை என இர்பான் பதான் தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். தொடரின்போது இனவெறி தாக்குதல் பிரச்சினையை எதிர்கொண்டதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டன் டேரன் சமி கூறியிருந்தார்.

    இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “ஐ.பி.எல் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக ஆடினேன். அப்போது என்னையும், இலங்கை வீரர் திசரா பெரேராவையும் 'கலு' என்று அழைப்பார்கள்.

    கருப்பினத்தவர்களை கிண்டல் செய்யும் வார்த்தை அது என்று அறிந்ததும் கோபம் வருகிறது“ என்று தெரிவித்தார்.

    ஆனால் டேரன் சமி தன்னை 'கலு' என்று கேலி செய்தவர்கள் சகவீரர்களா? அல்லது ரசிகர்களா?, எப்போது நடந்தது என்ற விவரங்கள் எதையும் பதிவு செய்யவில்லை.

    டேரன் சமியின் இந்த குற்றச்சாட்டுக்கு அவருடன் ஐதராபாத் அணியில் ஆடிய முன்னாள் வீரர்கள் இர்பான் பதான், பார்தீவ் பட்டேல் பதில் அளித்துள்ளனர். இதுபோன்ற விஷயங்களை அறிந்து இருக்கவில்லை என்று தெரிவித்து உள்ளனர்.

    பார்தீவ் பட்டேல் கூறும் போது "அந்த (கேவலமான) சொற்களை யாரும் பயன்படுத்துவதை நான் கேள்விப்பட்டதாக நினைக்கவில்லை" என்றார்.

    இர்பான் பதான் கூறும்போது "2014-ம் ஆண்டில் டேரன் சமியுடன் இருந்தேன். இனவெறி தாக்குதல் உண்மையிலேயே நடந்து இருந்தால் இந்த விஷயம் நிச்சயமாக விவாதிக்கப்பட்டு இருக்கும். எனவே பெரிய விஷயங்கள் எதுவும் விவாதிக்கப்படாததால் இது போன்ற விஷயங்கள் பற்றி எனக்கு தெரியாது" என்றார்.

    மற்றொரு வீரரான வேணுகோபால் ராவும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார்.
    மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து புறப்பட்டது.
    கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் உள்ளன.

    இந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே 3 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு புறப்பட்டது.
    ஆன்டிகுவாவில் இருந்து அந்த அணி வீரர்கள் நேற்று புறப்பட்டனர். இந்திய நேரப்படி இன்று மாலை அந்த அணி இங்கிலாந்து சென்றடையும். மான்செஸ்டருக்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சென்று அடைகிறார்கள்.

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. 2-வது டெஸ்ட் போட்டி ஜூலை 16-20 வரையிலும், 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் ஜூலை 24-28 வரையிலும் மான்செஸ்டரில் நடக்கிறது.

    ரசிகர்கள் இல்லாமல் காலி ஸ்டேடியத்தில் இந்த போட்டிகள் நடக்கிறது. மேலும் ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டு முறைகள் இந்த டெஸ்ட் தொடரில் பின்பற்றப்படும்.

    டேரன் பிராவோ, ஹெட் மையர், கீமோ பால் ஆகிய 3 வீரர்கள் கொரோனா வைரசுக்கு பயந்து இங்கி லாந்து செல்ல மறுத்து விட்டனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் விவரம்:-

    ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), பிளாக்வுட், பான்னெர், கிரேக் பிராத் வெயிட், புரூக்ஸ், கேம்ப்பெல், ராஸ்டன் சேஸ், கார்ன் வால், ஷானே டவுரிட்ஜ், செமர் ஹோல்டர், ஷகி ஹோப், அல்ஜாரி ஜோசப், கேமர் ரோச், யேமன் ரெய்பர்.
    இந்தியாவின் 800 மீட்டர் ஓட்டப்பந்தய வீராங்கனையான கோமதிக்கு ஊக்கமருந்து உட்கொண்ட விவகாரத்தில் நான்கு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி தடகள வீராங்கனைகளில் ஒருவர் கோமதி. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார்.

    30 வயதான கோமதி பந்தய தூரத்தை 2 நிமிடம் 2.70 வினாடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடித்து முத்திரை பதித்தார். இதற்கிடையே அவர் ஊக்கமருந்து பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தடை செய்யப்பட்ட ஸ்டிராய்ட் வகை ஊக்க மருந்து உட்கொண்டது பரிசோதனையில் தெரிய வந்தது.

    இந்த நிலையில் ஊக்கமருத்து தொடர்பாக கோமதிக்கு 4 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. தடகள ஒருமைப்பாடு பிரிவான ஏ.ஐ.யூ. இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருக்கிறார். 2023-ம் ஆண்டு மே 16-ம் தேதி வரை கோமதியின் தடை இருக்கும். அதுவரை அவர் எந்த போட்டியிலும் பங்கேற்க முடியாது.

    அதோடு ஆசிய தடகள போட்டியில் கோமதி பெற்ற தங்கப்பதக்கமும் பறிக்கப்படுகிறது. ஏற்கனவே அவரது ‘ஏ’
    சாம்பிள் பரிசோதனை உறுதி செய்யப்பட்டது. தற்போது ‘பி’ சாம்பிளிலும் உறுதியாகி உள்ளது. கோமதிக்கு நடத்தப்பட்ட 4 பரிசோதனையிலும் அவர் ஊக்க மருந்து பயன்படுத்தி இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

    கடந்த ஆண்டு மார்ச் 18-ந்தேதி முதல் மே-17 வரையிலான கோமதியின் அனைத்து போட்டி முடிவுகளும் ரத்து செய்யப்பட்டன. மேலும் அவர் பெற்ற பதக்கங்கள், பட்டங்கள், தரவரிசை புள்ளிகள் பரிசு தொகை, போட்டியில் பங்கேற்ற பணம் ஆகியவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படுகிறது.

    மேலும் வழக்கு மற்றும் இதர செலவுகளுக்காக கோமதிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத் தொகையை 28 நாட்களுக்குள் அவர் செலுத்த வேண்டும் என்று ஏ.ஐ.யூ உத்தரவிட்டுள்ளது.

    எதிர்த்து கோமதி விளையாட்டு தீர்ப்பாய கோர்ட்டில் அப்பீல் செய்யலாம். இது அவருக்கான கடைசி வாய்ப்பாக இருக்கலாம்.
    ‘100-வது சதம் அடிக்க விடாமல் தெண்டுல்கரை ஆட்டம் இழக்க செய்ததால் தனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன’ என்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரிஸ்னன் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தனது 99-வது சர்வதேச சதத்தை 2011-ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் அடித்தார். இதனால் அவர் எப்போது தனது 100-வது சதத்தை எட்டுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அபரீதமாக இருந்தது. அதே ஆண்டில் லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் 100-வது சதத்தை பூர்த்தி செய்ய நல்ல வாய்ப்பு உருவானது. ஆனால் அது மயிரிழையில் கை நழுவிப்போனது. தெண்டுல்கர் 91 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரிஸ்னன் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் விக்கெட்டை இழந்தார். பவுலரின் அப்பீலை தொடர்ந்து நடுவர் ராட் டக்கெர் (ஆஸ்திரேலியா) தெண்டுல்கருக்கு ‘அவுட்‘ வழங்கினார். ஆனால் அப்போது அது துல்லியமான எல்.பி.டபிள்யூ. இல்லை என்று சர்ச்சையானது.

    ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கரை சதம் அடிக்க விடாமல் ஆட்டம் இழக்க செய்த பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வந்தன என்று இங்கிலாந்து அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டு இருக்கும் 35 வயதான வேகப்பந்து வீச்சாளர் டிம் பிரிஸ்னன் நீண்ட நாட்களுக்கு பிறகு மனம் திறந்து இருக்கிறார்.

    இது தொடர்பாக பிரிஸ்னன் கிரிக்கெட் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில், ‘ஓவல் டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் நிச்சயம் சதம் அடித்து இருப்பார். நான் வீசிய அந்த பந்து அநேகமாக லெக் ஸ்டம்புக்கு வெளியே தான் போய் இருக்கும். நான் சத்தமாக அப்பீல் கேட்டதால் நடுவரும் அவுட் கொடுத்து விட்டார். நாங்கள் அந்த டெஸ்ட் போட்டி தொடரை வென்றதுடன், ‘நம்பர் ஒன்’ இடத்தையும் பிடித்தோம். அந்த போட்டிக்கு பிறகு எனக்கு ‘டுவிட்டர்’ மூலம் கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதேபோல் நடுவர் ராட் டக்கெர் அதிகமான கொலை மிரட்டல்களை சந்திக்க வேண்டி இருந்தது. இதனை அவர் சில மாதங்களுக்கு பிறகு என்னை சந்தித்த போது கூறினார். ‘எவ்வளவு தைரியம் இருந்தால் ஸ்டம்புக்கு வெளியே போகும் பந்துக்கு அவுட் கொடுப்பாய்’ என்று அவரது வீட்டு விலாசத்துக்கு பலரும் கடிதம் எழுதி இருக்கின்றனர். இதனால் அவர் சில காலம் தனக்கு ஒரு பாதுகாவலரை நியமித்ததுடன், தனது வீட்டுக்கும் போலீஸ் காவல் போட்டு இருந்தார்’ என்று தெரிவித்துள்ளார்.

    2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தெண்டுல்கர் முன்னதாக 2012-ம் ஆண்டில் நடந்த ஆசிய கோப்பை போட்டியில் வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தனது 100-வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார். டெஸ்ட் போட்டியில் 51 சதமும், ஒருநாள் போட்டியில் 49 சதமும் அடித்துள்ள தெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்த ஒரே வீரர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு மைக்கேல் கிளார்க் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    சிட்னி:

    ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு துறையிலும் சிறந்த சாதனை படைக்கும் நபர்களுக்கு அந்த நாட்டு அரசு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் 2015-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான மைக்கேல் கிளார்க், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு அளித்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ‘ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா’ என்ற கவுரவ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    39 வயதான மைக்கேல் கிளார்க் 115 டெஸ்ட், 245 ஒருநாள் மற்றும் 34 இருபது ஓவர் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி இருக்கிறார். இந்த விருதை ஏற்கனவே முன்னாள் கேப்டன்கள் ரிக்கி பாண்டிங், மார்க் டெய்லர், ஸ்டீவ் வாக், ஆலன் பார்டர் உள்பட கிரிக்கெட் பிரபலங்கள் 20-க்கும் மேற்பட்டவர்கள் பெற்றுள்ளனர். விருது குறித்து மைக்கேல் கிளார்க் கருத்து தெரிவிக்கையில், ‘உண்மையை சொல்லப்போனால் விருது அறிவிப்பை முதலில் நான் நம்பவில்லை. இந்த தேர்வு எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும், கவுரவத்தையும் அளிக்கிறது. கொரோனா பிரச்சினையில் இருந்து விளையாட்டு வெற்றிகரமாக வெளிவரும் என்று நம்புகிறேன்’ என்றார்.
    ×