என் மலர்tooltip icon

    விளையாட்டு

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐசிசி, ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடை பெறுமா? என்ற சந்தேகமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடந்த 28-ந்தேதி நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. வருகிற 10-ம் தேதி இதுகுறித்து ஐ.சி.சி. முடிவு செய்கிறது.
    பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலை காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி தள்ளி வைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    20 ஓவர் உலகக் கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் முதல் மே மாதம் நடைபெற இருந்த ஐ.பி.எல். 20 ஓவர் போட்டி
    காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிக்காக உலக கோப்பையை தள்ளி வைக்க பி.சி.சி.ஐ. தனது செல்வாக்கை பயன்படுத்துவதாக ஆஸ்திரேலிய மீடியாக்கள் குற்றம்சாட்டின. இதேபோல அந்நாட்டு முன்னாள் வீரர்களும் விமர்சித்து இருந்தனர்.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல். போட்டியை நடத்த பி.சி.சி.ஐ. விரும்புவதில் எந்த தவறும் இல்லை என்று வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரரும், டெலிவிசன் வர்ணனையாளருமான மைக்கேல் ஹோல்டிங் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக இன்ஸ்டாகிராம் நேரடி பதிவில் அவர் கூறியதாவது:-

    20 ஓவர் உலக கோப்பை விவகாரத்தில் ஐ.சி.சி. தாமதப்படுத்துவதாக நான் நினைக்கவில்லை. ஏனென்றால் அந்த காலக்கட்டத்தில் ஐ.பி.எல். போட்டிக்கு இடம் இருக்கிறது. ஒரு குறிப்பிட்ட தேதிக்கு முன்பு எந்த ஒரு நாட்டினருக்கும் அனுமதி இல்லை என்று ஆஸ்திரேலிய அரசு சொல்கிறது.

    இதன் காரணமாக உலக கோப்பை போட்டி அங்கு நடைபெறுவதில் சிக்கல் ஏற்படலாம். 20 ஓவர் உலக கோப்பை தள்ளி வைக்கப்பட்டால் ஐ.பி.எல் போட்டியை நடத்த பி.சி.சி.ஐ. விரும்புவதில் எந்த தவறும் இல்லை. அதற்கு எல்லா உரிமையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இருக்கிறது. அடுத்தவர்களின் போட்டியை ஆக்கிரமிக்கும் செயல் இதுவல்ல.

    ஐ.சி.சி.யின் புதிய வழிகாட்டு முறைகள் தொடக்கத்தில் சவாலாக இருக்கும். போகப்போக சரியாகிவிடும். பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு சமபலத்துடன் இருக்கும் ஆடுகளங்களை அமைக்க வேண்டும் என்று கும்ப்ளே தெரிவித்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. ஏனென்றால் பிட்ச்களில் தலையிடுவதை நான் விரும்பவில்லை. அது மைதான பராமரிப்பாளரை பொறுத்து இருக்கிறது.

    இவ்வாறு மைக்கேல் ஹோல்டிங் கூறியுள்ளார்.
    இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை ஓவல் மைதானத்தில் அவுட்டாக்கும்போது, தனக்கு கொலை மிரட்டல் வந்ததாக முன்னாள் வீரர் பிரெஸ்னன் தெரிவித்துள்ளது.
    இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் டிம் பிரெஸ்னன் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:-

    2011-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து வந்தது. ஓவல் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் தெண்டுல்கர் 91 ரன் எடுத்திருந்தபோது, எனது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அந்த டெஸ்டில் தெண்டுல்கர் செஞ்சூரி அடித்திருந்தால், சர்வதேச போட்டியில் 100-வது சதத்தைத் தொட்டு இருப்பார்.

    நான் அவருக்கு போட்ட பந்து விக்கெட்டை வீழ்த்தும் என்று கருதவில்லை. ஆனால் ஆஸ்திரேலிய நடுவர் ராட் டக்கர் எல்.பி.டபிள்யூ கொடுத்து விட்டார். இந்த அவுட் கொடுக்கப்படாமல் இருந்தால், தெண்டுல்கர் நிச்சயமாக சதம் அடித்து இருப்பார். நாங்கள் இந்த டெஸ்ட் தொடரை வென்று உலகின் நம்பர் 1 அணியாக திகழ்ந்தோம்.

    தெண்டுல்கரை அவுட் செய்ததால், எனக்கும் நடுவருக்கும் கொலை மிரட்டல் வந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு இருவருக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் நாங்கள் இருவரும் உயிருக்கும் அச்சுறுத்தல் இருப்பதாக காவல் துறையிடம் புகார் அளித்தோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கிரிக்கெட்டின் சகாப்தமான தெண்டுல்கர் சர்வதேச போட்டியில் 99-வது செஞ்சூரியிலிருந்து 100-வது சதத்தை கடக்க தாமதம் ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது 99-வது சர்வதேச சதத்தை பதிவு செய்தார்.

    சச்சினை அவுட்டாக்கிய பிரெஸ்னன்

    அதன்பிறகு 2012-ம் ஆண்டு இறுதியில்தான் ஆசிய கோப்பையில் வங்காள தேசத்துக்கு எதிராக தனது 100-வது சதத்தை பதிவு செய்தார். அதன் பின்னர் 2013-ம் ஆண்டு தெண்டுல்கர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.
    கிரிக்கெட் வரலாற்றில் தெண்டுல்கர் தவிர எந்த பேடஸ்மேனும் 100 சர்வதேச சதங்களை அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    வெஸ்ட் இண்டீஸ் அணி இக்கட்டான நிலையில் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்ய சம்மதம் தெரிவித்ததற்காக முன்னாள் கேப்டன் நன்றி தெரிவித்துள்ளார்.
    கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே  3 மாதங்களுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணி 3 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக நாளை ( 9-ந்தேதி ) இங்கிலாந்து புறப்பட்டு செல்கிறது.

    இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 8-ந்தேதி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ்பவுல் மைதானத்தில் தொடங்குகிறது. ஜூலை 28-ம் தேதியுடன் இந்த டெஸ்ட் தொடர் முடிகிறது.

    இந்த இக்கட்டான நேரத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாட வரும் வெஸ்ட் இண்டீஸ் அணியை இங்கிலாந்து முன்னாள் கேப்டன் டேவிட் கோவர் பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    கொரோனா வைரசால் தற்போது உலகம் முழுவதும் ஒரே மாதிரியான நெருக்கடி நிலை உள்ளது. இந்த நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்து வந்து டெஸ்டில் ஆடுவது சிறப்பானது. இது அவர்களது விளையாட்டு உத்வேகத்தை காட்டுகிறது. இதற்காக அவர்களை பாராட்டுகிறேன்.

    வெஸ்ட் இண்டீஸ் அணி இங்கிலாந்தில் விளையாடுவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்து இருக்கிறது. கொரோனா நோய் தொற்றால் கிரிக்கெட் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்டதால் பல்வேறு நாடுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

    இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு மற்ற நாடுகளில் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கலாம்.

    இவ்வாறு டேவிட் கோவர் கூறியுள்ளார்.
    கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை நாட்டிற்கு வெளியே நடத்த இந்தியா முடிவு செய்தால், அதை தங்கள் நாட்டில் நடத்த ஆயத்தமாக இருப்பதாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
    துபாய்:

    13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 29-ந்தேதி மும்பையில் தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்க இருந்தது. கொரோனா வைரசின் கோரதாண்டவத்தால் ஐ.பி.எல். போட்டி காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. இந்த சீசனில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாமல் போனால் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என்பதால் ஆண்டின் இறுதிக்குள் நடத்தி விட வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) தீவிரமாக உள்ளது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஐ.சி.சி. ஒத்திவைத்தால் அதற்குரிய காலக்கட்டமான அக்டோபர், நவம்பரில் ஐ.பி.எல். போட்டியை நடத்திடலாம் என்பதே பி.சி.சி.ஐ.-யின் திட்டமாகும்.

    ஆனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போவதால் வெளிநாட்டிற்கு ஐ.பி.எல். போட்டியை மாற்றுவது குறித்தும் பி.சி.சி.ஐ யோசித்து வருகிறது.

    இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்த தயார் என்று அமீரக கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    இது குறித்து ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய பொதுச்செயலாளர் முபாஷ்ஷிர் உஸ்மானி கூறுகையில், ‘நாங்கள் ஏற்கனவே ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை வெற்றிகரமாக (2014-ம் ஆண்டில் தொடக்க கட்ட லீக் ஆட்டங்கள் இங்கு நடந்தது) நடத்தியிருக்கிறோம். அது மட்டுமின்றி கடந்த காலங்களில் இரு நாட்டு அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் மற்றும் பல நாடுகளுடைய கிரிக்கெட் நடவடிக்கைகளின் பொதுவான இடமாக இருந்திருப்பதை நிரூபித்து காட்டியிருக்கிறோம். நவீனகாலத்திற்கு ஏற்ற ஸ்டேடியங்களும், வசதி வாய்ப்புகளும் உள்ளதால் அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளையும் நடத்த விரும்பக்கூடிய ஒரு இடமாக இது உள்ளது.

    எங்களது மைதானங்களை பயன்படுத்திக் கொள்ள இங்கிலாந்து மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அழைப்பு விடுத்துள்ளோம். நாங்கள் ஏற்கனவே இங்கிலாந்து அணி பங்கேற்ற பல போட்டிகளை இங்கு நடத்தி உள்ளோம். அதனால் அவர்களின் உள்ளூர் போட்டிகளை நடத்த ஆர்வமாக உள்ளோம். எங்களது அழைப்பை இவ்விரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களில் யார் ஏற்றுக்கொண்டாலும் அவர்களின் போட்டிகளை நடத்த மகிழ்ச்சியோடு தயாராக இருக்கிறோம்’ என்றார்.

    முன்னதாக இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஐ.பி.எல். போட்டியை நடத்த தயார் என்று விருப்பம் தெரிவித்து இருந்தது. ஆனால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியை தள்ளிவைப்பது குறித்து ஐ.சி.சி. இறுதியான முடிவை எடுத்த பிறகே ஐ.பி.எல்.-ன் தலைவிதி குறித்து தீர்மானிக்க வேண்டும் என்பதில் இந்திய கிரிக்கெட் வாரியம் உறுதியாக இருக்கிறது.
    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் விளையாடிய போது இனவெறி தாக்குதலுக்கு உள்ளானதாக வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் டேரன் சேமி திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார்.
    கிங்ஸ்டன்:

    அமெரிக்காவில் கருப்பு இனத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸ் அதிகாரியால் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியது. விளையாட்டு பிரபலங்களும் சமூக வலைதளம் மூலம் எதிர்ப்பை பதிவு செய்தனர்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டேரன் சேமி, கருப்பு இனத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, ‘சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் (ஐ.சி.சி.), மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் இனவெறிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இது போன்ற இனவெறி சம்பவத்துக்கு ஆதரவு அளிப்பது போல் ஆகி விடும். இது அமெரிக்கா சம்பந்தப்பட்ட விவகாரம் அல்ல. இந்த பிரச்சனை தினந்தோறும் நடக்கிறது’ என்றும் கூறியிருந்தார்.

    இந்த நிலையில் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் போது தன்னிடம் இனவெறி பாகுபாடு காட்டப்பட்டதாக 36 வயதான டேரன் சேமி புதிய புகார் ஒன்றை சொல்லியுள்ளார்.

    இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘ஐ.பி.எல்.-ல் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய போது என்னையும், இலங்கை வீரர் திசரா பெரேராவையும் ‘கலு’ என்றே அழைப்பார்கள். அப்போது இந்த வார்த்தைக்கு அர்த்தம் கருப்பு நிறத்தை சேர்ந்த வலுவான மனிதர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகு அது கருப்பு இனத்தை கிண்டல் செய்ய கூறப்படும் வார்த்தை என்று அறிந்ததும் இப்போது கோபம் தான் வருகிறது’ என்று குறிப்பிட்டார்.

    2013, 2014-ம் ஆண்டுகளில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காக களம் இறங்கிய டேரன் சேமி தன்னை இவ்வாறு கேலி செய்தது சக வீரர்களா அல்லது ரசிகர்களா, எப்போது அது நடந்தது போன்ற விவரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.
    தனக்கு எதிராக விளையாடிய சிறந்த பேட்ஸ்மேன்களின் பட்டியலில் இந்திய ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கருக்கு பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரம் 5-வது இடம் வழங்கியுள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரும், முன்னாள் கேப்டனுமான வாசிம் அக்ரம் 104 டெஸ்டுகளில் 414 விக்கெட்டுகளும், 356 ஒரு நாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகளும் கைப்பற்றி இருக்கிறார். இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் உலகின் தலைச்சிறந்த பவுலர்களில் ஒருவராக வலம் வந்தார்.

    54 வயதான வாசிம் அக்ரமிடம், அவருடன் இணைந்து மற்றும் எதிராக விளையாடிய வீரர்களில் இருந்து சிறந்த டாப்-5 பேட்ஸ்மேன்களை வரிசைப்படுத்தும்படி யூடியுப் மூலம் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கேட்கப்பட்டது.

    தனது பட்டியலில் முதலிடத்தை வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் அதிரடி வீரர் விவியன் ரிச்சர்ட்சுக்கு வழங்கினார். அவரது கணிப்பில் முன்னாள் வீரர்கள் மார்ட்டின் குரோவ் (நியூசிலாந்து) 2-வது இடமும், பிரையன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்) 3-வது இடமும், இன்சமாம் உல்-ஹக் (பாகிஸ்தான்) 4-வது இடமும், சச்சின் தெண்டுல்கர் (இந்தியா) 5-வது இடமும் பெற்றனர்.

    டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து எண்ணற்ற சாதனைகளை படைத்தவரான சச்சின் தெண்டுல்கரை அவர் 5-வது இடத்துக்கு ஓரங்கட்டியதை சமூக வலைதளத்தில் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

    அதே சமயம் தெண்டுல்கருக்கு பின்வரிசை வழங்கியது குறித்து வாசிம் அக்ரம் அளித்த விளக்கத்தில், ‘‘இந்த வரிசையில் நான் தெண்டுல்கரை பின்னால் வைத்திருப்பதற்கு காரணம், அவருக்கு எதிராக நான் 10 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவில்லை. நானும், வக்கார் யூனிசும் அவருக்கு எதிராக 10 ஆண்டுகளாக பந்து வீசவில்லை. தெண்டுல்கர் தனது 16-வது வயதில் 1989-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு வந்து விளையாடினார். அதன் பிறகு அவருக்கு எதிராக பந்து வீசும் வாய்ப்பு 1999-ம் ஆண்டில்தான் கிடைத்தது.

    சார்ஜாவில் நடந்த ஒரு நாள் கிரிக்கெட்டில் அவருக்கு பந்து வீசினேன். ஆனால் டெஸ்ட் போட்டி வித்தியாசமானது. கிரிக்கெட்டில் அவர் சிறந்த வீரர்களில் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஒரு பவுலராக நான் உச்சத்தில் இருந்தபோது, அவருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால்தான் அவரை மதிப்பிடுவது எனக்கு கடினமாக இருக்கிறது’ என்றார்.

    விவியன் ரிச்சர்ட்ஸ் குறித்து கூறுகையில், ‘‘ரிச்சர்ட்சின் தனித்துவமான பேட்டிங் தொழில்நுட்பம், ரசிகர்களை வசீகரிக்கும் திறனுக்கு நிகர் வேறுயாரும் கிடையாது. கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களில் அவரும் ஒருவர். 1980-களின் மத்தியிலும், 1990 முதல் 2000-ம் ஆண்டு வரையிலும் எல்லா சிறந்த வீரர்களுக்கு எதிராகவும் நான் விளையாடி இருக்கிறேன். அவர்களில் விவியன் ரிச்சர்ட்ஸ் உலகத் தரம் வாய்ந்த வீரர்’’ என்றார்.
    எனக்கு காயம் ஏற்பட்டிற்குமோ என்ற கவலையில் இருந்து எனது மனைவி, இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் அழுதார் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
    சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் இந்தியாவின் ரோகித் சர்மா. அதிலும் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அவர் 3-வது முறையாக இரட்டை சதம் (2017-ம் ஆண்டு மொகாலியில் நடந்த ஆட்டத்தில் 208 ரன்) நொறுக்கியபோது நேரில் பார்த்து கொண்டிருந்த அவரது மனைவி ரித்திகா சஜ்தே உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார்.

    அவர் ஏன் திடீரென அழுதார் என்பது குறித்து ரோகித் சர்மாவிடம் கலந்துரையாடிய சக வீரர் மயங்க் அகர்வால் கேட்டார்.

    அதற்கு ரோகித் சர்மா கூறுகையில், ‘‘நான் 195 ரன்களில் இருந்தபோது, அடுத்த ரன்னுக்கு ஓடுகையில் கிரீசை தொட பாய்ந்து (டைவ்) விழுந்தேன். இதனால் முழங்கையில் சிராய்ப்பு ஏற்பட்டு விட்டதோ என்று நினைத்து ரித்திகா கவலைப்பட்டு உள்ளார். அது அவரது மனசுக்குள் உறுத்தலாகவே இருந்திருக்கிறது. இதனால் உணர்ச்சிவசப்பட்ட அவர் நான் இரட்டை சதத்தை எட்டியதும் கண்கலங்கி விட்டார்.

    இதை இன்னிங்ஸ் முடிந்ததும் அவரிடம் கேட்டு தெரிந்து கொண்டேன். அது மட்டுமின்றி அன்றைய தினம் எங்களது திருமண நாள் என்பதால் மேலும் சிறப்பு வாய்ந்ததாக அமைந்தது. இந்த இரட்டை சதம் நான் அவருக்கு கொடுத்த திருமண நாள் பரிசு’’ என்றார்.

    மனைவியுடன் ரோகித் சர்மா

    தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுடன் நடந்த வேடிக்கையான சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்ட ரோகித் சர்மா, ‘‘2015-ம் ஆண்டில் வங்காளதேசத்தில் நடந்த போட்டி ஒன்றில் நான் முதலாவது ஸ்லிப்பிலும், தவான் 3-வது ஸ்லிப்பிலும் நின்று கொண்டிருந்தோம். வங்காளதேச வீரர் தமிம் இக்பால் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது தவான் திடீரென சத்தமாக பாட்டுப்பாடி விட்டார். பவுலரோ பந்து வீச பாதி தூரம் ஓடி வந்து விட்ட நிலையில், தமிம் இக்பால் ஒரு கணம் திகைத்து நின்றார். அவருக்கு எங்கிருந்து சத்தம் வந்தது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் எங்களுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. உண்மையிலேயே அது ஒரு ஜாலியான நிகழ்வு’’ என்றார்.
    100 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என இந்திய மூத்த டென்னிஸ் வீரர் லியாண்டர் பெயஸ் தெரிவித்துள்ளார்.
    மும்பை:

    இந்திய மூத்த டென்னிஸ் வீரர் 46 வயதான லியாண்டர் பெயஸ் இந்த ஆண்டுடன் சர்வதேச டென்னிசில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்து இருந்தார். ஆனால் கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு நடக்க இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டு விட்டது. விம்பிள்டன் போட்டி ரத்தானது. இதனால் ஓய்வு திட்டத்தை ஓராண்டுக்கு தள்ளிவைக்கலாமா? என்ற யோசனையில் இருக்கிறார். லியாண்டர் பெயஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் நீண்ட காலம் உள்ளது. இப்போதைக்கு ஜூலை, ஆகஸ்டு மாதத்துக்குள் மீண்டும் டென்னிஸ் போட்டி தொடங்குமா என்பது சந்தேகம் தான். அக்டோபர் அல்லது நவம்பர் ஆகலாம் என்று நினைக்கிறேன். ஆனால் மறுபடியும் டென்னிஸ் போட்டி தொடங்கும் போது அதில் விளையாடுவதற்கு என்னை சிறப்பாக தயார்படுத்தி உள்ளேன். 2020-ம் ஆண்டு சீசன் நிறைவடைந்ததும், 2021-ம் ஆண்டில் தொடர்ந்து விளையாடுவதா? இல்லையா? என்பதை முடிவு செய்வேன். இதுவரை 97 கிராண்ட்ஸ்லாம் போட்டித் தொடர்களில் விளையாடி உள்ளேன். மேலும் 3 போட்டிகளில் விளையாடினால் 100 கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் பங்கேற்ற இலக்கை எட்டி விடுவேன். இதே போல் டோக்கியோ ஒலிம்பிக்கில் களம் இறங்கினால், ஒலிம்பிக்கில் அதிகமுறை (8-வது முறை) பங்கேற்ற இந்தியர் என்ற சிறப்பை பெறுவேன். இதை இரண்டையும் செய்ய விரும்புகிறேன். ஒருவேளை அதை எட்ட முடியாமல் போனாலும் கூட, டென்னிசில் இதுவரை நான் செய்துள்ள சாதனைகளே எனக்கு மகிழ்ச்சி தான்.

    இவ்வாறு பெயஸ் கூறினார்.

    1993-ம் ஆண்டு முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் விளையாடி வரும் லியாண்டர் பெயஸ், ஆண்கள் இரட்டையர், கலப்புஇரட்டையர் பிரிவுகளில் மொத்தம் 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
    ரசிகர்களை அனுமதிக்காமல் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்துவது என்பது சரியானதாக இருக்காது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
    கராச்சி:

    16 அணிகள் இடையிலான 7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 18-ந் தேதி முதல் நவம்பர் 15-ந் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி தள்ளிவைக்கப்படலாம் என்று தெரிகிறது. இந்த போட்டியின் தலைவிதி குறித்து வருகிற 10-ந் தேதி நடைபெற இருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் போர்டு நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

    ரசிகர்களை அனுமதிக்காமல் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை நடத்தலாம் என்ற யோசனை சரியானது கிடையாது. ரசிகர்கள் இல்லாமல் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை எப்படி நடத்த முடியும். உலக கோப்பை போட்டி என்றாலே மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கூடும். உலகின் எல்லா பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் தங்கள் அணிக்கு ஆதரவு அளிப்பதற்காக வருவார்கள். ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் போட்டி நடந்தால் இதுபோன்ற உற்சாகமான சூழ்நிலையை கொண்டு வர முடியாது. எனவே உலக கோப்பை போட்டியை நடத்த சரியான நேரத்துக்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் காத்து இருந்து முடிவு எடுக்கும் என்று நான் நம்புகிறேன். கொரோனா தாக்கம் தணிந்து விட்டால் கட்டுப்பாடுகள் எளிமையாக்கப்பட்டு விடும். அதன் பிறகு நம்மால் முறையாக உலக கோப்பை போட்டியை நடத்த முடியும்.

    பந்தை பளபளக்க வைக்க எச்சிலை பயன்படுத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) தற்காலிகமாக தடை விதித்து இருப்பதை வேகப்பந்து வீச்சாளர்கள் நிச்சயம் விரும்பமாட்டார்கள். அதற்கு பதிலாக வியர்வையை பயன்படுத்தி கொள்ளலாம் என்று அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது எச்சிலை போன்ற தாக்கத்தை ஏற்படுத்தாது. எச்சிலை வைத்து பந்தை பளபளக்க செய்து விட்டு, அதன் மீது சற்று வியர்வையை பயன்படுத்தலாம். ஆனால் வியர்வையை அதிகம் பயன்படுத்தினால் பந்து ரொம்ப ஈரப்பதமாகி விடும். இந்த பிரச்சனைக்கு ஐ.சி.சி. சரியான தீர்வை கண்டறிய வேண்டியது அவசியமானது என்று நினைக்கிறேன். அதேநேரத்தில் இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருந்தபடியே இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்தை பிடித்துள்ளார்.
    நியூயார்க்:

    பிரபலங்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் முக்கியமானது இன்ஸ்டாகிராம். கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள போதிலும் விளையாட்டு நட்சத்திரங்கள், திரை உலகினர் தங்களது வீடியோ, போட்டோ மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்து கொள்கிறார்கள். இதிலும் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறார்கள்.

    பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்ட ஸ்பான்சர் நிறுவனங்களின் பதிவுகளை பதிவிடுவதற்கு தொகை வசூலிப்பது வழக்கம். அந்த வகையில் ஊரடங்கு காலத்திலும் அவர்கள் சம்பாதித்த தொகை எவ்வளவு (மார்ச் 12-ந்தேதி முதல் மே 14-ந்தேதி வரையிலான காலத்தில் மட்டும்) என்பது ஆய்வு செய்து வெளியிடப்பட்டு உள்ளது.

    இதன்படி விளையாட்டு வீரர்களில் இன்ஸ்டாகிராம் ஸ்பான்சர் பதிவுகளின் மூலம் அதிக தொகை குவிக்கும் டாப்-10 பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 6-வது இடத்தை பிடித்துள்ளார். 2 மாதத்திற்கு மேலாக கிரிக்கெட் போட்டிகள் இன்றி வீட்டிலேயே கோலி முடங்கி இருந்தாலும் இன்ஸ்டாகிராம் வாயிலாக ரசிகர்களுடன் தொடர்பில் இருக்கிறார். அவரும், அவரது மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மாவும் அவ்வப்போது வித்தியாசமான வீடியோ, போட்டோக்களை பதிவிடுகிறார்கள். சக வீரர்களுடனும் உரையாடுகிறார்கள்.

    மூன்று ஸ்பான்சர் பதிவுகளின் மூலம் ஊரடங்கு காலத்தில் மட்டும் கோலி வீட்டில் இருந்தபடியே ரூ.3 கோடியே 60 லட்சம் சம்பாதித்து உள்ளார். இன்ஸ்டாகிராமில் கோலியை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 6 கோடியே 21 லட்சம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டனும், இத்தாலியின் யுவென்டஸ் கிளப்புக்காக விளையாடுபவருமான கிறிஸ்டியானா ரொனால்டோ இன்ஸ்டாகிராம் சம்பாத்தியத்தில் எப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறார். பொதுமுடக்கத்திலும் கூட அவரே ‘நம்பர் ஒன்’ ஆக திகழ்கிறார். நெருக்கடியான இந்த காலக்கட்டத்தில் அவர் ரூ.18 கோடியை இந்த வகையில் வருவாய் ஈட்டி இருக்கிறார். அதாவது அவரது ஒரு ஸ்பான்சர் பதிவின் மதிப்பு ரூ.4½ கோடி ஆகும். ஒட்டுமொத்தத்தில் 22 கோடியே 24 லட்சம் ரசிகர்கள் ரொனால்டோவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மொய்க்கிறார்கள்.

    இந்த பட்டியலில் 2-வது இடத்தில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சியும் (ரூ.12½ கோடி), 3-வது இடத்தில் பிரேசில் கால்பந்து வீரர் நெய்மாரும் (ரூ.11½ கோடி), 4-வது இடத்தில் அமெரிக்க முன்னாள் கூடைப்பந்து வீரர் ஷக்கியூல் ஓ நியலும் (ரூ.5½ கோடி), 5-வது இடத்தில் இங்கிலாந்து முன்னாள் கால்பந்து வீரர் டேவிட் பெக்காமும் (ரூ.3 கோடியே 85 லட்சம்) உள்ளனர்.
    சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட், சவுரவ் கங்குலி ஆகியோர் என்னுடைய ஹீரோக்கள் என்று வங்கதேச கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் மனந்திறந்து பேசியுள்ளார்.
    வெஸ்ட் இண்டீசில் 2007-ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி மிகவும் மோசமாக விளையாடியது. ராகுல் டிராவிட் தலைமையிலான இந்திய அணி அப்போது காலிறுதிப் போட்டிக்குக் கூட தகுதி பெறாமல் தாயகம் திரும்பியது. அந்தப் போட்டித் தொடரின் லீக் ஆட்டத்தில் இந்தியா, பலவீனமான வங்கதேச அணியிடம் தோற்றது. அந்தப் போட்டியில் தமிம் இக்பால் மிகச் சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தார். அந்தத் தோல்வியே இந்திய அணி மேற்கொண்டு அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமல் தடுத்தது.

    2007-ம் ஆண்டு உலக கோப்பை நினைவலைகளை தமிம் இக்பால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பகிர்ந்துகொண்டார். அப்போது கூறும்போது ‘‘நான் இந்தியாவுக்கு எதிரான 2007 உலகக் கோப்பை போட்டியில் விளையாடும்போது சச்சின் தெண்டுல்கர், ராகுல் டிராவிட் மற்றும் சவுரவ் கங்குலி ஆகியோரைப் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன். நான் அவர்களைப் பார்த்துக் கொண்டே இருந்தேன். என்னுடைய முன்னிலையில் அவர்கள் விளையாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.

    சச்சின், டிராவிட், கங்குலி

    2007 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான வெற்றி வங்கதேச கிரிக்கெட்டுக்கு ஒரு பெரிய விஷயம். இது வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இருவருக்கும் அளவற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த வெற்றி எங்கள் அணிக்கு ஏதாவது செய்ய முடியும் என்ற நம்பிக்கையை எங்கள் மக்களுக்கு அளித்தது. இந்திய வீரர்கள் முதலில் பேட் செய்து 190 ரன்கள் எடுத்தபோது, எங்களுக்கான வெற்றி வாய்ப்பு இருப்பதாக அறிந்துகொண்டோம்.

    நான் பேட்டிங் செய்யச் சென்றேன், ஜாகீர்கானை எதிர்கொண்டேன். 140 கி.மீ வேகத்தில் பந்து வீசும் ஒரு பந்து வீச்சாளரை என்னால் எதிர்கொள்ள முடியும் என்று நான் நினைத்தேன். அவர் வீசிய முதல் பந்தைத் தடுத்து ஆடினேன். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டினேன். அதிலிருந்து எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை கிடைத்து. சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்தேன்’’ எனத் தெரிவித்தார்.
    இந்திய அணி ஒரே நாளில் டெஸ்ட், 20 ஓவரில் ஆடினால், டெஸ்ட் அணியில் யாருக்கும் இடம், டி20 அணியில் யாருக்கும் இடம் அளிக்கலாம் என்ற விருப்பத்தை கிரண் மோரே, பிரசாத், அகர்கர் தெரிவித்துள்ளனர்.
    கொரோனா காலத்தில் கிரிக்கெட் இல்லாததால் பல்வேறு விதமான சுவாரஸ்யங்களை செய்து பார்ப்பதில் வீரர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். அந்த வகையில் கிரிக்கெட் இணையதளமான கிரிக் இன்போ ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்திய அணி கள் ஒரே நேரத்தில் டெஸ்ட், 20 ஓவரில் ஆடினால் அணி சேர்க்கை எப்படி இருக்கும் என்று முன்னாள் வீரர்கள் சிலரை அணுகி அணியைத் தேர்வு செய்ய வைத்துள்ளது.

    இந்திய டெஸ்ட், 20 ஓவர் அணிகளை முன்னாள் தேர்வு குழு தலைவர்கள் கிரண் மோரே, எம்.எஸ்.கே. பிரசாத், மற்றும் முன்னாள் வீரர் அகர்கர் ஆகியோர் தேர்வு செய்தனர்

    கிரண் மோரே தேர்வு செய்த அணிகள்:

    டெஸ்ட் அணி: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரகானே, ரி‌ஷப் பண்ட், ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ‌ஷமி, பும்ரா, விகாரி.

    20 ஓவர் : ஷிகர் தவான், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, குருணால் பாண்ட்யா, தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர், புவனேஷ்வர் குமார், சாஹல், சூர்யகுமார் யாதவ்.

    எம்.எஸ்.கே. பிரசாத் தேர்வு செய்த அணிகள்:

    டெஸ்ட் அணி: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, வீராட் கோலி, ரகானே, விகாரி, சகா, ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் சர்மா, பும்ரா, ‌ஷமி

    20 ஓவர்: ராகுல் (கேப்டன்), தவான், ஷிரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரி‌ஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, குணால் பாண்ட்யா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், சாஹல், நவ்தீப் சைனி

    அகர்கர் தேர்வு செய்த அணிகள்:

    டெஸ்ட் அணி: பிரித்வி ஷா, அகர்வால், புஜாரா, கோலி, ரகானே, விகாரி, ரி‌ஷப் பண்ட், அஸ்வின், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ‌ஷமி, ஷுப்மான் கில்.

    20 ஓவர் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, சாஹல், பும்ரா, ‌ஷர்துல் தாகூர்.
    ×