என் மலர்tooltip icon

    விளையாட்டு

    15 நாட்டைச் சேர்ந்த வீரர்கள் ஆஸ்திரேலியாவுக்கள் அனுமதிக்கப்பட்டால், ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 18-ந்தேதி முதல் நவம்பர் 15-ந்தேதி  வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் நோய் தொற்று தாக்கம் காரணமாக 20 ஓவர் உலக கோப்பை போட்டி நடைபெறுமா? என்பது  சந்தேகமே. இதுகுறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அடுத்த மாதம் முடிவு செய்கிறது.

    இதற்கிடையே உலககோப்பை போட்டியை நடத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்து இருந்தது. இதேபோல இந்த ஆண்டு உலகக்கோப்பை நடைபெற வாய்ப்பு இல்லை என்று ஐ.சி.சி. அமைப்பில் இருப்பவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான ஈசான் மானி தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் உலக கோப்பை நடைபெற்றால் ரசிகருக்கு அனுமதி வழங்கப்படும் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி நிக் ஹாக்ளே தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக கோப்பையில் விளையாட 15 நாட்டு வீரர்களை ஆஸ்திரேலியாவுக்கு நுழைய அனுமதிக்கப்பட்டால் ரசிகர்களையும் தடுத்து நிறுத்த மாட்டோம். போட்டியை பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ரசிகர்கள் இல்லாமல் உலக கோப்பை இல்லை.

    கொரோனா தொற்று உலகளவில் இருப்பதால் 15 அணிகளையும் வரவழைப்பது என்பது எங்களுக்கு மிகப்பெரிய சவாலாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    வங்காளதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா உள்பட 3 வீரர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    கொரோனா வைரசின் கோரதாண்டவம் உலகையே உலுக்கி வருகிறது. எல்லா தரப்பு மக்களையும் அச்சுறுத்தி வரும் இந்த கொடிய ஆட்கொல்லியின் தாக்கம் விளையாட்டு வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. வங்காளதேச கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான முன்னாள் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான மோர்தசாவுக்கு கடந்த வியாழக்கிழமை முதல் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதையடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்து பார்த்ததில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது நேற்று உறுதியானது.

    இதைத்தொடர்ந்து மோர்தசா டாக்காவில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். அவர் தற்போது நல்ல உடல்நிலையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் மோர்தசாவின் மாமியார் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார் என்பது நினைவு கூரத்தக்கது.

    கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் வங்காளதேச அணியை வழிநடத்திய 36 வயதான மோர்தசா 36 டெஸ்ட், 220 ஒருநாள் மற்றும் 54 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். அத்துடன் அந்த நாட்டின் எம்.பி.யாகவும் இருக்கிறார்.

    பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடிக்கு அடுத்தபடியாக கொரோனாவினால் பாதிக்கப்பட்ட முன்னணி கிரிக்கெட் வீரர் மோர்தசா ஆவார்.

    ‘‘நான் சீக்கிரம் குணமடைய வேண்டி ஒவ்வொருவரும் எனக்காக பிரார்த்திக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். எல்லோரும் மிகவும் கவனமுடன் இருங்கள். வீட்டிலேயே பாதுகாப்புடன் இருங்கள். தேவையில்லாமல் வெளியே செல்லாதீர்’’ என்று மோர்தசா தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல் வங்காளதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் தமிம் இக்பாலின் அண்ணனும், முன்னாள் வீரருமான நபீஸ் இக்பால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியாகி இருக்கிறது. அவர் சிட்டகாங்கில் உள்ள தனது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். 34 வயதான நபீஸ் இக்பால் வங்காளதேச அணிக்காக 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கிறார்.

    கடந்த 2 ஆண்டுகளாக வங்காளதேச அணிக்காக விளையாடி வரும் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் 28 வயதான நஸ்முல் இஸ்லாமும் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவருமான சவுரவ் கங்குலியின் அண்ணனும், பெங்கால் கிரிக்கெட் சங்க செயலாளருமான சினேகாசிஷ் கங்குலியின் மனைவி, மாமனார், மாமியார் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதில் சினேகாசிஷ் கங்குலியும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதனை சினேகாசிஷ் மறுத்துள்ளார். தான் நல்ல உடல் நிலையுடன் இருப்பதாகவும், தினசரி அலுவலக பணிகளை கவனித்து வருவதாகவும், தனது உடல்நிலை குறித்து வெளியான செய்திகள் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.

    முன்னாள் முதல்தர கிரிக்கெட் வீரரான 52 வயது சினேகாசிஷ் கங்குலி மொமின்புரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். கங்குலி பெஹலாவில் உள்ள தனது மூதாதையருக்கு சொந்தமான பங்களாவில் குடியிருக்கிறார்.
    சீன நிறுவனத்தின் விளம்பர ஒப்பந்தத்தை பாதியில் ரத்து செய்வது குறித்து ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு அடுத்த வாரம் ஆலோசிக்க முடிவு செய்துள்ளது.
    லடாக் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் இடையே நடந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பிலும் கடும் உயிர்சேதம் நிகழ்ந்தது.

    எல்லையில் தொடர்ந்து சீனா வாலாட்டி வருவதால் அவர்கள் மீது இந்தியர்களுக்கு தற்போது கடும் கோபமும், அதிருப்தியும் ஏற்பட்டு உள்ளது. ‘‘சீன பொருட்களை புறக்கணிப்போம், உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவோம்’’ என்ற கோஷம் இந்தியா முழுவதும் பலமாக எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது.

    இந்திய கிரிக்கெட் வாரியமும் ஒரு சில சீன நிறுவனங்களுடன் விளம்பர ஒப்பந்தம் செய்துள்ளது. குறிப்பாக சீனாவைச் சேர்ந்த விவோ செல்போன் நிறுவனம் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் டைட்டில் ஸ்பான்சராக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் 2022-ம் ஆண்டு வரை நீள்கிறது. இதன்படி ஆண்டுக்கு ரூ.440 கோடியை விவோ, இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்குகிறது.

    இந்த நிலையில் ஐ.பி.எல். நிர்வாகம் தரப்பில் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘‘எல்லையில் நடந்த சண்டையில் துணிச்சல்மிக்க நமது இந்திய வீரர்களின் உயிர்தியாகத்தை கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ளோம். இதையடுத்து ஐ.பி.எல். போட்டிக்கான பல்வேறு விளம்பர ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்வது குறித்து ஆலோசிக்க அடுத்த வாரத்தில் ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழு கூடுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் கூறுகையில், ‘‘இந்திய வாடிக்கையாளர்களிடம் இருந்து சீன நிறுவனம் பணம் சம்பாதிக்கிறது. இதில் ஒரு பங்கை இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு ஸ்பான்சர்ஷிப் வகையில் வழங்குகிறது. அவர்களிடம் இருந்து பெறும் பணத்திற்கு கிரிக்கெட் வாரியம் 42 சதவீதத்தை வரியாக அரசாங்கத்திற்கு செலுத்துகிறது. எனவே இது நம் நாட்டுக்கு சாதகமானதே தவிர சீனாவுக்கு அல்ல. இந்த பணத்தை நாம் பெறாவிட்டால் அது சீனாவுக்கே சென்றுவிடும். வருங்காலத்தில் விளம்பர ஒப்பந்தம் செய்யும்போது மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவோம்’’ என்றார்.

    இதற்கிடையே வர்த்தக மற்றும் தொழில் மைய கன்வீனர் பிரிஜேஷ் கோயல் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘‘சீன நிறுவனங்கள் உடனான விளம்பர ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக முறித்துக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் உள்ள வர்த்தகர்கள் ஐ.பி.எல். போட்டி மற்றும் உள்நாட்டில் நடக்கும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை புறக்கணிப்பார்கள்’’ என்று எச்சரித்துள்ளார்.
    ஸ்பெயினில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து தொடரில் ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலென்சியாவை வீழ்த்தியது.
    மாட்ரிட்:

    ஸ்பெயினில் நடந்து வரும் கிளப் அணிகளுக்கான லா லிகா கால்பந்து தொடரில், மாட்ரிட்டில் அரங்கேறிய லீக் ஆட்டம் ஒன்றில் முன்னாள் சாம்பியனான ரியல் மாட்ரிட் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வலென்சியாவை வீழ்த்தியது. ரியல் மாட்ரிட் தரப்பில் கரிம் பென்ஜிமா 61-வது மற்றும் 86-வது நிமிடத்திலும், காயம் காரணமாக 10 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்பிய மார்டோ அசென்சியோ 74-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.

    இந்த போட்டியில் 2 கோல் அடித்ததன் மூலம் பென்ஜிமா (மொத்தம் 243 கோல்கள்) ஒட்டுமொத்தத்தில் ரியல் மாட்ரிட் அணிக்காக அதிக கோல் அடித்தவர்களின் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறினார். இதுவரை 29 ஆட்டத்தில் ஆடியுள்ள ரியல் மாட்ரிட் அணி 18 வெற்றி, 8 டிரா, 3 தோல்வியுடன் 62 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் நீடிக்கிறது. நடப்பு சாம்பியனான பார்சிலோனா அணி 64 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
    2011-ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்த அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
    கொழும்பு:

    2011-ம் ஆண்டு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் சங்கக்கரா தலைமையிலான இலங்கையை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தியது. ‘இந்த உலக கோப்பையை நாங்கள் விற்று விட்டோம். இறுதி ஆட்டத்தில் ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்துள்ளது. இல்லாவிட்டால் இலங்கை அணி கோப்பையை வென்றிருக்கும். இதில் வீரர்களுக்கு தொடர்பு கிடையாது. ஆனால் பிக்சிங்கில் குறிப்பிட்ட சில குழுக்கள் ஈடுபட்டது’ என்று இலங்கை முன்னாள் விளையாட்டுத்துறை மந்திரி மகிந்தானந்தா அலுத்காமகே சில தினங்களுக்கு முன்பு பரபரப்பான தகவல்களை வெளியிட்டார். அவரது குற்றச்சாட்டை முன்னாள் கேப்டன் சங்கக்கரா திட்டவட்டமாக மறுத்தார்.

    இந்த நிலையில் அலுத்காமகேயின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தும்படி அந்த நாட்டு விளையாட்டுத்துறை மந்திரி துலாஸ் அலஹப்பெருமா உத்தரவு பிறப்பித்துள்ளார். 2 வாரத்துக்கு ஒரு முறை விசாரணை தொடர்பான அறிக்கையை சமர்பிக்கும்படி விளையாட்டுத்துறை செயலாளர் ருவான்சந்த்ரா தலைமையிலான கமிட்டிக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
    இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக பாக். வீரர்கள் உள்பட அனைவருக்கும் இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினர் 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வருகிற 28-ந்தேதி லாகூரில் இருந்து தனிவிமானத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்கிறார்கள். அணியில் மொத்தம் 29 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

    இங்கிலாந்துக்கு கிளம்புவதற்கு முன்பாக பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர், பயிற்சி உதவியாளர்களுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. 22-ந்தேதி அன்று வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் இருக்கும் இடங்களுக்கே சென்று சோதனை நடத்தப்படும். அதன் பிறகு வீரர்கள் அனைவரும் 24-ந்தேதி லாகூரில் ஒன்றிணைவார்கள். அங்கு 2-வது முறையாக சோதனை நடத்தப்படும். பிறகு நட்சத்திர ஓட்டலில் கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுடன் வீரர்கள் சில நாட்கள் தனித்தனியே தங்கியிருப்பார்கள். சோதனை முடிவில் யாருக்காவது கொரோனா தொற்று கண்டறியப்பட்டால் அவர்கள் இங்கிலாந்து செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள்.
    சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், ‘பேஸ் ஆப்’ என்ற செயலி மூலம் ரோகித் சர்மாவின் முகத்தை பெண்ணின் முகம் போல் மாற்றி அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மாவும், சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும், சமூக வலைதளங்கள் மூலம் ஜாலியாக கலந்துரையாடுவது, கிண்டலடிப்பது வழக்கம். சமீபத்தில் ரோகித் சர்மா, சாஹலை கலாய்க்கும் வகையில் ஒரு போட்டோவை பகிர்ந்து இருந்தார். அதில் சாஹல் தளர்வாக இருக்கும் ஒரு டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். அதை சுட்டிக்காட்டி ரோகித் சர்மா, ‘துணிக்கு உள்ளே நீ இருக்கிறாயா? அல்லது உனக்குள் துணி இருக்கிறதா?’ என்று கேலி செய்திருந்தார்.

    இந்த நிலையில் சாஹல், ‘பேஸ் ஆப்’ என்ற செயலி மூலம் ரோகித் சர்மாவின் முகத்தை பெண்ணின் முகம் போல் மாற்றி அதை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த படத்துக்கு கீழே, ‘ரோகித் சர்மா.... நீங்கள் ரொம்ப அழகாக இருக்கிறீர்கள்’ என்ற வாசகமும் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
    இத்தாலி கோப்பைக்கான இறுதிப் போட்டியில் யுவென்டஸ் அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது நபோலி.
    இத்தாலி கோப்பைக்கான கால்பந்து இறுதி போட்டி ரோமில் உள்ள ஒலிம்ப்கோ மைதானத்தில் ரசிகர்கள் இன்றி நடைபெற்றது. இதில் முன்னணி அணிகளாக யுவென்டஸ் - நபோலி அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    90 நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி சூட் கடைபிடிக்கப்பட்டது. இதில் நபோலி 4-2 என யுவனெடஸ் அணியை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    யுவென்டஸ் அணியின் முன்னணி வீரர்களான பவுலோ டைபாலா, டேனிலோ ஆகியொர் பெனால்டி வாய்ப்பை தவறவிட்டனர்.

    கொரோனா பாதிப்புக்குப்பின் போட்டிகள் தொடங்கியதால் வீரர்கள் காயத்தை குறைக்கும் வகையில் கூடுதல் நேரம் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    விராட் கோலி சிறப்பாக விளையாடி வரும் நிலையில், கேப்டன் பதவியை மற்றொரு நபருக்கு பிரித்து கொடுக்க வேண்டியதில்லை என்று மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
    மூன்று வடிவிலான இந்திய கிரிக்கெட் அணிக்கும் விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்ந்து வரும் விராட் கோலிக்கு பணிச்சுமை அதிகமாக உள்ளது. இதனால் டி20 வடிவிலான அணிக்கு மற்றொரு வீரரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற கருத்து நீண்ட காலமாக உலா வருகிறது.

    இந்நிலையில் கேப்டன் பதவிவை பிரித்து கொடுக்க வேண்டியதில்லை என்று சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சஞ்ச்ரேக்கர் கூறுகையில் ‘‘நீங்கள் மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரரரையும், தற்போது சிறப்பான கேப்டனாக இருப்பவரையும் கேப்டனாக பெறுவது அதிர்ஷ்டம் என்றால் தற்போதுள்ள நிலைக்கு நீங்கள் கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டாம்.

    தற்போதைய நிலையில் மூன்று வடிவிலும் சிறப்பாக விளையாடி வரும் விராட் கோலியை கேப்டனாக பெற்றுள்ளீர்கள். அதனால் கேப்டன் பதவியை பிரித்து கொடுக்க வேண்டாம். எதிர்காலத்தில் அதற்கான நேரம் வரும். அப்போது பிரித்து கொடுப்பதை எண்ணலாம்  ’’என்றார்.
    பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில்தான் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
    ஆட்கொல்லி நோயான கொரோனா வைரசின் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு சர்வதேச டென்னிஸ் போட்டிகள் நிறுத்தப்பட்டன. நூற்றாண்டுகால பழமை வாய்ந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 2-ம் உலகப்போருக்கு பிறகு முதல்முறையாக ரத்து செய்யப்பட்டது. மே மாதத்தில் நடக்க வேண்டிய பிரெஞ்ச் ஓபன் உள்ளிட்ட பல போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டன.

    இந்த நிலையில் திருத்தப்பட்ட புதிய போட்டி அட்டவணையை டென்னிஸ் அமைப்புகள் தற்போது அறிவித்துள்ளன. இதன்படி ஆகஸ்டு 3-ந்தேதி இத்தாலியின் பாலெர்மோ நகரில் ‘லேடிஸ் ஓபன்’ போட்டியின் மூலம் டபிள்யூ.டி.ஏ. எனப்படும் பெண்கள் டென்னிசும், ஆகஸ்டு 14-ந்தேதி வாஷிங்டனில் சிட்டி ஓபன் மூலம் ஏ.டி.பி. எனப்படும் ஆண்கள் சர்வதேச டென்னிசும் மீண்டும் தொடங்குகிறது.

    அனைத்து போட்டிகளிலும் கொரோனா பரவலை தடுக்க சமூக இடைவெளியை பின்பற்றுதல் மற்றும் உயரிய மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    களிமண் தரையில் நடைபெறும் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் 27-ந்தேதி முதல் அக்டோபர் 11-ந்தேதி வரை பாரீஸ் நகரில் நடக்கிறது. ‘இந்த போட்டி பூட்டிய மைதானத்தில் நடக்காது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்கள் நிச்சயம் அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் எவ்வளவு பேர் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என்று பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளன தலைவர் பெர்னர்ட் குடிசெலி தெரிவித்தார்.

    பிரெஞ்ச் ஓபனுக்கு முன்னோட்டமாக மாட்ரிட் ஓபன், இத்தாலி ஓபன் ஆகிய போட்டிகளும் நடக்க உள்ளன.

    அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி திட்டமிட்டப்படி ஆகஸ்டு 31-ந்தேதி தொடங்கி செப்டம்பர் 13-ந்தேதி நிறைவடைய இருப்பதை அமெரிக்க அரசு ஏற்கனவே உறுதி செய்து விட்டது. ஆனால் இந்த சீசனில் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட உள்ளது.

    அமெரிக்க ஓபனில் களம் காண ஆர்வமுடன் காத்திருப்பதாக 6 முறை சாம்பியனும், முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ், நடப்பு சாம்பியன் கனடாவின் பியான்கா ஆன்ட்ரீஸ்கு ஆகியோர் உற்சாகமாக கூறியுள்ளனர்.
    2011-ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையை நாங்கள் பணத்திற்காக விற்று விட்டோம் என்ற முன்னாள் மந்திரியின் குற்றச்சாட்டுக்கு ஜெயவர்தனே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
    கபில்தேவ் தலைமையில் இந்தியா முதல் முறையாக 1983-ம் ஆண்டு உலகக் கோப்பையை கைப்பற்றியது. அதன் பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு மகேந்திர சிங் டோனி இந்திய அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுக் கொடுத்தார். 
    2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த போட்டியில் அவரது அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

    இறுதிப் போட்டியில் இலங்கை அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் 2011-ம் ஆண்டு மும்பையில் நடந்த உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூதாட்டம் (மேட்ச் பிக்சிங்) நடந்ததாக இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரி அலுத்காமகே தற்போது குற்றம்சாட்டி உள்ளார். 

    2011 உலக கோப்பை இறுதி போட்டியில் நாங்கள் பணத்துக்காக கோப்பையை விற்று விட்டோம். அப்போது நான் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்தேன். இந்த விவகாரத்தில் கிரிக்கெட் வீரர்களின் பெயரை உள்ளே இழுக்க நான் விரும்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரியின் இந்த குற்றச்சாட்டுக்கு ஜெயவர்தனே கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது இந்த குற்றச்சாட்டு அபத்தானது என்று பாய்ந்துள்ளார். 

    இது தொடர்பாக ஜெயவர்தனே தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    இலங்கையில் தேர்தல் வர இருக்கிறது. அதற்காக இப்போதே சர்க்கஸை தொடங்கி விட்டார்கள். சூதாட்டத்தில் யார் ஈடுபட்டார்கள் என்பதற்கான பெயர் விவரங்களையும், ஆதாரங்களையும் அவர் வெளியிட வேண்டும்.

    இவ்வாறு ஜெயவர்தனே அவர் கூறினார்.

    ஜெயவர்தனே இறுதிப் போட்டியில் சதம் அடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    மேலும் அந்த போட்டியின் கேப்டனாக இருந்த சங்ககராவும் ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என்று இலங்கை முன்னாள் விளையாட்டு மந்திரியை விமர்சித்துள்ளார்.

    இலங்கையில் ஆகஸ்டு 5-ந்தேதி தேர்தல் நடக்கிறது. அலுக்காமகே தற்போது காபந்து மந்திரியாக இருக்கிறார்.
    சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்று பாகிஸ்தான் நிர்வாகி தெரிவித்துள்ளதால் கங்குலிக்கான வாய்ப்பு பிரகாசமாகி உள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக இந்தியாவை சேர்ந்த சசாங்க் மனோகர் இருக்கிறார். அவரது பதவிக் காலம் அடுத்த மாதம் முடிகிறது.

    ஐ.சி.சி. புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் விரையில் நடைபெறுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவரான கங்குலி ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் ஐ.சி.சி. உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில் ஐ.சி.சி. தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஈசான் மானி போட்டியிட விருப்பம் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-


    ஐ.சி.சி. தலைவர் தேர்தலில் நான் போட்டியிடப் போவதில்லை. உண்மையிலேயே என்னை போட்யிடுமாறு சிலர் கேட்டுக் கொண்டனர். 
    ஆனால் இதில் எனக்கு ஆர்வம் இல்லை என தெரிவித்து விட்டேன். இந்த பதவிக்கு கங்குலி களம் இறங்கி போகிறாரா என்பது எனக்கு தெரியாது. 
    என்னை பொறுத்தவரை 2006-ல் எனது பதவி முடிந்த பின் மீண்டும் ஐ.சி.சி.க்கு செல்வதில்லை என முடிவு செய்துள்ளேன். தற்போது இம்ரான்கான் கேட்டுக் கொண்
    டதால் பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்காக பாடுபடுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    ஈசான் மானி விலகலைத் தொடர்ந்து ஐ.சி.சி. தலைவராக கங்குலி போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. ஆனால் இந்திய கட்டுப்பாட்டு வாரியம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. 

    கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமல் கூறும்போது, ‘‘ஐ.சி.சி. தேர்தல் குறித்து முதலில் முறைப்படி அறிவிக்கட்டும். அதன்பின் எங்கள் முடிவை தெரிவிப்போம்’’ என்றார்.
    ×