என் மலர்
விளையாட்டு
அபுதாபி:
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் அணி 3 ஆட்டத்தில் 2 வெற்றி 1 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி நாளை ராஜஸ்தானுடன் மோதுகிறது.
இந்தநிலையில் பெங்களூர் அணி சம பலத்துடன் உள்ளதாக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு நாங்கள் சீரான, சமபலத்துடனான அணியை பெற்றிருக்கிறோம். குறிப்பாக பந்துவீச்சில் சிறந்த நிலையில் இருக்கிறோம். 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்று இந்த ஆண்டு நாங்கள் மிகவும் சாதகமாக இருக்கிறோம். வீராட்கோலி மற்றும் டிவில்லியர்ஸ் உள்பட அணியில் உள்ள அனைவருக்கும் வித்தியாசமான உணர்வு இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
2016-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது இருந்த உணர்வுபோல் தற்போது இருக்கிறது. இந்த ஆண்டு சிறப்பாக தொடங்கி இருப்பது அணிக்கு புத்துணர்ச்சியை அளித்து இருக்கிறது. நான் அணியில் விளையாடுகிறேனோ இல்லையோ எனது நோக்கம். பெங்களூர் அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுப்பதுதான்.
இவ்வாறு அவர் கூறினார்.
அபுதாபி:
13-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. அபிதாபியில் நேற்று நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 48 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.
முதலில் விளையாடிய மும்பை 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 70 ரன்னும், போல்லார்ட் 47 ரன்னும், ஹர்திக் பாண்டியா 30 ரன்னும் எடுத்தனர்.
மும்பை தரப்பில் பும்ரா, பேட்டிசன், ராகுல் சாகல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 4-வது ஆட்டத்தில் விளையாடிய மும்பை அணிக்கு இது 2-வது வெற்றியாகும்.
பஞ்சாப் அணி 3-வது தோல்வியை (4 ஆட்டம்) சந்தித்துள்ளது.
வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
இது ஒரு சிறந்த வெற்றி. எங்கள் தொடக்கம் சிறப்பாக அமையவில்லை. பஞ்சாப் அணி பந்துவீச்சாளர்கள் தாக்குதல் தொடுப்பார்கள் என்பது எங்களுக்கு தெரியும். அதை எதிர்க்கொண்டு இறுதி வரை முன்னேற விரும்பினோம்.
ஹர்திக் பாண்டியா மற்றும் போல்லார்ட் இறுதி கட்டத்தில் ரன்களை பெற்று கொடுத்தனர். இது போன்று நிறைய முறை செய்திருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சிறந்த நிலையில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒட்டு மொத்தமாக பேட்டிங் செயல்பாடு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.
பந்து வீசுவது எளிதாக இருக்காது என்பது எங்களுக்கு தெரியும். தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டும் என்பதையும் நாங்கள் அறிந்து இருந்தோம். அதையும் நாங்கள் செய்தோம்.
பந்து வீச்சாளர்கள் தங்களது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார்கள். நான் 500 ரன்னை கடந்ததை நன்றாக உணர்கிறேன். ஆனால் அதை நான் அதிகமாக பார்க்கவில்லை. போட்டியில் வெல்வதுதான் முக்கியமானது.
இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் கூறியதாவது:-
இந்த தோல்வி வெறுப்பு அளிக்கிறது என்று சொல்ல மாட்டேன். ஆனால் ஏமாற்றம் அளிக்கிறது. 4 ஆட்டத்தில் 3-ல் நாங்கள் எளிதாக வெற்றி பெற்றிருக்க முடியும். இந்த ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் நாங்கள் சரியாக பந்து வீசவில்லை. தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு வலுவாக மீண்டும் வரவேண்டும்.
மற்றொரு பந்து வீச்சாளரை அணியில் சேர்ப்பது நன்றாக இருக்கும். மேலும் ஒரு ஆல்ரவுண்டர் இருப்பது சிறப்பானதாகவும் இருக்கும். ஆனால் பயிற்சியாளர்கள் பேசி கூடுதல் பந்து வீச்சாளரை சேர்ப்பதா? அல்லது அதே அணியுடன் விளையாடுவதா? என்பதை முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். செக்குடியரசு வீராங்கனை பிளிஸ்கோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-1, 6-2, 6-2 என்ற நேர்செட்டில் லிதுவேனியா வீரர் ரிகார்டஸ் பெரான்கிசை ஊதித்தள்ளி 3-வது சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னொரு ஆட்டத்தில் பல்கேரியா வீரர் டிமிட்ரோவ் 6-4, 7-6 (7-5), 6-1 என்ற நேர்செட்டில் ஆந்த்ரே மார்டினை (சுலோவக்கியா) வெளியேற்றினார். 5 மணி நேரம் நீடித்த ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்பாலெஸ் பானா 7-5, 6-7 (5-7), 6-3, 3-6, 8-6 என்ற செட் கணக்கில் போராடி கனடா வீரர் டெனிஸ் ஷபோவலோவை வீழ்த்தினார். சிட்சிபாஸ் (கிரீஸ்), கச்சனோவ் (ரஷியா), தியாகோ மான்டிரோ (பிரேசில்), காரெனோ பஸ்டா (ஸ்பெயின்), கிறிஸ்டியன் காரின் (சிலி), மார்டன் புக்சோவிச் (ஹங்கேரி) ஆகியோரும் தங்களது 2-வது தடையை வெற்றிகரமாக தாண்டினார்கள்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2017-ம் ஆண்டு சாம்பியனான ஜெலினா ஆஸ்டாபென்கோ (லாத்வியா), தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 69 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்டாபென்கோ 6-4, 6-2 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவுக்கு அதிர்ச்சி அளித்து 3-வது சுற்றுக்குள் நுழைந்தார்.
மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 6-3 என்ற நேர்செட்டில் இத்தாலியின் ஜாஸ்மின் பாலினியை விரட்டியடித்தார். இதே போல் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) சரிவில் இருந்து மீண்டு வந்து 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் அனா போக்டனை சாய்த்தார்.
2016-ம் ஆண்டு சாம்பியன் கார்பின் முகுருஜா (ஸ்பெயின்), சபலென்கா (பெலாரஸ்), டேனியலி காலின்ஸ் (அமெரிக்கா), ஆன்ஸ் ஜாபெர் (துனிசியா) ஆகியோரும் தங்களது ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். அதேநேரத்தில் அமெரிக்க முன்னணி வீராங்கனை ஸ்லோன் ஸ்டீபன்ஸ் தோல்வி கண்டு 2-வது சுற்றுடன் நடையை கட்டினார்.






