என் மலர்tooltip icon

    விளையாட்டு

    ‘அடுத்த ஆண்டுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் இருந்து மாற்றப்படலாம்’ என்று பாக். கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் தெரிவித்தார்.
    கராச்சி:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அடுத்த ஆண்டு (2021) அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெற இருந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டி கொரோனா அச்சத்தால் 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.இந்த நிலையில், 20 ஓவர் உலக கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் தான் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி வாசிம் கான் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ‘யூடியூப்’ சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுவதில் இன்னும் சில நிலையற்ற தன்மை நிலவுகிறது என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்தியாவில் இன்னும் கொரோனா பரவல் இருக்கிறது. எனவே இந்த போட்டி இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த விஷயத்தில் தெளிவான முடிவு வருகிற ஏப்ரல் மாதத்தில் தான் தெரியவரும்.

    இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உறவு சீராக இல்லாததால் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியினருக்கு விசா வழங்குவது குறித்து ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளித்தால் நன்றாக இருக்கும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையே இரு நாட்டு தொடர் நடத்துவதற்குரிய சூழ்நிலை ஏற்றதாக இல்லை. இதனால் தான் உலக கோப்பை போட்டியில் பங்கேற்பதற்கான உத்தரவாதத்தை கேட்கிறோம்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இசான் மணியும், நானும் பொறுப்பில் இருக்கும் வரை பாபர் அசாம் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நீடிப்பார். அவர் எங்களுடைய சிறந்த பேட்ஸ்மேன், இளம் வீரர் மற்றும் மனரீதியாக வலுவானவர். இதனை எல்லாம் அறிந்து தான் நாங்கள் அவரை கேப்டனாக நியமித்தோம். அத்துடன் மூன்று வடிவிலான போட்டிக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்க அவரும் விருப்பம் தெரிவித்தார். அவர் நீண்ட காலம் இந்த பதவியில் நீடிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிக் பாஷ் லீக் டி20-யில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்துக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. அதேவேளையில் வருகிற 10-ந்தேதி ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 தொடர் தொடங்குகிறது.

    இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ஜேசன் ஹோல்டர் 3 போட்டிகளில் விளையாட சிட்னி சிக்சர்ஸ் அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார். அதன்படி சிட்னி சிக்சர்ஸ் டிசம்பர் 20-ந்தேதி அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் அணியையும், 26-ந்தேதி மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியையும், 29-ந்தேதரி மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணியையும் எதிர்கொள்கிறது. இந்த போட்டிகளிலும் ஜேசன் ஹோல்டர் விளையாடுகிறார்.
    விராட் கோலி இல்லாமல் இருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் ஓராண்டுக்கு இந்தியாவின் வெற்றியை கொண்டாடலாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் சவால் விடுத்துள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய அணி கேப்டன் விராட்கோலி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் பாதியில் நாடு திரும்புகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 டெஸ்ட் தொடரில் ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே விளையாடுகிறார். அவரது மனைவி அனுஷ்காவுக்கு குழந்தை பிறப்பதால் எஞ்சிய 3 டெஸ்டில் விராட்கோலி விளையாடாமல் இந்தியா திரும்புகிறார்.

    கோலி இல்லாமல் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்டில் விளையாடுவது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று இந்திய, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ஏற்கனவே கருத்து தெரிவித்து இருந்தனர்.

    இந்தநிலையில் விராட் கோலி இல்லாமல் இருக்கும் இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தினால் ஓராண்டுக்கு இந்தியாவின் வெற்றியை கொண்டாடலாம் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    விராட்கோலி இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதே எனது கருத்து. கேப்டன் பொறுப்பிலும், பேட்டிங்கிலும் அவர் இல்லாவிட்டால் மிகப் பெரிய வெற்றிடம் ஏற்படும்.

    விராட்கோலி இல்லாத குறையை எந்த பேட்ஸ்மென் நிரப்புவார்? என்பது இந்த டெஸ்ட் தொடரில் ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒரு வேளை விராட்கோலி இல்லாமல் டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி விட்டால் ஓராண்டுக்கு இந்த வெற்றியை கொண்டாடலாம். உண்மையிலேயே அது போன்ற வெற்றி நம்ப முடியாத வெற்றியாகத்தான் இருக்கும்.

    லோகேஷ் ராகுல் சிறந்த வீரர். அறிவார்ந்தவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலியாவில் இதற்கு முன்பு விளையாடிய அனுபவத்தை அவர் பெற்றுள்ளார். டெஸ்ட் தொடரில் ராகுலால் சிறப்பாக செயல்பட முடியும். ஆனால் விராட் கோலி இடத்தை யாராலும் நிரப்பமுடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    எனக்கு ரகானேவை மிகவும் பிடிக்கும். அவர் சிறந்த வீரர். அவர் சிறப்பாக செயல்பட்டால் வரலாறு படைக்க முடியும். நம்பிக்கையுடன் டெஸ்ட் தொடரை இந்திய வீரர்கள் அணுகவேண்டும். ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் அளவுக்கு போதுமான திறமை இருக்கிறது என்பதை நம்ப வேண்டும்.

    இவ்வாறு கிளார்க் கூறி உள்ளார்.

    இந்திய அணியை விராட்கோலி வழிநடத்தும் விதத்தை புரிந்து கொள்ள முடியவில்லை என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் சிட்னியில் நடந்த முதல் 2 ஆட்டங்களில் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து தொடரை இழந்தது. இந்திய பந்து வீச்சை ஆஸ்திரேலிய வீரர்கள் வெளுத்து வாங்கி முறையே 374, 389 ரன்கள் குவித்தனர்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட்கோலியின் முடிவு மோசமானதாக இருந்ததாகவும், அவரது யுக்தியை புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபோல் உலக கிரிக்கெட்டில் வேறு எந்தவொரு கேப்டனும் முடிவு எடுக்கமாட்டார்கள் என்று இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் சாடியுள்ளார்.

    இது குறித்து இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    விராட்கோலியின் கேப்டன்ஷிப்பை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆஸ்திரேலிய அணியின் வலுவான பேட்டிங்கை கட்டுப்படுத்த ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை வீழ்த்துவது முக்கியமானதாகும். ஆனால் நீங்கள் உங்களது முதன்மையான பந்து வீச்சாளர் பும்ராவுக்கு தொடக்க கட்டத்தில் 2 ஓவர் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளிக்கிறீர்கள். இந்த முடிவு மிகப்பெரிய தவறாகும். ஆரம்ப கட்டத்தில் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் தலா 5 ஓவர்கள் வீசி சில விக்கெட்டை வீழ்த்த முயற்சி செய்வார்கள் என்று எதிர்பார்த்தேன்.

    பும்ரா போன்ற முன்னணி பவுலருக்கு உலக கிரிக்கெட்டில் எந்தவொரு கேப்டனும் புதிய பந்தில் 2 ஓவர் மட்டுமே வீச வாய்ப்பு அளிப்பார் என்று நான் நினைக்கவில்லை. பும்ரா போன்ற வீரருக்கு முதலில் 2 ஓவர் மட்டுமே பந்து வீச வாய்ப்பு அளித்து விட்டு, 10-வது ஓவருக்கு பிறகு மீண்டும் வாய்ப்பு அளித்தால் பந்து பழசாகி விடும். அப்போது அவரால் எப்படி விக்கெட் வீழ்த்த முடியும் என்று எதிர்பார்க்க முடியும்.

    ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் அந்த அணியின் சிறந்த பவுலரான ஹேசில்வுட்டுக்கு முதல் இரண்டு ஆட்டங்களில் தொடக்க கட்டத்தில் எப்படி 5 மற்றும் 6 ஓவர்கள் பந்து வீச வாய்ப்பு அளித்தார். அதேபோல் அந்த அணியின் 6-வது பவுலர் வாய்ப்பையும் அவர் நேர்த்தியாக கையாண்டார்.

    விராட்கோலிக்கும், ஸ்டீவன் சுமித்துக்கும் இடையே அதிக வித்தியாசம் இருப்பதாக நான் நினைக்கவில்லை. எண்ணிக்கையில் பார்த்தால் விராட்கோலி எப்பொழுதும் ஸ்டீவன் சுமித்தை விட சிறப்பானவராகவே இருப்பார். ஆனால் கடந்த 5 அல்லது 7 ஒருநாள் போட்டிகளில் சாதனைகளை பார்த்தால், அதில் ஸ்டீவன் சுமித் 3 சதங்களை அடித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே அதிக வித்தியாசம் இருக்காது. அவர் 62 பந்துகளில் அடுத்தடுத்து 2 சதம் அடித்துள்ளார். எண்ணிக்கையை வைத்து (ரன் குவிப்பு மற்றும் சதத்தில் விராட்கோலி முன்னிலையில் உள்ளார்) விராட்கோலியை ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர் என்று நீங்கள் அழைக்கலாம். ஆட்ட திறனை பொறுத்தமட்டில் விராட்கோலிக்கும், ஸ்டீவன் சுமித்துக்கும் இடையே பெரிய வித்தியாசம் கிடையாது.

    இவ்வாறு கவுதம் கம்பீர் கூறினார்.

    பார்முலா 1 கார் பந்தயத்தில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2 மணி 59 நிமிடம் 47.515 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.
    சகிர்:

    இந்த ஆண்டுக்கான பார்முலா 1 கார்பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 15-வது சுற்றான பக்ரைன் கிராண்ட்பிரி பந்தயம் அங்குள்ள சகிர் ஓடுதளத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிப் பாய்ந்தனர். இந்த போட்டியின் போது பிரான்ஸ் வீரர் ரோமைன் குரோஸ்ஜீன் (ஹாஸ் அணி) கார் தடுப்பு மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. பரபரப்பான இந்த விபத்தில் சிக்கிய அவர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் சற்று நேரம் பாதிக்கப்பட்ட இந்த போட்டி தொடர்ந்து நடைபெற்றது. இதில் கடந்த சுற்றிலேயே உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை உறுதி செய்து விட்ட இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டன் (மெர்சிடஸ் அணி) 2 மணி 59 நிமிடம் 47.515 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து முதலிடத்தை பிடித்தார்.

    இந்த சீசனில் அவர் பெற்ற 11-வது வெற்றி இதுவாகும். நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் (ரெட்புல் அணி) 1.254 வினாடி பின்தங்கி 2-வது இடத்தையும், தாய்லாந்து வீரர் அலெக்சாண்டர் அல்பான் (ரெட்புல் அணி) 8.005 வினாடி பின்தங்கி 3-வது இடத்தையும் பெற்றனர். இதுவரை நடந்துள்ள 15 சுற்றுகள் முடிவில் ஹாமில்டன் 332 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் நெதர்லாந்து வீரர் மேக்ஸ் வெர்ஸ்டப்பென் 189 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் உள்ளனர். அடுத்த சுற்று போட்டி வருகிற 6-ந் தேதி பக்ரைனில் நடக்கிறது.
    காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகினார்.
    சிட்னி:

    காயம் காரணமாக ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இந்தியாவுக்கு எதிரான எஞ்சிய ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக டார்சி ஷார்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் ஒருநாள் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. சிட்னியில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஒருநாள் போட்டியில் 51 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கான்பெர்ராவில் நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதனை அடுத்து மூன்று 20 ஓவர் போட்டிகள் முறையே வருகிற 4 (கான்பெர்ரா), 6 (சிட்னி), 8 ஆகிய தேதிகளில் (சிட்னி) நடக்கிறது. இதைத்தொடர்ந்து முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வருகிற 17-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பீல்டிங் செய்கையில் பந்தை விழுந்து தடுத்த போது ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் இடுப்பு பகுதியில் காயம் அடைந்து வெளியேறினார். அவரது காயம் குணமடைய நாள் பிடிக்கும் என்பதால் அவர் எஞ்சிய கடைசி ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார். முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் முறையே 69, 83 ரன்கள் சேர்த்த வார்னர் விலகல் ஆஸ்திரேலிய அணிக்கு பெரும் இழப்பாகும்.

    காயத்துக்காக சிகிச்சை பெற்று வரும் வார்னர் டெஸ்ட் போட்டி தொடருக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவர் டெஸ்ட் போட்டிக்கு முன்பாக முழு உடல் தகுதியை எட்டுவது கடினம் என்று கருதப்படுகிறது. அவருக்கு பதிலாக இடக்கை பேட்ஸ்மேன் டார்சி ஷார்ட் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 30 வயதான டார்சி ஷார்ட் 8 ஒருநாள் மற்றும் இருபது 20 ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.

    கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த ஆஸ்திரேலிய அணியின் இங்கிலாந்து பயணத்தில் பங்கேற்ற வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அதனை அடுத்து ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார். தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்குள் போட்டிகளில் கலந்து கொண்ட அவர் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் விக்கெட் வீழ்த்தவில்லை. 2-வது போட்டியில் 3 விக்கெட்டுகள் சாய்த்தார். இந்த நிலையில் பணிச்சுமையை கருத்தில் கொண்டு டெஸ்ட் போட்டிக்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் வகையில் கம்மின்சுக்கு எஞ்சிய கடைசி ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டி தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    முதலாவது ஒருநாள் போட்டியில் விலாப்பகுதியில் காயம் அடைந்ததால் அடுத்த போட்டியில் ஆடாத ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் அணியில் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டியில் கணுக்காலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு வரும் ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    வீரர்கள் காயம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கருத்து தெரிவிக்கையில், ‘இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான எங்களது திட்டத்தில் டேவிட் வார்னர், கம்மின்ஸ் ஆகியோர் முக்கியமானவர்கள். வார்னர் காயத்தில் இருந்து மீண்டு வருவதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளார். கம்மின்ஸ் விவகாரம் எங்கள் வீரர்கள் அனைவருக்கும் முக்கியமானது. சவாலான இந்த சீசனுக்கு வீரர்கள் அனைவரையும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் முழுமையான தகுதியுடன் இருக்கும் வகையில் நிர்வகிக்க வேண்டியது அவசியமானதாகும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான புள்ளியை கொண்ட இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் மிகவும் முக்கியமானதாகும். பெரிய தொடரான இதற்காக நாங்கள் முன்னுரிமை கொடுத்து முழுமையாக தயாராகி வருகிறோம்’ என்றார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் பாபர் அசாம், இந்தியாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பாபர் அசாம். இவர் தற்போது மூன்று வடிவிலான கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இவரை விராட் கோலியுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் விராட் கோலியுடன் ஒப்பிட்டுவதையும், இந்திய ரசிகர்கள் குறித்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாபர் அசாம் கூறுகையில் ‘‘கிரிக்கெட்டில் சில சிறந்த வீரர்களுடன் ஒப்பிடுவதை சிறந்ததாக உணர்கிறேன். என்னுடைய மனநிலையில் எனக்கு நானே சவாலை உருவாக்கிக் கொள்வேன். எனக்கு நானே டார்கெட் ஏற்படுத்திக் கொள்வேன். நான் போகிஸ்தான் அணிக்காக வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும். வெற்றி பெற்ற போட்டிகள் அணிக்கு உதவியாக இருக்க வேண்டும்.

    பெரிய வீரர்களுடன் ஒப்பிடுவது, ஒரு இலக்கை நிர்ணயிக்க உதவியாக இருக்கும். மிகப்பெரிய ஐந்து வீரர்களுடன் ஒப்பிடுவது சிறந்த உணர்வாகும். உயர்ந்த நிலையில் ஆட்டத்தை வெளிப்படுத்தினால், அது உங்களுடைய உறுதிக்கு பூஸ்ட்-ஆக அமையும். அதை நான் விரும்புகிறேன்.

    என்னுடைய சிறந்த ஆட்டத்தால் ரசிகர்களை வென்றுள்ளேன். இந்தியாவிலும் எனக்கு நண்பர்கள் உள்ளனர். இந்தியாவிலும் ரசிகர்கள் உள்ளனர். அவர்களுக்கு என்னுடைய வேண்டுகோள் தொடர்ந்து ஆதரவு தெரிவிக்க வேண்டும். தொடர்ந்து எனக்கு பின்னால் இருக்க வேண்டும்’’ என்றார்.
    இந்தியாவுக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்மித், டெஸ்ட் தொடரில் சவாலாக இருப்பார் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.
    இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணம் ஸ்டீவ் ஸ்மித்துதான். இவர் இரண்டு போட்டிகளிலும் சதம் அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

    இந்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் இதே ஃபார்ம் உடன் டெஸ்ட் போட்டிக்கு சென்றால் அது இந்திய அணி பந்து வீச்சாளர்களுக்கு கடும் திண்டாட்டம்தான் என கவுதம் கம்பிர் தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேனும், தற்போதை இந்திய மக்களவை எம்.பி.யுமான கவுதம் கம்பிர் இதுகுறித்து கூறுகையில் ‘‘இரண்டு சதங்களும் ஸ்மித்திற்கு மிகவும் அட்டகாசமான ஆட்டம். அவர் விராட் கோலியிடம் இருந்து வெகுதூரத்தில் இல்லை.

    விராட் கோலி, பும்ரா

    நாம் விராட் கோலியை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, அவர்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரர் என்கிறோம். ஸ்மித் அதில் இருந்து வெகு தூரத்தில் இல்லை. 18 ஓவரில் சதம், அடுத்தடுத்து 62 பந்தில் சதம் என்பது வெறும் ஜோக் அல்ல. விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன்தான், ஆனால் கடந்த இரண்டு போட்டிகளில் ஸ்மித் ஆதிக்கம் செலுத்தினார்.

    ஸ்மித்தின் ஃபார்ம் இந்தியாவுக்கு கடினமானதாகிவிடும். 3-வது போட்டியில் கூட ஆதிக்கம் செலுத்தலாம். மிக நீண்ட தொடரில் இது தொடக்கம்தான். ஸ்மித்தை அவுட்டாக்குவதற்கான வழியை கண்டுபிடிக்க வில்லை என்றால், பவுலருக்கு மிகப்பெரிய சிக்கலை உண்டாக்கிவிடும்’’ என்றார்.
    வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், நியூசிலாந்து தொடரை 2-0 எனக் கைப்பற்றியது.
    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் இரண்டு போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி இன்று மவுன்ட் மவுங்கானுயில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 2.2 ஓவரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 1 விக்கெட் இழப்பிற்கு 25 ரன்கள் எடுத்திருக்கும்போது கனமழை பெய்தது.

    அதன்பின் போட்டி தொடங்க வாய்ப்பு இல்லாததால் போட்டி கைவிடப்பட்டது. இதனால் நியூசிலாந்து 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.

    நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லூக்கி பெர்குசன் தொடர் நாயகன் விருதை பெற்றார்.
    சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ரன் குவித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

    இந்திய அணி கேப்டன் விராட் கோலி உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார். நவீன கிரிக்கெட்டின் மகத்தான வீரரான அவர் டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் 3 வடிவிலான ஆட்டங்களிலும் ரன்களை குவித்து வருகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று நடந்த ஒருநாள் போட்டியில் விராட் கோலி 87 பந்துகளில், 89 ரன்கள்(7 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். 78-வது ரன்னை எடுத்தபோது அவர் சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ரன் மைல் கல்லை தொட்டார். டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய மூன்றிலும் சேர்த்து 22 ஆயிரம் ரன்னை எடுத்துள்ளார். இந்த ரன்னை அவர் அதிவேகத்தில் எடுத்து சாதனை படைத்தார்.

    விராட் கோலி ஒருநாள் போட்டியில் 11,977 ரன்களும், டெஸ்டில் 7,240 ரன்களும், 20 ஓவரில் 2,794 ரன்களும் எடுத்துள்ளார். 462 இன்னிங்சில் அவர் 22 ஆயிரத்து 11 ரன்களை எடுத்துள்ளார். சராசரி 56.15 ஆகும். அதிகபட்சமாக 254 ரன்கள் குவித்துள்ளார். 70 சதமும், 105 அரை சதமுமம் அடித்துள்ளார்.

    ஒருநாள் போட்டியில் விராட் கோலி 12 ஆயிரம் ரன்களை எடுப்பதற்கு இன்னும் 23 ரன்களே தேவை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி போட்டியில் அவர் இந்த சாதனையை படைப்பார என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சர்வதேச போட்டிகளில் 22 ஆயிரம் ரன்களை எடுத்த 8-வது வீரர் விராட் கோலி ஆவார். இந்திய வீரர்களில் தெண்டுல்கர், டிராவிட்டுக்கு அடுத்தபடியாக இருக்கிறார்.

    சர்வதேச போட்டிகளில் (டெஸ்ட், ஒருநாள் போட்டி , 20 ஓவர்) 22,000 ரன்களுக்கு மேல் எடுத்த வீரர்கள் வருமாறு:-

    1. தெண்டுல்கர் (இந்தியா)- 34,357 ரன்கள் (782 இன்னிங்ஸ்).

    2. சங்ககரா (இலங்கை) - 28,016 ரன்கள் (666).

    3. பாண்டிங் (ஆஸ்திரேலியா) -27,483 ரன்கள் (668).

    4. ஜெயவர்த்தனே (இலங்கை) -25,957 ரன்கள் (725).

    5. ஜேக் காலிஸ் (தென் ஆப்பிரிக்கா) -25,534 ரன்கள் (617).

    6. டிராவிட் (இந்தியா) -24,208 ரன்கள் (605).

    7. லாரா (வெஸ்ட இண்டீஸ்)- 22,358 ரன்கள் (521).

    8. விராட் கோலி (இந்தியா)- 22,011 ரன்கள் (462).

    திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

    லாகூர்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.

    டிசம்பர் 18-ந் தேதி 20 ஓவர் போட்டி தொடங்குகிறது. தற்போது பாகிஸ்தான் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அணியில் உள்ள 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மீது பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். இது தொடர்பாக அந்த பெண் கூறியதாவது:-

    பாபர் ஆசம் பிரபலமான கிரிக்கெட் வீரராக இல்லாத போதே எனக்கு தெரியும். அவர் என்னுடைய பள்ளி தோழர். கடந்த 2010-ம் ஆண்டு அவர் என்னிடம் காதலை தெரிவித்தார். நானும் அதை ஏற்றுக்கொண்டேன்.

    என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த பாபர் ஆசம் என்னுடன் பாலியல் உறவு வைத்து கொண்டார். இதனால் நான் கர்ப்பம் அடைந்தேன். கர்ப்பம் என்று தெரிந்தவுடன் பாபர் ஆசம் என்னை அடித்து கொடுமைப்படுத்தினார்.

    அவர் என்னை ஏமாற்றி விட்டார். பாபர் ஆசமிடமிருந்து எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த பெண் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

    பாபர் ஆசம் பாகிஸ்தான் அணியின் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். அவர்மீது கூறப்பட்ட பாலியல் புகார் கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த பெண்ணின் புகார் குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர் டுவிட்டரில் கூறும்போது, ‘பாபர் ஆசம் மீது குற்றச்சாட்டு கூறும் இந்த பெண் ஏற்கனவே இதுபோன்ற குற்றச்சாட்டை கூறி, பின்னர் அதை வாபஸ் பெற்று அவரிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார்’ என்றார்.

    7 முறை தேசிய சாம்பியன் பட்டம் வென்ற சென்னை கார் பந்தய வீரர் ரூ.4 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
    சென்னை:

    கைது செய்யப்பட்ட கார் பந்தய வீரர் பெயர் பாலவிஜய் (வயது 35). சென்னை கோடம்பாக்கம், டிரஸ்ட்புரத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை பாலசுப்பிரமணி சென்னை தலைமைச்செயலகத்தில் துணை செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கோடீஸ்வரர். பெற்றோருக்கு ஒரே பிள்ளையான பாலவிஜய் பிரபலமான தேசிய கார் பந்தயவீரர். 7 முறை தேசிய அளவில் வெற்றி பெற்றுள்ளார்.

    சர்வதேச கார் பந்தயத்தில் பங்கு பெறும் தகுதியை பெற்றவர். பி.காம்.பட்டதாரி. கார் பந்தயத்தில் வெறி பிடித்து, அதில் வெற்றி பெற தனது கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்தவர். கார் பந்தய வெறியில் திருமணம் கூட செய்து கொள்ளாதவர்.

    தன்னைப்போல நிறைய வீரர்களை கார் பந்தயத்தில் பங்கு பெறச் செய்தவர். இப்படி கார் பந்தயத்தில் வெற்றிக்கொடிகளை நாட்டி வந்த பாலவிஜய் தற்போது ரூ.4 கோடி மோசடி வழக்கில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்து, அதில் இருந்து மீள்வதற்காக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டார்.

    பஞ்சாப் நேஷனல் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்பட 5 வங்கிகளில் தனது நண்பர்கள் நீலாங்கரையைச் சேர்ந்த முகமது முசாமில்(34), அய்யாத்துரை(32) ஆகியோருடன் சேர்ந்து போலி வருமான வரிச் சான்றிதழ்களை மேற்படி வங்கிகளில் சமர்ப்பித்து, சுமார் ரூ.4 கோடி அளவுக்கு கடன் வாங்கி 8 சொகுசு கார்களை வாங்கியுள்ளார்.

    போலியான முகவரி, செல்போன் நம்பர் போன்றவற்றை கொடுத்து வங்கி அதிகாரிகளை ஏமாற்றியுள்ளனர். பி.எம்.டபிள்யூ போன்ற சொகுசு கார்களை விற்பதற்கு முயற்சி செய்துள்ளனர்.

    ஆனால் அந்த கார்களை விற்க முடியவில்லை. வங்கி கடனை திருப்பி செலுத்தாததால், பஞ்சாப் நேஷனல் வங்கி சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் தேன்மொழி, துணை கமிஷனர் நாகஜோதி ஆகியோர் மேற்பார்வையில், உதவி கமிஷனர் பிரபாகரன் தலைமையிலான தனிப்படை போலீசார் அதிரடி விசாரணை நடத்தி, இந்த மோசடியை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர்.

    கார்பந்தய வீரர் பாலவிஜய் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். அவருடைய நண்பர்கள் அய்யாத்துரை, முகமது முசாமில் ஆகியோரும் கைதானார்கள். அவர்களிடம் இருந்து 6 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 2 கார்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிறையில் அடைக்கப்பட்ட கார்பந்தய வீரர் பாலவிஜய் மற்றும் அவரது நண்பர்கள் இருவரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளனர்.

    பறிமுதல் செய்யப்பட்ட 6 கார்களையும், குறிப்பிட்ட வங்கி நிர்வாகத்தினரிடம் போலீசார் ஒப்படைத்து விட்டனர். இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அது பற்றியும் விசாரணை நடக்கிறது.
    மோசடி வழக்கில் மகன் சிக்கியதால் தந்தை தற்கொலை

    கார் பந்தய வீரர் பாலவிஜய் மோசடி வழக்கில் சிக்கியதை அறிந்த அவரது தந்தையான ஓய்வு பெற்ற அரசு அதிகாரி பாலசுப்பிரமணி தற்கொலை மூலம் உயிரை விட்டு விட்டார் என்ற பரிதாபமான தகவலை போலீசார் தெரிவித்தனர். சர்வதேச அளவில் புகழ் பெற வேண்டிய தனது மகன், மோசடி வழக்கில் சிறைக்குப்போவதை பார்க்க முடியாமல், மனம் உடைந்து கடந்த 2 மாதத்துக்கு முன்பே அவர் தற்கொலை செய்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

    சர்வதேச அளவுக்கு வெற்றிகளை குவிக்க வேண்டிய பாலவிஜய் தனிப்பட்ட முறையில் குடிப்பழக்கம், பெண்கள் தொடர்பு போன்ற தவறான பழக்கமும் இல்லாதவர். தனது மோசமான செயல்பாடுகளால், இன்றைக்கு பாதாளத்தில் தள்ளப்பட்டுள்ளார். தவறான நண்பர்கள் சேர்க்கையால், பாலவிஜய் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதாக போலீசார் கூறினார்கள். புகழ் மிக்க தனது மகன் ஜெயிலுக்கு போய் விட்டான், தனது கணவரும் இறந்துபோன நிலையில், பாலவிஜயின் தாயார் தனிமையில், ஒரு வாடகை வீட்டில் சென்னையை அடுத்த கோவளத்தில் மிகுந்த சோகத்தில் வாழ்வதாக கூறப்படுகிறது.
    ×