என் மலர்
விளையாட்டு
டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் அரைஇறுதியை தாண்டவில்லை. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின்(ஸ்பெயின்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றார். கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபனிலும் இதே தாய் ஜூ யிங்கை வீழ்த்தி தான் கரோலினா மகுடம் சூடியது நினைவு கூரத்தக்கது. அவருக்கு தங்கப்பதக்கத்துடன் ரூ.51 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. ‘நான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன். இரண்டு வாரங்களில் 2 சாம்பியன் பட்டம் வென்று இந்த ஆண்டை வியப்புக்குரிய வகையில் தொடங்கி இருக்கிறேன்’ என்று கரோலினா குறிப்பிட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-11, 21-7 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் சோல்பெர்க்கை பந்தாடி மீண்டும் பட்டத்தை சொந்தமாக்கினார். அடுத்ததாக உலக டூர் இறுதி சுற்று போட்டி இதே பாங்காக்கில் நாளை மறுதினம் தொடங்குகிறது.
சென்னை:
இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடியது. இதன் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. ஒருநாள் தொடரை மட்டும் 1-2 என்ற கணக்கில் இழந்தது.
இந்திய அணி அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரை விளையாடுகிறது. 4 டெஸ்ட், ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் இரு அணிகளும் மோதுகின்றன.
முதல் 2 டெஸ்ட் போட்டியும் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கிறது. முதல் டெஸ்ட் வருகிற 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரையும், 2-வது டெஸ்ட் பிப்ரவரி 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையும் நடக்கிறது.
3-வது மற்றும் 4-வது டெஸ்ட் அகமதாபாத்தில் நடக்கிறது. பிப்ரவரி 24 முதல் 28-ந் தேதி வரையும், மார்ச் 4 முதல் 8-ந் தேதி வரையும் நடைபெறுகிறது. இதில் 3-வது டெஸ்ட் பகல்-இரவாக நடக்கிறது.
20 ஓவர் போட்டிகள் மார்ச் 12-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை அகமதாபாத்திலும், ஒருநாள் போட்டிகள் மார்ச் 23-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை புனேயிலும் நடக்கிறது.
முதல் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய வீரர்கள் வருகிற 27-ந் தேதி சென்னை வருகிறார்கள். வீரர்கள் பல்வேறு நகரங்களில் இருந்து தனித்தனியாக சென்னை வந்தடைகிறார்கள்.
அவர்கள் சென்னை வந்தவுடன் கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். ஒரு வாரம் வீரர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். அதன்பிறகு வீரர்கள் பயிற்சியை தொடங்குவார்கள்.
இதேபோல இங்கிலாந்து அணியும் அதே தினத்தில் இலங்கையில் இருந்து சென்னை வருகிறது. இங்கிலாந்து வீரர்களும் கொரோனா பாதுகாப்பு வளையத்துக்குள் வருவார்கள்.
இலங்கை பயணத்தில் ஆடாத ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சர், தொடக்க வீரர் ராய் பர்னஸ் ஆகியோர் இங்கிலாந்தில் இருந்து நேரடியாக சென்னை வருகிறார்கள்.
இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் ராஜா அண்ணா மலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்படுகிறார்கள். போட்டி அமைப்பாளர்களும் அங்கேயே தங்குகிறார்கள்.
சென்னை டெஸ்டில் விளையாடும் இந்திய அணி வீரர்கள் வருமாறு:-
விராட் கோலி (கேப்டன்), ரகானே (துணை கேப்டன்), ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், சுப்மன்கில், புஜாரா, கே.எல்.ராகுல், ஹர்த்திக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், விருத்திமான் சகா, அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், அக்சர் படேல், இஷாந்த் சர்மா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர்.
காலே:
இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி கிரிக்கெட் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன் குவித்தது. மேத்யூஸ் 110 ரன்னும், டிக்வெலா 92 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து வேகப்பந்து வீரர் 40 ரன் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றினார். மார்க்வுட்டுக்கு 3 விக்கெட் கிடைத்தது.
157-வது டெஸ்டில் விளையாடும் ஆண்டர்சன் 30-வது முறையாக 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட் எடுத்த 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை ஆண்டர்சன் படைத்தார்.
அவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மெக்ராத்தை முந்தினார். மெக்ராத் 29 முறை 5 விக்கெட்டுக்கு மேல் கைப்பற்றி உள்ளார். நியூசிலாந்து வேகப்பந்து வீரர் ரிச்சர்டு ஹேட்லி 36 முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்து முதல் இடத்தில் உள்ளார்.
ஒட்டுமொத்தத்தில் டெஸ்டில் அதிக முறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த 6-வது வீரர் ஆண்டர்சன் ஆவார். ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்த டாப் 6 வீரர்கள் வருமாறு:-
1.முரளீதரன் (இலங்கை) -67 முறை (132 டெஸ்ட்).
2.வார்னே (ஆஸ்தி ரேலியா)- 37 (145).
3.ரிச்சர்டு ஹேட்லி (நியூசிலாந்து)- 36 (86).
4. கும்ப்ளே (இந்தியா) 35- (132).
5. ஹெராத் (இலங்கை)-34 (93).
6. ஆண்டர்சன் (இங்கிலாந்து)- 30 (157).
புதுடெல்லி:
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்தது. ரகானே தலைமையிலான அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 36 ரன்னில் சுருண்டு மோசமான தோல்வியை தழுவியது. இதற்கு மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது.
சிட்னியில் நடந்த 3-வது டெஸ்டில் இந்தியா தோல்வியில் இருந்து தப்பி டிரா செய்தது. பிரிஸ்பேனில் நடந்த 4-வது டெஸ்டில் வெற்றிபெற்றது. பிரிஸ்பேனில் முதல் முறையாக வெற்றிபெற்று வரலாற்று சாதனை படைத்தது.
ஆஸ்திரேலிய டெஸ்ட தொடர் குறித்து ஆல்ரவுண்டர் ஜடேஜா கூறியதாவது:-
அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றதால் எங்களுக்கு மிகப்பெரிய சவால் ஏற்பட்டது. எப்படி அதிலிருந்து மீள்வது என்பது குறித்து வீரர்களின் அறையில் விவாதித்தோம்.
ஆஸ்திரேலிய பந்துவீச்சு மிகவும் பலம் வாய்ந்தது. இதுபற்றி நாங்கள் விவாதித்தோம். இந்த ஆலோசனை அனைத்து வீரர்களுக்கும் மிகுந்த பலனை அளித்தது.
மெல்போர்ன் டெஸ்டில் என்னால் ரகானே ரன் அவுட் ஆனார். இது துரதிர்ஷ்டவசமானது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட தவறான புரிந்துணர்வால் இது நிகழ்ந்துவிட்டது. நானும், அவரும் இணைந்து மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுத்தோம். ரகானே ரன் அவுட்டுக்கு பிறகும் நாங்கள் முன்னிலை பெற முடிந்தது.
சிட்னி டெஸ்டில் விகாரி யும், அஸ்வினும் சிறப்பாக விளையாடி ஆட்டத்தை டிரா செய்தனர்.
இந்த டெஸ்டில் முதல் இன்னிங்சில் எனக்கு பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. 2-வது இன்னிங்சில் எனது பங்களிப்பு தேவைப்படும் என்ற கருதி தயாராக இருந்தேன். காயத்தில் இருந்தாலும் அதற்கு மருந்து செலுத்திவிட்டு எல்லாவகையிலும் நான் களம் இறங்க தயாராக இருந்தேன்.
இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார்.






