என் மலர்
விளையாட்டு
இந்த ஆண்டுக்கான பத்ம விருது பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் பத்மஸ்ரீ விருதுக்கு 7 விளையாட்டு பிரபலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய பெண்கள் கூடைப்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், தமிழகத்தை சேர்ந்த தலைசிறந்த வீராங்கனையுமான பி.அனிதா இந்த விருதுக்கு தேர்வாகி இருக்கிறார்.
சென்னையில் வசித்து வரும் 35 வயதான அனிதா தெற்கு ரெயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இதேபோல் முன்னணி டேபிள் டென்னிஸ் வீராங்கனை மவுமா தாஸ், தடகள வீராங்கனை சுதாசிங், மலையேறுதல் வீராங்கனை அன்சு ஜாம்சென்யா, மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங், மாற்று திறனாளி வீரர் கே.ஒய். வெங்கடேஷ், பி.டி. உஷாவின் முன்னாள் பயிற்சியாளர் மாதவன் நம்பியார் ஆகியோரும் பத்மஸ்ரீ விருதை பெறுகின்றனர்.
சென்னை:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் சாதித்தார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அவரது பங்களிப்பு முக்கியமாக இருந்தது.
21 வயதான வாஷிங்டன் சுந்தர், முதல் இன்னிங்சில் 62 ரன்னும், 2-வது இன்னிங்சில் 22 ரன்னும் எடுத்தார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
சென்னையை சேர்ந்த அவர், தனது அறிமுக டெஸ்டிலேயே சாதித்து நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.
இந்தநிலையில் கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர், சென்னை மாநகராட்சி தேர்தல் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் முதல் முறை வாக்காளர்களை ஊக்குவிப்பதற்காக அவரை சென்னை மாநகராட்சி நியமித்துள்ளது.
முதல் முறை வாக்காளரான வாஷிங்டன் சுந்தர், இளம் வாக்காளர்கள் தேர்தலில் பங்களிப்பை செலுத்த ஊக்கமாக இருப்பார் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
‘இது நம்ம இன்னிங்ஸ்’ என்ற ஹேஸ்டேக் மூலம் வாஷிங்டன் சுந்தர் நியமனம் தொடர்பாக வீடியோவுடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு சென்னை திரும்பிய அவர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். குறிப்பிட்ட நாள் தனிமைக்கு பிறகு சென்னை முழுவதும் இளம் வாக்காளர்களை கவர நடத்தப்படும் நிகழ்ச்சிகளில் வாஷிங்டன் சுந்தர் ஆன்லைன் மூலம் பங்கேற்க உள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோவா:
11 அணிகள் பங்கேற்கும் 7-வது ஐ.எஸ்.எல். (இந்தியன் சூப்பர் லீக்) கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது.
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும்.
2 முறை சாம்பியனான சென்னையின் எப்.சி. தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜாம்செட்பூரை தோற்கடித்தது. கேரளா பிளாஸ்டர்சுடன் மோதிய 2-வது ஆட்டம் கோல் எதுவுமின்றி டிரா ஆனது.
3-வது போட்டியில் பெங்களூருவிடம் 0-1 என்ற கணக்கிலும், 4-வது ஆட்டத்தில் மும்பையுடன் 1-2 என்ற கணக்கிலும் தோற்றது. 5-வது போட்டியில் கவுகாத்தி அணியுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது.
6-வது ஆட்டத்தில் கோவாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 7-வது போட்டியில் ஈஸ்ட் பெங்காலுடன் 2-2 என்ற கணக்கிலும், 8-வது ஆட் டத்தில் ஏ.டி.கே.மோகன் பாகனுடன் கோல் எதுவு மின்றியும் டிரா செய்தது. 9-வது ஆட்டத்தில் 1-4 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்திடம் தோற்றது.
10-வது போட்டியில் ஒடிசாவுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 11-வது ஆட்டத்தில் ஒடிசாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. 12-வது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்காலுடன் கோல் எதுவுமின்றி டிரா செய்தது. 13-வது போட்டியில் 0-1 என்ற கோல் கணக்கில் மோகன் பகானிடம் தோற்றது.
சென்னையின் எப்.சி. 13 ஆட்டத்தில் விளையாடி 3 வெற்றி, 6 டிரா, 4 தோல்வியுடன் 15 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
சென்னையின் எப்.சி. 14-வது ஆட்டத்தில் மும்பை சிட்டி அணியை இன்று மீண்டும் சந்திக்கிறது. இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடக்கிறது.
சென்னை அணி மும்பையை வீழ்த்தி 4-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியிடம் ஏற்கனவே தோற்று இருந்தது. இதற்கு சென்னை எப்.சி. பதிலடி கொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது.
மும்பை அணி 9 வெற்றி, 2 டிரா, 1 தோல்வியுடன் 29 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளது. அந்த அணி சென்னையை மீண்டும் வீழ்த்தி 10-வது வெற்றியை பெறும் வேட்கையில் உள்ளது.
காலே:
இலங்கை-இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இலங்கை அணி முதல் இன்னிங்சில் 381 ரன் குவித்தது. இங்கிலாந்து அணி நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 339 ரன் எடுத்திருந்தது.
கேப்டன் ஜோ ரூட் அபாரமாக விளையாடி 18 பவுண்டரிகளுடன் 186 ரன் குவித்தார்.
இந்த ரன் குவிப்பால் டெஸ்டில் அதிக ரன் எடுத்த இங்கிலாந்து வீரர்களில் ஜோ ரூட் 4-வது இடத்துக்கு முன்னேறினார். அவர் பாய்காட் (8,114 ரன்), பீட்டர்சன் (8,181), டேவிட் கோவர் (8,231) ஆகியோரை முந்தினார்.
ஜோரூட் 99 டெஸ்டில் 180 இன்னிங்சில் விளையாடி 8,238 ரன் எடுத்திருந்தார். சராசரி 49.62 ஆகும். 19 சதமும், 49 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்ச மாக 254 ரன் குவித்துள்ளார்.
பால்மஸ்:
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பால்மஸ் கால்பந்து கிளப்பின் தலைவர் லூகாஸ் மெய்ரா மற்றும் வீரர்களான லூகாஸ் ராஸ்டெஸ், குயில்லர்மொ, ரொனால்டு, மார்க்கஸ் ஆகிய 5 பேர் பலியானார்கள்.
பால்மஸ் நகரில் இருந்து கோயானியா நகருக்கு புறப்பட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து மேலே செல்லும் போது விபத்தில் சிக்கியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மும்பை:
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் 36 ரன்னில் சுருண்டு மோசமாக தோற்றபிறகு இந்தியா தொடரை கைப்பற்றியது பாராட்டுதலுக்கு உரியதாகும்.
முதல் டெஸ்ட் முடிந்த பிறகு கேப்டன் விராட் கோலி நாடு திரும்பிவிட்டார். இதனால் எஞ்சிய 3 டெஸ்டிலும் ரஹானே கேப்டன் பொறுப்பை வகித்தார்.
அவரது தலைமையில் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. பிரிஸ்பேன் மைதானத்தில் முதல் முறையாக இந்திய அணிக்கு வெற்றி கிடைத்தது.
மெல்போர்னில் நடந்த 2-வது டெஸ்டில் ரகானே சதம் அடித்தார். அவரது இந்த சதத்தால் இந்திய அணி அந்த டெஸ்டில் வெற்றிபெற முடிந்தது.
இந்த நிலையில் இங்கிலாந்தில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் எடுத்த சதத்தைவிட மெல்போர்ன் டெஸ்டில் அடித்த சதமே சிறப்பானது என்று ரஹானே கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
நான் எப்போதெல்லாம் ரன் அடித்து அணி வெற்றி பெற்றாலும் அது எனக்கு மிகவும் சிறப்பான ஒன்று. சொந்த சாதனைகளை விட டெஸ்டில் வெல்வதும், தொடரை கைப்பற்றுவதும் தான் எனக்கு முதன்மையானது.
மெல்போர்ன் டெஸ்ட் சதம் உண்மையில் சிறப்பானது. லார்ட்ஸ் மைதானத்தில் அடித்த சதமே சிறப்பானது என்று நான் மெல்போர்னில் கூறினேன். ஆனால் நிறைய பேர் லார்ட்ஸ் சதத்தைவிட மெல்போர்ன் சதமே சிறப்பானது என்றனர்.
இதற்கு எப்படி பதிலளிக்க வேண்டும் என்று தெரியவில்லை. ஆனால் இப்போது அதை உணர்கிறேன். அடிலெய்டு டெஸ்ட் போட்டிக்கு பிறகான சூழ்நிலையை பார்த்தால், மெல்போர்ன் டெஸ்ட் மிகவும் முக்கியமானது.
இதனால் லார்ட்ஸ் மைதானத்தில் அடித்ததை விட மெல்போர் னில் அடித்த சதமே சிறப் பானது. மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இந்த சதத்தை அடித்தேன். இந்த இன்னிங்ஸ் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.
மெல்போர்ன் சதம்தான் தொடரை வெல்வதற்கு மிக முக்கிய காரணமாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
டோயோட்டா தாய்லாந்து ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாங்காக் நகரில் கடந்த ஒரு வாரமாக நடந்து வந்தது. இதில் பங்கேற்ற இந்திய வீரர், வீராங்கனைகள் யாரும் அரைஇறுதியை தாண்டவில்லை. பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின்(ஸ்பெயின்) 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனதைபே) தோற்கடித்து பட்டத்தை தட்டிச் சென்றார். கடந்த வாரம் நடந்த யோனெக்ஸ் தாய்லாந்து ஓபனிலும் இதே தாய் ஜூ யிங்கை வீழ்த்தி தான் கரோலினா மகுடம் சூடியது நினைவு கூரத்தக்கது. அவருக்கு தங்கப்பதக்கத்துடன் ரூ.51 லட்சம் பரிசுத்தொகை கிடைத்தது. ‘நான் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளேன். இரண்டு வாரங்களில் 2 சாம்பியன் பட்டம் வென்று இந்த ஆண்டை வியப்புக்குரிய வகையில் தொடங்கி இருக்கிறேன்’ என்று கரோலினா குறிப்பிட்டார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) 21-11, 21-7 என்ற நேர் செட்டில் சக நாட்டவர் ஹான்ஸ் கிறிஸ்டியன் சோல்பெர்க்கை பந்தாடி மீண்டும் பட்டத்தை சொந்தமாக்கினார். அடுத்ததாக உலக டூர் இறுதி சுற்று போட்டி இதே பாங்காக்கில் நாளை மறுதினம் தொடங்குகிறது.






