என் மலர்tooltip icon

    விளையாட்டு

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தனி விமானம் மூலம் குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, மானு பாகெர், இளவேனில், அஞ்சும் மோட்ஜில், ராஹி சர்னோபாத் உள்ளிட்ட 13 பேர் மற்றும் 7 பயிற்சியாளர்கள், 6 உதவி ஊழியர்கள் ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றனர். அதன் தலைநகர் சாகிரெப்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் முதலில் கலந்து கொள்ளும் இந்திய அணியினர் அடுத்து ஆசிஜெக் நகரில் நடைபெறும் ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் போட்டி (வருகிற 20-ந் தேதி முதல் ஜூன் 6-ந் தேதி வரை) மற்றும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ஜூன் 22 முதல் ஜூலை 3-ந் தேதி வரை) ஆகியவற்றில் பங்கேற்கிறார்கள். ஜூலை 23-ந் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இறுதிகட்டமாக தயாராகும் பொருட்டு குரோஷியாவில் 2½ மாதம் தங்கி தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணியினர் அங்கிருந்து நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இந்திய துப்பாக்கி சுடுதல் அணியினரின் குரோஷியா பயணத்துக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கும் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அவர்களுக்கு அறிவுரையும் வழங்கி இருக்கிறார். அவர் தனது பதிவில், ‘பத்திரமாக பயணம் செய்யுங்கள். மற்ற நாடுகளின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஒரு போதும் மீறாதீர்கள். பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தை பார்த்து கொள்வதுடன் பாதுகாப்பாகவும் இருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளும் அளிக்கப்படும். சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    இலங்கையில் நடக்கும் ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் கேப்டன் பதவிக்கு ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா இடையே போட்டி நிலவுகிறது.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி ஜூலை மாதம் இலங்கைக்கு சென்று 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த ஆட்டங்கள் ஜூலை 13, 16, 19, 22, 24, 27 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. 6 ஆட்டங்களும் ஒரே இடத்தில் நடத்தப்படும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. அனேகமாக கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியம் இந்த போட்டிக்காக தேர்வு செய்யப்படும் என்று தெரிகிறது.

    இந்த தொடர் நடைபெறும் சமயத்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோலி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும். அந்த அணியில் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

    விராட் கோலி


    இதனால் இலங்கை தொடருக்கு 2-ம் தர இந்திய அணியே அனுப்பப்படுகிறது. இந்த அணியில் ஷிகர் தவான், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, பிரித்வி ஷா, புவனேஷ்வர்குமார், தீபக் சாஹர், யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாஹர், சூர்யகுமார் யாதவ், தேவ்தத் படிக்கல், வருண் சக்ரவர்த்தி, சஞ்சு சாம்சன், மனிஷ் பாண்டே, இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ராகுல் திவேதியா உள்ளிட்டோர் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆனால் இந்த அணிக்கு கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் நேற்று கூறுகையில், ‘ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயத்துக்கு ஆபரேஷன் செய்து தற்போது ஓய்வில் இருக்கிறார். அவர் உடல்தகுதியுடன் இருந்தால் சந்தேகத்துக்கு இடமின்றி அவர் தான் கேப்டன். ஆனால் இலங்கை தொடருக்குள் அவர் முழு உடல்தகுதியை எட்டுவாரா? என்பதில் உறுதி இல்லை. பொதுவாக இது போன்று ஆபரேஷன் செய்யப்பட்டால் அதன் பிறகு ஓய்வு, காயத்தில் இருந்து மீள்வதற்கான உடற்பயிற்சி முறைகள், களம் திரும்புவதற்கான தீவிர பயிற்சி இவற்றுக்கு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆகி விடும்.

    எனவே தற்போது கேப்டன் பதவிக்கு தொடக்க ஆட்டக்காரர் 35 வயதான ஷிகர் தவான், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் இடையேத் தான் போட்டி காணப்படுகிறது. தவான் கடந்த இரண்டு ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடி உள்ளார். தற்போது பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல்.-ல் ரன் குவிப்பில்( (8 ஆட்டத்தில் 380 ரன்கள்) முதலிடத்தில் இருக்கிறார். அது மட்டுமின்றி தற்போதைய அணித்தேர்வுக்கு உள்ள வீரர்களில் மூத்த வீரர் தவான் தான். இந்திய அணிக்காக கடந்த 8 ஆண்டுகளாக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். எனவே கேப்டனாக நியமிக்கப்பட அவருக்கு தான் வாய்ப்பு அதிகம்.

    27 வயதான ஹர்திக் பாண்ட்யாவை பொறுத்தவரை பணிச்சுமையை கருத்தில் கொண்டு சமீபகாலமாக அவர் பந்து வீசுவதில்லை. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை அணிக்காக ஆடிய போது ஒரு ஓவர் கூட பவுலிங் செய்யவில்லை. ஆனாலும் அவர் பேட்டிங்கில் தனிநபராக வெற்றியை தேடித்தரக்கூடிய திறமைசாலி. ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். அதனால் அவரை கேப்டன் பதவிக்கான வாய்ப்பில் இருந்து ஒதுக்கி விட முடியாது. யாருக்கு தெரியும். கூடுதல் ெபாறுப்பு மூலம் அவரது மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்படலாம். முதுகு காயம் ஆபரேஷனுக்கு பிறகு பெரிய அளவில் பந்து வீசாத பாண்ட்யா, ஆட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் கவனம் செலுத்துகிறார்’ என்றார்.
    கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட ஒலிம்பிக் திருவிழா ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடத்த முழுவீச்சில் ஏற்பாடு நடந்து வருகிறது.
    ரோம்:

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி கடந்த ஆண்டு நடக்க இருந்தது. கொரோனா அச்சத்தால் தள்ளிவைக்கப்பட்ட இந்த ஒலிம்பிக் திருவிழா ஜூலை 23-ந்தேதி முதல் ஆகஸ்டு 8-ந்தேதி வரை நடத்த முழுவீச்சில் ஏற்பாடு நடந்து வருகிறது. இதில் 200 நாடுகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்த நிலையில் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் இந்த போட்டி நடப்பது சந்தேகம் தான் என்று அந்த நாட்டை சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா கூறியுள்ளார். 4 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரான 23 வயதான நவோமி ஒசாகா நேற்று அளித்த பேட்டியில், ‘உண்மையை கூற வேண்டும் என்றால் தற்போதைய நிலைமையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டபடி நடக்குமா என்பதை என்னால் உறுதியாக சொல்ல முடியாது. ஒரு விளையாட்டு வீராங்கனையாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்பதே விருப்பமாகும். ஆனால் ஒரு மனிதராக, நாம் இப்போது கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இருக்கிறோம் என்று தான் சொல்வேன். மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் இல்லாத போது, போட்டி பாதுகாப்பானதாக இல்லை என்று உணரும் பட்சத்தில் நிச்சயம் ஒலிம்பிக் போட்டிக்கு சிக்கல் தான்’ என்றார்.
    அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட செஸ் போட்டி ஆன்லைன் மூலமாக நாளை (வியாழக்கிழமை) நடத்தப்படுகிறது.
    புதுடெல்லி:

    அகில இந்திய செஸ் சம்மேளனம் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்கு நிதி திரட்ட செஸ் போட்டி ஆன்லைன் மூலமாக நாளை (வியாழக்கிழமை) நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் 5 முறை உலக சாம்பியன் விசுவநாதன் ஆனந்த் மற்றும் கிராண்ட்மாஸ்டர்கள் கோனேரு ஹம்பி, ஹரிகா, நிஹல் சரின், பிரக்ஞானந்தா ஆகியோர் ஒரே நேரத்தில் கலந்து கொண்டு மற்ற வீரர், வீராங்கனைகளுடன் விளையாடுகிறார்கள்.

    இந்த போட்டியில் ஆனந்துடன் விளையாட விரும்புபவர்கள் ரூ.11 ஆயிரமும், மற்ற 4 பேருடன் மோத விரும்புபவர்கள் ரூ.1,800-ம் கட்டணமாக செலுத்தி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த போட்டியின் மூலம் திரட்டப்படும் நிதி இந்திய செஞ்சிலுவை சங்கம் மூலமாக கொரோனா நிவாரண பணிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டியை செஸ் காம் என்ற இணையதளத்தின் மூலம் நேரலையில் பார்க்கலாம். அப்போது நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
    மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றும், மற்ற நாடுகளில் நடைபெற்றாலும் ஒப்பந்தத்தில் உள்ள இங்கிலாந்து வீரர்கள் கலந்து கொள்ள வாய்ப்பில்லை.
    பயோ பபுளில் இருந்த வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட காரணத்தினால் மறுதேதி ஏதும் குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் 2021 சீசனின் எஞ்சியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து அணியின் வீரர்கள் விளையாடுவது சந்தேகம் என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய இயக்குனர் ஆஷ்லே ஜைல்ஸ்.

    கேப்டன் மோர்கன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் முதலான வீரர்கள் ஐபிஎல் தொடரில் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவது சிரமம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, “இங்கிலாந்து அணி பங்கேற்று விளையாடவுள்ள சர்வதேச போட்டிகளில் இந்த வீரர்களின் பங்கேற்பு நிச்சயம் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். திட்டமிட்டபடி சர்வதேச தொடர் நடந்தால், அவர்கள் தேசிய அணிக்காக விளையாட வேண்டியிருக்கும். அதனால் 2021 சீசனில் எஞ்சியுள்ள போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் விளையாடுவது சந்தேகம்தான். சர்வதேசப் போட்டிகளின் அட்டவணையில் எந்தவித பாதிப்பும் இல்லை என்றால், இங்கிலாந்து வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார்கள்” என்று அவர் தெரிவித்தார்.

    வரும் ஜூன் முதல் இலங்கை, பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுடன் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. மேலும், டி20 உலகக்கோப்பை தொடரிலும் இங்கிலாந்து விளையாடுகிறது. அதற்கு முன்னதாக நியூசிலாந்து அணியுடன் இங்கிலாந்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பல்வேறு நாடுகளில் மீண்டும் மீண்டும் கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. ஆனாலும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    டோக்கியோ:

    உலகின் விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வருகிற ஆகஸ்டு மாதம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒலிம்பிக் போட்டி ஒரு ஆண்டுக்கு தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் போட்டியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே பல்வேறு நாடுகளில் மீண்டும் மீண்டும் கொரோனா 2-வது அலை பரவி வருகிறது. ஆனாலும் ஒலிம்பிக் போட்டி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்கிடையே ஜப்பான் நாட்டிலும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. இதையடுத்து அங்கு சில நகரங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    ஒலிம்பிக்

    இந்த நிலையில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ்பாச் ஜப்பானின் டோக்கியோவுக்கு பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அங்கு ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யவும், ஆலோசனை நடத்தவும் திட்டமிட்டு இருந்தார்.

    இதற்கிடையே ஜப்பானில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் ஜப்பான் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

    இதுகுறித்து டோக்கியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் செய்கோ கூறும்போது, “டோக்கியோ உள்ளிட்ட மற்ற பகுதிகளில் வருகிற 31-ந்தேதி வரை அவசர நிலை பிரகடனப்படுத்தி இருப்பதால் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவரின் சுற்றுப்பயணம் நடைமுறைபபடுத்த முடியாமல் போய் விட்டது. விரைவில் அவரது சுற்றுப்பயணம் இருக்கும்” என்றார்.

    இந்திய அணிக்காக 26 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பிரான்கோ 1960-ம் ஆண்டில் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார்
    புதுடெல்லி:

    இந்திய கால்பந்து அணியின் முன்னாள் நடுகள வீரரான பார்ச்சுனட்டோ பிரான்கோ கோவாவில் நேற்று மரணம் அடைந்தார். 84 வயதான அவருக்கு மனைவி, ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    இந்திய அணிக்காக 26 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பிரான்கோ 1960-ம் ஆண்டில் ரோமில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்தார். அத்துடன் 1962-ம் ஆண்டு ஜகர்தாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய அணியிலும் அங்கம் வகித்தார். 1962-ம் ஆண்டு ஆசிய கோப்பை போட்டியில் 2-வது இடம் பிடித்த இந்திய அணியிலும் இடம் பெற்று இருந்தார். மும்பையை சேர்ந்த டாடா கால்பந்து கிளப் அணிக்காக நீண்ட நாட்கள் விளையாடிய அவர் மராட்டிய மாநில அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். பிரான்கோ மறைவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் மற்றும் அகில இந்திய கால்பந்து சம்மேளனம் சார்பில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனை தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறார்கள்.
    துபாய்:

    ஐ.சி.சி. விருது பட்டியலில் இடம் பெறும் 3 வீரர்கள், வீராங்கனைகளில் இருந்து தலா ஒருவரை முன்னாள் வீரர், பத்திரிகையாளர்கள், ஒளிபரப்பு நிறுவனம் உள்ளிட்ட ஐ.சி.சி. வாக்கு அகாடமியினர் மற்றும் ரசிகர்கள் வாக்களித்து தேர்வு செய்வார்கள்.

    இந்நிலையில், ஏப்ரல் மாதத்துக்கான சிறந்த வீரராக பாகிஸ்தான் அணியின் கேப்டனும், ஒருநாள் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவருமான பாபர் அசாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் அவருக்கு இந்த விருது கிட்டி இருக்கிறது.

    சிறந்த வீராங்கனை விருதுக்கு ஆஸ்திரேலிய அணியின் அலிசா ஹீலி தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அவர் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் 155 ரன்கள் சேர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் மீறி வீரர்களை கொரோனா தாக்கியதால் கடந்த 4-ந் தேதி ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது
    புதுடெல்லி:

    தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை இந்தியாவில் நடத்த முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் கங்குலி தெரிவித்தார்.

    14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ பபுள்) மீறி வீரர்களை கொரோனா தொற்று தாக்கியதால் கடந்த 4-ந் தேதி ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

    கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பவுலர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியருக்கு முதலில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு இரு தினங்களுக்குள் 4 அணியினருக்கு பரவியது. இதனால் வேறுவழியின்றி இந்த போட்டி நிறுத்தப்பட்டது. இந்த தொடரில் 29 ஆட்டங்கள் முடிந்து விட்ட நிலையில் இன்னும் 31 ஆட்டங்கள் எஞ்சி இருக்கிறது. எஞ்சிய ஆட்டங்கள் நடைபெற முடியாமல் போனால் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுமார் ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

    ஐ.பி.எல்.


    தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டியை வருகிற அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு முன்னதாகவோ அல்லது பிறகோ நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் முயற்சி எடுக்கும் என்று தெரிகிறது. கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் இந்த போட்டி இந்தியாவில் நடைபெற வாய்ப்பில்லை என்றும் கடந்த ஆண்டு போல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்படலாம் என்றும் பேசப்படுகிறது. அதேநேரத்தில் இந்த போட்டியை தங்கள் நாட்டில் நடத்த இங்கிலாந்தை சேர்ந்த கவுண்டி கிளப் அணிகள், இலங்கை கிரிக்கெட் வாரியம் ஆகியவை விருப்பம் தெரிவித்துள்ளன.

    இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலி அளித்த ஒரு பேட்டியில், ‘வீரர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் உள்ளிட்ட நிறைய கொரோனா தடுப்பு விதிமுறைகள் தள்ளி போடப்பட்ட ஐ.பி.எல். போட்டியை இந்தியாவில் மீண்டும் நடத்துவதற்கு இடையூறாக இருக்கின்றன. தனிமைப்படுத்துதலை கையாள்வது என்பது கடினமான காரியமாகும். இதனால் ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்களை இந்தியாவில் நடத்த முடியாது. ஐ.பி.எல். போட்டியின் எஞ்சிய ஆட்டங்கள் எந்த இடத்தில், எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இவ்வளவு சீக்கிரமாக எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே ஐ.பி.எல். போட்டிக்கான மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் அளித்த ஒரு பேட்டியில், ‘தள்ளிவைக்கப்பட்ட ஐ.பி.எல். போட்டி மீண்டும் தொடங்க முடிவு செய்தாலும் அது இந்தியாவில் நடைபெறுவது சந்தேகம் தான். இந்த ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு மாற்றுவதற்கான திட்டங்கள் தீட்டப்பட்டு வருவதை பார்க்க முடிகிறது. இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் மிகவும் கவனமாக நடந்து கொள்ளும் என்று நினைக்கிறேன். ஐ.பி.எல். போட்டியின் போது வீரர்கள் தனி விமானத்தில் பயணம் செய்தாலும் விமான நிலைய சோதனை மற்றும் அங்குள்ள வழிகளை கடந்து வருகையில் கொரோனா தடுப்பு உயிர் பாதுகாப்பு வளையத்தில் குறைபாடு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எந்த அணியிடம் இருந்து கொரோனா தொற்று பரவியது என்பது உறுதியாக தெரியவில்லை. தெரிந்தவர்கள் ஒரே இடத்தில் மொத்தமாக சந்திக்கும் போது எல்லா நடைமுறைகளையும் நேர்த்தியாக பின்பற்றுவது என்பது கடினமான விஷயமாகும்.

    என்னை பொறுத்தமட்டில் சூழ்நிலையை புரிந்து கொண்டு தான் போட்டிக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன். இந்த போட்டியில் விளையாட முடிவு செய்து வந்த பிறகு போட்டி நிறைவு பெறுவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் திரும்ப வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது கிடையாது. மற்ற வீரர்களுக்கு வேறுபட்ட எண்ணம் இருந்து இருக்கலாம். ஐ.பி.எல். போட்டி தள்ளிவைக்கப்படும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கொரோனாவால் பாதிக்கப்படும் அணியினர் மட்டும் தனிமைப்படுத்தி கொண்டு சில ஆட்டங்களை தவிர்த்து மீண்டும் திரும்புவார்கள் என்று நினைத்தேன். ஒரே நேரத்தில் பல அணிகளுக்கு கொரோனா விரைவாக பரவியது அதிர்ச்சி அளித்தது. குறிப்பாக தற்போது எல்லோரும் தடுப்பூசி எடுத்து வரும் நிலையில் போட்டி மீண்டும் தொடங்கினால் நிச்சயமாக நான் கலந்து கொள்வேன்’ என்று கூறினார்.
    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், இத்தாலியின் பெரேட்டினியை எதிர்கொண்டார்.
    மாட்ரிட்:

    மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றினார்.

    மாட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்தது. களிமண் தரை போட்டியான இதில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், 10-வது இடத்தில் இருந்த இத்தாலியின் பெரேட்டினியை எதிர்கொண்டார்.

    இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பது போல் ஆக்ரோஷமாக மோதினார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அனல் பறந்தது. முதல் செட்டில் இருவரும் மாறி, மாறி புள்ளிகள் எடுத்தனர்.

    71 நிமிடங்கள் நீடித்த முதல் செட்டில் டைபிரேக்கரில் பெரேட்டினி 5-0 என்ற கணக்கில் ஆதிக்கம் செலுத்தினார். ஆனால் அடிபட்ட வேங்கை போல் வெகுண்டெழுந்த அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சரிவில் இருந்து மீண்டு வந்து 7-6 என்ற கணக்கில் முன்னிலை பெற்றாலும் கடைசி கட்டத்தில் செய்த தவறால் முதல் செட்டை மயிரிழையில் கோட்டை விட்டார்.

    2-வது செட்டிலும் பெரேட்டினி முதல் 4 புள்ளிகள் வரை சமநிலை வகித்ததுடன் கடும் சவால் கொடுத்தார். அதன் பிறகு அலெக்சாண்டர் ஸ்வெரேவின் கை ஓங்கியது. எதிராளியின் தவறுகளை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அலெக்சாண்டர் ஸ்வெரேவ் அந்த செட்டை தனதாக்கியதுடன். அதே உத்வேகத்துடன் அடுத்த செட்டிலிலும் அசத்தி வெற்றியை தன்வசப்படுத்தினார்.

    2 மணி 40 நிமிடம் நடந்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-7 (8-10), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் பெரேட்டினியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். அத்துடன் 8 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று இருந்த பெரேட்டினியின் வீறுநடைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் கால்இறுதியில் 5 முறை சாம்பியனான ரபெல் நடாலையும் (ஸ்பெயின்), அரைஇறுதியில் இரண்டு முறை 2-வது இடம் பிடித்த டொமினிக் திம்மையும் (ஆஸ்திரியா) சாய்த்து இருந்தார். அவர் ஒரே போட்டியில் தரவரிசையில் ‘டாப்-10’ இடங்களுக்குள் உள்ள 3 வீரர்களை 2-வது முறையாக வீழ்த்தி இருக்கிறார்.

    24 வயதான அலெக்சாண்டர் ஸ்வெரேவ் மாட்ரிட் ஓபன் பட்டத்தை வெல்வது இது 2-வது முறையாகும். ஏற்கனவே 2018-ம் ஆண்டில் இந்த பட்டத்தை வென்று இருந்தார். அவர் வென்ற 1000 தரவரிசை புள்ளிகள் கொண்ட 4-வது சர்வதேச பட்டம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

    வெற்றி மகிழ்ச்சியில்


    சாம்பியன் பட்டத்தை வென்ற அலெக்சாண்டர் ஸ்வெரேவுக்கு ரூ.2 கோடியே 81 லட்சம் பரிசுத் தொகையும், 1000 தரவரிசை புள்ளியும் கிடைத்தன. 2-வது இடம் பிடித்த 25 வயது பெரேட்டினிக்கு ரூ.1 கோடியே 68 லட்சம் பரிசாக கிட்டியது. நேற்று வெளியிடப்பட்ட புதிய தரவரிசை பட்டியலில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பெரேட்டினி ஒரு இடம் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ரஷிய வீரர் டேனில் மெட்விடேவ் ஒரு இடம் ஏற்றம் கண்டு 2-வது இடத்தை பெற்றுள்ளார். 2-வது இடத்தில் இருந்த ரபெல் நடால் (ஸ்பெயின்) 3-வது இடத்துக்கு சரிந்துள்ளார். செர்பியா வீரர் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார்.
    ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது டெஸ்டை வென்றதுடன், டெஸ்ட் தொடரையும் 2-0 என கைப்பற்றியது பாகிஸ்தான்.
    ஹராரே:

    பாகிஸ்தான், ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹராரேயில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் அணி 147.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 510 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அபித் அலி 215 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். அசார் அலி 126 ரன்னிலும், நவ்மன் அலி 97 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபனி 3 விக்கெட்டும், சிசோரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஆட்ட நாயகன் விருது வென்ற அபித் அலி

    இதையடுத்து, முதல் இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 60.4 ஓவர்களில் 132 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி பாலோ-ஆன் ஆனது. அந்த அணியில் சகாப்வா அதிகபட்சமாக 33 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 5 விக்கெட்டும், சஜித் கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, ஜிம்பாப்வே இரண்டாவது இன்னிங்சை ஆடியது. சகாப்வா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 80 ரன்னில் அவுட்டானார். பிரெண்டண் டெய்லர் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    மூன்றாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 63 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்துள்ளது. லூக் ஜாங்வே 30 ரன்னுடன் களத்தில் உள்ளார்.

    இந்நிலையில், நான்காவது நாள் ஆட்டமின்று நடைபெற்றது. ஜாங்வே 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். முசாராபனி 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இறுதியில், ஜிம்பாப்வே அணி 68 ஓவர்களில் 231 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.  இதனால், பாகிஸ்தான் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 147 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும், டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    பாகிஸ்தான் சார்பில் நவ்மன் அலி 5 விக்கெட்டும், ஷஹீன் அப்ரிதி 5 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்டநாயகன் விருது அபித் அலிக்கும், தொடர் நாயகன் விருது ஹசன் அலிக்கும் வழங்கப்பட்டது.
    இந்தியா கொரோனா தொற்றின் 2-வது அலையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றன.
    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் 2-வது அலை மிகத் தீவிரமாக பரவி வருகிறது. தினந்தோறும் பாதிப்பு 4 லட்சத்தை தொட்ட வண்ணம் உள்ளதால் ஆக்சிஜன் மற்றும் மருந்து தட்டுப்பாடுகள் நிலவி வருகிறது.

    இதனால் வெளிநாடுகள் இந்தியாவுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன. இந்தியாவில் உள்ள தொழிலதிபர்கள், பிரபலங்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.

    அந்த வகையில் ஐபிஎல் போட்டியில விளையாடும் அணிகளில் ஒன்றான சன்ரைசர்ஸ் ஐதராபாத்தின் உரிமையாளரான சன் டிவி நெட்வொர்க் கொரோனாவை எதிர்கொள்ள 30 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியுள்ளது.

    மத்திய அரசு, மற்றும் மாநில அரசுகள், என்ஜிஓ போன்றவற்றால் நடைபெறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு இந்த பணம் நன்கொடையாக வழங்கபடுகிறது எனத் தெரிவித்துள்ளது.
    ×