என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.
    புதுடெல்லி:

    இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த தமிழகத்தை சேர்ந்த டபிள்யூ. வி.ராமனின் பதவி காலம் கடந்த மார்ச் மாதம் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் 20 ஓவர் தொடருடன் முடிவுக்கு வந்தது. இதையடுத்து பயிற்சியாளர் பதவிக்கு தகுதி படைத்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் ஏப்ரல் மாதம் அறிவித்து இருந்தது. டபிள்யூ. வி.ராமன், முன்னாள் பயிற்சியாளர் ரமேஷ் பவார், முன்னாள் வீரர்கள் கனித்கர், அஜய் ரத்ரா, தேர்வு குழு முன்னாள் தலைவர் ஹேமலதா கலா உள்பட 35 பேர் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்து இருந்தனர். இதில் இருந்து 8 பேர் கொண்ட பட்டியல் இறுதி செய்யப்பட்டு அவர்களிடம் மதன்லால் தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி நேர்காணல் நடத்தியது.

    இதன் முடிவில் இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான 42 வயது ரமேஷ் பவாரின் பெயர் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனை ஏற்று இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரமேஷ் பவார் நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது.

    இந்திய அணிக்காக 2 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் ரமேஷ் பவார் 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய பெண்கள் அணியின் இடைக்கால பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த ஆண்டு நவம்பர் மாதம் வெஸ்ட்இண்டீசில் நடந்த 20 ஓவர் பெண்கள் உலக கோப்பை போட்டி வரை அவரது பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. உலக கோப்பை அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. அந்த ஆட்டத்துக்கான இந்திய அணியில் மூத்த வீராங்கனை மிதாலி ராஜ் சேர்க்கப்படாதது சர்ச்சையாக வெடித்தது. இருவரும் ஒருவரை மாறி ஒருவர் புகார் தெரிவித்தனர். தன்னை அவமானப்படுத்தியதுடன் தனது கிரிக்கெட் வாழ்க்கையை அழிக்க ரமேஷ் பவார் முயற்சிக்கிறார் என்று மிதாலி ராஜ் குற்றம் சாட்டினார். மிதாலி ராஜ் தந்திரமாக செயல்பட்டு அணியில் குழப்பத்தை ஏற்படுத்துகிறார் என்று ரமேஷ் பவார் புகார் கூறினார். இந்த பிரச்சினையால் ரமேஷ் பவாரின் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை.

    அதனை தொடர்ந்து அந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் டபிள்யூ.வி.ராமன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவரிடம் இருந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு ரமேஷ் பவார் மீண்டும் பதவியை கைப்பற்றி இருக்கிறார். ரமேஷ் பவாரின் பதவி காலம் 2 ஆண்டுகள் ஆகும். அடுத்த மாதம் (ஜூன்) 16-ந் தேதி பிரிஸ்டலில் தொடங்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து ரமேஷ் பவார் தனது பணியை தொடங்க இருக்கிறார்.
    அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டியை காண ரசிகர்களுக்கு அனுமதி அளித்தது பொறுப்பற்ற தன்மை என்று மும்பை இந்தியன்ஸ் பீல்டிங் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதன்காரணமாக மார்ச் மாதம் இந்தியாவில் நாழு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல், மே, ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்தது.

    அதன்பின் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இந்த வருடம் தொடக்கத்தில், அதாவது ஜனவரி மாதம் முழுமையாக கட்டுக்குள் வந்தது. இதனால் கொரோனாவை வென்று விட்டோம் என்று அரசியல்வாதிகளும், பொதுமக்களும் நினைத்தனர்.

    இதனால் அரசியல் கூட்டங்கள், திருமணங்கள், மதம் தொடர்பான கூட்டங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் கவலையின்றி அளவிற்கு அதிகமாக கூடினர். இந்தியா- இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் போட்டியின்போது அகமதாபாத் மைதானத்தில் சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் பிப்ரவரி கடைசி வாரத்தில் இருந்து மார்ச் முதல் வாரம் வரை நடைபெற்றது.

    அப்போது இந்தியாவில் 2-வது கட்ட கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமான அதிரிக்க தொடங்கியது. 

    ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த வீரர்கள் அகமதாபாத் மற்றும் டெல்லியில் விளையாடியபோது கொரோனா தொற்றுக்கு ஆளானார்கள். அகமதாபாத்தில் அதிகமான கொரோனா பாதிப்பு உள்ளது.

    கொரோனா அதிகரிக்கும் நேரத்தில் இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்களை அனுமதித்தது பொறுப்பற்றத்தன்மை என்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்தின் பம்மென்ட் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக இருக்கும் நியூசிலாந்தின் பம்மென்ட் கூறுகையில் ‘‘நான் முன்னதாகவே (ஜனவரி மாதம்) பயோ-பபுள் பாதுகாப்பு வளையத்திற்கு இருக்கவில்லை. பொதுமக்களிடம் தொடர்பு கொள்ளும் சிறிய வாய்ப்புகள் இருந்தன. சில அரசியல் பேரணிகள், அது திருமணம் முடிப்பதற்கான காலம், மதம் தொடர்பான பண்டிகைகள் போன்றவற்றால், மக்கள் அதிக அளவில் கூடினர். மக்களிடையே அதிகமான தொடர்புகள் இருந்தன.

    இங்கிலாந்து தொடரின்போது சில போட்டிகளில் பூட்டிய மைதானத்திற்குள் நடைபெற்றன. அதன்பின் அகமதாபாத் மைதானத்தில் 70 ஆயிரம் ரசிகர்களுக்கு அனுமதி அளித்தனர். என்னுடைய கண்ணோட்டத்தில் அது கொஞ்சம் பொறுப்பற்ற தன்மைதான். தற்போது அதிக கொரோனா பாதித்த இடமாக அகமதாபாத் மாறியுள்ளது’’ என்றார்.

    மே 4-ந்தேதி ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுகிறது என்று அறிவித்த பின் கடந்த சனிக்கிழமை பம்மென்ட் நியூசிலாந்து சென்றடைந்துள்ளார்.
    பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு நிர்வாகிகளுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் 29 வயதாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆமிர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
    பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் முகமது ஆமிர். 29 வயதாகும் அவர் டெஸ்ட் போட்டியில் இருந்து எற்கனவே ஓய்வு பெற்ற நிலையில், கடந்த வருடம் பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டில் உள்ளவர்கள் மனதளவில் தொந்தரவு கொடுப்பதாக குற்றம்சாட்டி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

    இவர் பெரும்பாலும் இங்கிலாந்திலேயே தங்கியுள்ளார். குழந்தைகள் இங்கிலாந்தில்தான் உள்ளன. இவர் இன்னும் 6 முதல் 7 வருடங்கள் விளையாட உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் காலவரையின்றி இங்கிலாந்தில் தங்க அனுமதி பெற்றுள்ளார்.

    ஒருவேளை இங்கிலாந்து குடியுரிமை பெற விண்ணப்பம் செய்தால், கிடைத்துவிடும். அவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்றுவிட்டால், ஐபிஎல் போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க பிசிசிஐ தடைவிதித்துள்ளது.

    இதற்கு முன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் அசார் மெஹ்மூத் இங்கிலாந்து குடியுரிமை பெற்று, ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் (பஞ்சாப் கிங்ஸ்), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்காக விளையாடியுள்ளார். அதேபோல் முகமது ஆமிருக்கும் வாய்ப்புள்ளது.

    கிரிக்கெட் விளையாடுவது குறித்து முகமது ஆமிர் கூறுகையில் ‘‘தற்போதைய நிலையில், இங்கிலாந்தில் தங்க காலவரையின்றி அனுமதி பெற்றுள்ளேன். அந்த நாட்களில் என்னுடைய கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக அனுபவிப்பேன். இன்னும் 6 முதல் 7 வருடங்கள் விளையாட திட்டமிட்டுள்ளேன். ஆனால் இந்த விஷயம் எப்படி செல்கிறது என்று பார்க்க வேண்டும்.

    முகமது ஆமிர்

    என்னுடைய குழந்தைகள் இங்கிலாந்தில் வளரும். அவர்கள் அங்குதான் கல்வி கற்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. நான் போதுமான நேரத்தை அங்கு செலவழிப்பேன்

    தற்போதைய சூழ்நிலையில் மற்ற வாய்ப்புகள் மற்றும் வாய்ப்புகள் உள்ளது பற்றி சிந்திக்கவில்லை. எதிர்காலத்தில் இங்கிலாந்து குடியுரிமை கிடைத்தபின், எப்படி மாறுகிறது எனப் பார்க்க வேண்டும் ’’ என்றார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி அணி கேப்டனாக ரிஷப் பண்ட்-ன் செயல்பாடு தன்னை ஈர்க்கும் வகையில் இருந்தது என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டனாக இருப்பவர் ஷ்ரேயாஸ் அய்யர். இவர் இங்கிலாந்து தொடரின்போது காயம் அடைந்தார். இதனால் ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகினார். அவருக்குப் பதிலாக ரிஷப் பண்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    கேப்டன் பதவியில் ரிஷப் பண்ட் அருமையாக செயல்பட்டார். ஒன்றிரண்டு சிறிய தவறுகள் செய்தாலும், எந்த வகையிலும் கோபம், விரக்தியடையாமல் அணியை வழிநடத்தினார்.

    இந்த நிலையில் ரிஷப் பண்ட் எதிர்கால இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன்களின் ஒருவர் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    ரிஷப் பண்ட் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘இளம் வீரர் ரிஷப் பண்ட்-ன் தலைமையின் கீழ் ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடியது. ஆறு போட்டிகளில் நீங்கள் ஒன்றை பார்த்திருக்கலாம். அது,... அவரது கேப்டன் பதவியை பற்றி கேட்டதுதான். அதை கேட்டு கேட்டு அவர் சோர்வடைந்திருப்பார். போட்டி முடிந்தபின் பரிசு வழங்கும்போது ஒவ்வொரு போட்டியிலும் அவரிடம் இதுகுறித்து கேட்கப்பட்டது. அவருடைய வழக்கமான ஆட்டத்தை தொடர அனுமதித்தால். கர்ஜிக்கும் சிங்கமாக மாற முடியும். அவர் சில தவறுகள் செய்யலாம். எந்த கேப்டன் செய்யவில்லை?

    ஐபிஎல் போட்டியின் சில ஆட்டங்கள் அவர் கற்றுக்கொள்ளக் கூடிய புத்திசாலி என்பதை காட்டியது. முக்கியமான கட்டத்தில் கூட அவருடைய சொந்த முறையில், இக்கட்டான நிலையை சமாளிக்கும் முடிவை எடுத்தார். அவர் சிறந்த எதிர்கால கேப்டன்களில் ஒருவர். இதில் சந்தேகம் ஏதுமில்லை’’ என்றார்.
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி 24 போட்டிகளில் விளையாடி 121 புள்ளிகள் பெற்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ளது.
    நியூசிலாந்து அணி சொந்த மண்ணில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்று ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது. இந்தியா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என தொடரை கைப்பற்றினாலும் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை.

    இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 எனக் கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. மேலும், இன்று வெளியிடப்பட்ட ஐசிசி டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது.

    இந்தியா 24 போட்டிகளில் விளையாடி 121 புள்ளிகளுடன் முததல் இடம் பிடித்துள்ளது. நியூசிலாந்து 18 போட்டிகளில் விளையாடி 120 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து 32 போட்டிகளில் விளையாடி 109 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 17 போட்டிகளில் விளையாடி 108 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் 24 போட்டிகளில் விளையாடி 94 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி

    வெஸ்ட் இண்டீஸ் 84 புள்ளிகளுடன் 6-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்கா 80 புள்ளிகளுடன் 7-வது இடத்திலும், இலங்கை 78 புள்ளிகளுடன் 8-வது இடத்திலும், வங்காளதேசம் 46 புள்ளிகளுடன் 9-வது இடத்திலும், ஜிம்பாப்வே  35 புள்ளிகளுடன் 10-வது இடத்திலும் உள்ளன.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

    கொரோனாவின் 2-வது அலை தாக்கம் நாடு முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கிறது. பாதிப்பு எண்ணிக்கையும், உயிர்பலியும் தொடர்ந்து அதிகரித்தவண்ணம் உள்ளது.

    இந்தநிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீரர் ஆர்.பி.சிங்கின் தந்தை கொரோனாவுக்கு பலியாகி உள்ளார்.

    ஆர்.பி.சிங்கின் தந்தை சிவபிரசாத் சிங். இவர் கொரோனாவால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். இதை ஆர்.பி.சிங். தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    ரெய்னா, ரமேஷ் பவார், ஓஜா உள்ளிட்ட வீரர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே கிரிக்கெட் வீரர்களான பியூஸ் சாவ்லா, சேத்தன் சக்கரியா ஆகியோரின் தந்தை கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனாவால் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் அதிரடி மாற்றமாக கேப்டன் திமுத் கருணாரத்னே, விக்கெட் கீப்பர் தினேஷ் ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர்.
    கொழும்பு:

    இலங்கை கிரிக்கெட் அணி வருகிற 16-ந்தேதி முதல் வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது. ஒரு நாள் போட்டிகள் மே 23, 25, 28-ந்தேதிகளில் டாக்காவில் நடக்கிறது. வங்காளதேசத்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் அதிரடி மாற்றமாக கேப்டன் திமுத் கருணாரத்னே, விக்கெட் கீப்பர் தினேஷ் சன்டிமால், ஆல்-ரவுண்டர் மேத்யூஸ், திரிமன்னே ஆகியோர் நீக்கப்பட்டு உள்ளனர். புதிய கேப்டனாக விக்கெட் கீப்பர் குசல் பெரேரா நியமிக்கப்பட்டு உள்ளார். 30 வயதான குசல் பெரேரா 101 ஒரு நாள் போட்டி, 22 டெஸ்ட் மற்றும் 46 இருபது ஓவர் போட்டிகளில் ஆடியுள்ளார். துணை கேப்டனாக குசல் மென்டிஸ் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    வேகப்பந்து வீச்சாளர் சமிகா கருணாரத்னே, பேட்ஸ்மேன் ஷிரன் பெர்னாண்டோ ஆகிய புதுமுக வீரர்களும் அணிக்கு தேர்வாகியுள்ளனர்.
    இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
    ரோம்:

    இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோம் நகரில் நடந்து வருகிறது. களிமண் தரை போட்டியான இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ‘நம்பர் ஒன்’ வீரரும், நடப்பு சாம்பியனுமான நோவக் ஜோகோவிச் (செர்பியா) 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் டெய்லர் பிரைட்சை (அமெரிக்கா) தோற்கடித்து 3-வது சுற்றை எட்டினார். மற்றொரு ஆட்டத்தில் டொமினிக் திம் (ஆஸ்திரியா) 3-6, 7-6 (7-5), 6-0 என்ற செட் கணக்கில் மார்டோன் புக்சோவிக்சை (ஹங்கேரி) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினார். அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (ஜெர்மனி), ஆந்த்ரே ரூப்லெவ் (ரஷியா), பாவ்டிஸ்டா அகுட் (ஸ்பெயின்) ஆகியோரும் வெற்றிகரமாக 2-வது தடையை கடந்தனர்.

    ஏமாற்றத்தில் செரீனா.


    பெண்கள் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் நவோமி ஒசாகா (ஜப்பான்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார். அவரை 7-6 (7-2), 6-2 என்ற நேர் செட்டில் 31-ம் நிலை வீராங்கனையான ஜெஸ்சிகா பெகுலா (அமெரிக்கா) விரட்டினார். இதே போல் பிப்ரவரி மாதத்துக்கு பிறகு களம் திரும்பிய முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையும், 4 முறை சாம்பியனுமான செரீனா வில்லியம்சும் (அமெரிக்கா) வீழ்ந்தார். அவரை 7-6 (8-6), 7-5 என்ற நேர் செட்டில் 24 வயதான நடியா போடோரோஸ்கா (அர்ஜென்டினா) வெளியேற்றினார். 39 வயதான செரீனாவுக்கு இது ஆயிரமாவது (851 வெற்றி, 149 தோல்வி) ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே சமயம் நேரடியாக 2-வது சுற்றில் அடியெடுத்து வைத்த ‘நம்பர் ஒன்’ வீராங்கனையான ஆஷ்லி பார்ட்டி (ஆஸ்திரேலியா) தன்னை எதிர்த்த ஷிவ்டோவாவை (கஜகஸ்தான்) 6-4, 6-1 என்ற நேர் செட்டில் எளிதில் வென்றார். மற்றொரு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான எலினா ஸ்விடோலினா (உக்ரைன்) 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் அனிசிமோவாவை (அமெரிக்கா) போராடி சாய்த்தார். கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), முகுருஜா (ஸ்பெயின்), சபலென்கா (பெலாரஸ்), ஆஸ்டாபென்கோ (ஆஸ்திரியா), கோகோ காப் (அமெரிக்கா), ஸ்வியாடெக் (போலந்து) ஆகியோரும் தங்களது 2-வது சுற்றில் வெற்றி கண்டனர்.
    கொரோனா தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்து வரும் நிலையில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பது குறித்து சில முன்னணி வீரர்கள்- வீராங்கனைகள் தங்களது கவலையை தெரிவித்துள்ளனர்.
    டோக்கியோ நகரில் கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா தொற்றால் போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் கொரோனா தாக்கல் குறைந்து இருந்தது.

    தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் தலைதூக்கத் தொடங்கியுள்ளது. இதனால் ஜப்பான் செல்வது சந்தேகம் என சில டென்னிஸ் வீரர்கள், வீரராங்கனைகள் சொல்லத் தொடங்கிவிட்டனர்.

    இந்த நிலையில் உலகத் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் ரபேல் நடால் ‘‘இதுவரை எனக்குத் தெரியவில்லை. எனக்குத் தெரியாததால் என்னால் உறுதியான பதில் அளிக்க முடியவில்லை. கொரோனா தொற்று இல்லாத வழக்கமான உலகத்தில் நான் ஒலிம்பிக் போட்டியை தவற விடமாட்டேன். இதில் சந்தேகமே இல்லை. ஒலிம்பிக் போட்டிக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

    நடால்

    தற்போதைய சூழ்நிலையில் எனக்குத் தெரியவில்லை. அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடக்கும் என்று பார்க்கலாம். ஆனால் எனது அட்டவணையை நான் ஒழுங்கமைக்க வேண்டியது அவசியம்’’ என்றார்.

    செரீனா வில்லியம்ஸ், கெய் நிஷிகோரி, நவோமி ஒசாகா ஆகியோர் கொரோனா குறித்து தங்களது கவலையை தெரிவித்துள்ளனர்.
    2018-ம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் விளையாடாத புவனேஷ்வர் குமார், ஐந்து நாட்கள் தாக்குப்பிடித்து விளையாடக் கூடிய தகுதி பெறவில்லை என பிசிசிஐ கருதுகிறது.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களாக இருப்பவர்கள் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார். இவர்களில் புவனேஷ்வர் குமார் சிறந்த ஸ்விங் பந்து வீச்சாளர்கள். புதுப்பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்வதில் வல்லவர். இங்கிலாந்து, நியூசிலாந்து போன்ற இடங்களில் ஸ்விங் கிங்-ஆக திகழக்ககூடியவர்.

    தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜோகன்னஸ்பார்க்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில்தான் கடைசியாக விளையாடினார். அதன்பின் ஐபிஎல் காயம் காரணமாக தொடர்ந்து விளையாட முடியாமல் போனது.

    2020 ஐபிஎல் சீசனில் விளையாடும்போது காயம் காரணமாக வெளியேறினார். பின்னர் சையது முஷ்டாக் அலி டி20, விஜய் ஹசாரே டி20 கிரிக்கெட்டில் விளையாடி திறமையை நிரூபித்தார். இதன்காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான தொடரில் இடம் பிடித்தார்.

    இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும், இங்கிலாந்து அணிக்கெதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணியில் புவனேஷ்ரவர் குமாருக்கு இடம் கிடைக்கவில்லை.

    பந்தை ஸ்விங் செய்வதில் சிறந்தவராக புவனேஷ்வருக்கு இடம் கிடைக்காதது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். ஆனால் ஐந்து போட்டிகளில் விளையாடும் அளவிற்கு இன்னும் அவர் உடற்தகுதி பெறவில்லை. காயத்திற்கு பிறகு அவர் முதல்-தர போட்டியில் விளையாடவில்லை.

    புவனேஷ்வர் குமார்

    டெஸ்ட் போட்டியில் நீண்ட நேரம் (ஸ்பெல்) பந்து வீச வேண்டியிருக்கும். அதற்கு புவி இன்னும் தயாராக வில்லை என்பதால் சேர்க்கப்படவில்லை.

    அதிரடி (டெத் ஓவர்) ஓவரில் அற்புதமாக பந்து வீசும் புவனேஷ்வர் குமார் ஒயிட்பால் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து விளையாடுகிறார்.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணி லெய்செஸ்டர் அணியிடம் தோல்வியடைந்ததால், மான்செஸ்டர் சிட்டி சாம்பியன் பட்டத்தை உறுதி செய்தது.
    இங்கிலீஷ் பிரிமீயர் லீக் கால்பந்து தொடரில் 20 அணிகள் பங்கேற்று விளையாடும். ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்கும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும்.

    2020- 2021 சீசனுக்கான ஆட்டங்கள் முடியும் தருவாயில் உள்ளன. மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்ட் சிட்டி அணிகளுக்கு இடையில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடிக்க கடும் போட்டி நிலவியது.

    35-வது போட்டியில் மான்செஸ்டர் சிட்டி செல்சியிடம் 1-2 எனத் தோல்வியடைந்தது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 35 போட்டிகளில் 25 வெற்றி, 5 தோல்வி, 5 டிரா மூலம் 80 புள்ளிகள் பெற்றிருந்தது.

    மான்செஸ்டர் யுனைடெட் 34 போட்டிகளில் 20 வெற்றி, 10 டிரா, 5 தோல்விகள் மூலம் 70 புள்ளிகள் பெற்றிருந்தது, நேற்று 35-வது போட்டியில் லெய்செஸ்டர் அணியை எதிர்கொண்டது. இதில் 1-2 என மான்செஸ்டர் யுனைடெட் தோல்வியடைந்தது.

    மான்செஸ்டர் சிட்டி அணி

    இதன்மூலம் மான்செஸ்டர் யுனைடெட் 35 போட்டிகளில் முடிவில் 70 புள்ளிகளும், மான்செஸ்டர் சிட்டி 80 புள்ளிகளும் பெற்றுள்ளன. இனிமேல் நடைபெறும் மூன்று போட்டிகளிலும் மான்செஸ்டர் சிட்டி தோல்வியடைந்தாலும், மான்செஸ்டர் யுனைடெட் வெற்றி பெற்றாலும் மான்செஸ்டர் சிட்டிதான் அதிக புள்ளிகள் பெற்றிருக்கும்.

    இதனால் மான்செஸ்ட் சிட்டி இங்கிலீஷ் பிரிமீயர் லீக் 2020-2021-க்கான சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள் தனி விமானம் மூலம் குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றனர்.
    புதுடெல்லி:

    டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள 15 இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர், வீராங்கனைகளில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, மானு பாகெர், இளவேனில், அஞ்சும் மோட்ஜில், ராஹி சர்னோபாத் உள்ளிட்ட 13 பேர் மற்றும் 7 பயிற்சியாளர்கள், 6 உதவி ஊழியர்கள் ஆகியோர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் நேற்று குரோஷியாவுக்கு புறப்பட்டு சென்றனர். அதன் தலைநகர் சாகிரெப்பில் நடைபெறும் பயிற்சி முகாமில் முதலில் கலந்து கொள்ளும் இந்திய அணியினர் அடுத்து ஆசிஜெக் நகரில் நடைபெறும் ஐரோப்பிய துப்பாக்கி சுடுதல் போட்டி (வருகிற 20-ந் தேதி முதல் ஜூன் 6-ந் தேதி வரை) மற்றும் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி (ஜூன் 22 முதல் ஜூலை 3-ந் தேதி வரை) ஆகியவற்றில் பங்கேற்கிறார்கள். ஜூலை 23-ந் தேதி தொடங்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு இறுதிகட்டமாக தயாராகும் பொருட்டு குரோஷியாவில் 2½ மாதம் தங்கி தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணியினர் அங்கிருந்து நேரடியாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    இந்திய துப்பாக்கி சுடுதல் அணியினரின் குரோஷியா பயணத்துக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கும் மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அவர்களுக்கு அறிவுரையும் வழங்கி இருக்கிறார். அவர் தனது பதிவில், ‘பத்திரமாக பயணம் செய்யுங்கள். மற்ற நாடுகளின் கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஒரு போதும் மீறாதீர்கள். பயிற்சியில் கவனம் செலுத்துங்கள். உடல் ஆரோக்கியத்தை பார்த்து கொள்வதுடன் பாதுகாப்பாகவும் இருங்கள். உங்களுக்கு தேவையான அனைத்து ஆதரவுகளும் அளிக்கப்படும். சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    ×