என் மலர்
விளையாட்டு

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர், 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் கேப்டன் கோலி, 53 ரன்கள் எடுத்து அசத்தினார். ஆனால், அவரின் சிறப்பான பேட்டிங் வெற்றி பெறுவதற்கு உதவவில்லை.
அதே நேரத்தில் போட்டியின் முதல் இன்னிங்ஸின் 4வது ஓவரை சென்னை அணிக்காக ஷர்துல் தாக்கூர் வீசினார். ஓவரின் நான்காவது பந்தை கோலி, நின்ற இடத்திலிருந்து சிக்ஸருக்கு விரட்டினார்.
இந்த ஷாட்டின்போது பந்து செல்லும் திசையை கோலி பார்க்கவே இல்லை. அதே நேரத்தில் பந்து 82 மீட்டர் பறந்துசென்று மைதானத்துக்கு வெளியே விழுந்தது. கோலியின் அசாத்திய பேட்டிங் காரணமாக இது குறித்தான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
வீடியோவைப் பார்க்க - https://www.iplt20.com/video/239793/out-of-sharjah-virat-s-mammoth-six?tagNames=ipl-magic,indian-premier-league,ipl-magic
அபுதாபி:
14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 2-வது கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய இடங்களில் நடைபெற்று வருகிறது.
7-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. அபுதாபியில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ரிஷப்பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ்-சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 7 வெற்றி, 2 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது. அந்த அணி இன்றைய ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் ஆர்வத்தில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 5-வது வெற்றி பெறும் ஆர்வத்தில் உள்ளது. இரு அணிகளும் இதுவரை 23 முறை மோதி உள்ளன. இதில் டெல்லி 12 ஆட்டத்திலும், ராஜஸ்தான் 11 ஆட்டத்திலும் வெற்றி பெற்று உள்ளன.
சார்ஜாவில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2-வது ஆட்டத்தில் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்- லோகேஷ் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐதராபாத் அணி 1 வெற்றி, 7 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி 2-வது வெற்றிக்காக காத்து இருக்கிறது.
பஞ்சாப் அணி 3 வெற்றி 6 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது. அந்த அணி 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணி ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற நல்ல வாய்ப்பு இருந்தது. அந்த அணி வெற்றியை கோட்டை விட்டது. அந்த மாதிரியான நிலைமை ஏற்பட்டு விடாமல் இருக்க அந்த அணி வீரர்கள் கவனமுடன் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் ஐதராபாத் 12-ல், பஞ்சாப் கிங்ஸ் 5-ல் வெற்றி பெற்று உள்ளன. வெற்றி பெற அணிகள் கடுமையாக போராடும் என்பதால் இன்றைய ஐ.பி.எல். ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும்.
ஷார்ஜா:
ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி 7-வது வெற்றியை பெற்று புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது.
ஷார்ஜாவில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 156 ரன் எடுத்தது. இதனால் சென்னை அணிக்கு 157 ரன் இலக்காக இருந்தது.
படிக்கல் 50 பந்தில் 70 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்) , கேப்டன் விராட் கோலி 41 பந்தில் 53 ரன்னும் (6 பவுண்டரி ,1 சிக்சர்) எடுத்தனர். பிராவோ 3 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், தீபக் சாகர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 18.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் 26 பந்தில் 38 ரன்னும் (4பவுண்டரி 1 சிக்சர்), அம்பதி ராயுடு 22 பந்தில் 32 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), டுபெலிசிஸ் 26 பந்தில் 31 ரன்னும் (2 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
சி.எஸ்.கே. பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தை பிடித்தது. சென்னையும் , டெல்லியும் தலா 14 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன் ரேட்டில் முன்னிலையில் உள்ளதால் சி.எஸ்.கே. முதல் இடத்தில் உள்ளது.
இந்த ஆட்டத்தில் பெங்களூர் அணியின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. டோனி மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட்டு 14-வது ஓவரில் பிராவோவை பந்து வீச அழைத்தார். அதற்கு பலன் கிடைத்தது. விராட் கோலி, மேக்ஸ்வெல், ஹர்சல் பட்டேல் ஆகிய 3 விக்கெட்டை பிராவோ கைப்பற்றினார்.
இந்தப்போட்டிக்கு பிறகு பேசிய டோனி ஆல்ரவுண்டர் பிராவோவை வெகுவாக பாராட்டினார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
பிராவோவை நான் என் சகோதரன் என்று அழைக்கிறேன். அவர் எப்போதுமே பந்தை மெதுவாக வீசுவார் என்று எல்லோருக்கும் தெரியும். நான் அவரிடம் 6 பந்தையும் வெவ்வேறு விதமாக வீசுமாறு கூறினேன். அதற்கு ஏற்ப அவர் சிறப்பாக செயல்பட்டார்.
ஆடுகளத்திற்கு தகுந்தவாறு எங்களது செயல்பாடு இருந்தது. இதனால் இந்த வெற்றியை பெற்றோம்.
இவ்வாறு டோனி கூறினார்.
பெங்களூர் அணி ஐக்கிய அரபு எமிரேட்சில் 2-வது தோல்வியை தழுவியது. ஒட்டு மொத்தத்தில் 4-வது தோல்வி ஏற்பட்டது. ஆனாலும் அந்த அணி 10 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது.
தோல்வி குறித்து பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி கூறும்போது, “நாங்கள் 175 ரன் வரை எடுத்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் வெற்றி பெற்றிருப்போம். எங்களது பந்து வீச்சாளர்கள் நேர்த்தியாக பந்து வீசவில்லை” என்றார்.










