என் மலர்

  செய்திகள்

  சதமடித்த மோனி
  X
  சதமடித்த மோனி

  இரண்டாவது ஒருநாள் போட்டி - இந்திய பெண்கள் அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா திரில் வெற்றி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா பெண்கள் அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் மோனி சதமடித்து அசத்தி, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
  சிட்னி:

  ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் 3 ஒருநாள் போட்டிகள், ஒரு டெஸ்ட், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

  இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது.

  இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி ஹரப் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய பெண்கள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 

  அதன்படி, முதலில் ஆடிய இந்திய பெண்கள் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 86 ரன்கள் குவித்தார்.

  ஆஸ்திரேலியா சார்பில் தஹ்லா மெக்ராத் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

  86 ரன்கள் எடுத்த ஸ்மிருதி மந்தனா

  இதையடுத்து, 275 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய பெண்கள் அணி களமிறங்கியது. முன்னணி வீராங்கனைகல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 52 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. 

  5-வது விக்கெட்டுக்கு தஹ்லா மெக்ராத் உடன் ஜோடி சேர்ந்த தொடக்க வீராங்கனை மோனி இந்திய வீராங்கனைகளின் பந்து வீச்சை சிதறடித்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலியாவை சரிவில் இருந்து மீட்டது. அதிரடியாக ஆடிய மோனி சதம் விளாசினார். பொறுப்புடன் ஆடிய தஹ்லா மெக்ராத் 74 ரன்கள் குவித்து வெளியேறினார். 

  கடைசி ஓவரில் 13 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. இந்திய வீராங்கனை கோஸ்வாமி இறுதி ஓவரை வீசினார். கடைசி பந்தில் 3 ரன்கள் தேவை என்ற நிலையில் கோஸ்வாமி வீசிய கடைசி பந்து நோ-பால் ஆக அறிவிக்கப்பட்டது. 

  இதனை தொடர்ந்து 1 பந்தில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது. கடைசி பந்தை சந்தித்த ஆஸ்திரேலிய வீராங்கனை ஹேரி 2 ரன்கள் விளாசினார். இதனால், ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 275 ரன்கள் குவித்தது. இதன் மூலம் இந்திய அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய பெண்கள் அணி அபார வெற்றி பெற்றது. சிறப்பாக ஆடிய மோனி 125 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

  இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற புள்ளிகள் கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி வரும் 26-ம் தேதி நடைபெறுகிறது.
  Next Story
  ×