என் மலர்tooltip icon

    விளையாட்டு

    நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கோலி முதல் டெஸ்டிலும் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    புதுடெல்லி:

    உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் விராட்கோலி. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக அவர் சதம் அடிக்காமல் உள்ளார். கடைசியாக 2019-ம் ஆண்டு வங்காள தேசத்துக்கு எதிரான கொல்கத்தா டெஸ்டில் சதம் அடித்து இருந்தார்.

    கேப்டன் பதவியால் விராட் கோலியின் பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக கருத்து நிலவியது. அவர் இந்திய கிரிக்கெட் அணியின் 3 நிலைக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக உள்ளார்.

    பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதால் விராட் கோலி சமீபத்தில் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ரோகித் சர்மா நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் 20 ஓவர் போட்டிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இதற்கிடையே ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி நீக்கப்படுகிறார். தென் ஆப்பிரிக்கா சுற்றுப் பயணத்துக்கான இந்திய அணிக்கு ஒருநாள் தொடரில் புதிய கேப்டன் நியமிக்கப்படுகிறார். ரோகித் சர்மாவே ஒருநாள் போட்டிக்கும் கேப்டனாக பொறுப்பேற்கிறார்.

    இந்திய அணி டிசம்பர் முதல் ஜனவரி வரை தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் நான்கு 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.

    டெஸ்ட் தொடர் டிசம்பர் 17-ந் தேதியும், ஒருநாள் தொடர் ஜனவரி 11-ந் தேதியும், 20 ஓவர் தொடர் ஜனவரி 19-ந் தேதியும் தொடங்குகிறது. இந்த ஒருநாள் தொடரின் போது தான் விராட் கோலியின் கேப்டன் பதவி பறிக்கப்படுகிறது.

    ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பதவி தொடர்பாக விராட் கோலியிடம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரைவில் ஆலோசனை நடத்துகிறது. அதன்பிறகு ரோகித் சர்மா ஒருநாள் போட்டி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார்.

    இதற்கிடையே நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்ட கோலி முதல் டெஸ்டிலும் ஆடமாட்டார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் முதல் டெஸ்டுக்கு ரகானே கேப்டனாக செயல்படுவார்.

    மேலும் 20 ஓவர் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு நியூசிலாந்துக்கு டெஸ்ட் தொடரில் ஓய்வு கொடுக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஐசிசி டி20 போட்டிகளில் பந்து வீச்சாளர்கள், ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் இந்திய வீரர்கள் ஒருவரும் இடம்பெறவில்லை.
    துபாய்:

    சர்வதேச டி20 கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.

    இதில், பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்தின் டேவிட் மலான் 2-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மார்க்ராம் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள்.
     
    இந்திய கேப்டன் விராட் கோலி 8-வது  இடத்துக்கு பின்தங்கினார். மற்றொரு இந்திய வீரரான லோகேஷ் ராகுல் 5-வது இடத்துக்கு முன்னேறினார். 

    பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் முதல் 6 இடங்களை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆக்கிரமித்து உள்ளனர். முதலிடத்தில் இலங்கையின் ஹசரங்கா, 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் ஷம்சி, 3-வது இடத்தில் இங்கிலாந்தின் அடில்  ரஷித் நீடிக்கின்றனர்.

    ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தானின் முகமது நபி முதலிடத்திலும், வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.

    டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் முறையாக நுழைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    துபாய்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்று முடிவில் குரூப்-1 பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குரூப்-2 பிரிவில் முதல் இரு இடங்களை தனதாக்கிய பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    குரூப்-1 பிரிவில் இடம்பெற்ற தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் மற்றும் குரூப்- 2 பிரிவில் இடம்பெற்ற இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
     
    நேற்று முன்தினம் அபுதாபியில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது.

    முதலில் ஆடிய இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி அரை சதமடித்து 51 ரன்களும், தாவித் மாலன் 41 ரன்னும் எடுத்தார்.

    இதையடுத்து ஆடிய நியூசிலாந்து முதலில் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் டேரில் மிட்செல் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 72 ரன் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்று முதல் முறையாக டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    கேன் வில்லியம்சன்

    துபாயில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 67 ரன்னும், பாபர் அசாம் 39 ரன்னும் எடுத்தனர். பகர் சமன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 49 ரன்னில் வெளியேறினார். 
     
    பொறுப்புடன் ஆடிய ஸ்டோய்னிஸ் 40 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிட மேத்யூ வேட் 17 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 41 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    துபாயில் வரும் 14-ம் தேதி நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்ல உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பது உறுதி.

    பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஸ்டோய்னிஸ், வேட் ஜோடி81 ரன் ஜோடி சேர்த்து அணியை வெற்றி பெற வைத்தது.
    துபாய்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 52 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடக்கவீரர் பாபர் அசாம் 39 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    அடுத்து இறங்கிய பகர் சமன் 32 பந்துகளில் 4 சிக்சர், 3 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    ஆஸ்திரேலிய சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2  விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

    இதையடுத்து, 177 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்கு முன்னேறலாம்  என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பிஞ்ச் டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். டேவிட் வார்னருடன் அடுத்து இறங்கிய மிட்செல் மார்ஷ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி 51 ரன்கள் சேர்த்த நிலையில் மார்ஷ் 28 ரன்னில் அவுட்டானார். ஸ்மித் 5 ரன்னுடனும், மேக்ஸ்வெல் 7 ரன்னுடனும் ஆட்டமிழந்தனர். ஒருபுறம் நிலைத்து நின்று ஆடிய வார்னர் 49 ரன்னில் வெளியேறினார். 
     
    ஆஸ்திரேலியா 96 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து இறங்கிய ஸ்டோய்னிஸ் பொறுப்புடனும் அதிரடியாகவும் ஆடினார். வேட் அவருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். இந்த ஜோடி 50 ரன்களை விரைவாக கடந்தது.

    இறுதியில், ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஸ்டோய்னிஸ் 40 ரன்னும், வேட் 17பந்தில் 41 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
    விராட் கோலி மகளுக்கு மிரட்டல் விடுத்த 23 வயது வாலிபர் தெலுங்கானா மாநிலத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
    டி20 உலகக் கோப்பை தொடரில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானிடம்  தோல்வியடைந்தது.  இரண்டாவது ஆட்டத்தில்  நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.  இந்தியா அணி தொடர்ந்து தோல்வியடைந்து வந்தது.  இதுகுறித்து, இந்திய வீரர் முகமது ஷமியை சமூக வலைத்தளங்களில்  பலர் விமர்சனம் செய்து வந்தனர்.  இந்த விமர்சனங்களை கண்டித்து கேப்டன் விராட் கோலி, ஷமிக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

    இதையடுத்து, விராட் கோலியின் ஆதரவைத் தொடர்ந்து ட்விட்டரில்  நபர் ஒருவர் கோலியின் 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சம்பவம் பரவலாக பேசப்பட்டு வந்தது. இதுகுறித்து, தேசிய மகளிர் ஆணையம், குழந்தைகள் ஆணையமும் இந்த மிரட்டல் குறித்து விசாரிக்க வேண்டும் எனக் கோரியிருந்தன. பின்னர், சம்பவம் குறித்து விசாரணை குறித்து நடத்தப்பட்டு வந்தது.

    மேலும்.  மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு  செய்தனர்.  இதனைத்தொடர்ந்து, ட்விட்ரில் மிரட்டல் விடுத்தரை தேடும் பணியில் இறங்கினர்.  விசாரணையில், தெலுங்கானா மாநிலம் சங்கராரெட்டியைச் சேர்ந்த அகுபதினி ராம் நாகேஷ் (23) என்பவர் மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.  மேற்கொண்ட விசாரணையில்,  வாலிபர் நாகேஷ்  சங்கராரெட்டி நகரில் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். தனியார் மென்பொருள் நிறுவனத்தில்  பணியாற்றி  வந்துள்ளார்.  தேடப்பட்ட நிலையில், மும்பை போலீசார் நேற்று அதிகாலை கைது செய்தனர்.

    மேலும், கோலியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நாகேஷ் தனது ட்விட்டர் பெயரை மாற்றி பயன்படுத்தி வந்துள்ளதைக் கண்டுபிடித்த போலீசார், வாலிபர் மீது ஐபிசி பிரிவு 374 (ஏ), 506, 500 தகவல்தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67 மற்றும் 67 (பி) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    கிறிஸ் ஜோர்டான் வீசிய 17-வது ஓவரில் நியூசிலாந்து அணி இரண்டு சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 23 ரன்கள் அடிக்க, இங்கிலாந்து அணியின் வெற்றி பறிபோனது.
    டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் அடித்தது. தாவித் மாலன் 30 பந்தில் 41 ரன்களும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ரன்கள் சேர்த்தனர்.

    3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர், 167 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய மார்ட்டின் கப்தில் 3-வது பந்தில் வெளியேறினார். அடுத்த வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 11 பந்துகளை சந்தித்து 5 ரன்கள் எடுத்த நிலையில் ஏமாற்றம் அளித்தார்.

    இதனால் நியூசிலாந்து 2.4 ஓவரில் 13 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டை இழந்தது. 3-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன், டேவன் கான்வே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் நியூசிலாந்து அணி சரிவில் இருந்து மீண்டது.

    இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இங்கிலாந்து அணி நெருக்கடிக்குள்ளானது. இந்த ஜோடி 13.4 ஓவரில் 95 ரன்கள் எடுத்திருக்கும்போது பிரிந்தது. டேவன் கான்வே 38 பந்தில் 46 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த கிளென் பிலிப்ஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    5-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல் உடன் ஜேம்ஸ் நீஷம் ஜோடி சேர்ந்தார். நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி 4 ஓவரில் 57 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் இங்கிலாந்து வெற்றிபெறும் நிலை இருந்தது.

    17-வது ஓவரை கிறிஸ் ஜோர்டான் வீசினார். இந்த ஓவரில் ஜேம்ஸ் நீஷம் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். இதனால் நியூசிலாந்து அணிக்கு 23 ரன்கள் கிடைத்தது.  ஆகவே, ஒரே ஓவரில் ஆட்டம் நியூசிலாந்து கைக்குள் வந்தது.

    டேரில் மிட்செல்

    கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது. 18-வது ஓவரை அடில் ரஷித் வீசினார். இந்த ஓவரில் நீஷம் ஒரு சிக்ஸ் விளாச, மிட்செல் 4-வது பந்தை சிக்சருக்கு தூக்கி 41 பந்தில் அரைசதம் அடித்தார். இருந்தாலும் கடைசி பந்தில் ஜேம்ஸ் நீஷம் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில 1 பவுண்டரி, 3 சிக்சருடன் 27 ரன்கள் விளாசினார். நீஷம் அதிரடி நியூசிலாந்து அணிக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

    கடைசி 2 ஓவரில் நியூசிலாந்து அணிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் வீசிய 19-வது ஓவரில் டேரில் மிட்செல் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசினார். கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட நியூசிலாந்து 19 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    டேரில் மிட்செல் 47 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ரன்களும், தாவித் மலான் 30 பந்தில் 42 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்துள்ளது.
    டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் சேர்த்துள்ளது.

    தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ஜாஸ் பட்லர், பேர்ஸ்டோ ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 5.1 ஓவரில் 37 ரன்களே அடித்தது. பேர்ஸ்டோ 17 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பட்லர் 24 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு தாவித் மாலன் உடன் மொயீன் அலி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தாவித் மாலன் 30 பந்தில் 41 ரன்களும், மொயீன் அலி ஆட்டமிழக்காமல் 37 பந்தில் 51 ரன்களும் சேர்த்தனர்.

    தாவித் மாலன்

    3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 63 ரன்கள் சேர்த்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி, ஆடம் மில்னே, இஷ் சோதி, ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
    பேட்டிங் செய்ய சிறப்பான ஆடுகளம், என்றாலும் பின்னர் பனிப்பொழிவு இருக்கும் என்பதால் பந்து வீச்சை தேர்வு செய்கிறேன் என நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் தெரிவித்தார்.
    டி20 உலக கோப்பையின் முதல் அரையிறுதி ஆட்டம் இன்று அபு தாபியில் நடக்கிறது. இதில் இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    இங்கிலாந்து அணி:

    1. ஜாஸ் பட்லர், 2. ஜானி பேர்ஸ்டோ, 3. தாவித் மலான், 4. மொயீன் அலி, 5. மோர்கன், 6. சாம் பில்லிங்ஸ், 7. லியாம் லிவிங்ஸ்டன், 8. கிறிஸ் வோக்ஸ், 9. கிறிஸ் ஜோர்டான், 10. அதில் ரஷித், 11. மார்க் வுட்.

    பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர்

    நியூசிலாந்து அணி:

    1. மார்ட்டின கப்தில், 2. டேரில் மிட்செல், 3. கேன் வில்லியம்சன், 4. டேவன் கான்வே, 5. கிளென் பிலிப்ஸ், 6. ஜேம்ஸ் நீஷம், 7. மிட்செல் சான்ட்னர், 8. ஆடம் மில்னே, 9. டிம் சவுத்தி, 10. இஷ் சோதி, 11. டிரென்ட் பவுல்ட்.
    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படாத நிலையில, டுவிட்டரில் படங்களை வெளியிட்டு பி.சி.சி.ஐ. தேர்வு குழுவுக்கு பதில் அளித்துள்ளார் சஞ்சு சாம்சன்
    ஐ.சி.சி. டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியடைந்த இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து, சூப்பர் 12 சுற்றோடு வெளியேறியது.

    நியூசிலாந்து அணி வருகிற 17-ந்தேதி முதல் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமை தாங்குகிறார்.

    இந்த தொடரில் விராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    சஞ்சு சாம்சன்

    இந்திய டி20 அணிக்கு கே.எல். ராகுல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட், ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பண்ட், இஷான் கிஷன், வெங்கடேஷ் ஐயர், யுஸ்வேந்திர சஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், அக்‌ஷர் படேல், அவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    அணியில்  கே.எல். ராகுல், ரிஷாப் பண்ட், இஷான் கிஷன் என 3 விக்கெட் கீப்பர்கள் இடம் பிடித்துள்ளனர். உள்நாட்டு போட்டிகளில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

    சஞ்சு சாம்சன்

    இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் #JusticeForSanjuSamson என ஹேஷ்டேக்கை உருவாக்கி, ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில், தன்னால் சிறப்பான வகையில் பீல்டிங் செய்ய முடியும். அப்படி இருக்கும்போது அணியில் ஏன் தேர்வு செய்யவில்லை என்று தேர்வுக்குழு உறுப்பினர்களை கேள்வி கேட்கும் வகையில், தனது அபாரமான பீல்டிங் படங்களை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் சஞ்சு சாம்சன்.
    ஐ.சி.சி. போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்தும், அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் இருந்தது குறித்தும் இந்திய அணி சுய பரிசோதனை செய்ய வேண்டும் என ஷேவாக் வலியுறுத்தி உள்ளார்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிக்கும் (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) கேப்டனாக விராட் கோலி பணியாற்றி வந்தார்.

    கேப்டன் பொறுப்பு சுமையால் தனது பேட்டிங் திறன் பாதிக்கப்படுவதாக அவர் கருதினார். இதனால் 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து மட்டும் அவர் விலகி உள்ளார்.

    தற்போது முடிந்த 20 ஓவர் உலக கோப்பையோடு அவர் கேப்டன் பதவியை துறந்தார். அதே நேரத்தில் ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளில் கோலி தொடர்ந்து கேப்டன் பதவியில் நீடிப்பார்.

    20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும், 20 ஓவர் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றதால் விராட் கோலியின் கேப்டன் பதவி குறித்து கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியும் அவரிடம் இருந்து பறிக்கப்படலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.

    இந்த நிலையில் டெஸ்ட், ஒருநாள் போட்டி கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று முன்னாள் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஷேவாக் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி விலகக்கூடாது என்று நான் நினைக்கிறேன். இது அவரது முடிவை பொறுத்தது. அணியில் ஒரு வீரராக விளையாட கோலி விரும்பினாலும், அது அவரின் முடிவுதான்.

    விராட் கோலி தலைமையின் கீழ் இந்திய அணி சிறப்பாக விளையாடி பல வெற்றிகளை பெற்றுள்ளது. கேப்டன் பதவியில் அவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டுள்ளார். அவர் ஒரு சிறந்த வீரர். ஆக்ரோ‌ஷமாக இருந்து அணியை வழி நடத்தினார்.

    ஐ.சி.சி. போட்டிகளில் மோசமாக தோல்வி அடைந்தது குறித்தும், அரை இறுதிக்கு கூட தகுதி பெறாமல் இருந்தது குறித்தும் இந்திய அணி சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

    இந்திய அணி கடைசியாக 2013 ஐ.சி.சி. போட்டிகளில் சாம்பியன் பட்டம் பெற்றது. அதன்பின் 8 ஆண்டுகளாக எதையும் வெல்லவில்லை. இதுகுறித்து நிச்சயம் ஆய்வு செய்ய வேண்டும்.

    இரு நாடுகளிடையே போட்டிகளில் வென்றாலும், உலக அளவிலான போட்டியை வெல்லும்போதுதான் மக்கள் நினைவு வைத்திருப்பார்கள். அதே நேரத்தில் கடினமான இந்த கால கட்டத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பொறுத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    புதுடெல்லி:

    நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இந்திய அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். விராட் கோலி பதவி விலகியதால் அவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.

    இந்த நிலையில் 20 ஓவர் போட்டியில் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா பொறுத்தமானவர் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    20 ஓவர் கேப்டன் பதவிக்கு ரோகித் சர்மா சிறந்தவர். அடுத்த உலக கோப்பைக்கு இன்னும் 10 முதல் 12 மாதங்களே உள்ளன. ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியில் மும்பை அணியை சிறப்பாக வழி நடத்தியுள்ளார். எனவே ரோகித் சர்மாவுக்கு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு கொடுத்தது சரியே.

    இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

    ‘டாப்-8’ வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்குகிறது.
    குவாடலஜரா:

    ‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்ளும் டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் இன்று முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது.

    மொத்தம் ரூ.37 கோடி பரிசுத்தொகைக்கான இந்த போட்டியில் இருந்து உலகின் ‘நம்பர் ஒன்’ வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி விலகி விட்டார். அவர் ஜனவரி மாதம் நடைபெற இருக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்கு தயாராகும் பொருட்டும், கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகள் காரணமாகவும் இந்த முடிவை மேற்கொண்டார். இதேபோல் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள துனிசியா வீராங்கனை ஆன்ஸ் ஜாபிர் அடுத்த சீசனுக்கு தயாராகுவதற்கு வசதியாக ஒதுங்கினார். அவர்களுக்கு பதிலாக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இகா ஸ்வியாடெக் (போலந்து), 10-வது இடத்தில் உள்ள பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் வீராங்கனைகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளனர். அந்த பிரிவுகளுக்கு மெக்சிகோ நாட்டின் பழமை வாய்ந்த நகரங்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளது. இதில் ‘சீச்சன் இட்சா’ பிரிவில் சபலென்கா (பெலாரஸ்), மரியா சக்காரி (கிரீஸ்), இகா ஸ்வியாடெக் (போலந்து), பாலா படோசா (ஸ்பெயின்) ஆகியோரும், ‘தியோதி அகான்’ பிரிவில் பார்போரா கிரெஜ்சிகோவா (செக்குடியரசு), கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), கார்பின் முகுருஜா (ஸ்பெயின்) கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

    இதில் ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்கள் பிரிவில் உள்ள மற்றவர்களுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவார்கள்.

    தொடக்க நாளில் நடைபெறும் ஒற்றையர் ஆட்டங்களில் கிரெஜ்சிகோவா-கோன்டாவெய்ட், கரோலினா பிளிஸ்கோவா-கார்பின் முகுருகா ஆகியோர் மோதுகிறார்கள்.

    பெண்கள் இரட்டையர் பிரிவிலும் போட்டி நடைபெறுகிறது. இதில் ஷூகோ அயமா-எனா ஷிபஹரா (ஜப்பான்), சமந்தா ஸ்டோசுர் (ஆஸ்திரேலியா)-ஜாங் ஷூய் (சீனா) உள்பட 8 இணைகள் கலந்து கொள்கிறது.
    ×