என் மலர்
விளையாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் ஆல்-ரவுண்டர் ரவிசாஸ்திரி 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பு ஏற்றார். 2019-ம் ஆண்டில் அவரது பதவி காலம் மேலும் 2 ஆண்டு நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியுடனான அவரது 4 ஆண்டு கால பயிற்சி பயணம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நமிபியாவுக்கு எதிரான ஆட்டமே அவரது பயிற்சியின் கீழ் இந்தியா விளையாடிய கடைசி போட்டியாகும். இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு வருகிற 17-ந்தேதி நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இருந்து தனது பணியை தொடங்குகிறார்.
59 வயதான ரவி சாஸ்திரியின் பயிற்சியில் இந்திய அணி எந்த ஐ.சி.சி. கோப்பையையும் வெல்லவில்லை. 2021-ம் ஆண்டு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றது. 2019-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியோடு வெளியேறியது. இந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் அரையிறுதியை கூட எட்டவில்லை.
அதே சமயம் அவரது பயிற்சியின் கீழ் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா மகத்தான எழுச்சி பெற்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை கைப்பற்றி இதுவரை எந்த ஆசிய அணியும் செய்யாத வரலாற்று சாதனையை இந்தியா நிகழ்த்தியது. 42 மாதங்கள் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா ‘நம்பர் ஒன்’ அரியணையை வகித்தது. அவரது பயிற்சியில் இந்திய அணி 43 டெஸ்டில் விளையாடி 25-ல் வெற்றியும், 76 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 51-ல் வெற்றியும் பெற்றது.
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விடைபெற்றாலும் அடுத்து அவர் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புதிதாக உருவாகியுள்ள ஆமதாபாத் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பார் என்று தெரிகிறது.


புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியின் செயல்பாடு மிகவும் மோசமாக இருந்தது. முதல் 2 ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றது. கத்துக்குட்டி அணிகளான ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்தை தோற்கடித்தது.
முதல் 2 ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பை இழந்தது. கடைசி ஆட்டத்தில் இன்று நமீபியாவை சந்திக்கிறது. இதில் வெற்றி பெற்றாலும் எந்த பலனும் இல்லை.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு கேப்டன் விராட்கோலி பொறுப்பேற்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் காட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-
20 உலக கோப்பையில் இந்திய அணி அரைஇறுதிக்கு தகுதி பெறாததால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த போட்டி தொடங்கு வதற்கு முன்பு இந்தியா தான் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டது. இந்த தோல்விக்கு விராட்கோலி தான் பொறுப்பேற்க வேண்டும்.
இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதை விட ஐ.பி.எல். போட்டிக்கு தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். இதனால் நாம் என்ன சொல்ல முடியும்.
அடுத்த ஆண்டு நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பைக்காக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இப்போதே திட்டமிட வேண்டும். எதிர்கால இந்திய அணி மிகவும் முக்கியமானது. ஐ.பி.எல்.க்கும் உலக கோப்பைக்கும் இடையே கொஞ்சம் இடைவெளி இருந்திருக்க வேண்டும்.
உலக கோப்பையில் இந்திய வீரர்களால் தங்களது முழு திறமையையும் வெளிப்படுத்தவில்லை.
வீரர்கள் நாட்டுக்காக விளையாடுவதில் பெருமை கொள்ள வேண்டும். முதலில் நாடு அதற்குபிறகுதான் ஐ.பி.எல். போட்டியாக இருக்க வேண்டும். இனி வரும் காலங்களில் வீரர்கள் இதுபோன்ற தவறுகளில் இருந்து பாடம் கற்க வேண்டும்.
இவ்வாறு கபில்தேவ் கூறி உள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் 3 வடிவிலான போட்டிகளுக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர்) விராட்கோலி கேப்டனாக உள்ளார். 20 ஓவர் உலக கோப்பை தொடங்குவதற்கு முன்பு உலக கோப்பைக்கு பிறகு 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட்கோலி தெரிவித்து இருந்தார். 20 ஓவர் அணியில் தொடர்ந்து ஆடுவேன் என்றும் கூறி இருந்தார்.
20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து கோலி விலகியதால் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் புதிய கேப்டன் நியமிக்கப்படுகிறார். ரோகித் சர்மா நியமிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. அதே நேரத்தில் லோகேஷ் ராகுலும் இதற்கான போட்டியில் உள்ளார்.






