search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆரோன் பிஞ்ச்
    X
    ஆரோன் பிஞ்ச்

    டி20 உலக கோப்பை - இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மோதல்

    டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் முறையாக நுழைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
    துபாய்:

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்-12 சுற்று முடிவில் குரூப்-1 பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, குரூப்-2 பிரிவில் முதல் இரு இடங்களை தனதாக்கிய பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

    குரூப்-1 பிரிவில் இடம்பெற்ற தென்ஆப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட்இண்டீஸ், வங்காளதேசம் மற்றும் குரூப்- 2 பிரிவில் இடம்பெற்ற இந்தியா, ஆப்கானிஸ்தான், நமீபியா, ஸ்காட்லாந்து அணிகள் அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறின.
     
    நேற்று முன்தினம் அபுதாபியில் நடந்த முதலாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்தை எதிர்கொண்டது.

    முதலில் ஆடிய இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்தது. மொயீன் அலி அரை சதமடித்து 51 ரன்களும், தாவித் மாலன் 41 ரன்னும் எடுத்தார்.

    இதையடுத்து ஆடிய நியூசிலாந்து முதலில் திணறியது. தொடக்க ஆட்டக்காரர் டேரில் மிட்செல் கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். அவர் 72 ரன் அடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் நியூசிலாந்து 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து வென்று முதல் முறையாக டி20 உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    கேன் வில்லியம்சன்

    துபாயில் நேற்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. முகமது ரிஸ்வான் 67 ரன்னும், பாபர் அசாம் 39 ரன்னும் எடுத்தனர். பகர் சமன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் 49 ரன்னில் வெளியேறினார். 
     
    பொறுப்புடன் ஆடிய ஸ்டோய்னிஸ் 40 ரன் எடுத்தார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிட மேத்யூ வேட் 17 பந்துகளில் 4 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 41 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் ஆஸ்திரேலியா அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    துபாயில் வரும் 14-ம் தேதி நடைபெறும் டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்ல உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறக்கும் என்பது உறுதி.

    Next Story
    ×