என் மலர்tooltip icon

    விளையாட்டு

    20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகுவார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கூறியுள்ளார்.
    லாகூர்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியுடன் விராட்கோலி 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார். விராட் கோலி ஒருநாள் போட்டி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகக்கூடும் என்று தகவல் வெளியாகி இருக்கின்றன. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அப்ரிடி அளித்த ஒரு பேட்டியில், ‘விராட்கோலி, இந்திய கிரிக்கெட்டுக்கு அற்புதமான சக்தியாக இருக்கிறார். 20 ஓவர் போட்டிக்கான கேப்டன் பதவியில் இருந்து விராட்கோலி விலகுவார் என்பது எதிர்பார்த்த ஒன்று தான். 

    தற்போது அவர் எல்லா வகையிலான போட்டிகளுக்கான கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்க முடிவு செய்தால் அவருக்கு நல்லது என்று நான் நினைக்கிறேன். விராட்கோலி கேப்டன் பதவியில் இருந்து முழுமையாக விலகி தனக்கு எஞ்சியிருக்கும் கிரிக்கெட்டை ரசித்து விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். தலைசிறந்த பேட்ஸ்மேனான அவர் ஒரு வீரராக ஆடினால் மனதில் வேறு எந்தவித அழுத்தமும் இன்றி சுதந்திரமாக விளையாடி இன்னும் சிறப்பாக செயல்பட முடியும்.

    அப்ரிடி - விராட் கோலி

    20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நியமித்தது நல்ல முடிவாகும். அவருடன் ஐ.பி.எல். போட்டியில் நான் ஒரு வருடம் விளையாடி இருக்கிறேன். அவர் அற்புதமான வீரர் மட்டுமின்றி அணியை நன்கு வழிநடத்தும் மனதிறமையும் கொண்டவர். அமைதியான அணுகுமுறையை கொண்ட அவர் தேவைப்பட்டால் ஆக்ரோஷமாகவும் செயல்படக்கூடியவர். அவர் ஐ.பி.எல். போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை பலமுறை வெற்றிகரமாக வழிநடத்தி தனது திறமையை நிரூபித்து இருக்கிறார்’ என்று தெரிவித்தார்.
    உலக பெண்கள் டென்னிஸ் போட்டியில் கோன்டாவெய்ட் 6-4, 6-0 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதியையும் உறுதி செய்தார்.
    குவாடலஜரா:

    ‘டாப்-8’ வீராங்கனைகள் மட்டும் பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று என்று அழைக்கப்படும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி மெக்சிகோவில் உள்ள குவாடலஜரா நகரில் நடந்து வருகிறது. 8 வீராங்கனைகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகிறார்கள். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிப்பவர்கள் அரைஇறுதிக்கு முன்னேறுவார்கள்.

    இதன் 3-வது நாளில் நடந்த ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் அனெட் கோன்டாவெய்ட் (எஸ்தோனியா) தனது 2-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான கரோலினா பிளிஸ்கோவாவை (செக்குடியரசு) எதிர்கொண்டார். 57 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் கோன்டாவெய்ட் 6-4, 6-0 என்ற நேர்செட்டில் பிளிஸ்கோவாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 2-வது வெற்றியை ருசித்ததுடன் அரைஇறுதியையும் உறுதி செய்தார். சர்வதேச போட்டியில் தொடர்ந்து 12 வெற்றிகளை குவித்துள்ள கோன்டாவெய்டுக்கு, பிளிஸ்கோவாவுடன் 4-வது முறையாக மோதியதில் அதில் பெற்ற முதல் வெற்றி இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மற்றொரு ஆட்டத்தில் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஜா, பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், 3-ம் நிலை வீராங்கனையுமான பார்போரா கிரெஜ்சிகோவாவை (செக்குடியரசு) சந்தித்தார். 2 மணி 10 நிமிடம் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் முகுருஜா சரிவை சமாளித்து 2-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் கிரெஜ்சிகோவாவை சாய்த்து முதல் வெற்றியை தனதாக்கினார். கிரெஜ்சிகோவாவுக்கு இது 2-வது தோல்வியாகும்.
    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்றிரவு துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
    துபாய்:

    ‘இது ஒரு சிறந்த ஆட்டமாக இருக்கும். நியூசிலாந்து அருமையான அணி. கடந்த 6 ஆண்டுகளில் ஐ.சி.சி. நடத்திய பெரும்பாலான போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு வந்து இருக்கிறார்கள். எனவே அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது.

    - ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்.

    ‘உலக கோப்பை இறுதிப்போட்டியில் எங்களது அண்டைநாடுடன் மோத இருப்பது சிறப்பானது. உண்மையிலேயே இரு நாட்டு வீரர்களும் உற்சாகமடைந்துள்ளனர். ஒரு அணியாக சாதிப்பதற்கு எங்களுக்கு இது இன்னொரு வாய்ப்பு’

    - நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்

    7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த இங்கிலாந்து அரைஇறுதியுடன் வெளியேற்றப்பட்டது. விராட் கோலி தலைமையில் பங்கேற்ற இந்திய அணி சூப்பர்-12 சுற்றை கூட தாண்டவில்லை.

    இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இங்கிலாந்திடம் கோட்டை விட்டது. நியூசிலாந்து இறுதி சுற்றை அடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதனால் யார் மகுடம் சூடினாலும் அவர்களுக்கு இது முதலாவது 20 ஓவர் உலக கோப்பையாக இருக்கும்.

    கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சூப்பர்- 12 சுற்றில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரைஇறுதிக்கு வந்தது. அரைஇறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து 167 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது ஒரு கட்டத்தில் மிகவும் பின்தங்கியே இருந்தது. கடைசி கட்டத்தில் ஜேம்ஸ் நீஷத்தின் (3 சிக்சருடன் 27 ரன்) சரவெடி ஆட்டமும், தொடக்க ஆட்டக்காரர் டேரில் மிட்செலின் (72 ரன்) உறுதியான பேட்டிங்கும் நியூசிலாந்துக்கு ஒரு ஓவர் மீதம் வைத்து வெற்றியை தேடித்தந்தது.

    கையில் ஏற்பட்ட காயத்தால் விக்கெட் கீப்பர் டிவான் கான்வே விலகியது நியூசிலாந்துக்கு பின்னடைவாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில் (180 ரன்), டேரில் மிட்செல் (197 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. கேப்டன் வில்லியம்சன் அரைஇறுதியில் சோபிக்காவிட்டாலும் நெருக்கடியான சூழலில் திறம்பட செயல்படக்கூடியவர். இதே போல் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷத்தின் பங்களிப்பும் அந்த அணிக்கு கைகொடுக்கிறது.

    பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (11 விக்கெட்), டிம் சவுதி (8 விக்கெட்), ஆடம் மில்னே நம்பிக்கை அளிக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் சோதி (6 ஆட்டத்தில் 9 விக்கெட்) அந்த அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பவுலராக திகழ்கிறார். ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

    வெறும் 50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நியூசிலாந்து சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. ஆனாலும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் (50 ஓவர் மற்றும் 20 ஓவர்) அந்த அணி இதுவரை எந்த உலக கோப்பையையும் வென்றதில்லை.

    இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால் நியூசிலாந்துக்கு அது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமையும். மேலும் 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. அதற்கு பழிதீர்க்க இது சரியான தருணமாகும்.

    50 ஓவர் உலக கோப்பையை 5 முறை வசப்படுத்தியுள்ள ஆஸ்திரேலியாவுக்கு 20 ஓவர் உலக கோப்பை தான் இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. அதை வெல்வதற்கு இப்போது அரிய சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சூப்பர்-12 சுற்றின் லீக் சுற்றில் 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் ‘ரன்ரேட்’ அடிப்படையில் அரைஇறுதியை எட்டியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட பாகிஸ்தானை அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா சாய்த்தது.

    ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை டேவிட் வார்னரின் (2 அரைசதத்துடன் 236 ரன்) ரன்வேட்டையும், ஆடம் ஜம்பாவின் சுழல் ஜாலமும் தான் (12 விக்கெட்) எழுச்சிக்கு முக்கிய காரணம். மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் ஆகியோரும் ஓரளவு பார்மில் உள்ளனர். ஆனால் கிளைன் மேக்ஸ்வெல் (6 ஆட்டத்தில் 36 ரன்), ஸ்டீவன் சுமித் (69 ரன்) ஆகியோரிடம் இருந்து இதுவரை பெரிய அளவில் அதிரடி வெளிப்படவில்லை. இவர்கள் மிரட்டினால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வலுவடையும்.

    மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உலக கோப்பையில் ‘டாஸ்’ தான் வெற்றியை தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகிக்கிறது. இரவில் பனியின் தாக்கத்தில் பந்துவீசுவது உண்மையிலேயே சவாலானதாகும். அத்தகைய சூழலில் பேட்டிங்குக்கு எளிதாகி விடுகிறது. இரண்டு அரைஇறுதியிலும் 2-வது பேட்டிங் செய்த அணிகள் வெற்றி கண்டதே அதற்கு சாட்சி.

    அத்துடன் துபாய் மைதானத்தில் நடப்பு தொடரில் நடந்துள்ள 12 ஆட்டங்களில் 11-ல் 2-வது பேட்டிங் செய்த அணிக்குத் தான் வெற்றி கிடைத்திருக்கிறது. எனவே டாசும் இந்த முறை கவனத்தை ஈர்த்துள்ளது.

    சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் ஆஸ்திரேலியாவும், 4-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 20 ஓவர் உலக கோப்பையில் ஒரே ஒரு முறை சந்தித்துள்ளது. 2016-ம் ஆண்டு தர்மசாலாவில் நடந்த அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 8 ரன்னில் ஆஸ்திரேலியாவை வென்று இருந்தது.

    சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், வில்லியம்சன் (கேப்டன்), கிளைன் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி, டிரென்ட் பவுல்ட்.

    ஆஸ்திரேலியா: வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

    இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    ஹால் ஆப் பேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    கொழும்பு:

    சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சாதித்த வீரர்களை ஹால் ஆப் பேம் என்ற புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது.

    இந்நிலையில், ஹால் ஆப் பேம் என்ற அந்தப் பட்டியலில் புதியதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    2014ல் இலங்கை அணி டி20 உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தார். மேலும், ஐசிசி நடத்திய 4 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பங்கேற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அணியின் முரளீதரன், சங்ககராவை தொடர்ந்து ஹால் ஆப் பேம் விருது பெறும் 3வது வீரர் ஆவார்.

    இதேபோல், தென் ஆப்பிரிக்காவின் ஆல் ரவுண்டரான ஷான் பொல்லாக்கை இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார். இவர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 3000 ரன்கள் மற்றும் 300 விக்கெட்டுகள் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 
      
    மேலும், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீராங்கனையான மறைந்த ஜானெட் பிரிட்டின் பெயரும் இந்தப் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
    போட்டியில் பங்கேற்பதற்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என பிசிசிஐ கூறியிருந்தது

    சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆனால் இந்த அணியில் நட்சத்திர வீரர் முரளி விஜய் இதுவரை இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

    போட்டியில் பங்கேற்பதற்கு கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளவதுடன்,  ஒரு வாரத்துக்கு முன்பு கொரோனா தடுப்பு வளையத்தில் கட்டாயம் இருக்குமாறு பிசிசிஐ தெரிவித்திருந்தது.

    ஆனால், முரளி விஜய் தடுப்பூசி போட தயங்குவதுடன், ஒரு வாரம்  தடுப்பு வளையத்தில் இருக்கவும் விரும்பவில்லை என கூறப்படுகிறது.  இதனால், சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கான அணியில் முரளி விஜய் பெயரை தேர்வுக்குழுவினர் பரிசீலனை செய்யவில்லை என்றும், முரளியால் போட்டியில் பங்கேற்க முடியாது என்றும் ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி முரளி விஜய் தரப்பில் இதுகுறித்து விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை. 

    கடந்த வருட ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணிக்காக விளையாடினார் முரளி விஜய். அதன்பிறகு அவர் வேறு எந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்த வருடம் டிஎன்பிஎல் போட்டியிலிருந்தும் விலகினார். 

    தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் டிவிஷன் லீக் போட்டியிலும் முரளி விஜய் விளையாடாததால் சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டிக்கு அவரை தேர்வு செய்வதில் தமிழகத் தேர்வுக்குழுவினர் ஆர்வம் செலுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது.
    டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வி வேதனையாக இருந்தாலும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறி உள்ளார்.

    டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப்-2 பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் முதல் ஆட்டத்திலிருந்தே சிறப்பாக விளையாடி வந்தது. இளம் வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனால், அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் அடித்தபோதிலும் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோல்வி அடைந்தது. 

    டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்ட நிலையில் அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்கள் சோர்வடைந்தனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சக வீரர்களிடையே பேசுகையில், “நாம் முதல் ஆட்டதிலிருந்தே நன்றாக விளையாடி வந்தோம். அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும்  சாக்லைன் முஷ்டாக், மேத்யூ ஹேடன் மிக சிறப்பாக விளையாடியது பெருமைப்படக்கூடியது.  அணி நிர்வாகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 

    இந்த தோல்வி வேதனையாக இருந்தாலும்,  அடுத்து எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.  அதேபோல,  இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய இந்த ஒற்றுமை உடைந்து போய்விடக் கூடாது.  தோல்விக்கு யாரும் யார் மீதும் குற்றம் சொல்லக் கூடாது. ஒரு குழுவாக நாம் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஏற்க வேண்டும். 

    இந்த போட்டியில் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். தோல்வி என்றாலும் இது எங்களுக்கு ஒரு பாடமாக பார்க்கிறோம். அதேபோல,  எதிர்காலத்தில் இந்தத் தவறு நடக்காமல் இருக்க நாம் தடுக்க வேண்டும். நம்முடைய இந்த ஒற்றுமை உடைந்துவிடக் கூடாது என்று அனைவரிடமும் கேட்கிறேன். ஒருநாள் இரவில் இந்த ஒற்றுமை வரவில்லை. இந்த ஒரு தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்.

    ஒரு கேப்டனாக உங்களிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைத்தது, சிறந்த சூழலாக இருந்தது, ஒரு குடும்பமாக இருந்தோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உழைப்பை அளித்தீர்கள், யாரும் பொறுப்பேற்காமல் இல்லை. தோல்வியைப் பற்றியும், சோர்வைப் பற்றியும் யாரும் சிந்திக்கத் தேவையில்லை. எதில் தவறு செய்தோம், எதை முன்னேற்ற வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.

    எந்த வீரரும் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார் என்ற செய்தியை நான் கேட்கக்கூடாது. இந்தத் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வோம், மகிழ்ச்சியாக இருப்போம். இந்த வலி நமக்கு இருக்கும், அதைக் கடந்து வர வேண்டும்” என தெரிவித்தார்.
    ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
    புதுடெல்லி:

    ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் தேசிய விளையாட்டு விருதுகள் வழங்கப்படுகின்றன. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருது வழங்கும் விழா டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் விருதுகளை வழங்கி வாழ்த்தினார்.

    ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு மேஜர் தயான் சந்த் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது. பிரமோத் போகத் (பாரா-பேட்மிண்டன்), மிதாலி ராஜ் (கிரிக்கெட்), சுனில் சேத்ரி (கால்பந்து), மன்பிரீத் சிங் (ஹாக்கி) ஆகியோருக்கும் கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.

    விருது பெற்ற அவனி லெகாரா
     
    இதேபோல் மல்யுத்த வீரர் ரவிக்குமார், குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹைன், ஹாக்கி வீரர் ஸ்ரீஜேஷ், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை (துப்பாக்கி சுடும் போட்டி) அவனி லெகாரா, பாரா- தடகள வீரர் சுமித் அன்டில் ஆகியோரும் தயான் சந்த் கேல் ரத்னா விருது பெற்றனர்.
    5 தடவை ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா அணி தற்போது நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவரில் சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது.
    துபாய்:

    ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டிவிட்டது.

    இதன் இறுதிப்போட்டி துபாயில் நாளை (14-ந்தேதி) நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா- வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் இதுவரை 20 ஓவர் உலக கோப்பையை வென்றது இல்லை. இதனால் முதல் முறையாக சாம்பியன் பட்டம் பெறப்போவது ஆஸ்திரேலியாவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ஆஸ்திரேலிய அணி 2-வது முறையாக இறுதிப்போட்டியில் ஆடுகிறது. இதற்கு முன்பு 2010-ல் இங்கிலாந்திடம் தோற்று கோப்பையை இழந்தது.

    5 தடவை ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்ற அந்த அணி தற்போது நியூசிலாந்தை வீழ்த்தி முதல் முறையாக 20 ஓவரில் சாம்பியன் பட்டம் பெறும் ஆர்வத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி இந்த தொடரில் ஒரே ஒரு ஆட்டத்தில் மட்டுமே தோற்று இருந்தது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் ஆஸ்திரேலிய அணி சம பலத்துடன் திகழ்கிறது.

    பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 அரை சதத்துடன் 236 ரன் எடுத்துள்ளார். மேத்யூ வாடே, ஸ்டோனிஸ் போன்ற அதிரடி வீரர்களும் இருக்கிறார்கள். ஸ்டீவ் சுமித், மிச்செல் மார்ஷ் ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள்.

    பந்துவீச்சில் ஆடம் சம்பா (12 விக்கெட்), ஸ்டார்க் (9), ஹாசல்வுட் (8) தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள்.

    நியூசிலாந்து அணி முதல்முறையாக 20 ஓவர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

    2015-ல் ஒருநாள் போட்டி உலககோப்பை இறுதிப் போட்டியில் அந்த அணி ஆஸ்திரேலியாவிடம் தோற்று இருந்தது. இதற்கு நாளை இறுதிப்போட்டியில் பதிலடி கொடுத்து முதல்முறையாக 20 ஓவர் உலக கோப்பையை வெல்லும் வேட்கையில் நியூசிலாந்து உள்ளது.

    கேன் வில்லியம்சன்

    ஆஸ்திரேலியாவை போலவே நியூசிலாந்தும் இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோற்று உள்ளது.

    நியூசிலாந்து அணியிலும் உலகின் தலைசிறந்த வீரர்கள் உள்ளனர். மிச்சேல் (197 ரன்), கப்தில் (180 ரன்), கேப்டன் வில்லியம்சன், ஜிம்மி நீசம் ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையிலும், போல்ட் (11 விக்கெட்), சோதி (9) சவுத்தி (8) ஆகியோர் பந்து வீச்சில் நல்ல நிலையிலும் உள்ளனர்.

    இரு அணிகளும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும். 
    இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக இருந்த கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியதாவது:-

    20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகுவார். ஆனால் இப்போது உடனடியாக விலகுவார் என்றால் சொல்ல முடியாது. அதே நேரத்தில் டெஸ்ட் கேப்டன் பதவியில் அவர் நீடிக்க  வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் பேட்டிங்கிலும், டெஸ்ட் கேப்டனிலும் மட்டுமே கவனம் செலுத்தலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்திய அணியின் 3 நிலைக்கும் கேப்டனாக இருந்த கோலி 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து சமீபத்தில் விலகினார். 
    நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான டேவன் கான்வே இந்தியா உடனான தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    துபாய்:

    அபுதாபியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் லிவிங்ஸ்டோன் வீசிய பந்தை நியூசிலாந்தின் டேவன் கான்வே சில அடி இறங்கி வந்து அடிக்க முயன்றார். அப்போது விக்கெட் கீப்பர் பட்லரால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு அவுட்டானார்.

    இந்த ஏமாற்றத்தால் அவர் தனது பேட்டில் கையால் ஓங்கி குத்தினார். இதில் காயமடைந்த அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதற்கிடையே, 7-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் துபாயில் நாளை நடைபெறும் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்நிலையில், கைவிரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து அணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான டேவன் கான்வே இறுதிப் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.

    அத்துடன் இந்திய தொடரில் இருந்தும் அவர் ஒதுங்கியுள்ளார். கான்வேயின் விலகல் நியூசிலாந்துக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
    நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது.

    20 ஓவர் போட்டிகள் வருகிற 17, 19 மற்றும் 21-ந் தேதிகளிலும், முதல் டெஸ்ட் 25 முதல் 29-ந் தேதி வரையிலும், 2-வது டெஸ்ட் டிசம்பர் 3 முதல் 7-ந் தேதி வரையிலும் நடக்கிறது.

    20 ஓவர் போட்டிக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. கோலி பதவி விலகியதால், ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதோடு 20 ஓவர் தொடரிலும் கோலி ஆடவில்லை.

    இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.

    முதல் டெஸ்டில் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முகமது ‌ஷமி, பும்ரா ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. கோலி 2-வது டெஸ்டில் கேப்டனாக பணியாற்றுவார். முதல் டெஸ்ட் போட்டிக்கு ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல விக்கெட் கீப்பர் ரி‌ஷப்பண்டும் டெஸ்ட் தொடருக்கான அணியில் இல்லை. கே.எஸ்.பரத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    டெஸ்ட் அணி வீரர்கள் விவரம் வருமாறு:

    ரகானே (கேப்டன்), புஜாரா (துணை கேப்டன்), லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், சுப்மன்கில், ஸ்ரேயாஷ் அய்யர், விருத்திமான் சகா, கே.எஸ்.பரத் (இருவரும் விக்கெட் கீப்பர்), ஜடேஜா, அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.

    20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் தற்போது 7-வது இடத்தில் உள்ளார்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரைஇறுதியில் பாகிஸ்தான் கேப்டன் பாபர்அசாம் 34 பந்தில் 39 ரன் எடுத்தார். இதில் 32-வது ரன்னை தொட்டபோது அவர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் 2,500 ரன்னை எடுத்தார். 62 இன்னிங்சில் அவர் இந்த ரன்னை தொட்டார். இதன் மூலம் விராட் கோலியின் சாதனையை முறியடித்தார். விராட் கோலி 68 இன்னிங்சில் 2,500 ரன்னை தொட்டிருந்தார். தற்போது இந்த ரன்னை தொட்ட அதிவேக வீரர் என்ற சாதனையில் பாபர் ஆசம் உள்ளார்.

    பாபர் ஆசம் 62 இன்னிங்சில் 2,507 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.21 ஆகும். ஒரு சதமும், 24 அரை சதமும் அடித்துள்ளார். அதிகபட்சமாக 122 ரன் குவித்துள்ளார். 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் அவர் தற்போது 7-வது இடத்தில் உள்ளார். கோலி 3,227 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    பாபர் ஆசம் இந்த உலக கோப்பையில் 300-க்கு மேற்பட்ட ரன்னை தொட்டுள்ளார். இதன் மூலம் ஒரு உலக கோப்பையில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 3-வது இடத்தை பிடித்தார். அவர் 6 ஆட்டத்தில் 4 அரை சதத்துடன் 303 ரன் எடுத்துள்ளார். சராசரி 60.60 ஆகும். ஸ்டிரைக் ரேட் 126.25 ஆகும். விராட் கோலி 2014 உலக கோப்பையில் 319 ரன்னும், 2016 உலக கோப்பையில் 317 ரன்னும் எடுத்தார்.

    பாபர் ஆசம் தனது முதல் உலக கோப்பையிலேயே அதிக ரன் எடுத்து மேத்யூ ஹைடன் (ஆஸ்திரேலியா) சாதனையை முறியடித்தார். மேத்யூ ஹைடன் 2007 அறிமுக உலக கோப்பையில் 265 ரன் எடுத்திருந்தார்.

    ×