search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாபர் அசாம்
    X
    பாபர் அசாம்

    தோல்விக்கு யாரும் யார் மீதும் குற்றம் சொல்லக் கூடாது -பாபர் அசாம்

    டி20 உலகக் கோப்பை அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வி வேதனையாக இருந்தாலும், அதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் கூறி உள்ளார்.

    டி20 உலகக் கோப்பைப் போட்டியில் குரூப்-2 பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தான் முதல் ஆட்டத்திலிருந்தே சிறப்பாக விளையாடி வந்தது. இளம் வீரர்களும் சிறப்பாக ஆடினர். ஆனால், அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி 176 ரன்கள் அடித்தபோதிலும் ஆஸ்திரேலியாவிடம் போராடித் தோல்வி அடைந்தது. 

    டி20 உலகக் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்ட நிலையில் அரையிறுதியில் ஏற்பட்ட தோல்வியால் வீரர்கள் சோர்வடைந்தனர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் சக வீரர்களிடையே பேசுகையில், “நாம் முதல் ஆட்டதிலிருந்தே நன்றாக விளையாடி வந்தோம். அரையிறுதியில் தோல்வி அடைந்தாலும்  சாக்லைன் முஷ்டாக், மேத்யூ ஹேடன் மிக சிறப்பாக விளையாடியது பெருமைப்படக்கூடியது.  அணி நிர்வாகத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். 

    இந்த தோல்வி வேதனையாக இருந்தாலும்,  அடுத்து எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆய்வு செய்ய வேண்டும்.  அதேபோல,  இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். நம்முடைய இந்த ஒற்றுமை உடைந்து போய்விடக் கூடாது.  தோல்விக்கு யாரும் யார் மீதும் குற்றம் சொல்லக் கூடாது. ஒரு குழுவாக நாம் சிறப்பாக விளையாடவில்லை என்பதை ஏற்க வேண்டும். 

    இந்த போட்டியில் நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். தோல்வி என்றாலும் இது எங்களுக்கு ஒரு பாடமாக பார்க்கிறோம். அதேபோல,  எதிர்காலத்தில் இந்தத் தவறு நடக்காமல் இருக்க நாம் தடுக்க வேண்டும். நம்முடைய இந்த ஒற்றுமை உடைந்துவிடக் கூடாது என்று அனைவரிடமும் கேட்கிறேன். ஒருநாள் இரவில் இந்த ஒற்றுமை வரவில்லை. இந்த ஒரு தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல், ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டும்.

    ஒரு கேப்டனாக உங்களிடம் இருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைத்தது, சிறந்த சூழலாக இருந்தது, ஒரு குடும்பமாக இருந்தோம். ஒவ்வொருவரும் தங்களால் முடிந்த உழைப்பை அளித்தீர்கள், யாரும் பொறுப்பேற்காமல் இல்லை. தோல்வியைப் பற்றியும், சோர்வைப் பற்றியும் யாரும் சிந்திக்கத் தேவையில்லை. எதில் தவறு செய்தோம், எதை முன்னேற்ற வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவோம்.

    எந்த வீரரும் அணியிலிருந்து கழற்றிவிடப்பட்டார் என்ற செய்தியை நான் கேட்கக்கூடாது. இந்தத் தோல்வியிலிருந்து கற்றுக்கொள்வோம், மகிழ்ச்சியாக இருப்போம். இந்த வலி நமக்கு இருக்கும், அதைக் கடந்து வர வேண்டும்” என தெரிவித்தார்.
    Next Story
    ×