search icon
என் மலர்tooltip icon

  செய்திகள்

  உலக கோப்பையுடன் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்.
  X
  உலக கோப்பையுடன் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்.

  20 ஓவர் உலக கோப்பையை வெல்லப்போவது யார்? இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இன்று மோதல்

  20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் இன்றிரவு துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
  துபாய்:

  ‘இது ஒரு சிறந்த ஆட்டமாக இருக்கும். நியூசிலாந்து அருமையான அணி. கடந்த 6 ஆண்டுகளில் ஐ.சி.சி. நடத்திய பெரும்பாலான போட்டிகளில் இறுதிப்போட்டிக்கு வந்து இருக்கிறார்கள். எனவே அவர்களை குறைத்து மதிப்பிட முடியாது.

  - ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச்.

  ‘உலக கோப்பை இறுதிப்போட்டியில் எங்களது அண்டைநாடுடன் மோத இருப்பது சிறப்பானது. உண்மையிலேயே இரு நாட்டு வீரர்களும் உற்சாகமடைந்துள்ளனர். ஒரு அணியாக சாதிப்பதற்கு எங்களுக்கு இது இன்னொரு வாய்ப்பு’

  - நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன்

  7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமீரகத்தில் கடந்த மாதம் 17-ந்தேதி தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் முதல் சுற்று மற்றும் சூப்பர்-12 சுற்று முடிவில் நியூசிலாந்தும், ஆஸ்திரேலியாவும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன. கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருந்த இங்கிலாந்து அரைஇறுதியுடன் வெளியேற்றப்பட்டது. விராட் கோலி தலைமையில் பங்கேற்ற இந்திய அணி சூப்பர்-12 சுற்றை கூட தாண்டவில்லை.

  இந்த நிலையில் கோப்பை யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் இன்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) மோதுகின்றன. ஆஸ்திரேலிய அணி இதற்கு முன்பு 2010-ம் ஆண்டில் இறுதிப்போட்டி வரை முன்னேறி இங்கிலாந்திடம் கோட்டை விட்டது. நியூசிலாந்து இறுதி சுற்றை அடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும். அதனால் யார் மகுடம் சூடினாலும் அவர்களுக்கு இது முதலாவது 20 ஓவர் உலக கோப்பையாக இருக்கும்.

  கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி சூப்பர்- 12 சுற்றில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் அரைஇறுதிக்கு வந்தது. அரைஇறுதியில் பலம் வாய்ந்த இங்கிலாந்தை எதிர்கொண்ட நியூசிலாந்து 167 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய போது ஒரு கட்டத்தில் மிகவும் பின்தங்கியே இருந்தது. கடைசி கட்டத்தில் ஜேம்ஸ் நீஷத்தின் (3 சிக்சருடன் 27 ரன்) சரவெடி ஆட்டமும், தொடக்க ஆட்டக்காரர் டேரில் மிட்செலின் (72 ரன்) உறுதியான பேட்டிங்கும் நியூசிலாந்துக்கு ஒரு ஓவர் மீதம் வைத்து வெற்றியை தேடித்தந்தது.

  கையில் ஏற்பட்ட காயத்தால் விக்கெட் கீப்பர் டிவான் கான்வே விலகியது நியூசிலாந்துக்கு பின்னடைவாகும். தொடக்க ஆட்டக்காரர்கள் மார்ட்டின் கப்தில் (180 ரன்), டேரில் மிட்செல் (197 ரன்) ஆகியோரைத் தான் அந்த அணி அதிகமாக சார்ந்து இருக்கிறது. கேப்டன் வில்லியம்சன் அரைஇறுதியில் சோபிக்காவிட்டாலும் நெருக்கடியான சூழலில் திறம்பட செயல்படக்கூடியவர். இதே போல் ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷத்தின் பங்களிப்பும் அந்த அணிக்கு கைகொடுக்கிறது.

  பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (11 விக்கெட்), டிம் சவுதி (8 விக்கெட்), ஆடம் மில்னே நம்பிக்கை அளிக்கிறார்கள். சுழற்பந்து வீச்சாளர் சோதி (6 ஆட்டத்தில் 9 விக்கெட்) அந்த அணியில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பவுலராக திகழ்கிறார். ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தது ஒரு விக்கெட் வீழ்த்தி அசத்தியுள்ளார்.

  வெறும் 50 லட்சம் மக்கள் தொகையை கொண்ட நியூசிலாந்து சமீபத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. ஆனாலும் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் (50 ஓவர் மற்றும் 20 ஓவர்) அந்த அணி இதுவரை எந்த உலக கோப்பையையும் வென்றதில்லை.

  இன்றைய ஆட்டத்தில் வாகை சூடினால் நியூசிலாந்துக்கு அது வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக அமையும். மேலும் 2015-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது. அதற்கு பழிதீர்க்க இது சரியான தருணமாகும்.

  50 ஓவர் உலக கோப்பையை 5 முறை வசப்படுத்தியுள்ள ஆஸ்திரேலியாவுக்கு 20 ஓவர் உலக கோப்பை தான் இன்னும் எட்டாக்கனியாக உள்ளது. அதை வெல்வதற்கு இப்போது அரிய சந்தர்ப்பம் கனிந்துள்ளது.

  ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி சூப்பர்-12 சுற்றின் லீக் சுற்றில் 4-ல் வெற்றி, ஒன்றில் தோல்வியுடன் ‘ரன்ரேட்’ அடிப்படையில் அரைஇறுதியை எட்டியது. தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்ட பாகிஸ்தானை அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா சாய்த்தது.

  ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை டேவிட் வார்னரின் (2 அரைசதத்துடன் 236 ரன்) ரன்வேட்டையும், ஆடம் ஜம்பாவின் சுழல் ஜாலமும் தான் (12 விக்கெட்) எழுச்சிக்கு முக்கிய காரணம். மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட் ஆகியோரும் ஓரளவு பார்மில் உள்ளனர். ஆனால் கிளைன் மேக்ஸ்வெல் (6 ஆட்டத்தில் 36 ரன்), ஸ்டீவன் சுமித் (69 ரன்) ஆகியோரிடம் இருந்து இதுவரை பெரிய அளவில் அதிரடி வெளிப்படவில்லை. இவர்கள் மிரட்டினால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வலுவடையும்.

  மொத்தத்தில் இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. எல்லாவற்றுக்கும் மேலாக இந்த உலக கோப்பையில் ‘டாஸ்’ தான் வெற்றியை தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகிக்கிறது. இரவில் பனியின் தாக்கத்தில் பந்துவீசுவது உண்மையிலேயே சவாலானதாகும். அத்தகைய சூழலில் பேட்டிங்குக்கு எளிதாகி விடுகிறது. இரண்டு அரைஇறுதியிலும் 2-வது பேட்டிங் செய்த அணிகள் வெற்றி கண்டதே அதற்கு சாட்சி.

  அத்துடன் துபாய் மைதானத்தில் நடப்பு தொடரில் நடந்துள்ள 12 ஆட்டங்களில் 11-ல் 2-வது பேட்டிங் செய்த அணிக்குத் தான் வெற்றி கிடைத்திருக்கிறது. எனவே டாசும் இந்த முறை கவனத்தை ஈர்த்துள்ளது.

  சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகளும் இதுவரை 14 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 9-ல் ஆஸ்திரேலியாவும், 4-ல் நியூசிலாந்தும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 20 ஓவர் உலக கோப்பையில் ஒரே ஒரு முறை சந்தித்துள்ளது. 2016-ம் ஆண்டு தர்மசாலாவில் நடந்த அந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 8 ரன்னில் ஆஸ்திரேலியாவை வென்று இருந்தது.

  சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.12 கோடியும், 2-வது இடத்தை பெறும் அணிக்கு ரூ. 6 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும்.

  போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

  நியூசிலாந்து: மார்ட்டின் கப்தில், டேரில் மிட்செல், வில்லியம்சன் (கேப்டன்), கிளைன் பிலிப்ஸ், டிம் செய்பெர்ட், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், ஆடம் மில்னே, டிம் சவுதி, சோதி, டிரென்ட் பவுல்ட்.

  ஆஸ்திரேலியா: வார்னர், ஆரோன் பிஞ்ச் (கேப்டன்), மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மேத்யூ வேட், கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

  இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

  Next Story
  ×