என் மலர்
விளையாட்டு
- லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது.
- இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி 16-13 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. 4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இந்த நிலையில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதி போட்டிக்குள் நுழைந்து வரலாறு படைத்துள்ளது. இதன் மூலம் காமன்வெல்த் தொடரில் லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய அணி முதல் முறையாக தங்கம் அல்லது வெள்ளி பதக்கத்தை உறுதி செய்துள்ளது. லவ்லி சௌபே , பிங்கி, நயன்மோனி சைகியா மற்றும் ரூபா ராணி டிர்கி அடங்கிய இந்திய மகளிர் அணி வெற்றி பெற்றனர்.
இந்த போட்டியில் இந்திய பெண்கள் அணி 16-13 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது. இந்திய அணி இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. வரலாறு படைத்த இந்திய அணி வீராங்கனைகள் ஆனந்த கண்ணீர் மூலம் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டனர்.
- இந்திய அணி 11.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து பாகிஸ்தானை தோற்கடித்தது.
- இந்திய அணி வீராங்கனை மந்தனா 63 ரன்கள் குவித்தார்.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.
இந்த போட்டியின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டாஸ் போடுவது தாமதமானது. மழையின் காரணமாக போட்டியில் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி 18 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 11.4 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் ஸ்மிரிதி மந்தனா அரை சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் சேசிங்கில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவுக்குப் பிறகு 1000-க்கும் மேற்பட்ட ரன்களைக் கடந்த மூன்றாவது இந்திய பேட்டர் என்ற பெருமையை மந்தனா பெற்றுள்ளார். மந்தனா 1059 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கோலி மற்றும் ரோகித் முறையே 1789 மற்றும் 1375 ரன்கள் குவித்துள்ளனர்.
- ஜூடோ ஆண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜஸ்லீன் சிங் சைனி, மேக்சென்ஸ் குகோலாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
- இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்துள்ளது.
பர்மிங்காம்:
72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
இந்தியா இதுவரை மூன்று தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றுள்ளது. 4-வது நாளான இன்று பல்வேறு விளையாட்டுகளில் இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். இன்று லான் பவுல்ஸ் போட்டியில் இந்திய மகளிர் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பதக்கத்தை உறுதி செய்து வரலாறு படைத்துள்ளது.
இந்த நிலையில் ஜூடோ போட்டியில் பெண்களுக்கான 57 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் சுசிகா தாரியல் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இன்று விளையாடினார். இந்த போட்டியில் சுசிகா தாரியல், ஜாம்பியாவின் ரீட்டா கபிந்தாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளார்.
அதே போல் ஜூடோ ஆண்களுக்கான 66 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ஜஸ்லீன் சிங் சைனி, மேக்சென்ஸ் குகோலாவை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.
- இறுதிப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது.
- 56 ஆண்டு கால ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணி வென்றுள்ளது.
லண்டன்:
ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்றது. இதில், இங்கிலாந்து - ஜெர்மனி அணிகள் மோதின. பரபரப்பாக நடந்த இப்போட்டியில் 2-1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனியை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 56 ஆண்டு கால ஐரோப்பிய பெண்கள் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டியின் வரலாற்றில் முதல் முறையாக இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
இந்த வெற்றிக்கு பின் இங்கிலாந்து பெண்கள் கால்பந்து அணியின் மேலாளர், நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிகழ்வு பல்வேறு தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. அப்போது, அங்கு வந்த இங்கிலாந்து கால்பந்து வீராங்கனைகள் செய்தியாளர் சந்திப்பில் பேசிக்கொண்டிருந்த அணியின் மேலாளர், நிர்வாகிகளுக்கு நடுவே சென்றனர்.
மேலும், அவர்களை சுற்றி ஆடி பாடி கொண்டாடினர். இப்போது, செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்தில் இருந்த மேஜை மீது ஏறிய இங்கிலாந்து அணியின் கோல் கீப்பர் மற்றும் வீராங்கனைகள் ஆட்டம்போட்டனர். இந்த நிகழ்வால் அங்கு கூடியிருந்த அனைவரும் மகிழ்சி வெள்ளத்தில் ஆரவாரமடைந்தனர்.
England players gatecrash Sarina Wiegman's press conference singing "it's coming home"😂😂😂 pic.twitter.com/0MZFPTAX9p
— Kathryn Batte (@KathrynBatte) July 31, 2022
செய்தியாளர் சந்திப்பின்போது வீராங்கனைகள் ஆடி பாடி தங்கள் வெற்றி மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வு இங்கிலாந்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 21 டி20 போட்டிகளில் விளையாடி 14 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.
- இந்திய அணி 2-வது டி20 போட்டியில் வெற்றி பெற்றால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 15 வெற்றிகளை பெறும்.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தியது.
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் பாகிஸ்தான் அணியின் முக்கிய சாதனை ஒன்றை டி20 கிரிக்கெட்டில் சமன் செய்யும் மிகப்பெரிய வாய்ப்பு இந்திய அணிக்கு கிடைத்துள்ளது.
இதுவரை இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 21 டி20 போட்டிகளில் விளையாடி 14 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதே வேளையில் பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 21 டி20 போட்டிகளில் விளையாடி 15 வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 15 வெற்றிகளை பெற்று இந்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பாகிஸ்தான் அணியுடன் இந்திய அணியும் இந்த சாதனையை சமன் செய்யும்.
இதன் மூலம் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்த சாதனை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தினை பிடிக்கும். அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக வெற்றிகளை பெற்ற அணியாக இந்திய அணி தான் இந்த பட்டியலிலும் முதலிடம் வகிக்கிறது.
டி20 கிரிக்கெட்டினை பொறுத்தவரை இந்திய அணியானது இலங்கை அணிக்கு எதிராக மட்டும் டி20 கிரிக்கெட்டில் 17 முறை வெற்றிகளை பெற்றுள்ளது. அதேபோன்று இரண்டாவது இடத்தில் பாகிஸ்தான அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 16 வெற்றிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நீச்சல், சைக்கிளிங், பளு தூக்குதல், ஸ்குவாஷ், லான்பவுல்ஸ் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது.
- இந்கிய ஆண்கள் ஹாக்கி அணி இங்கிலாந்துடன் மோதல் (இரவு 8.30 மணி).
காமன்வெல்த் விளையாட்டில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டிகள் வருமாறு :-
பேட்மின்டன்
கலப்பு அணிகள் பிரிவில் அரை இறுதியில் சிங்கப்பூருடன் மோதல் (இரவு 10 மணி ).
குத்துச்சண்டை
அமித்பங்கல் (51 கிலோ பிரிவு ) 2-வது சுற்றில் வானுத்து நாட்டு வீரர் நம்ரி பெரியுடன் மோதல். முகமது ஹூசாமுதீன் (57 கிலோ பிரிவு ) 2-வது சுற்றில் வங்காளதேச வீரரை சலீம் ஹூசைனை சந்திக்கிறார். (மாலை 4. 45 மணி முதல் 6 மணி வரை) சுமித் குண்டு ( 75 கிலோ பிரிவு) மோதும் போட்டி ( நள்ளிரவு 12.15 மணி).
ஹாக்கி
இந்கிய ஆண்கள் அணி இங்கிலாந்துடன் மோதல் (இரவு 8.30 மணி).
ஜூடோ
விஜயகுமார் யாதவ் ( 60 கிலோ ), ஜஸ்லீன் சிங் சைனி ( 66 கிலோ ), சுசிலா லிங்கபம் ( 48 கிலோ ), சுகிலா டாரியல் ( 57 கிலோ)
டேபிள் டென்னிஸ்
ஆண்கள் அணிகள் அரை இறுதி ( இரவு 11.30)
இது தவிர நீச்சல், சைக்கிளிங், பளு தூக்குதல், ஸ்குவாஷ், லான்பவுல்ஸ் போட்டிகளிலும் இந்தியா பங்கேற்கிறது.
- சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் சாதனையுடன் 4-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது.
- ஒரு ஓவர் வீசியிருந்தால் போட்டியின் முடிவு எங்கள் பக்கம் வந்து இருக்கும்.
கோவை:
6-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் கோவையில் நேற்று நடந்தது.
இதில் நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின.
பலத்த மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரம் தாமதம் ஆனது. இதனால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 138 ரன் எடுத்தது. சாய் சுதர்ஷன் 42 பந்தில் 65 ரன்னும் ( 8 பவுண்டரி, 1 சிக்சர்), கேப்டன் ஷாருக்கான் 17 பந்தில் 22 ரன்னும் (2 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். சந்தீப் வாரியர், சாய் கிஷோர் 3 விக்கெட்டும், சோனு யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
17 ஓவர்களில் 139 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி பின்னர் ஆடியது. 4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்து இருந்த போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
மழை நீடித்ததால் ஆட்டத்தை தொடர முடியவில்லை. 5 ஓவர் நடந்து இருந்தால் டக்வொர்த்-லீவிஸ் விதி முறைப்படி முடிவு அறிவிக்கப்பட்டு இருக்கும்.
அதற்கு வசதி இல்லாததால் போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனால் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்-கோவை கிங்ஸ் அணிகள் கூட்டாக சாம்பியன்களாக அறிவிக்கப்பட்டு கோப்பையை பகிர்ந்து கொண்டன.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஹாட்ரிக் சாதனையுடன் 4-வது முறையாக டி.என்.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு 2017, 2019, 2021 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கவுசிக்காந்தி கூறியதாவது:-
உண்மையில் யாரும் எதிர் பார்க்காத முடிவு. ஆனாலும் கண்டிப்பாக மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. சந்தீப் வாரியர், சாய் கிஷோர் ஆகியோர் எங்கள் அணியின் சாம்பியன் பந்து வீச்சாளர்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை கிங்ஸ் அணி கேப்டன் ஷாருக்கான் கூறும் போது, 'முதன் முறையாக பட்டத்தை இணைந்து பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருந்தாலும் இந்த முடிவு சற்று ஏமாற்றத்தை அளிக்கிறது. ஒரு ஓவர் வீசியிருந்தால் போட்டியின் முடிவு எங்கள் பக்கம் வந்து இருக்கும்.
இருந்தாலும் இந்த வருடம் எங்கள் அணியின் ஆட்டம் குறிப்பிட்டு சொல்லும்படி இருந்தது' என்றார்.
- காமன்வெல்த் விளையாட்டில் அவர் பங்கேற்றது யாருக்கும் தெரியாது.
- அரசின் ஆதரவு தேவை என அச்சிந்தா சகோதரர் கோரிக்கை.
காமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கிய அவர், இந்தியாவிற்கு 3வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.
இந்நிலையில் அச்சிந்தா ஷூலி இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று மூவர்ணக் கொடியை உயரப் பறக்க வைத்தார், ஒரே முயற்சியில் முதலிடத்தை பிடித்த நீங்கள் தான் வரலாறு படைத்த சாம்பியன் என்றும் கூறியுள்ளார்.

இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமை மிகுந்தக அச்சிந்தா தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அமைதியான இயல்பு மற்றும் மனஉறுதிக்கு அவர் பெயர் பெற்றவர், தனது சிறப்பு சாதனைக்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தார், அவரது எதிர்கால முயற்சிகளுக்காக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் காமன்வெல்த் விளையாட்டுகளுக்காக நமது அணி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் அச்சிந்தாவுடன் நான் கலந்துரையாடினேன். அவரது தாய் மற்றும் சகோதரரின் ஆதரவு பெற்றது குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று கூறியுள்ள பிரதமர், இது குறித்து புகைப்படத்தையும் டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தை சேர்ந்த அச்சிந்தா ஷூலிக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் வாழ்த்துக் கூறியுள்ளார். அவரது சாதனை, எண்ணற்ற நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும், உண்மையிலேயே நாம் அனைவருக்கும் பெருமையான தருணம் இது என்றும் தமது டுவிட்டர் பக்கத்தில் மம்தா தெரிவித்துள்ளார்.

இதனிடையே அச்சிந்தாவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் காமன்வெல் விளையாட்டில் பங்கேற்றது யாருக்கும் தெரியாது, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் கூட அவரை அறியவில்லை என்றும், எங்களுக்கு அரசு ஆதரவு தேவை என்றும் அச்சிந்தா சகோதரர் அலோக் ஷூலி குறிப்பிட்டுள்ளார்.
- 3 சுற்றுகள் முடிவில் இந்திய ‘பி’ அணி 12 போர்டு பாயிண்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறது.
- பெண்கள் பிரிவில் பல்கேரி முன்னிலையில் (11.5 போர்டு பாயிண்டில்) உள்ளது.
சென்னை:
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது.
11 சுற்றுகளை கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்று வருகிறது. நேற்று 3-வது சுற்று ஆட்டம் நடந்தது. இந்த சுற்றிலும் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. போட்டியில் பங்கேற்ற 6 இந்திய அணியும் வெற்றி பெற்றன.
ஓபன் பிரிவில் இந்தியா 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் சாரீசையும், இந்திய 'பி' அணி 4-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்தையும், இந்திய 'சி' அணி 3-1 என்ற கணக்கில் ஐஸ்லாந்தையும் தோற்கடித்தன.
பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி 3-1 என்ற கணக்கில் இங்கிலாந்தையும், இந்திய 'பி' அணி 3-1 என்ற கணக்கில் இந்தோனேசியாவையும், இந்திய 'சி' அணி 2.5-1.5 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தின.
3 சுற்றுகள் முடிவில் இந்திய 'பி' அணி 12 போர்டு பாயிண்டுகளுடன் முன்னிலையில் இருக்கிறது. பிரான்ஸ், இஸ்ரேல் 11.5 புள்ளிகளுடன் அடுத்த நிலையில் உள்ளது.
இந்திய 'ஏ' 10.5 போர்டு பாயிண்டுடன் 6-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 18-வது இடத்திலும் (9.5) உள்ளன.
பெண்கள் பிரிவில் பல்கேரி முன்னிலையில் (11.5 போர்டு பாயிண்டில்) உள்ளது. இந்திய 'ஏ' 5-வது இடத்தில் (10.5) இருக்கிறது.
இந்திய 'பி' அணி 16-வது இடத்திலும், இந்திய 'சி' அணி 17-வது இடத்திலும் உள்ளது.
4-வது சுற்று ஆட்டம் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குகிறது. இந்திய 'ஏ' அணி பிரான்சுடனும், இந்திய 'பி' அணி இத்தாலியுடனும், இந்திய 'சி' அணி ஸ்பெயினுடனும் மோதுகின்றன. பெண்கள் பிரிவில் இந்திய 'ஏ' அணி அங்கேரியுடனும் 'பி' அணி எஸ்டோனியாவுடனும், 'சி' அணி ஜார்ஜியாவுடனும் மோதுகின்றன.
- இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
- வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்காகவும், முதல் வெற்றிக்காகவும் கடுமையாக போராடும்.
பாசட்டரே:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது.
இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாசட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று நடக்கிறது.
தொடக்க ஆட்டத்தில் 190 ரன்கள் குவித்து எதிரணியை 122 ரன்னில் மடக்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்றைய ஆட்டத்திலும் ஆதிக்கத்தை தொடரும் முனைப்புடன் தயாராகி வருகிறது. அதே வேளையில் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியில் அடைந்த தோல்விக்காகவும், முதல் வெற்றிக்காகவும் கடுமையாக போராடும்.
தொடக்க ஆட்டத்தில் செய்த தவறுகளை திருத்திக் கொண்டு பதிலடி கொடுக்க முயற்சிப்பார்கள். எனவே, இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு குறைவிருக்காது. இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.
- கானாவுக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி அபார வெற்றி பெற்றது.
- இந்தியா சார்பில் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் ஹாட்ரிக் கோல் அடித்தார்.
பர்மிங்காம்:
22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காமில் நடந்துவருகிறது.
இத்தொடரின் ஆண்களுக்கான ஹாக்கியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் கானாவை சந்தித்தது. ஆட்டத்தின் ஆரம்பம் முதல் இந்தியா சிறப்பாக விளையாடியது. தொடர்ந்து கோல் மழை அடித்து அசத்தியது.
இறுதியில், இந்திய அணி 11 - 0 என்ற கணக்கில் கானாவை அபாரமாக வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில் மொத்தம் எட்டு வீரர்கள் கோல் அடித்தனர். இந்தியா சார்பில் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் ஹாட்ரிக் கோல் அடித்தார். ஹர்மன்பிரீத் சிங் 3, ஜுக்ராஜ் சிங் 2, அபிஷேக், ஷம்ஷேர் சிங், ஆகாஷ்தீப் சிங், நீலகண்ட் சர்மா, வருண் குமார், மன்தீப் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
- ஆட்ட நாயகன் விருது சந்தீப் வாரியர்சுக்கு அளிக்கப்பட்டது.
- தொடர் நாயகன் விருது சஞ்சய் யாதவுக்கு வழங்கப்பட்டது.
கோவை:
6வது டி.என்.பில். டி20 கிரிக்கெட் திருவிழாவின் இறுதிப்போட்டி கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும், கோவை கிங்ஸ் அணியும் மோதின.
முதலில் ஆடிய கோவை கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 14 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மீண்டும் மழை பெய்ததால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது.
இதையடுத்து, டி.என்.பி.எல். கோப்பை சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ் ஆகிய இரு அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படுவதாக போட்டி நடுவர்கள் அறிவித்தனர்.
இதன்மூலம் டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக முறை சாம்பியன் பட்டம் வென்ற அணி (4 முறை) என்ற பெருமையை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தக்கவைத்தது. ஷாருக் கான் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி முதல் முறையாக இறுதி போட்டிக்குள் நுழைந்து பட்டத்தை வென்றது.
இந்நிலையில், சிறப்பாக விளையாடிய அணியுடன் கோப்பையைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பா.சிவந்தி ஆதித்தன் அளித்த பேட்டியில், 5 முறை இறுதிப்போட்டிக்கு சென்றிருக்கிறோம். 4 முறை கோப்பையை வென்றிருக்கிறோம். சிறப்பாக விளையாடிய அணியுடன் கோப்பையை பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சி என தெரிவித்தார்.






