search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    காமன்வெல்த்: தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலிக்கு தலைவர்கள் வாழ்த்து- சொந்த கிராமத்தில் கொண்டாட்டம்
    X

    காமன்வெல்த்: தங்கம் வென்ற அச்சிந்தா ஷூலிக்கு தலைவர்கள் வாழ்த்து- சொந்த கிராமத்தில் கொண்டாட்டம்

    • காமன்வெல்த் விளையாட்டில் அவர் பங்கேற்றது யாருக்கும் தெரியாது.
    • அரசின் ஆதரவு தேவை என அச்சிந்தா சகோதரர் கோரிக்கை.

    காமன்வெல்த் போட்டி பளு தூக்குதலில் இந்திய வீரர் அச்சிந்தா ஷூலி தங்கம் வென்றார். ஆண்களுக்கான 73 கிலோ எடைப்பிரிவில் 313 கிலோ எடையை தூக்கிய அவர், இந்தியாவிற்கு 3வது தங்கப் பதக்கத்தை பெற்றுத் தந்துள்ளார்.

    இந்நிலையில் அச்சிந்தா ஷூலி இந்தியாவை பெருமைப்படுத்தியுள்ளார் என குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று மூவர்ணக் கொடியை உயரப் பறக்க வைத்தார், ஒரே முயற்சியில் முதலிடத்தை பிடித்த நீங்கள் தான் வரலாறு படைத்த சாம்பியன் என்றும் கூறியுள்ளார்.


    இதேபோல் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் விளையாட்டுகளில் திறமை மிகுந்தக அச்சிந்தா தங்கப்பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது, அமைதியான இயல்பு மற்றும் மனஉறுதிக்கு அவர் பெயர் பெற்றவர், தனது சிறப்பு சாதனைக்காக அவர் மிகவும் கடுமையாக உழைத்தார், அவரது எதிர்கால முயற்சிகளுக்காக எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

    மேலும் காமன்வெல்த் விளையாட்டுகளுக்காக நமது அணி இங்கிலாந்து புறப்படுவதற்கு முன் அச்சிந்தாவுடன் நான் கலந்துரையாடினேன். அவரது தாய் மற்றும் சகோதரரின் ஆதரவு பெற்றது குறித்து நாங்கள் விவாதித்தோம் என்று கூறியுள்ள பிரதமர், இது குறித்து புகைப்படத்தையும் டுவிட்டர் பதிவில் பகிர்ந்துள்ளார்.

    மேற்கு வங்காள மாநிலம் ஹவுரா மாவட்டத்தை சேர்ந்த அச்சிந்தா ஷூலிக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் வாழ்த்துக் கூறியுள்ளார். அவரது சாதனை, எண்ணற்ற நாட்டு மக்களுக்கு ஊக்கமளிக்கும் என்றும், உண்மையிலேயே நாம் அனைவருக்கும் பெருமையான தருணம் இது என்றும் தமது டுவிட்டர் பக்கத்தில் மம்தா தெரிவித்துள்ளார்.


    இதனிடையே அச்சிந்தாவின் சொந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.



    தங்கள் கிராமத்தைச் சேர்ந்த ஒரு சிறுவன் காமன்வெல் விளையாட்டில் பங்கேற்றது யாருக்கும் தெரியாது, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் கூட அவரை அறியவில்லை என்றும், எங்களுக்கு அரசு ஆதரவு தேவை என்றும் அச்சிந்தா சகோதரர் அலோக் ஷூலி குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×