என் மலர்
விளையாட்டு
- பஞ்சாப் கிங்ஸ் பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால் மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அனில் கும்பிளே ஐ.பி.எல். தொடருக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த 2020-ம் ஆண்டு பொறுப்பேற்றார். அதன் பிறகு நடந்த 3 சீசன்களிலும் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆப் சுற்றுக்கு கூட முன்னேறவில்லை.
2020, 2021, 2022-ம் ஆண்டுகளில் அந்த அணி 6-வது இடமே பிடித்தது. அணியின் செயல்பாடு குறித்து கடும் அதிருப்தி அடைந்து இருக்கும் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகத்தினர், தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து கும்பிளேவை நீக்க முடிவு செய்துள்ளனர்.
புதிய தலைமை பயிற்சியாளரை தேடும் வேட்டையில் இறங்கி இருக்கும் பஞ்சாப் அணி நிர்வாகம் விரைவில் புதிய பயிற்சியாளர் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன் கடந்த சீசனில் அந்த அணியின் கேப்டனாக இருந்த மயங்க் அகர்வால் மொத்தம் 196 ரன்கள் மட்டுமே எடுத்து சொதப்பினார். எனவே அவரது பதவியும் பறிபோகும் என்று தெரிகிறது.
- ஆசிய தொடரில் இந்திய வீரர்களில் அதிகபட்சமாக டெண்டுல்கர் 971 ரன்கள் (23 ஆட்டம்) எடுத்துள்ளார்.
- இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 24 ஆட்டத்தில் 1220 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த வீரராக பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி உள்ளார். அவர் 27 ஆட்டத்தில் 26 சிக்சர்கள் அடித்து உள்ளார். அவரது சாதனையை முறியடிக்க இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு இன்னும் 6 சிக்சர்களே தேவை.
ரோகித் சர்மா இதுவரை 27 போட்டியில் 21 சிக்சர் அடித்துள்ளார். மேலும் ஆசிய கிரிக்கெட்டில் ஆயிரம் ரன்னை தொடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறவும் ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு உள்ளது.
அவர் 883 ரன் எடுத்து உள்ளார். விராட் கோலி 766 ரன்கள் (16 ஆட்டம்) எடுத்து உள்ளார். இந்திய வீரர்களில் அதிகபட்சமாக டெண்டுல்கர் 971 ரன்கள் (23 ஆட்டம்) எடுத்துள்ளார்.
இலங்கை முன்னாள் வீரர் ஜெயசூர்யா 24 ஆட்டத்தில் 1220 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார்.
- விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.
- ஆசிய தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
6 நாடுகள் மோதவுள்ள ஆசிய கோப்பை தொடர் நாளை முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடருக்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி துபாயில் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி நீண்ட நாட்களுக்கு பின் அணிக்கு திரும்பியுள்ளதால் அவர் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில் எம்எஸ் டோனி குறித்து இன்ஸ்டாகிராமில் விராட் கோலியின் பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.
அந்த பதிவில்:- டோனியுடன் துணைக்கேப்டனாக பணியாற்றிய காலங்கள் தான் எனது கிரிக்கெட் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான நாட்கள் ஆகும். டோனியும் நானும் அமைத்த பார்ட்னர்ஷிப்கள் தான் என்றுமே எனக்கு மிக சிறப்பான ஒன்று. மேலும் 7 + 18 என இருவரின் ஜெர்ஸி நம்பர்களையும் பதிவிட்டு நெகிழ்ச்சியடைந்துள்ளார்.
டோனி மற்றும் விராட் கோலி அமைத்த பார்ட்னர்ஷிப்கள் அதிகப்படியான வெற்றிகளை தேடி தந்துள்ளது. இதனால் ரசிகர்கள் அதனை நினைவுக்கூர்ந்து வருகின்றனர்.
ஆசிய கோப்பை நடைபெறும் சூழலில் விராட் கோலி டோனியுடன் மகிழ்ச்சியாக இருந்தேன் என ஏன் பதிவிட்டார் என்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி காயம் காரணமாக விலகினார்.
- ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் ஏழு டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.
இந்தியா இலங்கை பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நாளை துபாயில் கோலாகலமாக தொடங்கப்பட உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றனர்.
நாளை முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.
இந்நிலையில் ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணியில் இருந்து முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அப்ரிடி காயம் காரணமாக விலகினார். இதை தொடர்ந்து மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் காயம் காரணமாக ஆசிய கோப்பையில் இருந்து விலகி உள்ளார்.
வேகப்பந்து வீச்சாளரான முகமது வாசிம் முதுகுவலி காரணமாக துபாயில் பயிற்சியிலிருந்து வெளியேறினார். ஆகஸ்ட் 28 அன்று இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடக்க ஆட்டத்தில் இவர் விளையாடுவது சந்தேகம் என தகவல் வந்துள்ளது.

வாசிம் ஐசிசி அகாடமியில் பந்துவீசும்போது முதுகுவலி இருப்பதாக தெரிவித்தார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
முகம்து வாசிம் கடந்த ஜூலை மாதம் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அறிமுகமானதில் இருந்து 11 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 15.88 சராசரியில் 17 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.
அப்ரிடி நான்கு வாரங்களாக காயம் இருந்தபோதிலும் பயணக் குழுவில் உறுப்பினராக உள்ளார். மேலும் அவர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுற்றுப்பயணத்தில் மறுவாழ்வு பெற்று வருகிறார். பாகிஸ்தான் அவரை டி20 உலகக்கோப்பைக்குத் தயார்படுத்த முயற்சிக்கிறது.
ஆசியக் கோப்பையைத் தொடர்ந்து பாகிஸ்தான் தனது சொந்த மண்ணில் ஏழு டி20 போட்டிகளில் இங்கிலாந்துடன் விளையாடுகிறது.
- உலக சாம்பியனான ஜப்பான் ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி அசத்தியது.
- சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது.
டோக்கியோ:
உலக பேட்மிண்டன் சாம்பியன் ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இன்று கால் இறுதி ஆட்டங்கள் நடந்தது. ஒரு ஆட்டத்தில் இந்தியாவின் எம்.ஆர். அர்ஜுன்-துருவ் கபிலா ஜோடி இந்தோனேசியாவின் முகமது ஹசன்-ஹந்திரா செடியவான் ஜோடியுடன் மோதியது.
இதில் இந்திய ஜோடி 8-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் தோற்று அரை இறுதி வாய்ப்பை இழந்தது. மற்றொரு கால் இறுதியில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி ஜப்பான் ஜோடியான கோபயாஷி-ஹோக்கியுடன் பலப்பரீட்சை நடத்தியது.
இதில் முதல் செட்டை இந்திய ஜோடி 24-22 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2-வது செட்டை ஜப்பான் ஜோடி தனதாக்கியது.
இதையடுத்து வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட்டை கைப்பற்ற இரு ஜோடிகளும் போராடினர். இதில் இந்திய ஜோடியின் கை ஓங்கியது.
அந்த செட்டை 21-14 என்ற கணக்கில் கைப்பற்றினர். இதன் மூலம் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி 24-22, 15-21, 21-14 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. உலக சாம்பியனான ஜப்பான் ஜோடியை வீழ்த்தி இந்திய ஜோடி அசத்தியது.
அரை இறுதிக்கு தகுதி பெற்றதால் இந்திய ஜோடி பதக்கத்தை உறுதி செய்தது. இதன் மூலம் உலக பேட்மிண்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் முறையாக சாத்விக் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி உறுதிசெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- முன்னாள் சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை எதிர்கொள்கிறார்.
- அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் டன்கா கோவினிச்சை சந்திக்கிறார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிசில் பங்கேற்கும் வீரர்- வீராங்கனைகளின் மோதல் அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல்நிலை வீரர் டேனில் மெட்விடேவ் (ரஷியா), ஸ்டீபன் கோஸ்லோவை (அமெரிக்கா) சந்திக்கிறார். முன்னாள் சாம்பியன் ஸ்பெயினின் ரபெல் நடால், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜிகட்டாவை எதிர்கொள்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 'நம்பர் ஒன்' வீராங்கனை போலந்தின் ஸ்வியாடெக் தனது சவாலை ஜாஸ்மின் பாவ்லினியுடன் (இத்தாலி) தொடங்குகிறார்.
இந்த போட்டியுடன் டென்னிசில் இருந்து விடைபெற திட்டமிட்டுள்ள முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், முதல் சுற்றில் டன்கா கோவினிச்சை (மான்ட்னெக்ரோ) சந்திக்கிறார்.
- இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தத்தில் 200 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார்.
- ஆண்டர்சன் விளையாடும் 174-வது டெஸ்ட் இதுவாகும்.
மான்செஸ்டர்:
இங்கிலாந்து- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நேற்று தொடங்கியது. 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் டீன் எல்கர், முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அந்த அணி முதல் இன்னிங்சில் 53.2 ஓவர்களில் 151 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.
அதிகபட்சமாக ககிசோ ரபடா 36 ரன்களும், கீகன் பீட்டர்சன், கைல் வெரைன் தலா 21 ரன்னும் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், பிராட் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
அதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 111 ரன்கள் எடுத்திருந்தது. இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் 40 வயதான ஜேம்ஸ் ஆண்டர்சன் இந்தப் போட்டியில் களம் இறங்கியதன் மூலம் புதிய சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார். ஆண்டர்சன் விளையாடும் 174-வது டெஸ்ட் இதுவாகும்.
அதே சமயம் சொந்த மண்ணில் ஆடும் 100-வது டெஸ்டாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டில் 100 டெஸ்டுகளில் கால்பதித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மொத்தத்தில் 200 டெஸ்டுகளில் விளையாடி உள்ளார். ஆனால், அவர் இந்திய மண்ணில் 94 டெஸ்டுகளும், வெளிநாடுகளில் 106 டெஸ்டுகளும் ஆடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி டோக்கியோவில் நடைபெற்று வருகிறது.
- இன்று நடைபெறும் காலிறுதியில் பிரனோய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.
டோக்கியோ:
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது.
இதில் நேற்று நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய இளம் வீரர் லக்ஷயா சென், தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் மற்றொரு இந்திய வீரரான எச்.எஸ்.பிரனோய் உடன் மோதினார்.
இதில் பிரனோய் 17-21, 21-16, 21-17 என்ற செட் கணக்கில் லக்ஷயா சென்னை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
இன்று நடைபெற உள்ள காலிறுதிப் போட்டியில் பிரனாய், சீன வீரர் ஜாவோ ஜுன்பெங்குடன் மோதுகிறார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.
- இப்போட்டி அடுத்த மாதம் 11ம் தேதி நிறைவடைகிறது.
நியூயார்க்:
செர்பியா நாட்டைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் (35). உலக தரவரிசையில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான ஜோகோவிச், வருகிற திங்கட்கிழமை தொடங்க இருக்கிற கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் பங்கேற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இதன்படி, வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஜோகோவிச் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், அமெரிக்க ஓபனில் விளையாட இந்த முறை என்னால் நியூயார்க்குக்கு பயணிக்க முடியாதது வருத்தம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
- டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 151 ரன்னில் சுருண்டது.
மான்செஸ்டர்:
தென் ஆப்பிரிக்கா அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் தென் ஆப்பிரிக்கா அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 56 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, தென் ஆப்பிரிக்கா அணி முதலில் களமிறங்கியது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணியின் விக்கெட்கள் சீராக விழுந்தன.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 53.2 ஓவரில் 151 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் ரபாடா அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன், பிராட் ஆகியோர் தலா 3 விக்கெட்டும், பென் ஸ்டோக்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடர்ந்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 3 விக்கெட் இழப்புக்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. பேர்ஸ்டோவ் 38 ரன்னும், ஜாக் கிராலே 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- காலிறுக்கு முந்தைய சுற்றில் சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் உடன் மோதினார்.
- புசானன் 21-17, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
டோக்கியோ:
27-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 22-ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் 23-ம் தேதி நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-19, 21-9 என்ற நேர்செட்டில் ஹாங்காங்கின் சியுங் நாகன் யியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறி இருந்தார்.
2-ம் சுற்று ஆட்டத்தில் ஜப்பான் வீராங்கனை நொசோமி ஒகுஹாராவுடன் சாய்னா நேவால் ஆடவிருந்தார். எனினும் காயம் காரணமாக நொசோமி விலகியதால் சாய்னா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து இன்று நடைபெற்ற காலிறுக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தாய்லாந்து வீராங்கனை புசானன் ஓங்பாம்ருங்பான் உடன் மோதினார். இந்த போட்டியில் புசானன் 21-17, 16-21, 21-13 என்ற செட் கணக்கில் சாய்னாவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.
- விராட் கோலிக்கு ஓய்வு கிடைத்தால் மனதளவிலும், உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்.
- கோலி ஒரு தரமான வீரர். அவர் சிறந்த பார்முக்கு திரும்புவார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
துபாய்:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ரன் குவிக்க திணறி வருகிறார். அவர் சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடித்து மூன்று ஆண்டுகள் ஆகிறது.
அவர் சுமார் ஒரு மாத ஓய்வுக்கு பிறகு நாளை மறுநாள் தொடங்கும் ஆசிய கோப்பை போட்டியில் விளையாடுகிறார்.
இந்த நிலையில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
விராட் கோலிக்கு ஓய்வு கிடைத்தால் மனதளவிலும், உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் இருப்பார்.
ஐ.பி.எல். போட்டியின் போது கூட அவரது ஆற்றல் சற்று குறைந்திருந்தது. அவர் எப்போதும் எழுச்சியுடன் காணப்படுபவர். ஆனால் அவரால் ரன் குவிக்க முடியவில்லை.
நீங்கள் ஓய்வெடுக்க முடிந்ததால் குறிப்பாக இந்திய வீரர்கள் அதிக கிரிக்கெட் விளையாடும் சூழலில் கோலிக்கு ஓய்வு கிடைத்து இருக்கிறது. அது அவருக்கு தேவையான அனைத்தையும் மீண்டும் உருவாக்கி கொடுத்து இருக்கும்.
மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் புத்துணர்ச்சி பெற்று இருப்பார். கோலி ஒரு தரமான வீரர். அவர் சிறந்த பார்முக்கு திரும்புவார். அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்.
ஆசிய கோப்பையை இந்திய அணி வெல்லும் என்பது எனது கணிப்பு. அவர்கள் வலிமையான அணியாக உள்ளனர். சூழ்நிலையை எளிதாக கையாண்டு பொருந்தி விடுகிறார்கள்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி விசேஷமாக இருக்கும். ஏனென்றால் இந்திய அணியை வீழ்த்த முடியும் என்று பாகிஸ்தான் முழு நம்பிக்கையில் உள்ளது.
இப்போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அந்த அணி கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன்.
இப்போட்டியில் இந்தியா வெற்றி பெறும் என்ற உணர்வு எனக்கு இருக்கிறது. அவர்களின் பேட்டிங் வரிசை வலுவாக இருக்கிறது.
எனவே இந்திய அணியை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி 28-ந்தேதி நடக்கிறது.






