என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 கோல் கணக்கில் குரோஷியா வெற்றி
    • உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது பிரேசில்.

    கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி தொடரில் தற்போது காலிறுதி சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்றிரவு 8.30 மணிக்கு எஜூகேசன் சிட்டி ஸ்டேடியத்தில் நடைபெற்ற முதலாவது கால் இறுதி ஆட்டத்தில் 5 முறை சாம்பியினான பிரேசில் அணி, குரோஷியாவை எதிர் கொண்டது. இதில் முதல் பாதி ஆட்டத்தில் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதி ஆட்ட நிறைவுவரை இரு அணி வீரர்களின் கோல் அடிக்கும் முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

    இந்நிலையில் கூடுதல் ஆட்ட நேரத்தின்போது 106 வது நிமிடத்தில் பிரேசில் வீரர் நெய்மர் கோல் அடித்தார். தொடர்ந்து 117வது நிமிடத்தில் குரோஷியா தரப்பில் புருனோ பெகோவிக் ஒருகோல் அடித்ததால் ஆட்டம் சமனில் ஆடிந்தது. இதையெடுத்து பெனால்டி சூட் அவுட் முறை வழங்கப்பட்டது. இதில் 4-2 கோல் கணக்கில் பிரேசிலை வீழ்த்திய குரோஷியா அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

    • இந்தப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் அறிவித்தனர்.
    • 17-வது தேசிய கேடட் ( 19 வயதுக்குட்பட்டோர்) வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடக்கிறது.

    சென்னை:

    17-வது தேசிய கேடட் ( 19 வயதுக்குட்பட்டோர்) வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 11-ந் தேதி முதல் 13-ந்தேதி வரை மராட்டிய மாநிலம் நாசிக்கில் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி சேர்மன் சுப்பையா தனசேகரன், ஒருங்கிணைப்பாளர் வி.கருணாமூர்த்தி ஆகியோர் அறிவித்துள்ளனர்.

    தமிழக அணி வருமாறு:-

    ஆண்கள்: அரவிந்த், பெனிசியர் , ஸ்டார்வின் டாமின் ரிஷோ , ரேன்டி ஆர்டன் , டாமின்ரிடோ ( அனைவரும் கன்னியாகுமரி), வி.சந்தோஷ் மாரிஸ்வரன், கவின், எம் . சந்தோஷ், ராமமூர்த்தி (ராமநாதபுரம் ) விஜய் பரத் ( சேலம் )

    பெண்கள்: ஜெனிஷா, ஜெபர்லின் ( கன்னியாகுமரி), ஜாய்ஸ் அஷிதா, ஜனனி, சசி பிரபா, தரணி (சென்னை), பிரீத்தி வர்ஷினி, புவனேஸ்வரி (கிருஷ்ணகிரி), வர்ஷினி, மனிகா சூர்யா ( நெல்லை), ஜெமிலியா ( நாமக்கல்), ஏஞ்சலின் ஓவியா ( சேலம்)

    • வாஷிங்டன் சுந்தர் வருங்கால நட்சத்திரமாக இருப்பார்.
    • அவர் எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ளார்.

    2023 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் வங்கதேசத்தில் விளையாடி வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த இந்தியா கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இந்தியாவுக்கு பேட்டிங்கில் விராட் கோலி, ஷிகர் தவான் போன்ற நம்பிக்கை நட்சத்திரங்களும் சொதப்பலாக செயல்பட்டு ஏமாற்றமளித்தனர். இதனால் வைட்வாஷ் அவமான தோல்வியை தவிர்க்க கடைசி போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்திய தள்ளப்பட்டுள்ளது.

    இந்த தொடரில் அசத்தலாக செயல்பட்ட ஒரு சில இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மத்தியில் தமிழகத்தைச் சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் முதல் போட்டியில் 19 ரன்களும் 2 விக்கெட்டுகளும் 2-வது போட்டியில் 2 விக்கெட்டுகளும் 11 ரன்களும் எடுத்து நல்ல செயல்பாடுகளையே வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில் 23 வயது மட்டுமே நிரம்பிய வாஷிங்டன் சுந்தர் ஹர்திக் பாண்டியாவுக்கு நிகராக சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக தாக்கத்தை ஏற்படுத்தும் திறமை கொண்டவர் என்று முன்னாள் வீரர் லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் பாராட்டியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வாஷிங்டன் சுந்தர் வருங்கால நட்சத்திரமாக இருப்பார். அவர் எந்த சூழ்நிலையிலும் பேட்டிங் செய்யும் திறமை பெற்றுள்ளார். பெரிய ரன்களை எடுப்பதற்கு அவரை நீங்கள் நம்பலாம். சொல்லப்போனால் அவரால் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்யும் 5, 6 ஆகிய இடங்களிலும் விளையாட முடியும். அவரைப் போலவே நன்கு செட்டிலான பின்பு இவராலும் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை குவிக்க முடியும்.

    அதே போல் முழுமையான 10 ஓவர்களை அதுவும் குறைந்த எக்கனாமியில் அவரால் பந்து வீச முடியும். இருப்பினும் நிறைய விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என்ற மனப்பான்மை மட்டும் அவருக்கு தேவைப்படுகிறது. அந்த வகையில் நல்ல ஆல் ரவுண்டரான அவரை வருங்கால இந்திய அணியில் எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை அணி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் ஹர்திக் பாண்டியாவை நீங்கள் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்றழைத்தால் வாஷிங்டன் சுந்தரை சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர் என்று தாராளமாக அழைக்கலாம். இருவருமே அணிக்கு கச்சிதமாக பொருந்தி பேட்டிங், பவுலிங் ஆகிய துறையில் அசத்தக்கூடியவர்கள்.

    என்று கூறினார்.

    இப்படி ஒருநாள் கிரிக்கெட்டில் அசத்தும் வாஷிங்டன் சுந்தர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கடந்த 2021இல் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா பதிவு செய்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியில் முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து ரோகித், தீபக் சாஹர், குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.
    • வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.

    மிர்புர்:

    3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசம் சென்றுள்ளது.

    இவ்விரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதல் 2 ஆட்டத்தில் வங்காளதேச அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

    இந்நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் , குல்தீப் சென் ஆகியோர் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

    இதனையடுத்து 3-வது ஒருநாள் போட்டிக்கு இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. வங்காளதேச அணிக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
    • பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

    இங்கிலாந்து அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பாகிஸ்தான் சென்றுள்ளது. டி20 தொடர் முடிவடைந்த நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாக் கிராலி- பென் டக்கெட் ஜோடி களமிறங்கியது.

    சாக் கிராலி 19 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனையடுத்து ஓலி போப் - பென் டக்கெட் ஜோடி அதிரடியாக விளையாடினர். இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர். 49 பந்தில் 63 ரன்கள் எடுத்து பென் டக்கெட் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரூட் 8 ரன்னிலும் பிரோக் 9 ரன்னிலும் வெளியேறினர். அப்ரார் அகமது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி திணறியது.

    சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த இங்கிலாந்து அணி 51.4 ஓவரில் 281 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை அள்ளினார்.

    • ஷ்ரேயாஸ் ஐயர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதம் மற்றும் 14 அரை சதங்களும் அடித்துள்ளது
    • இந்த வருடம் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 721 ரன்களை 60 ரன்கள் சராசரி உடன் எடுத்துள்ளார்.

    இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் டி20 கிரிக்கெட்டில் சற்று சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாகவே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் துவக்க வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்த பின்னர் மூன்றாவது வீரராக களம் புகுந்த ஷ்ரேயாஸ் ஐயர் ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருந்தாலும் மறுமுனையில் தனது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார்.

    இறுதியில் 102 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 82 ரன்கள் அடித்து தனது விக்கெட்டை முக்கியமான நேரத்தில் பறிகொடுத்தார். இறுதியில் இந்திய அணி ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய வீரர்கள் யாரும் படைக்காத ஒரு வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தி காட்டியுள்ளார். அதன்படி இதுவரை இந்திய அணிக்காக 38 ஒரு நாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 1534 ரன்களை 49 ரன்கள் சராசரி உடன் அடித்துள்ளார்.

    அதோடு அவர் இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் இரண்டு சதம் மற்றும் 14 அரை சதங்களும் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அவர் படைத்த சாதனை யாதெனில் : இந்திய வீரர்களில் வெகுவிரைவாக 1500 ரன்களை ஒருநாள் கிரிக்கெட்டில் அடித்தவர்கள் சாதனையில் முதல் இடத்தில் இருந்த கே.எல் ராகுலை பின்னுக்கு தள்ளி அவர் சாதனை பட்டியலில் முதல் இடம் பிடித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிவேகமாக 1500 ரன்களை குவித்த வீரர்களின் பட்டியலில் கே.எல் ராகுல் 36 இன்னிங்ஸ்களில் முதலிடத்தில் இருந்த வேளையில் அதனை ஷ்ரேயாஸ் ஐயர் நேற்றைய போட்டியின் மூலம் 34-இன்னிங்ஸ்களில் முறியடித்துள்ளார்.

    இவர்கள் இருவரை தொடர்ந்து ஷிகார் தவான் மற்றும் விராட் கோலி ஆகியோர் 38 இன்னிங்ஸ்களில் 1500 ரன்களை குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் மட்டும் ஷ்ரேயாஸ் ஐயர் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 14 இன்னிங்ஸ்களில் 721 ரன்களை 60 ரன்கள் சராசரி உடன் எடுத்துள்ளார். இதில் 6 அரை சதங்களும் ஒரு சதமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • லபுசேன் 163 ரன்னிலும் ஹெட் 175 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
    • ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 511 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.

    ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.

    டிராவிஸ் ஹெட், லபுசேன் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் சதமடித்து அசத்தினர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி 89 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் எடுத்துள்ளது.

    லபுசேன் 120 ரன்னும், டிராவிஸ் ஹெட் 114 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனையடுத்து 2-வது நாளான இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 511 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. லபுசேன் 163 ரன்னிலும் ஹெட் 175 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    • 2 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
    • சிறந்த வீரர்களை கொண்ட நெதர்லாந்து 6-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது.

    லுசைல்:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ், பிரேசில் அர்ஜென்டினா, இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், குரோஷியா, மொராக்கோ ஆகிய நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

    இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் கால்இறுதி ஆட்டத்தில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில்-ஜரோப்பாவில் இருக்கும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. பிரேசில் 12-வது தடவையாகவும், குரோஷியா 3-வது முறையாகவும் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன.

    இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால்இறுதி போட்டி நடக்கிறது. லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத்தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித் தது. அந்த அணி 7 கோல் போட்டுள்ளது. 3 கோல் வாங்கியுள்ளது.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக அரைஇறுதிக்கு தகுதிபெறுமா ? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது.

    முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பின்களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் வீரர்களை ஒருங்கிணைத்து கொண்டு முன்னோக்கி செல்வது முக்கியமானது.

    மெஸ்சி 3 கோல்கள் அடித்துள்ளார். ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி செனகல் (2-0), கத்தார் ( 2-0 ) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. ஈக்வடாருடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. 2-வது சுற்றில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. அந்த அணி 8 கோல் போட்டுள்ளது. 2 கோல் வாங்கியுள்ளது.

    சிறந்த வீரர்களை கொண்ட நெதர்லாந்து 6-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. அந்த அணியில் காக்போ ( 3 கோல்) , டிபே, கிளாசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய போட்டியில் அர்ஜென்டினா 3-ல், நெதர்லாந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா ஆனது. உலக கோப்பையில் மோதிய 5 போட்டியில் இரு அணிகளும் தலா 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    அர்ஜென்டினாவும், நெதர்லாந்தும் அரை இறுதிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    • காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை.
    • பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் இணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

    சிட்டாகாங்:

    இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையான 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே இழந்து விட்டது. முதல் ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் 5 ரன் வித்தியாசத்திலும் இந்தியா தோற்றது.

    இந்தியா- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சிட்டாகாங்கில் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது.

    இந்த போட்டியிலாவது இந்திய அணி வெற்றி பெற்று ஆறுதல் அளிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் பார்க்கின்றனர். முதல் 2 ஆட்டத்திலும் வெற்றி வரை நெருங்கி வந்த வாய்ப்பை பறி கொடுத்தது. பேட்ஸ்மேன்களும், பவுலர்களும் இணைந்து முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே வெல்ல முடியும்.

    காயம் அடைந்த கேப்டன் ரோகித் சர்மா நாளைய போட்டியில் விளையாடவில்லை. இதனால் லோகேஷ் ராகுல் தலைமை பொறுப்பை ஏற்பார். தீபக்சாகர், குல்தீப் சென் ஆகியோரும் காயத்தால் விலகி உள்ளனர்.

    முன்னாள் கேப்டன் விராட் கோலி , ஷிகர் தவான் ஆகியோர் வங்காளதேச தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் அவர்கள் ரன்களை குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தவானுடன இணைந்து ராகுல் தொடக்க வீரராக ஆடுவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய பந்துவீச்சாளர்களும் நெருக்கடியில் உள்ளனர்.

    வங்காளதேசம் 3-வது போட்டியிலும் இந்தியாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்யும் ஆர்வத்துடன் உள்ளது.

    சொந்த மண்ணில் அந்த அணி வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறார்கள். மெகிதி ஹசன் மிராஸ், சகீப்-அல்-ஹசன் , கேப்டன் லிட்டன் தாஸ் , மகமதுல்லா ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

    • காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் விளையாடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
    • கேப்டன் ரோகித் சர்மா கை விரலில் காயம் அடைந்ததால் அவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

    இந்தியா-வங்காளதேச கிரிக்கெட் அணிகள் 2 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் மோதுகின்றன. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 14-ந்தேதி சிட்டகாங்கில் நடக்கிறது.

    இந்த நிலையில் வங்காள தேசத்திற்கு எதிராக டெஸ்ட் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாததால் விளையாடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    அதே போல் கேப்டன் ரோகித் சர்மா கை விரலில் காயம் அடைந்ததால் அவரும் டெஸ்ட் தொடரில் விளையாடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

    • பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார்.
    • சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்.

    தோகா:

    பிரேசில் கால்பந்து அணியின் புயல்வேக வீரர் 22 வயதான வினிசியஸ் ஜூனியர் நேற்று முன்தினம் நிருபர்களுக்கு பேட்டி அளித்துக் கொண்டிருந்த போது திடீரென பூனை ஒன்று துள்ளி குதித்து டேபிள் மீது பவ்வியமாக அமர்ந்து கொண்டது.

    பத்திரிகையாளர் சந்திப்புக்கு அழையா விருந்தாளியாக வந்த அதை பார்த்து சிரித்தபடியே வினிசியஸ் நிருபர்களிடம் பேசினார். சில வினாடிகளுக்கு பிறகு அருகில் நின்ற பிரேசில் அதிகாரி அந்த பூனையை பிடித்து கீழே தூக்கிப்போட்டார்.

    இந்த காட்சி இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

    • 2023-ம் ஆண்டின் முதல் 3 மாதங்கள் இந்தியாவில் நடக்கும் சர்வதேச போட்டிகள் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.
    • சேப்பாக்கத்தில் மார்ச் 22-ம் தேதி இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் போட்டியில் மோதுகின்றன.

    மும்பை:

    2023-ம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இந்தியாவில் நடைபெறவுள்ள சர்வதேச போட்டிகளின் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய அணி இலங்கை, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

    இலங்கைக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

    நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டியிலும் விளையாடுகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள்போட்டியிலும் இந்திய அணி விளையாடுகிறது. இதில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

    இலங்கைக்கு எதிரான தொடர்:

    முதல் டி20 போட்டி : ஜனவரி 3, மும்பை

    2-வது டி20 போட்டி : ஜனவரி 5, புனே

    3-வது டி20 போட்டி : ஜனவரி 7, ராஜ்கோட் .

    முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 10, கவுகாத்தி

    2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 12, கொல்கத்தா

    3-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 15, திருவனந்தபுரம் .

    நியூசிலாந்துக்கு எதிரான தொடர்:

    முதல் டி20 போட்டி: ஜனவரி 18 , ஹைதராபாத்

    2-வது டி20 போட்டி: ஜனவரி 21, ராய்பூர்

    3-வது டி20 போட்டி: ஜனவரி 24, இந்தூர்

    முதல் ஒருநாள் போட்டி: ஜனவரி 27, ராஞ்சி

    2-வது ஒருநாள் போட்டி: ஜனவரி 29, லக்னோ

    3-வது ஒருநாள்: பிப்ரவரி 1, அகமதாபாத்

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்:

    முதல் டெஸ்ட்: பிப்ரவரி 9-13, நாக்பூர்

    2-வது டெஸ்ட்: பிப்ரவரி 17-21,டெல்லி

    3-வது டெஸ்ட்: மார்ச் 1-5, தர்மசாலா

    4-வது டெஸ்ட்: மார்ச் 9-13, அகமதாபாத்

    முதல் ஒருநாள்: மார்ச் 17, மும்பை

    2-வது ஒருநாள்: மார்ச் 19, விசாகப்பட்டினம்

    3-வது ஒருநாள்: மார்ச் 22, சென்னை .

    ×