search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    இன்று நள்ளிரவு கால்இறுதி ஆட்டம்- அர்ஜென்டினா அரை இறுதிக்கு முன்னேறுமா? நெதர்லாந்துடன் பலப்பரீட்சை
    X

    இன்று நள்ளிரவு கால்இறுதி ஆட்டம்- அர்ஜென்டினா அரை இறுதிக்கு முன்னேறுமா? நெதர்லாந்துடன் பலப்பரீட்சை

    • 2 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.
    • சிறந்த வீரர்களை கொண்ட நெதர்லாந்து 6-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது.

    லுசைல்:

    22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது.

    2 நாள் ஓய்வுக்கு பிறகு கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. நடப்பு சாம்பியன் பிரான்ஸ், பிரேசில் அர்ஜென்டினா, இங்கிலாந்து, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், குரோஷியா, மொராக்கோ ஆகிய நாடுகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

    இன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் முதல் கால்இறுதி ஆட்டத்தில் தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள பிரேசில்-ஜரோப்பாவில் இருக்கும் குரோஷியா அணிகள் மோதுகின்றன. பிரேசில் 12-வது தடவையாகவும், குரோஷியா 3-வது முறையாகவும் அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளன.

    இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு 2-வது கால்இறுதி போட்டி நடக்கிறது. லுசைல் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினா-நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    லியோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணி லீக் சுற்றில் முதல் போட்டியில் சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் அதிர்ச்சிகரமாக தோற்றது. அதைத்தொடர்ந்து மெக்சிகோவை 2-0 என்ற கணக்கிலும், போலந்தை 2-0 என்ற கணக்கிலும் வீழ்த்தியது. 2-வது சுற்றில் ஆஸ்திரேலியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித் தது. அந்த அணி 7 கோல் போட்டுள்ளது. 3 கோல் வாங்கியுள்ளது.

    உலக தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள அர்ஜென்டினா 6-வது முறையாக அரைஇறுதிக்கு தகுதிபெறுமா ? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. நெதர்லாந்து பலம் வாய்ந்தது. அந்த அணியை சமாளிப்பது அர்ஜென்டினாவுக்கு சவாலானது.

    முன்களத்தில் வலுவாக இருக்கும் அந்த அணி பின்களத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். மெஸ்சி தான் அர்ஜென்டினாவின் பலம். அவர் வீரர்களை ஒருங்கிணைத்து கொண்டு முன்னோக்கி செல்வது முக்கியமானது.

    மெஸ்சி 3 கோல்கள் அடித்துள்ளார். ஜூலியன் அல்வாரெஸ், என்சோ பெர்னாண்டஸ் போன்ற முன்னணி வீரர்களும் அந்த அணியில் உள்ளனர்.

    உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள நெதர்லாந்து இந்த தொடரில் தோல்வி எதையும் சந்திக்கவில்லை. அந்த அணி செனகல் (2-0), கத்தார் ( 2-0 ) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. ஈக்வடாருடன் 1-1 என்ற கணக்கில் டிரா செய்தது. 2-வது சுற்றில் அமெரிக்காவை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. அந்த அணி 8 கோல் போட்டுள்ளது. 2 கோல் வாங்கியுள்ளது.

    சிறந்த வீரர்களை கொண்ட நெதர்லாந்து 6-வது முறையாக அரை இறுதிக்குள் நுழையும் வேட்கையில் உள்ளது. அந்த அணியில் காக்போ ( 3 கோல்) , டிபே, கிளாசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய போட்டியில் அர்ஜென்டினா 3-ல், நெதர்லாந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 ஆட்டம் டிரா ஆனது. உலக கோப்பையில் மோதிய 5 போட்டியில் இரு அணிகளும் தலா 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் டிரா ஆனது.

    அர்ஜென்டினாவும், நெதர்லாந்தும் அரை இறுதிக்கு தகுதி பெற கடுமையாக போராடும் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

    Next Story
    ×