என் மலர்tooltip icon

    விளையாட்டு

    • பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்சும் நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
    • நானும் இன்னும் சாதிக்கும் உத்வேகத்தில் தான் இருக்கிறேன்.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு வருகிற 30-ந்தேதி 41-வது வயது பிறக்கிறது. இதுவரை 182 டெஸ்டில் விளையாடி 689 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஆனால் நடப்பு ஆஷஸ் தொடரில் 3 டெஸ்டில் ஆடி 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார்.

    இதனால் இன்றைய கடைசி டெஸ்டுடன் அவர் ஓய்வு பெறலாம் என்று தகவல்கள் வெளியாகின. இதனை மறுத்துள்ள ஆண்டர்சன்,'இப்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்சும் நான் அணியில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். நானும் இன்னும் சாதிக்கும் உத்வேகத்தில் தான் இருக்கிறேன்.

    தொடர்ந்து எனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்த முயற்சிப்பேன். ஒவ்வொருவருக்கும் சறுக்கல் ஏற்படுவது இயல்பு தான். ஆனால் இது போன்ற பெரிய தொடரில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனது ஏமாற்றம் அளிக்கிறது' என்று கூறியுள்ளார்.

    • சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
    • ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

    புதுடெல்லி:

    19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் செப்டம்பர் 23-ந் தேதி முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை நடக்கிறது. ஆசிய விளையாட்டு குழு போட்டியில் பங்கேற்க ஆசிய அளவில் டாப்-8 இடங்களுக்குள் இருக்கும் இந்திய அணிகளுக்கு தான் அனுமதி அளிக்க வேண்டும் என்பது மத்திய விளையாட்டு அமைச்சகத்தின் நிபந்தனையாகும். இதனால் ஆசிய தரவரிசையில் 18-வது இடத்தில் உள்ள இந்திய ஆண்கள் கால்பந்து அணி, 11-வது இடத்தில் இருக்கும் இந்திய பெண்கள் கால்பந்து அணி ஆகியவற்றுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அனுமதி வழங்க மறுத்து விட்டது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடியும், மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குரும் தலையிட்டு இந்திய கால்பந்து அணிகள் ஆசிய விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக் உள்பட பலரும் வற்புறுத்தி இருந்தனர்.

    இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் அணிகள் பங்கேற்பதில் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி இந்திய கால்பந்து அணிகளுக்கு அனுமதி அளிக்க மத்திய விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

    இது குறித்து நேற்று மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குர் தனது டுவிட்டர் பதிவில், 'இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி. வருகிற ஆசிய விளையாட்டு போட்டியில் நமது தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கால்பந்து அணியினர் கலந்து கொள்ள இருக்கின்றனர். தற்போதுள்ள விதிமுறைகளின்படி தகுதி பெறாத இவ்விரு அணிகளும் பங்கேற்பதற்கு வசதியாக விதிகளை தளர்த்த விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது. சமீப காலங்களில் இந்திய கால்பந்து அணிகளின் சிறப்பான செயல்பாடுகளை கருத்தில் கொண்டு விதிமுறையில் தளர்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அவர்கள் ஆசிய விளையாட்டு போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நாட்டுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்று உறுதியாக நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்திய கால்பந்து அணிகளுக்கு விதிமுறையை தளர்த்தி அனுமதி வழங்கி இருப்பதற்கு அகில இந்திய கால்பந்து சம்மேளன தலைவர் கல்யாண் சவுபே, பிரதமர் மோடி மற்றும் மத்திய விளையாட்டு மந்திரி அனுராக் தாக்குருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    • பிஎஸ்ஜி அணியில் ஒப்பந்தத்தை நீட்டிக்க எம்பாப்வே விரும்பவில்லை
    • சவுதி அரேபிய அணி எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்ய விருப்பம்

    பிரான்ஸ் கால்பந்து வீரர் கேப்டன் எம்பாப்பே, உலகளவில் நட்சத்திர வீரராக திகழ்ந்து வருகிறார். அவர் தற்போது பிரான்சில் உள்ள பிஎஸ்ஜி அணிக்காக விளையாடி வருகிறார். இந்த அணியுடன் இரண்டு ஆண்டு ஒப்பந்தம் மீதமுள்ளது.

    மேலும், ஒரு வருடத்திற்கான ஒப்பந்தத்தை நீட்டிக்க பிஎஸ்ஜி விரும்பியது. ஆனால், எம்பாப்வே ரியல் மாட்ரிட் அணிக்கு செல்ல விரும்புகிறார். இதனால் பிஎஸ்ஜி-யின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஃப்ரீ டிரான்ஸ்பராக செல்ல வாய்ப்புள்ளது.

    இதற்கிடையே சவுதி அணியான அல்-ஹிலால் பிஎஸ்ஜி-யுடன் பேச்சுவார்த்தை நடத்தி 332 மில்லியன் டாலர் (இந்திய பண மதிப்பில் 2700 கோடி ரூபாய்) டிரான்ஸ்பர் ஃபீஸ் செலுத்த முன்வந்தது. எந்தவித ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறினால் பணம் கிடைக்காது என்பதால், பிஎஸ்ஜி விருப்பம் தெரிவித்தது.

    இந்த நிலையில்தான் அல்-ஹிலால் அணி எம்பாப்பேவை சந்திக்க பிரான்ஸ் சென்றுள்ளனர். ஆனால், எம்பாப்வே அவர்களை சந்திக்க மறுத்துவிட்டார் எனத்தகவல் வெளியாகியுள்ளது.

    ஏற்கனவே அல்-ஹிலால் மெஸ்சியை ஒப்பந்தம் செய்ய விரும்பியது. ஆனால், அமெரிக்காவின் இன்டர் மியாமி அணிக்கு மெஸ்சி சென்றுவிட்டார்.

    • விராட் கோலி 13 ஆயிரம் ரன்கள் என்ற சாதனையை படைக்க இருக்கிறார்
    • ரோகித் சர்மா 10 ஆயிரம் ரன்களை கடக்க வாய்ப்புள்ளது

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பார்படோஸில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இந்த ஒரு நாள் தொடரில் விராட் கோலி 13,000 ரன்களைக் கடந்து சாதனை படைக்க இருக்கிறார்.

    அவர் தற்போது 12,898 ரன்கள் அடித்துள்ளார். 102 ரன்கள் எடுத்தால் 13,000 ரன்கள் என்ற மைல் கல்லை எட்டுவார். சச்சின் தெண்டுல்கர், சங்ககாரா, ரிக்கி பாண்டிங் ஆகியோருக்கு பிறகு 13,000 ரண்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைப்பார் 274 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 46 சதங்கள் மற்றும் 65 அரை சதங்களுடன் 57.32 சராசரி வைத்துள்ளார்.

    இதேபோல் ரோகித் சர்மா 10 ஆயிரம் ரன்களை கடக்க இருக்கிறார் அவர் தற்போது 9,825 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் 175 ரன்கள் இந்த மூன்று போட்டிகளில் அடித்தால் 10,000 ரன்களை கடந்த ஆறாவது இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெறுவார். ரோகித் சர்மா இதுவரை 243 போட்டிகளில் விளையாடி உள்ளார். சராசரி 48.63 உடன் 30 சதங்கள் மற்றும் 48 அரைசதங்கள் அடித்து உள்ளார்.

    • சாத்விக் சாய்ராஜ்-சிராக் ஷெட்டி இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்சயா சென் முதல் சுற்றில் வென்றார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி, இந்தோனேசியாவின் லீயோ ரோலி கர்னாண்டோ-டேனியல் மார்ட்டின் ஜோடியுடன் மோதியது.

    இதில் சாத்விக்-சிராக் ஜோடி 21-16, 11-21, 21-13 என்ற செட் கணக்கில் வென்று 2-வது சுற்றை எட்டியது.

    இதேபோல், ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென் வென்றார்.

    • 3-ம் நாள் முடிவில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்துள்ளது.
    • தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக் இரட்டை சதமடித்து அசத்தினார்.

    கொழும்பு:

    இலங்கை, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்று முதலில் ஆடிய இலங்கை அணி 166 ரன்னில் சுருண்டது. தனஞ்செய டி சில்வா ஓரளவு தாக்குப் பிடித்து 57 ரன்கள் எடுத்தார்.

    அதன்பின், பாகிஸ்தான் முதல் இன்னிங்சை தொடங்கியது. இரண்டாவது நாள் முடிவில் 38.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் அப்துல்லா ஷபீக் 87 ரன்னும், பாபர் அசாம் 28 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

    இந்நிலையில், மூன்றாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. கேப்டன் பாபர் அசாம் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய சவுத் ஷகில் அரை சதமடித்து 57 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய அப்துல்லா ஷபீக் இரட்டை சதமடித்து 201 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் பாகிஸ்தான் அணி 132 ஒவரில் 5 விக்கெட்டுக்கு 563 ரன்கள் குவித்தது. ஆகா சல்மான் 132 ரன்னும், முகமது ரிஸ்வான் 37 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இலங்கை சார்பில் அசிதா பெர்ணாண்டோ 3 விக்கெட்டும், ஜெயசூர்யா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

    • முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார்.
    • லக்சயா சென் 21-15, 12-21, 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    டோக்கியோ:

    ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் லக்சயா சென், சக நாட்டு வீரரான பிரியான்ஷூ ரஜாவத்துடன் மோதினார்.

    விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டில் லக்சயா சென் 21-15 என்ற கணக்கிலும் 2-வது செட்டில் ரஜாவத் 21-12 என கைப்பற்றினார். இதனையடுத்து வெற்றி யாருக்கு என்ற 3-வது செட் பரபரப்பாக சென்றது. இறுதியில் 24-22 என்ற செட் கணக்கில் ரஜாவத்தை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு லக்சயா சென் முன்னேறினார்.

    • 4 டெஸ்ட் போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

    லண்டன்:

    இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. நடந்து முடிந்த 4 டெஸ்ட் போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    முதல் 2 டெஸ்ட் போட்டிகளை கைப்பற்றிய ஆஸ்திரேலியா 3-வது போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. 4-வது போட்டியில் இங்கிலாந்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்த நிலையில் கடைசி நாள் ஆட்டம் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்தானது. இதனால் 4வது போட்டி டிரா ஆனது.

    இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இதற்கான ஆடும் லெவன் அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

    ஜேக் க்ராவ்லி, பென் டக்கட், மொயீன் அலி, ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    • பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது.
    • கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    லாகூர்:

    வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் நடத்தை விதிகளை மீறியதற்காக இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஐசிசியால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் இரண்டு சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாது.

    மேலும், அவரது போட்டி கட்டணத்தில் 75% அபராதம் விதிக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது. இந்த தண்டனையால் ஹர்மன்பிரீத் கவுரால் ஆசிய விளையாட்டு போட்டிகளில் சில போட்டிகளை விளையாட முடியாமல் போகும்.

    இந்நிலையில், ஹர்மன்பிரீத் செயலை பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் அப்ரீடி விமர்சித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    இது இந்தியாவுக்கு மட்டுமல்ல. கடந்த காலங்களிலும் நாம் இவற்றைப் பார்த்திருக்கிறோம். இருப்பினும், பெண்கள் கிரிக்கெட்டில் இதை நாம் அடிக்கடி பார்க்க முடியாது. களத்தில் அவரது செயல்பாடு அதிகமாகவே இருந்தது. ஐசிசியின் கீழ் இது ஒரு பெரிய நிகழ்வு. நீங்கள் எதிர்கால தலைமுறையினருக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கிறீர்கள். அவ்வாறு இருக்கையில் உங்கள் செயல்பாடு ஏமாற்றம் அளிக்கிறது. கிரிக்கெட்டில் நீங்கள் ஆக்ரோஷமாக செயல்படலாம். ஆனால், அந்த ஆக்ரோஷத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த பிவிசிந்து மற்றும் சீனாவை சேர்ந்த ஜாங்யிமானும் மோதின.
    • ஜாங் யிமான் 21-12, 21-13 என்ற நேர்செட்களில் சிந்துவை வீழ்த்தினார்.

    ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடர் நேற்று டோக்கியோவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 26 நாடுகளை சேர்ந்த வீரர்கள் கலந்து கொள்ளும் இத்தொடர் ஜூலை 25 முதல் ஜூலை 30 வரை நடக்கிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து, ஸ்ரீகாந்த், எச்.அஸ்.பிரணாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவை சேர்ந்த பி.வி.சிந்து மற்றும் சீனாவை சேர்ந்த ஜாங்யிமானும் மோதினர். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜாங் யிமான் 21-12, 21-13 என்ற நேர்செட்களில் சிந்துவை வீழ்த்தினார்.

    இவர் இந்த ஆண்டு நடைபெற்ற இந்தோனேசிய ஓபன், அமெரிக்க ஓபன், கொரியன் ஓபன் என அனைத்து தொடர்களிலும் தோல்வி அடைந்திருந்த நிலையில், தற்போது ஜப்பான் ஓபனிலும் தோல்வி அடைந்து வெளியேறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

    • சீன அணி 11.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 23 ரன்கள் எடுத்தது.
    • மலேசிய அணி 4.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 24 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ஐசிசி டி 20 உலகக் கோப்பை ஆசியா பி தகுதிச் சுற்று போட்டிகள் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் மலேசியா மற்றும் சீனா மோதின. இதில் டாஸ் வென்ற சீன அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய சீன அணி 11.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 23 ரன்கள் எடுத்தது. இதில் 6 வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமலே அவுட் ஆகினர். மலேசிய அணி தரப்பில் சையார்சுல் இசாட் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து களமிறங்கிய மலேசிய அணி 4.5 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 24 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மலேசிய வீரர் சையார்சுல் இசாட் 7 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல் முறையாக 7 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை இவர் படைத்துள்ளார். 

    • இந்த கார் 1980-ம் ஆண்டு வெளிவந்த மாடல் ஆகும்.
    • ஆனால் அதனை டோனி 2021-இல் தான் வாங்கினார்.

    மகேந்திர சிங் டோனி ராஞ்சியில் அவரது வீட்டில் உள்ள பெரிய கேரேஜில் பல ஸ்போர்ட்ஸ் பைக்குகள் மற்றும் விண்டேஜ் பைக்குகள் உயர் ரக கார்கள் மற்றும் பல பழங்கால விண்டேஜ் கார்களும் உள்ளன. அதில் அவரது பிரியமான கார்களில் ஒன்று பழைய ரோல்ஸ் ராய்ஸ் சிவர் ரெய்த் 2 ஆகும்.

    அதை அவர் சமீபத்தில் அவரது சொந்த ஊரான ராஞ்சியின் சாலையில் ஓட்டியதை கண்ட ரசிகர்கள் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இந்த கார் 1980-ம் ஆண்டு வெளிவந்த மாடல் ஆகும். ஆனால் அதனை டோனி 2021-இல் தான் வாங்கினார்.

    சமீபத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத் மற்றும் சுனில் ஜோஷி ஆகியோர் டோனியின் பண்ணை வீட்டில் உள்ள கார்களின் பிரமாண்ட தொகுப்பை வீடியோவாக பகிர்ந்து கொண்டனர். அதில் டோனியின் அனைத்து பைக்குகள் மற்றும் கார்களும் இடம்பெற்றுள்ளன.

    ×