என் மலர்
விளையாட்டு
- கிரிக்கெட் போட்டி டி20-யாக நடந்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- லாஸ் ஏஞ்சல்சில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது இது 3-வது முறையாகும்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு (2021) நடந்தது. அடுத்த ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் 2024-ம் ஆண்டு நடக்கிறது.
அதற்கு அடுத்த ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028-ம் ஆண்டு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி 2028-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி ஜூலை 14-ந் தேதி முதல் 30-ந் தேதி வரையும், பாரா ஒலிம்பிக் போட்டி ஆகஸ்டு 15-ந் தேதி முதல் 27-ந் தேதி வரையும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்சில் ஒலிம்பிக் போட்டி நடக்க இருப்பது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 1932, 1984-ம் ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் 2028-ம் ஆண்டு நடைபெறும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் உள்பட 5 புதிய விளையாட்டுகள் இணைக்கப்பட்டுள்ளது. புதிய விளையாட்டுகளாக பேஸ்பால் மற்றும் சாப்ட்பால், ப்ளாக் கால்பந்து, லாக்ரோஸ் மற்றும் ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டு போட்டிகள் இணைந்துள்ளது.
கிரிக்கெட் போட்டி டி20-யாக நடந்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன.
- களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது.
புதுடெல்லி:
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்தது. அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்தது.
அதைத் தொடர்ந்து 285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி வெறும் 40.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியனுக்கு அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில் இந்த ஆட்டத்தில் பந்து பிட்ச்சில் எப்படி சுழல்கிறது என்று பார்த்து விளையாடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அது எப்படி ஆப்கானிஸ்தான் ஸ்பின்னர்களின் கைகளிலிருந்து வருகிறது என்பதை பார்க்காமல் விளையாடியதே தோல்விக்கான காரணம் என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஆப்கானிஸ்தான் அணியிடமிருந்து அற்புதமான ஆல் ரவுண்ட் செயல்பாடுகள் வெளிப்பட்டன. குறிப்பாக ரஹ்மதுல்லா குர்பாஸ் திடமான இன்னிங்ஸ் விளையாடினார். இங்கிலாந்துக்கு இது மோசமான நாள்.
எப்போதுமே தரமான ஸ்பின்னர்கள் பந்து வீசும்போது பந்துகளை நீங்கள் அவர்களுடைய கைகளில் இருந்து வருவதை பார்க்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அதனை செய்ய தவறினார்கள்.
மாறாக அவர்கள் அதை பந்து பிட்ச்சில் எப்படி சுழன்று வருகிறது என்று பார்த்து விளையாடினார்கள். அதுவே அவர்களுடைய தோல்விக்கு காரணம் என்று நான் கருதுகிறேன். களத்தில் சிறந்த ஆற்றலுடன் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியது போல இல்லை.
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியது போல் இருந்தது.
புதுடெல்லி:
உலக கோப்பை போட்டியில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பாகிஸ்தான் போராடாமலே இந்தியாவிடம் எளிதில் சரண் அடைந்தது. இதனால் இந்த ஆட்டம் ஒரு பக்கமாகவே இருந்தது.
பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், தென்ஆப்பிக்காவை சேர்ந்தவருமான மிக்கி ஆர்தர் இந்த தோல்வி குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது:-
இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியது போல இல்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியது போல் இருந்தது. மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் இருந்தனர். பாகிஸ்தானை ஊக்கப்படுத்தும் எந்த செயல்களும் களத்தில் நிகழ அனுமதிக்கப்படவில்லை.
இதுவும் ஒரு காரணம்தான். இதை நான் சாக்காக கூறப்போவது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
மிக்கி ஆர்தரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முன்னாள் கேப்டனும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் அவரை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக வாசிம்அக்ரம் கூறியதாவது:-
இந்தியாவிடம் மோசமாக தோற்றதற்கு பழி போட்டு தப்பிக்க வேண்டாம் என்று மிக்கிஆர்தரை கேட்டுக் கொள்கிறேன். குல்தீப் யாதவுக்கு எதிராக உங்களிடம் என்ன திட்டம் இருந்தது? என்று எங்களிடம் சொல்லுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
இந்த தோல்வியில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள இப்படி பேசுகிறீர்களா? துரதிருஷ்டவசமாக உங்களால் இதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் அடக்குவது இதுவே முதல் நிகழ்வாகும்.
- இதற்கு முன்பு அந்த அணியுடன் மோதிய இரு ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் தோற்று இருந்தது.
உலகக்கோப்பை கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, 2019-ம் ஆண்டு சாம்பியனான இங்கிலாந்துக்கு 'ஆப்பு' வைத்தது.
சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்தை ஆப்கானிஸ்தான் அடக்குவது இதுவே முதல் நிகழ்வாகும். இதற்கு முன்பு அந்த அணியுடன் மோதிய இரு ஒரு நாள் போட்டிகளிலும், மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் தோற்று இருந்தது.
50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ஆப்கானிஸ்தான் ருசித்த 2-வது வெற்றி இதுவாகும். ஏற்கனவே 2015-ம் ஆண்டில் ஸ்காட்லாந்துக்கு எதிராக மட்டும் வெற்றி பெற்றிருந்தது. அதாவது உலகக் கோப்பையில் இதுவரை 18 ஆட்டங்களில் ஆடியுள்ள ஆப்கானிஸ்தான் அதில் 2-ல் வெற்றியும், 16-ல் தோல்வியும் சந்தித்துள்ளது.
உலகக் கோப்பையில் அதிர்ச்சி தோல்வி என்பது புதிதல்ல. அவற்றில் சில முக்கியமான ஆட்டங்கள்:-
1983-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அறிமுக அணியாக நுழைந்த ஜிம்பாப்வே, தனது முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 13 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்து கவனத்தை ஈர்த்தது. இதே உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் இந்தியா 43 ரன் வித்தியாசத்தில் அசுர பலம் வாய்ந்த அணியான நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீசை நிலைகுலைய வைத்ததும் மிகப்பெரிய அதிர்ச்சி தோல்விகளில் ஒன்றான வர்ணிக்கப்பட்டது.
1996-ம் ஆண்டு உலகக் கோப்பையில் புது வரவான கென்யா, முன்னாள் சாம்பியன் வெஸ்ட்இண்டீசை 93 ரன்னில் சுருட்டி 73 ரன் வித்தியாசத்தில் வெற்றிக்கொடி நாட்டியது. உலகக் கோப்பையில் டெஸ்ட் அந்தஸ்து பெறாத ஒரு அணி, டெஸ்ட் அந்தஸ்து பெற்ற ஒரு அணியை வீழ்த்திய முதல் போட்டி இது தான்.
1999-ம் ஆண்டு உலகக் கோப்பையில் அப்போது புதுமுக அணியான வங்காளதேசம் கடைசி லீக்கில் 62 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானுக்கு 'வேட்டு' வைத்தது.
2007-ம் ஆண்டு தொடரில் வங்காளதேச அணி, இந்தியாவுக்கும், அயர்லாந்து பாகிஸ்தானுக்கும் 'செக்' வைத்து முதல் சுற்றோடு விரட்டியதை மறந்து விட முடியாது.
2011-ம் ஆண்டில் ஒரு ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 328 ரன் இலக்கை அயர்லாந்து 49.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. கெவின் ஓ பிரையன் 50 பந்துகளில் சதம் விளாசினார்.
- உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனை தோற்கடித்தது எங்களுக்கு பெருமைமிக்க தருணம்.
- ஒட்டுமொத்த அணியின் மிகச்சிறந்த சாதனை.
புதுடெல்லி:
13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் டெல்லியில் நேற்று அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. 'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் முதலில் ஆப்கானிஸ்தானை பேட் செய்ய அழைத்தார்.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 49.5 ஓவர்களில் 284 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அடில் ரஷித் 3 விக்கெட்டும், மார்க்வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
285 ரன் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணி 40.3 ஓவர்களில் 215 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 69 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்று பலம் வாய்ந்த இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தது.
இங்கிலாந்தின் பேட்டிங் முதுகெலும்பை சுக்குநூறாக்கிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் முஜீப் ரகுமான், ரஷித்கான் தலா 3 விக்கெட்டும், முகமது நபி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். நடப்பு தொடரில் 3-வது ஆட்டத்தில் ஆடிய ஆப்கானிஸ்தானுக்கு இது முதலாவது வெற்றியாகும். இங்கிலாந்து சந்தித்த 2-வது தோல்வியாகும்.
இந்த போட்டியில் 28 ரன் மற்றும் 3 விக்கெட் எடுத்து ஆல்-ரவுண்டராக மின்னிய ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் ரகுமான் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
வெற்றி குறித்து அவர் கூறுகையில், 'உலகக் கோப்பை கிரிக்கெட்டில் நடப்பு சாம்பியனை தோற்கடித்தது எங்களுக்கு பெருமைமிக்க தருணம். ஒட்டுமொத்த அணியின் மிகச்சிறந்த சாதனை. இத்தகைய வாய்ப்புகாகத் தான் கடினமாக உழைக்கிறோம். பேட்டர்கள் மற்றும் பந்து வீச்சாளர்களின் அற்புதமான செயல்பாடு இதுவாகும். இந்த விருதை, எங்கள் நாட்டில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன்' என்றார்.
- கேப்டன் தசுன் ஷனகா தொடையில் ஏற்பட்ட காயத்தால் உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
- இதனால் அவருக்கு பதிலாக குசல் மென்டிஸ் அணியை வழிநடத்துவார்.
லக்னோ:
உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழாவில், லக்னோவில் இன்று (திங்கட்கிழமை) நடக்கும் 14-வது லீக்கில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, இலங்கையை எதிர்கொள்கிறது.
கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தனது முதல் இரு ஆட்டங்களில் இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்காவிடம் உதை வாங்கியது. இரு ஆட்டங்களிலும் அந்த அணியின் ஸ்கோர் 200-ஐ கூட தொடவில்லை. எஞ்சிய 7 லீக்கிலும் வெற்றி பெற்றால் தான் சிக்கலின்றி அரைஇறுதிக்கு முன்னேற முடியும். இனி ஒவ்வொரு ஆட்டமும் ஆஸ்திரேலியாவுக்கு வாழ்வா-சாவா போன்றது தான்.
லக்னோவில் ஏற்கனவே தென்ஆப்பிரிக்காவிடம் மோதி இருப்பதால் அந்த அனுபவம் ஆஸ்திரேலியாவுக்கு அனுகூலமாக இருக்கும். ஆனால் இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 கேட்ச் வாய்ப்புகளை கோட்டை விட்டது. எனவே பேட்டிங், பவுலிங், பீல்டிங் மூன்றிலும் அசத்தினால் தான் சரிவில் இருந்து மீள முடியும், மிட்செல் மார்ஷ், வார்னர், சுமித், லபுஸ்சேன் உள்ளிட்ட பேட்ஸ்மேன்கள் அணியை தூக்கி நிறுத்த வேண்டிய தருணம் இதுவாகும். இல்லாவிட்டால் உலகக் கோப்பையில் முதல்முறையாக முதல் 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்த மோசமான வரலாற்றை சந்திக்க நேரிடும்.
ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், '2019-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் நாங்கள் லீக்கில் இந்தியா, தென்ஆப்பிரிக்காவிடம் மட்டும் தோற்றோம். இவ்விரு அணிகளும் சமீபத்தில் எங்களுக்கு எதிராக குடைச்சல் கொடுத்தனர். இப்போது வேறு அணிகளை சந்திக்கப்போகிறோம். அந்த அணிக்கு எதிராக நாங்கள் ஏற்கனவே சாதித்து இருப்பதால் நம்பிக்கையுடன் இறங்குவோம். ஒவ்வொரு ஆட்டத்தையும் ஏறக்குறைய இறுதிப்போட்டி போன்று பாவித்து விளையாடுவோம்' என்றார்.
இதே நிலைமையில் தான் இலங்கையும் தவிக்கிறது. இலங்கை அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 428 ரன்களை விட்டுக்கொடுத்து தோற்றது. அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 344 ரன்கள் குவித்தும் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை அணியில் பேட்டிங் நன்றாக உள்ளது. ஆனால் பவுலர்கள் தான் சொதப்புகிறார்கள். இரு ஆட்டத்தையும் சேர்த்து 773 ரன்களை வாரி வழங்கியுள்ளனர். பதிரானா, வெல்லாலகேவின் பந்துவீச்சு எடுபடவில்லை. பவுலர்கள் முந்தைய தவறுக்கு பரிகாரம் தேட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
கேப்டன் தசுன் ஷனகா தொடையில் ஏற்பட்ட காயத்தால் உலகக் கோப்பை போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக குசல் மென்டிஸ் அணியை வழிநடத்துவார்.
சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 102 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 63-ல் ஆஸ்திரேலியாவும், 35-ல் இலங்கையும் வெற்றி பெற்றன. 4 ஆட்டத்தில் முடிவில்லை.
உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் சந்தித்த 10 ஆட்டங்களில் ஆஸ்திரேலியா 8 ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை. இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 1996-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில் மட்டும் தோற்கடித்து இருந்தது. உலகக் கோப்பையில் 27 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவை வீழ்த்த முடியாமல் போராடும் இலங்கை அந்த சோகத்துக்கு முடிவு கட்டுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-
ஆஸ்திரேலியா: வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸ் (கேப்டன்), ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.
இலங்கை: பதும் நிசாங்கா, குசல் பெரேரா, குசல் மென்டிஸ் (கேப்டன்), சமரவிக்ரமா, சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, துனித் வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதுஷன்கா.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- டெல்லியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு இடையே போட்டி நடைபெற்றது.
- ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று டெல்லியில் இங்கிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்த ஆட்டத்துக்கான டாஸ் போடப்பட்டது. இதில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 284 ரன் எடுத்தது.
ஆப்கானிஸ்தான் தரப்பில் குர்பாஸ் 80 ரன், இக்ராம் 58 ரன் எடுத்தனர். இதையடுத்து 285 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ 2 ரன், மலான் 32 ரன், அடுத்து களம் இறங்கிய ரூட் 11 ரன், பட்லர் 9 ரன், லிவிங்ஸ்டன் 10 ரன், சாம் கரன் 10 ரன், வோக்ஸ் 9 ரன் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த புரூக் 66 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதனால் இங்கிலாந்து அணி 169 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து அடில் ரஷீத், மார்க் வுட் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 40.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 215 ரன் எடுத்து தோல்வி அடைந்தது.
இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி நடப்பு தொடரில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
- இந்தியா, 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வென்றது
- கோலி தருவதை அசாம் மகிழ்ச்சியுடன் பெறும் காட்சிகள் வைரலானது
சர்வதேச கிரிக்கெட் சங்கத்தின் (ICC) 2023 வருட ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டித்தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று குஜராத் மாநில அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையே இத்தொடரின் போட்டி நடைபெற்றது.
முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு 191 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது. பின்னர் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
கடந்த 7 ஆண்டுகளாக ஐசிசி ஆண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவை பாகிஸ்தான் வென்றதில்லை. இம்முறையும் வெற்றி பெற்றதை அடுத்து 8-வது முறையாக இந்த பெருமையை இந்தியா தக்க வைத்து கொண்டுள்ளது.
பாகிஸ்தான் தோல்வியுற்றதால் அந்நாட்டில் இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களும், விமர்சகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் பாகிஸ்தான் அணி வீரர்கள் ஆடிய விதத்தை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
நேற்றைய ஆட்டம் முடிந்ததும், இந்திய அணி வீரர் விராட் கோலி, பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிற்கு தனது கையொப்பமிட்ட இந்திய அணி டி-ஷர்டுகளை (jersey) பரிசாக அளித்தார். அவற்றை மகிழ்ச்சியுடன் பாபர் அசாம் பெற்று கொண்டார்.
இக்காட்சிகள் தொலைக்காட்சி சேனல்களிலும் சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது.
இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், அசாமின் இந்த செய்கையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது குறித்து அந்நாட்டு தொலைக்காட்சி பேட்டியில் அவர் கூறியதாவது:
பாகிஸ்தான் அணியினரின் தோல்வியில் பாகிஸ்தான் மக்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்நிலையில் பாபர் அசாம், கோலியிடமிருந்து டி-ஷர்ட் வாங்குவதை தொலைக்காட்சி சேனல்கள் மீண்டும் மீண்டும் ஒளிபரப்பின. தோல்வியில் மக்கள் வருந்தும் போது, பாபர் அசாம் இவ்வாறு செய்தது தவறு. அவர் இதை செய்திருக்க கூடாது. தனது உறவினர் மகனுக்காக கோலியிடம் டி-ஷர்ட்கள் வாங்க பாபர் நினைத்திருந்தால் கூட கேமிராக்களின் பார்வையில் படாமல் தங்கள் அறைக்கு சென்ற பிறகு அவரை தனியே சந்தித்து வாங்கியிருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இரு நாட்டு அணிகளுக்கு இடையே நடைபெறும் விளையாட்டு போட்டியில் வெல்வதும் தோற்பதும் இயல்பான சம்பவங்கள் என்றும் இரு அணி வீரர்களின் நட்பான பரிமாற்றங்கள், போட்டியை போட்டியாக பார்க்கும் மனப்பக்குவம் மக்களிடம் வளர வளர இது போன்ற செயல்கள் சரியாக புரிந்து கொள்ளப்படும் என இச்சம்பவம் குறித்து உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
- பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
- அப்போது ரசிகர்கள் சிலர் முகமது ரிஸ்வானுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அகமதாபாத்:
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியின்போது, பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது ரசிகர்கள் சிலர், அவரை நோக்கி "ஜெய் ஸ்ரீராம்" என கோஷமிட்டனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணைய தளத்தில் பரவி வருகின்றன.
விருந்தோம்பலுக்கு பெயர் போன இந்தியாவில், முகமது ரிஸ்வானுக்கு எதிராக ரசிகர்கள் கோஷமிட்டதற்கு பலரும் சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
- தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து தசுன் ஷனகா விலகியுள்ளார்.
- இலங்கை அணி கேப்டனாக தற்போதைய துணை கேப்டன் குசால் மென்டிஸ் செயல்படுவார்.
புதுடெல்லி:
உலக கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணியை வழிநடத்திய ஆல்-ரவுண்டர் தசுன் ஷனகா தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக சமிகா கருணரத்னே சேர்க்கப்பட்டு உள்ளார்.
உலக கோப்பையில் இனி இலங்கை அணி கேப்டனாக தற்போதைய துணை கேப்டன் குசால் மென்டிஸ் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் இரு ஆட்டங்களில் இலங்கை தோற்றுள்ள நிலையில், தசுன் ஷனகா விலகல் அந்த அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாகும்.
- இந்திய அணியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்தவர்கள் பந்துவீச்சாளர்கள் தான்.
- நிச்சயம் இந்த ஆடுகளம் 190 ரன்கள் சேர்க்கக் கூடியது அல்ல.
உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 191 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
பாகிஸ்தான் அணி தரப்பில் பாபர் அசாம் 50 ரன், ரிஸ்வான் 49 ரன் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா, சிராஜ், பாண்ட்யா, குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.
இந்திய அணி தரப்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித், கில் களம் புகுந்தனர். இதில் கில் 16 ரன் எடுத்த நிலையிலும், அடுத்து வந்த கோலி 16 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து ஸ்ரேயஸ் ஐயர் ரோகித்துடன் ஜோடி சேர்ந்தார். ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா 63 பந்தில் 86 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து கே.எல்.ராகுல் களம் இறங்கினார். இறுதியில் இந்திய அணி 30.3 ஓவரில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
இந்திய அணியின் வெற்றிக்கு பாதை அமைத்து கொடுத்தவர்கள் பந்துவீச்சாளர்கள் தான். நிச்சயம் இந்த ஆடுகளம் 190 ரன்கள் சேர்க்கக் கூடியது அல்ல. பாகிஸ்தான் அணியினர் ஒரு கட்டத்தில் 280 ரன்கள் சேர்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால் பவுலர்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டது பெருமை அளிக்கிறது.
ஒரு கேப்டனாக எனது பொறுப்பும் களத்தில் முக்கியமானது. பிட்சின் தன்மையை சரியாக கணித்து எந்த வீரர் பணியை கச்சிதமாக முடிப்பார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
அனைத்து நாட்களிலும் எல்லோராலும் சிறப்பாக செயல்பட முடியாது. ஒவ்வொரு நாளும் வேறு வேறு வீரர்களின் நாளாக இருக்கும். ஷர்துல் தாக்கூருக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுக்கப்பட்டதற்கு அதுதான் காரணம். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதால், பெரிதாக கொண்டாட தேவையில்லை. அதேபோல் சோகமடையவும் தேவையில்லை. அடுத்த இலக்கை நோக்கி நடக்க வேண்டிய நிலை உள்ளது. ஏனென்றால் ஒவ்வொரு அணியும் தரமான அணிகள் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 280 முதல் 290 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாடினோம்.
- ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 12-வது லீக் போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இன்று மோதின. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 191 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டத்தால் 30.3 ஓவரில் 192 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாங்கள் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினோம் ஆனால் சரியாக முடிக்க முடியவில்லை என பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இமாமிற்கும் எனக்கும் பார்ட்னர்ஷிப் நன்றாகவே அமைந்தது. 280 முதல் 290 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் விளையாடினோம். நாங்கள் ஆட்டத்தை நன்றாகவே தொடங்கினோம். ஆனால் எங்களால் சரியாக ஆட்டத்தை முடிக்க முடியவில்லை. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடினார்.
இவ்வாறு அவர் கூறினார்.






