என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை அரசுக்கு ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.325 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 80 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு உள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவாமல் இருக்க கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

    4-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் தனிநபர், தொழிற்சாலை, வணிக நிறுவனம், வியாபாரிகள் என அனைத்துத்தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் மாநில அரசுகளும் தப்பவில்லை. தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள், இயங்கினால்தான் மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கும். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை வணிகவரி, ஜி.எஸ்.டி., கலால், பத்திரப்பதிவு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் மூலம் சுமார் ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஆண்டு வருமானமாக கிடைக்கும்.

    இந்த நிதியாண்டு தொடங்கிய ஏப்ரல் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பெரும்பாலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி, பால், மருந்தகம் உள்ளிட்டவை தவிர அனைத்தும் மூடப்பட்டு கிடந்தது.

    4-வது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால்தான் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    புதுவை அரசுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.400 கோடி வருமானம் கிடைக்கும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் அரசுக்கு ரூ.74 கோடி மட்டுமே வருவாய் வந்துள்ளது. சுமார் ரூ.325 கோடி வருவாய் இழப்பு புதுவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது 80 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு உள்ளது.

    ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியத்திற்கு ரூ.240 கோடி தேவைப்படுகிறது.

    இத்தகைய சூழலில் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல்-அமைச்சர் நாராயணசாமியும் பிரதமர், மத்திய நிதி மந்திரியை தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் பலமுறை நிதி கேட்டார்.

    ஆனால், மத்திய அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனால் மாநில அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகைகளையாவது உடனடியாக தர வேண்டும் என அரசு வற்புறுத்தியது. இதனையும் தரவில்லை. பிணைய பத்திரங்கள் மூலம் ரூ.1,100 கோடி புதுவை அரசு கடன் பெற்றுள்ளது. இந்த கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.1500 கோடியாக திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.

    இந்த ஆண்டு புதுவையில் முழுமையான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கே மே மாத சம்பளம் போட முடியாத நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் பரவியது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி

    இதற்கேற்றார்போல அரசு ஊழியர்கள் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி சூசகமாக சம்பள குறைப்பை தெரிவித்து வந்தார்.

    ஆனால், அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எப்படியாவது அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தியுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் செலவிடப்படாத தொகைகளை கணக்கெடுத்து வருகின்றனர். இந்த தொகை சுமார் ரூ.250 கோடி இருக்கும் என தெரிகிறது. இது மட்டுமின்றி வங்கிகளில் அரசு டெபாசிட்டாக ரூ.300 கோடி வரை செலுத்தியுள்ளது. இக்கட்டான காலகட்டத்தில் இந்த நிதியை எடுத்துக்கொண்டு 3 மாதத்தில் திரும்ப செலுத்தலாம்.

    எனவே, இத்தொகையையும் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியில் கடன் பெறும் வரம்பை 3-ல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

    இதனால் புதுவை அரசு புதிதாக கடன் பெறலாம். ஆனால், இந்த கடனை பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. திட்டங்களை குறிப்பிட்டு அதனை செயல்படுத்த மட்டுமே கடன் பெற முடியும்.

    இதனால் இந்த கடனை பெற அரசு முயற்சிக்கவில்லை. மாறாக ரிசர்வ் வங்கியில் கடன் பெற புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு எந்தவித சிக்கலுமின்றி இந்த மாத சம்பளம் கிடைக்கும் என தெரிகிறது.
    நண்பரிடம் தகராறு செய்ததை தட்டிக் கேட்ட மீன்பிடி தொழிலாளி உள்பட 4 பேருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை வைத்திக்குப்பம் பச்சைவாழி அம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் பாஸ்கர் (வயது45). இவரது மகன் பவிலன். இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

    இந்நிலையில் வைத்திக்குப்பத்தில் உள்ள மைதானத்தில் மனோத் என்பவர் மது குடித்து கொண்டிருந்தார். இதனை பவிலனின் நண்பரான வினோத் என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனை அந்த வழியாக சென்ற சோலைநகரை சேர்ந்த சிலர் தட்டிக் கேட்டுள்ளனர். இதில் வினோத்திடம் தகராறு செய்து விட்டு அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.

    இதனையறிந்த வினோத்தின் நண்பரான பவிலன், சிவா, சுரேந்தர், நஷி ஆகியோர் சோலை நகரை சேர்ந்த தட்சணாமூர்த்தி, சிவன், விக்னேஷ் முருகன் ஆகியோரிடம் இதுகுறித்து தட்டிக்கேட்டுள்ளனர்.

    இதில் ஆத்திரமடைந்த சோலைநகரை சேர்ந்த 4 பேரும் சேர்ந்து பவிலனையும் அவரது நண்பர்களையும் ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் அங்கிருந்த தடியால் தாக்கி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

    இதில் பவிலன் காயம் அடைந்தார். அவரை அவரது நண்பர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக அனுமதித்தனர்.

    இதுகுறித்து பவிலனின் தந்தை பாஸ்கர் சோலைநகர் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சோலைநகரை சேர்ந்த தட்சணாமூர்த்தி, சிவன், விக்னேஷ், முருகன் ஆகிய 4 பேரையும் தேடி வருகின்றனர்.

    வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வருபவர்களை 15 நாள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவையில் தற்போது 33 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவரின் அறிவுரைப்படி 70 வயதை கடந்தவர்களை கொரோனா அதிகளவில் பாதிக்கிறது. வேறு நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் இறக்கின்றனர்.

    வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வருபவர்களை கண்டிப்பாக 15 நாள் தனிமைப்படுத்த மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளேன். மருத்துவர்கள் அறிவுரையின் படி இன்னும் 2 மாதங்களுக்கு கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் பரவக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

    கொரோனா சைரஸ் பரிசோதனை  - கோப்புப்படம்


    மத்திய அரசு புதுவைக்கு நிதி ஆதாரங்களை தரவில்லை. இதுகுறித்து பிரதமர், உள்துறை மற்றும் நிதி மந்திரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளேன். கொரோனாவை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு நமக்கு மருத்துவ உபகரணங்கள் கொடுக்க வேண்டும்.

    இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மருந்துகளும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்கிட மத்திய அரசு தவறிவிட்டது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.
    புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் அபிவிருத்தி மையம் கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகள், அவற்றை கையாளும் வழிமுறைகள் பற்றி ஆன்லைன் பயிற்சி பட்டறையை நடத்தியது.
    புதுச்சேரி:

    புதுவை பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியின் தொழில் முனைவோர் அபிவிருத்தி மையமும், மகளிர் தொழில்நுட்பக் கல்லூரி இணைந்து கொரோனா ஊரடங்கு காலத்தில் எழுந்துள்ள பிரச்சினைகளும், அவற்றை கையாளும் வழிமுறைகளும் என்ற தலைப்பில் ஆன்லைன் பயிற்சி பட்டறையை நடத்தியது.

    நிகழ்ச்சிக்கு பாரதிதாசன் கல்லூரி முதல்வர் சுப்ரமணி தலைமை தாங்கினார். அரசு தொழில் முனைவோர் அபிவிருத்தி மையத்தின் இயக்குனர் ராம்குமார் கலந்துகொண்டு, கொரோனா சூழ்நிலைக்கேற்ப மாற்றிக்கொண்டு வாழ்வை வளமாக்குவது எவ்வாறு? என்பது குறித்து பேசினார்.

    தமிழ்நாடு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையின் தலைமை உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ், நோய் எதிர்ப்பு சக்தியை தருகின்ற உணவு மற்றும் ஊட்டச்சத்து, பாரம்பரிய மசாலா குறித்து பேசினார்.

    ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியின் மருத்துவ ஊட்டச்சத்து துறை தலைவர் ஹேமமாலினி, கொரோனா காலத்தின் உணவு, சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு குறித்தும், பாரதிதாசன் கல்லூரி உணவு மற்றும் ஊட்டச்சத்து துறை பேராசிரியர் மலர்விழி, கோவிட் காலத்தில் உடற்பயிற்சியின் முக்கியம் குறித்தும் பேசினர்.

    3 நாட்கள் நடந்த ஆன்லைன் பயிற்சி பட்டறையில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உணவியல் நிபுணர்கள் வீட்டில் இருந்தவாறே ஆன்லைனில் பேசினர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை பாரதிதாசன் கல்லூரி தொழில் முனைவோர் அபிவிருத்தி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கயல்விழி, அரசு மகளிர் தொழில்நுட்பக்கல்லூரி முதல்வர் ராணி, பேராசிரியர் பத்மராஜ், விரிவுரையாளர் காந்திமோகன் ஆகியோர் செய்திருந்தனர்.
    ஊரடங்கால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் காணொலி காட்சி வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது என்று கலெக்டர் அருண் கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஊரடங்கால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில் காணொலி காட்சி வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

    கல்வித்துறை வளாகத்தில் உள்ள மெய்நிகர் கட்டுப்பாட்டு அறையில் நடந்த ஒளிப்பதிவு நிகழ்ச்சியில் அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் கேட்ட 90 கேள்விகளுக்கு சிறந்த ஆசிரியர்கள் விளக்கம் அளித்தனர்.

    ஒளிப்பதிவு செய்த பாடங்கள், கேள்வி- பதில்கள் கல்வித்துறையின் யூ.டியூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 3 ஆயிரத்து 844 பேர் யூ.டியூப் சந்தாதாரர்களாக இணைந்துள்ளனர். யூ.டியூப் வழியாக படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 226-ஐ கடந்துள்ளது.

    கல்லூரி மாணவர்கள் வீட்டில் இருந்து படிக்க இணையவழியாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மே 24-ந்தேதி வரை ஆயிரத்து 68 கல்லூரி ஆசிரியர்கள் வகுப்புகளை நடத்தியுள்ளனர்.

    இதன்மூலம் 30 ஆயிரத்து 671 ஆசிரிய நேரம் மற்றும் 7 லட்சத்து 12 ஆயிரத்து 796 மாணவ நேரம் உருவாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    வில்லியனூர் அருகே இரு தரப்பினரிடையே மோதலில் 12 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    சேதராப்பட்டு:

    வில்லியனூரை அடுத்த தமிழக பகுதியான இரும்பை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தனுஷ் (வயது42) டெய்லர். இவர் நேற்று முன்தினம் வீட்டின் அருகே நின்று கொண்டு புகை பிடித்துக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்த 4 பேர் தனுசிடம் ரூ.200 பணம் கேட்டனர். அதற்கு தனுஷ் கொடுக்க மறுத்ததால் அவர் மோட்டார் சைக்கிளை எடுத்து சென்றனர். இதை தட்டிக் கேட்ட தனுசை தாக்கினர்.

    இதற்கு பதிலுக்கு பதிலாக தனுஷ் தரப்பினர் கமல் தரப்பினரை தாக்கினர்.

    இதுகுறித்து தனுஷ், சாமுண்டீஸ்வரி இருவரும் தனித்தனியாக கோட்டக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தனுசை தாக்கிய எழில், கமல், சரண் உள்ளிட்ட 7 பேர் மீதும், கமலை தாக்கிய தனுஷ், ராஜ், விஷ்ணு உள்ளிட்ட 5 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    மேலும் இரு தரப்பினரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.

    கொரோனா பரவி வருவதை தடுக்க புதுச்சேரிக்கு வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க சுகாதார பணியாளர்களை கொண்ட 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்பு வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து 4 ஆயிரத்து 90 பேர் புதுச்சேரி திரும்பி உள்ளனர். இதில் வெளிநாடுகளில் இருந்து வந்த 7 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, டெல்லியில் இருந்து வந்த ஒரு சிலருக்கும் தொற்று உறுதியாகி அவர்களது குடும்பத்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் வெளியில் இருந்து வந்தவர்கள் மூலம் பிறருக்கு பரவுவதை தடுக்க அவர்களை கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    அதாவது 14 நாட்கள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று விதிமுறை உள்ளது. ஆனால் வெளியில் இருந்து வந்தவர்கள் ஓட்டல் மற்றும் ஏதேனும் ஒரு வீட்டில் தனிமையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அதுபோல் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தவில்லை என்பது தற்போது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களை கண்காணிக்க சுகாதாரப் பணியாளர்களை கொண்ட 27 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த குழுக்களின் செயல்பாடு குறித்து சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நேற்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆய்வு கூட்டம் நடத்தினார். இதில் சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டா, இயக்குனர் மோகன்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரும்பியவர்களின் தற்போதைய நிலை என்ன? அவர்கள் ஏற்கனவே குறிப்பிட்ட இடத்தில்தான் தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளனரா? இல்லையெனில் வேறு எங்காவது உள்ளனரா? அவர்களால் பிறருக்கு பரவும் வாய்ப்பு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து அவர்களுக்கும் உடனடியாக பரிசோதனை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
    புதுவையில் நேற்று மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மோதல் சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் புதுவையில் சாராயக்கடை உள்பட மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. மதுக்கடைகள் மூடப்பட்ட சில நாட்கள் மட்டும் ஒரு சிலர் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்று வந்தனர். அந்த மதுபாட்டில்களும் தீர்ந்து விடவே புதுவையில் மது விற்பனை முற்றிலும் இல்லாமல் இருந்தது.

    மது விற்பனை இல்லாததால் புதுவையில் மோதல், திருட்டு வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருந்தது. மேலும் தற்கொலை போன்ற சம்பவங்களும் குறைந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று புதுவையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டதால் மோதல் சம்பவங்கள் மீண்டும் தொடங்கியுள்ளது.

    பழைய சம்பவங்களை மனதில் வைத்து மது குடித்து விட்டு மோதலில் ஈடுபட தொடங்கியுள்ளனர். நேற்று மட்டும் இதுபோன்று புதுவையில் பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது. முதலியார்பேட்டை பகுதியில் நேற்று சவ ஊர்வலத்தின் போது மது குடித்து விட்டு நடனமாடியதில் ஏற்பட்ட மோதலில் வாலிபருக்கு பீர் பாட்டில் குத்து விழுந்தது. அதுபோல் ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்துக்குட்பட்ட ராசுஉடையார் தோட்டம் மற்றும் பிரான்சுவா தோட்டம் பகுதியை சேர்ந்த ஒரு கும்பல் மது குடித்து விட்டு மோதலில் ஈடுபட்டது. இதுபோல் குடிபோதையில் வில்லியனூர் பகுதியில் ஏற்பட்ட மோதலில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுபோன்று புதுவை முழுவதும் நேற்று பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளது.

    புதுவையில் கடந்த சில நாட்களாக நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா பரவலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

    கடந்த 2 மாதமாக ஊரடங்கு உத்தரவும் அமலில் இருந்து வருகிறது. இந்த நிலையில் ஆரம்ப கட்டத்தில் புதுவையில் டெல்லியில் இருந்து திரும்பிய ஒரு சிலருக்கு மட்டும் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    இவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இவர்களின் மூலம் குடும்பத்தில் ஒரு சிலருக்கு பரவியது.

    இதையடுத்து சமூக தொற்றாக மாறவிடாமல் சுகாதாரத்துறை, காவல், வருவாய்த்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்தனர்.

    தொற்று பாதிக்கப்பட்ட இடங்கள் சீல் வைக்கப்பட்டு யாரும் வெளியில் நடமாட அனுமதிக்கவில்லை. சந்தேகத்திற்கு இடமானவர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அங்கேயே மருத்துவ முகாமும் அமைத்தனர். இதனால் நோய் தொற்று பரவாமல் கட்டுக்குள் இருந்தது.

    நீண்ட காலமாக புதுவையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருந்தது. இதனால் புதுவை மக்கள் நிம்மதியாக இருந்தனர்.

    பிரதமர் காணொலி காட்சியில் பேசியபோதுகூட புதுவை அதிர்ஷ்டமான பகுதி என குறிப்பிட்டார். இந்நிலையில் சமீப காலமாக நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    காரைக்கால் மாவட்டத்தில் நீண்ட காலமாக பாதிப்பு இல்லாமல் இருந்தது. அங்கும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் நோய் தொற்றுடன் சிகிச்சை பெறுகின்றனர். புதுவையில் 23-ந்தேதி 5 பேர், 24-ந்தேதி 3 பேர், 25-ந்தேதி 3 பேர் என நோய் தொற்று அதிகரித்து வருகிறது.

    இதிலும் டயாலிசிஸ் செய்ய வந்தவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது. மற்றொருவர் சாதாரண சளி, காய்ச்சலுக்கு வந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

    இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் கூறும்போது, புதுவையில் கொரோனா சமூக தொற்றாக பரவியுள்ளதால் அச்சம் ஏற்பட்டுள்ளது என்றார்.

    ஆனால், மாவட்ட கலெக்டர் அருண் இதனை மறுத்துள்ளார். வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரும்புபவர்களுக்குத்தான் கொரோனா தொற்று உள்ளது.

    மேலும் ஏற்கனவே தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களுக்கும்தான் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்து உள்ளார். இருப்பினும் கொரோனா தொற்று பரவல் புதுவை மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே கொரோனா பரவாமல் தடுக்க காவல்துறை, சுகாதாரத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து 2 மாதமாக தீவிர பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களின் பணியால்தான் நோய் தொற்று பரவாமல் கட்டுக்குள் இருந்தது. அவர்களும் தற்போது சோர்வடைந்து விட்டனர். அவர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்க வேண்டும். கட்டுப்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும். அப்போதுதான் நோய் தொற்று பரவாமல் கட்டுக்குள் வைக்க முடியும்.

    புதுவையில் உள்ள மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு குடும்பத்திற்கு மாதம் 10 கிலோ வீதம் 2 மாதத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கந்தசாமி கூறினார்.
    புதுச்சேரி:

    ஊரடங்கால் பாதிக்கப்பட்ட சிகப்பு ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மத்திய அரசு வழிகாட்டுதலின்படி இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது.

    மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கும் இலவச அரிசி வழங்க வேண்டும் என அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. இதனால் இலவச அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்தது. அரிசி வாங்குவதற்கு ரூ.5 கோடியே 28 லட்சத்திற்கான கோப்பு தயாரிக்கப்பட்டு கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது.

    கடந்த வாரம் கவர்னர் இந்த கோப்பிற்கு ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து அரிசி வழங்குவதற்கான நடவடிக்கையை அரசு முடுக்கி விட்டுள்ளது.

    புதுவையில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 200 மஞ்சள் கார்டுகள் உள்ளது. இதில் அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர மற்றவர்களுக்கு அரிசி வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.

    இதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்திய உணவுக்கழகத்திற்கு அரிசிக்கான தொகை செலுத்தப்பட்டு அரிசி வாங்கப்படும். பின்னர் புதுவையில் உள்ள மஞ்சள் ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு குடும்பத்திற்கு மாதம் 10 கிலோ வீதம் 2 மாதத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்பட உள்ளது.

    இதுகுறித்து அமைச்சர் கந்தசாமி கூறும்போது, வரும் 29-ந் தேதி முதல் 2 மாதத்திற்கு 20 கிலோ அரிசி வழங்கப்படும். 3-வது மாதத்திற்கு பட்ஜெட் கூட்டம் முடிந்தவுடன் அரிசி வழங்கப்படும். ரே‌ஷன் கடை ஊழியர்கள் ஒப்புக்கொண்டால் அவர்களின் வழியாக அரிசி வினியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

    புதுவையில் கணவருக்கு ஏற்பட்ட கொரோனா தொற்றின் மூலமாக மனைவிக்கும், மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 32 பேர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ரெட்டியார்பாளையம் மூகாம்பிகை நகரை சேர்ந்த தாய்-மகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    ஏற்கனவே அந்த குடும்பத்தில் கணவருக்கு ஏற்பட்ட தொற்றின் மூலமாக மனைவிக்கும், மகளுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அரும்பார்த்தபுரம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் புதுவை மாநிலம் முழுவதும் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.

    இந்த தகவலை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.

    வில்லியனூர் அருகே மது வாங்கி வர மறுத்த தகராறில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் அருகே ஆரியபாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நந்த கோபால். டிரைவராக வேலை செய்து வருகிறார். இவரது உறவினர் மகன் வேல்முருகன் மற்றும் அவரது நண்பர் ராமன் ஆகியோர் நேற்று சேந்த நத்தம் மகாலட்சுமி நகரில் தங்களது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஏற்கனவே மது குடித்து கொண்டிந்த ஆரியபாளையத்தை சேர்ந்த கார்த்திகேயன், சவுந்தர், செல்வபாரதி, தர்மா ஆகியோர் தங்களிடமிருந்த மது தீர்ந்து விட்டதால் வேல்முருகனிடம் பணம் கொடுத்து மது வாங்கி வருமாறு கூறினர்.

    அதற்கு வேல்முருகன் மதுக்கடையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மது வாங்க வர மறுத்து விட்டார். இதனால் ஆத்திமடைந்த கார்த்திகேயன் உள்பட 4 பேரும் சேர்ந்து வேல்முருகனை பீர் பாட்டிலால் தாக்கினர்.

    இதில் காயமடைந்த வேல்முருகனை அவரது நண்பர் ராமன் மீட்டு வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது பின் தொடர்ந்து வந்த கார்த்திகேயன் மற்றும் சவுந்தர் ஆகியோர் வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் பள்ளி அருகே ராமனை வழி மறித்து சரமாரியாக தாக்கினர்.

    இதுபற்றி வேல்முருகன் செல்போன் மூலம் தனது உறவினர் நந்தகோபாலுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து நந்த கோபால் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கார்த்திகேயன் உள்பட 4 பேரிடம் தட்டிக் கேட்டார். அப்போது அவர்கள் நந்தகோபாலை கையால் சரமாரியாக தாக்கினர். இதில் நந்தகோபாலுக்கு முன் பக்க பல் உடைந்தது. மேலும் சவுந்தர் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து நந்தகோபாலை வெட்டினார். மேலும் இனிமேல் எங்களிடம் ஏதாவது வம்பு செய்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி விட்டு அங்கிருந்து சென்றனர்.

    அதோடு கிரிக்கெட் மைதானத்தில் நிறுத்தியிருந்த ராமனின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தனர். வேல்முருகனின் மோட்டார் சைக்கிளை தடியால் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.

    இந்த தாக்குதலில் படுகாய மடைந்த நந்தகோபால், வேல்முருகன் ஆகியோர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமன் வில்லியனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திகேயன், சவுந்தர், செல்வபாரதி, தர்மா ஆகிய 4 பேரையும் தேடி வருகிறார்கள்.

    ×