search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி சட்டசபை
    X
    புதுச்சேரி சட்டசபை

    புதுவையில் 80 சதவீதம் வருவாய் இழப்பு

    புதுவை அரசுக்கு ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.325 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது 80 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு உள்ளது.
    புதுச்சேரி:

    கொரோனா தொற்று பரவாமல் இருக்க கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது.

    4-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஊரடங்கால் தனிநபர், தொழிற்சாலை, வணிக நிறுவனம், வியாபாரிகள் என அனைத்துத்தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதில் மாநில அரசுகளும் தப்பவில்லை. தொழிற்சாலை, வணிக நிறுவனங்கள், இயங்கினால்தான் மாநில அரசுகளுக்கு வருவாய் கிடைக்கும். புதுவை மாநிலத்தை பொறுத்தவரை வணிகவரி, ஜி.எஸ்.டி., கலால், பத்திரப்பதிவு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளின் மூலம் சுமார் ரூ.4 ஆயிரத்து 500 கோடி ஆண்டு வருமானமாக கிடைக்கும்.

    இந்த நிதியாண்டு தொடங்கிய ஏப்ரல் 1-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை பெரும்பாலும் அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறி, பால், மருந்தகம் உள்ளிட்டவை தவிர அனைத்தும் மூடப்பட்டு கிடந்தது.

    4-வது கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால்தான் தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    புதுவை அரசுக்கு மாதந்தோறும் சுமார் ரூ.400 கோடி வருமானம் கிடைக்கும். ஆனால் ஏப்ரல் மாதத்தில் அரசுக்கு ரூ.74 கோடி மட்டுமே வருவாய் வந்துள்ளது. சுமார் ரூ.325 கோடி வருவாய் இழப்பு புதுவை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது 80 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பு உள்ளது.

    ஒவ்வொரு மாதமும் அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியத்திற்கு ரூ.240 கோடி தேவைப்படுகிறது.

    இத்தகைய சூழலில் மத்திய அரசிடமிருந்து நிதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதல்-அமைச்சர் நாராயணசாமியும் பிரதமர், மத்திய நிதி மந்திரியை தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் பலமுறை நிதி கேட்டார்.

    ஆனால், மத்திய அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. இதனால் மாநில அரசுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகைகளையாவது உடனடியாக தர வேண்டும் என அரசு வற்புறுத்தியது. இதனையும் தரவில்லை. பிணைய பத்திரங்கள் மூலம் ரூ.1,100 கோடி புதுவை அரசு கடன் பெற்றுள்ளது. இந்த கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.1500 கோடியாக திரும்ப செலுத்த வேண்டியுள்ளது.

    இந்த ஆண்டு புதுவையில் முழுமையான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் அரசு ஊழியர்களுக்கே மே மாத சம்பளம் போட முடியாத நிலை உருவாகியுள்ளதாக தகவல்கள் பரவியது.

    முதல்-அமைச்சர் நாராயணசாமி

    இதற்கேற்றார்போல அரசு ஊழியர்கள் தியாகம் செய்ய முன்வர வேண்டும் என முதல்-அமைச்சர் நாராயணசாமி சூசகமாக சம்பள குறைப்பை தெரிவித்து வந்தார்.

    ஆனால், அமைச்சரவை கூட்டத்தில் அரசு ஊழியர்கள் சம்பளத்தை குறைக்க அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எப்படியாவது அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வலியுறுத்தியுள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து அரசின் பல்வேறு துறைகளில் செலவிடப்படாத தொகைகளை கணக்கெடுத்து வருகின்றனர். இந்த தொகை சுமார் ரூ.250 கோடி இருக்கும் என தெரிகிறது. இது மட்டுமின்றி வங்கிகளில் அரசு டெபாசிட்டாக ரூ.300 கோடி வரை செலுத்தியுள்ளது. இக்கட்டான காலகட்டத்தில் இந்த நிதியை எடுத்துக்கொண்டு 3 மாதத்தில் திரும்ப செலுத்தலாம்.

    எனவே, இத்தொகையையும் தேவைப்பட்டால் பயன்படுத்திக்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு உள்நாட்டு உற்பத்தியில் கடன் பெறும் வரம்பை 3-ல் இருந்து 5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

    இதனால் புதுவை அரசு புதிதாக கடன் பெறலாம். ஆனால், இந்த கடனை பெற பல்வேறு நிபந்தனைகள் உள்ளது. திட்டங்களை குறிப்பிட்டு அதனை செயல்படுத்த மட்டுமே கடன் பெற முடியும்.

    இதனால் இந்த கடனை பெற அரசு முயற்சிக்கவில்லை. மாறாக ரிசர்வ் வங்கியில் கடன் பெற புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் அரசு ஊழியர்களுக்கு எந்தவித சிக்கலுமின்றி இந்த மாத சம்பளம் கிடைக்கும் என தெரிகிறது.
    Next Story
    ×