என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை கதிர்காமம் அரசு கொரோனா மருத்துவமனையில் கலெக்டர் அருண் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அதன் 3-வது மாடியில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2-வது மாடியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அங்கு ஒப்பந்த டாக்டர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவதாகவும், டாக்டர்களுக்கான சலுகைகள், செவிலியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோல் மருத்துவமனையில் கழிப்பிடங்களில் உடனுக்குடன் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் தினமும் 2 அல்லது 3 முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் கடந்த 2 வாரங்களாக தினந்தோறும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஜிப்மர் டாக்டர் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை தவிர்த்து புதுச்சேரியில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதையொட்டி அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று கலெக்டர் அருண் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதுபோன்ற குறைபாடுகள் வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தினார்.

    மேலும் கொரோனா மருத்துவக் கழிவுகள் சரியான முறையில் அகற்றப்பட்டு அழிக்கப்படுகிறதா? என்பது குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    புதுவையில் இன்று ஒரே நாளில் புதிதாக 9 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் 2 வாரங்களுக்கு முன்பு வரை ஒற்றை இலக்க எண்களிலேயே கொரோனா நோயாளிகள் இருந்து வந்தனர். மேலும் நோய் பரவுதலும் எப்போதாவதுதான் ஏற்பட்டது.

    ஆனால், கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பிய சிலரால் நோய் தொற்று அதிகரிக்க தொடங்கியது.

    அதன்பிறகு தொடர்ந்து ஒவ்வொரு நாளும் யாருக்காவது நோய் தொற்று ஏற்பட்டது. இப்போது தினமும் அதிக எண்ணிக்கையிலான நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது.

    கொரோனா வைரஸ்


    நேற்று புதிதாக கர்ப்பிணி பெண், வங்கி ஊழியர் உள்பட 4 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இன்று புதிதாக 9 பேருக்கு நோய் தொற்று ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை இயக்குனர் மோகன்குமார் வெளியிட்டார்.

    புதுவையில் மேலும் 9 பேருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த 2 பேருக்கும், ஜிப்மர் குடி யிருப்பில் வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஒருவருக்கும், கொரோனா வார்டில் சிகிச்சை அளித்த டாக்டர் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    மேலும் அன்னை தெரேசா நகரை சேரந்த ஒரு நபருக்கும், திலகர் நகரை சேர்ந்த ஒருவருக்கும் கொம்பாக்கத்தை சேர்ந்த 65 வயது முதியவருக்கும், பெரிய கோட்டக்குப்பம், வடமங்கலம் பகுதியை சேர்ந்த தலா ஒருவருக்கும கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    இதில், 4 பேர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், 4 பேர் 25 வயதிற்கு உட்பட்டவர்கள், ஒருவர் 37 வயதை உடையவர். இவர்களுடன் சேர்த்து கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் 35 பேரும், ஜிப்மரில் 9 பேரும், சேலத்தில் புதுவையை சேர்ந்த பெண்மணி ஒரு வரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    நேற்று குருமாம்பேட்டை சேர்ந்த ஒருவர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இதுவரை கொரேனாவால் 70 பேர் புதுவையில் பாதிக்கப்பட்டுள்ளனர்,

    புதுவையில் இதுவரை 13 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக இருந்து வந்தது. இன்று 7 பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் உத்தரவின்படி இந்த பகுதிகளில் ஜூன் 30-ந்தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும். மத்திய அரசு மேலும் சில தளர்வுகள் அறிவித்துள்ளது.

    இதனால் வெளியில் செல்லும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் முககவசம், கிருமிநாசினி ஆகியவற்றை உபயோகப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தவளக்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் வாங்க தாய் பணம் தராததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    தவளக்குப்பம் அருகே நல்லவாடு கிராமம் தில்லையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் செல்வி. மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மகன் சரண்(வயது21). இவர் 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு மீன் பிடி தொழில் செய்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக சரண் தனது தாயிடம் புதிய மோட்டார் சைக்கிள் வாங்க பணம் கேட்டு வற்புறுத்தி வந்தார். அதற்கு செல்வி சில நாட்கள் கழித்து பணம் தருவதாக கூறி வந்தார்.

    அதுபோல் நேற்று காலை சரண் தனது தாய் செல்விடம் புதிய மோட்டார் சைக்கிளுக்கு முன் பணம் செலுத்த பணம் தருமாறு கேட்டார். அப்போது செல்வி பலரிடம் வட்டிக்கு பணம் கேட்டும் யாரும் தரவில்லை என்பதால் பிறகு பணம் கிடைத்தவுடன் தருவதாக மகனை சமாதானம் செய்தார்.

    பின்னர் செல்வி மீன் வியாபாரத்துக்கு சென்று விட்டார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் வாங்க தாய் பணம் தராததால் விரக்தியடைந்த சரண் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து வீட்டில் இரும்பு பைப்பில் நைலான் கயிற்றால் தூக்குபோட்டுதொங்கினார். உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சரணை அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சரண் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் தவளக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    வில்லியனூரில் மோட்டார் சைக்கிளில் மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    வில்லியனூர்:

    வில்லியனூர் கோட்டைமேடு டோபிகானா அருகில் உள்ள சங்கராபரணி ஆற்றில் இருந்து மோட்டார் சைக்கிள் மூலம் மணல் கடத்தப்படுவதாக வில்லியனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிவேலுவுக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் போலீஸ் ஏட்டு குப்புசாமி மற்றும் போலீஸ்காரர் தமிழ்மாறன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் மணல் மூட்டைகளை ஏற்றி வந்த வாலிபரை மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் வில்லியனூர் கணுவாப்பேட்டை புதுநகரை சேர்ந்த ஆனந்தவேல் (வயது 27) என்பதும், இவர் சங்கராபரணி ஆற்றில் இருந்து மணலை கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

    இதைத்தொடர்ந்து ஆனந்தவேலுவை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் மூட்டைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    இதுபோல் திருக்கனூர் போலீஸ்காரர்கள் முருகன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் செல்லிப்பட்டு பாலத்தில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு ஒரு லாரியில் மணல் ஏற்றப்பட்டு நிற்பதை கண்டனர். ஆனால், அந்த லாரியில் டிரைவர் மற்றும் கிளீனர் யாரும் இல்லை. அங்குள்ள சங்கராபரணி ஆற்றில் லாரியில் மணல் கடத்தியவர்கள் போலீசாரை பார்த்ததும் தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

    இதையடுத்து போலீசார் அந்த லாரியை பறிமுதல் செய்தனர்.

    கலால்துறை மூலம் மதுபான உரிமங்களை ஏலம் விடுவது தற்போதைய நிதி வருவாய்க்கு தேவையாக உள்ளது. கேபிள் டிவி, சொத்து வரி, மின் கட்டணம் ஆகியவற்றின் நிலுவைத்தொகையை வசூலிக்க வேண்டும் என கவர்னர் கிரண்பேடி வலியுறுத்தி உள்ளார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கவர்னராக கிரண்பேடி பதவியேற்று 4 ஆண்டுகள் முடிவடைந்தது. நேற்று 5-ம் ஆண்டு தொடங்கியது. இதையொட்டி கவர்னர் கிரண்பேடி பொதுமக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி கவர்னராக 4 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளேன். ஒவ்வொரு நாளும் மக்களின் நல்வாழ்வை உறுதி செய்யும் உயர்ந்த நோக்கத்தை கொண்டிருந்தேன். சவால்கள் எதுவும் எங்கள் கவர்னர் மாளிகை அணியை தடுக்கவில்லை. இதற்கு கடந்த 4 ஆண்டுகளின் வரலாறே சாட்சி. இக்காலத்தில் ராஜ் நிவாஸ் மக்கள் நிவாஸ் ஆனது. வார இறுதி நாட்கள் ஆய்வுகளை மறந்து விடக்கூடாது. கொரோனா இதையெல்லாம் மாற்றியுள்ளது. இதே முறையில் எதிர்காலத்தில் மீண்டும் செயல்படாமல் போக வாய்ப்புண்டு.

    தற்போதைய பட்டியலில் நிதி மீள் உருவாக்கம் செய்வதே முதல் இடத்தில் உள்ளது. அரசுக்கு வரவேண்டிய சொந்த வருவாய்களை மறுக்கும் தற்போதைய கொள்கையை மறுபரிசீலனை செய்வது அவசியம்.

    கலால்துறை மூலம் மதுபான உரிமங்களை ஏலம் விடுவது, தற்போதைய நிதி வருவாய்க்கு தேவையாக உள்ளது. கேபிள் டிவி, சொத்து வரி, மின் நிலுவைத்தொகை ஆகியவற்றின் நிலுவைத்தொகையை வசூலிக்க வேண்டும். பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் உள்ள அரசு இட வாடகை, உரிம கட்டணங்களை மறு சீரமைப்பதில் பரிசீலனை அவசியம் தேவை. சுற்றுலா வருவாய் இழப்பு உள்ளதால் தற்போதைய கையிலுள்ள சொத்துகளின் வருவாயை அதிகரிக்க வேண்டும்.

    பொதுத்துறை நிறுவனங்கள் தொடர்பான விஜயன் கமிட்டி அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் இன்னும் பலவற்றை சேர்க்க முடியும். இருந்தாலும் இவை உடனடி நடவடிக்கையில் உள்ளவை. தற்போதைய சூழலில் நியமிக்கப்பட்ட அல்லது தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரியால் நேர்மையான செயல்படுத்தும் திறன் இவ்விஷயத்தில் தேவை. முக்கியமாக புதுவை மக்கள் தங்கள் நல்வாழ்வு, சமூகம் ஆகியவற்றில் தங்கள் சொந்த பொறுப்பை உணர்தல் அவசியம். புதுவைக்கு சேவையாற்ற 5-ம் ஆண்டில் நுழைகிறேன். என்னை பொறுத்தவரை எனது சேவை தொடங்கிவிட்டது.

    இவ்வாறு அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளார்.
    புதுவையில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    புதுவை கதிர்காமம் ஆஸ்பத்திரியில் 28 பேரும், ஜிப்மரில் 5 பேரும் கொரோனவால் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

    இன்று புதியதாக 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மண்ணாடிப்பட்டு பகுதியை சேர்ந்த 9 வயது சிறுவன் மூலம் அவன் தாயாருக்கு கொரோனா தொற்று வந்து உள்ளது. வில்லியனூர் டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த வங்கி ஊழியருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அவர் கடந்த 6 மாதமாக எங்கும் செல்லவில்லை. அவருக்கு எப்படி தொற்று வந்தது? என்பது குறித்து சுகாதாரத்துறை விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது.

    கோரிமேட்டில் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவருக்கு ஏற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வளைகாப்பு செய்த பெண்மணிக்கும் கொரோனா தொற்று வந்துள்ளது.

    காலாப்பட்டை சேர்ந்த டாக்டர் வீட்டில் வேலை செய்த பெண்ணுக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவருக்கு புதுவையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது தொற்று இல்லை. ஆனால், அவர் சேலம் சென்ற பின்பு அங்கு பரிசோதனை செய்த போது அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் கதிர்காமத்தில் 30 பேரும், ஜிப்மரில் 6 பேரும், சேலத்தில் ஒருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புதுச்சேரியில் வழிபாட்டு தலங்களை திறக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக மத வழிபாட்டு தலங்கள் மூடியே கிடக்கின்றன. இந்த நிலையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஊரடங்கு முடிவடைகிறது. வருகிற 1-ந் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். பிரதமர் நல்ல முடிவு எடுப்பார் என்று நம்புகிறேன்.

    மின்சார வினியோகத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் இதை செய்ய முடியாது. புதுவையில் தனியார் மயத்தை நாங்கள் ஏற்கமாட்டோம். இது தொடர்பாக சட்டமன்றத்தில் விவாதிக்கவும் தயாராக உள்ளோம். மக்களின் உணர்வுகளை மத்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

    புதுவை அரசுக்கு ஆதரவாக இருப்பதாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் எனக்கு கடிதம் எழுதியுள்ளார். அவருக்கு எனது நன்றி. வெளிநாடுகளில் வசிக்கும் புதுவையை சேர்ந்தவர்களை அழைத்து வர மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுத உள்ளேன். ஒரு சிலர் காங்கிரஸ், தி.மு.க. இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வேலை செய்கிறார்கள். அவர்களின் எண்ணம் பலிக்காது.

    மாநில நிதி நிலை பாதிக்கப்பட்டிருந்தாலும் அரசு ஊழியர் சம்பளம், உதவித் தொகைகளை தடையின்றி வழங்கி வருகிறோம். கவர்னரின் நடவடிக்கையால் அரிசி வழங்குவது காலதாமதம் ஆகிறது. வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு இன்னும் ஓரிரு தினங்களில் தலா 10 கிலோ அரிசி வழங்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    புதுச்சேரியில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணம் வழங்க கவர்னர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை மீன்பிடி தடைக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மார்ச் மாதம் 24-ந் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அன்று முதல் விசைப்படகுகளில் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. இந்தநிலையில் மீன்பிடி தடைக்காலத்தை குறைக்க வேண்டும் என்று மீனவர்கள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

    இதையடுத்து மீன்பிடி தடைக்காலத்தை வரும் 31-ந் தேதியுடன் முடித்துக் கொள்வதாகவும், வரும் 1-ந் தேதி முதல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என்றும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த வகையில் மீன்பிடிக்க கடலுக்கு செல்வதற்காக மீனவர்கள் தயாராகி வருகிறார்கள்.

    மீன்பிடி தடைக்கால நிவாரணத் தொகையை அரசு விரைவாக வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தநிலையில் அந்த கோப்புக்கு ஒப்புதல் அளித்து சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பேடி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    மீனவ சொசைட்டி உறுப்பினர்கள் ஆண்டுக்கு ரூ.1,500 சேமித்து வந்தால் மத்திய அரசு ரூ.3,000 சேர்த்து ரூ.4,500 தரும். அதன்படி 7,965 மீனவர்களுக்கு ரூ.3½ கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மீன்பிடி தடைக்கால நிவாரணமாக ஆண்டுதோறும் மாநில அரசு ரூ.5,500 வழங்குவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 19,100 பேருக்கு ரூ.11 கோடி வழங்குவதற்கான கோப்புக்கு அனுமதி தரப்பட்டுள்ளது. இதில் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களையும், பொதுப்பணத்தையும் நாங்கள் கையாள்கிறோம். சரியானவர்களுக்கு நிதி சென்றடைகிறதா? என்பதை ஆராய்வது அவசியம். அதன்படியே அரசு பணம் தகுதியானவர்களுக்கு செல்கிறது.

    இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

    இதுதொடர்பாக தலைமை செயலகத்துக்கு ஒரு உத்தரவை அனுப்பி உள்ளார். அதில், ‘பயனாளிகள் பட்டியலை நிர்வாகத் துறையானது, நிதித்துறையிடம் ஒப்படைத்து தலைமைச்செயலர் சரிபார்க்க வேண்டும். இந்திய அரசு வழிகாட்டு நெறிமுறைப்படி இதை சரிபார்ப்பது அவசியம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    புதுச்சேரியில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு கொரேனா வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது.
    கொரோனா வைரஸ் தொற்றால் பொருளாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தொழில்கள் தொடங்கப்பட்டுள்ளன. புதுவை அரசுக்கு ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.325 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

    வருமானத்தை ஈட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. முன்னதாக மதுபானங்கள் மீது கொரோனா வரியை விதித்தது. இதனால் அரசுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கும்.

    இந்நிலையில் பெட்ரோல், டீசல் மீதும் கொரோனா வரியை விதித்துள்ளது. பெட்ரோல் மீது 5.75 சதவீதமும், டீசல் மீது 3.65 சதவீதமும் விதித்துள்ளது.
    தமிழகத்தை பின்பற்றி புதுவையிலும் வரும் ஜூன் 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்குகின்றன. இதற்காக மாணவர்களுக்கு 200 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை உயர்கல்வித்துறை அலுவலகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். உயர்கல்வித்துறை செயலாளர் அன்பரசு, இயக்குனர் யாசம் லட்சுமி நாராயண ரெட்டி, புதுவைப் பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் மற்றும் பல்வேறு கல்லூரிகளின் முதல்வர்கள் கலந்து கொண்டனர்

    கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊரடங்கு காலத்தில் உயர் கல்வித்துறையில் 1,060 ஆசிரியர்கள் 35 ஆயிரம் மணி நேரம் வகுப்புகள் எடுத்து உள்ளனர். இதில் விடுபட்ட மாணவர்களுக்கு நேரடியாகவும் பாடம் நடத்தப்படும். தமிழகத்தில் அறிவித்துள்ளது போல் புதுவையிலும் வரும் ஜூன் 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் தொடங்குகின்றன. இதற்காக அந்தந்த பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. சுமார் 200 பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை கல்லூரிகளில் மட்டுமல்லாது பள்ளிகளில் தேர்வு மையமாக பயன்படுத்தி நடத்த உள்ளோம்.

    தனியார் பள்ளிகள் பெற்றோர்களிடம் கல்விக் கட்டணம் கேட்டு வற்புறுத்தக் கூடாது என்று அறிவுறுத்தி உள்ளோம். இதுதொடர்பாக பெற்றோர் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது தொடர்பாக பல்கலைக்கழக மானியக்குழு சில வழிகாட்டுதல்களை கூறியுள்ளது. அதன்படி தேர்வுகள் நடத்தப்படும்

    இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.

    கல்வித்துறை செயலாளர் அன்பரசு கூறுகையில், ஆன்லைன் கோப்புகளை செல்போன் மூலம் பெற முடியாத மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்து வகுப்புகளை கவனிக்க ஆலோசிக்கப்படுகிறது. சமூக இடைவெளி தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும் என்பதால் ஷிப்டு முறையில் கல்லூரிகளை நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

    தடைக்காலம் நிறைவடைந்ததால் புதுவை மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து, மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் 23-ந் தேதி முதல் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

    இதனிடையே வழக்கமான மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15-ந்தேதி தொடங்கியது. இதனால் மீன்பிடி தடைகாலத்தை குறைக்க மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

    அதையேற்று 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலத்தை 47 நாட்களாக மத்திய அரசு குறைத்து, ஏப்ரல் 15-ந் தேதி முதல் வருகிற 31-ந் தேதி வரை தடைக்காலமாக மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

    இதையடுத்து புதுவை மீனவர்கள் தங்கள் படகுகளை பழுது பார்த்து, வர்ணம் பூசி, வலைகளை சீரமைத்து மீன் பிடிக்க கடலுக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

    புதுவையில் பிடிக்கப்படும் மீன்களில் 75 சதவீதம், கேரளா, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. மத்திய அரசு அறிவித்துள்ள 4-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந் தேதியுடன் முடிவடைகிறது.

    மீண்டும் ஊரடங்கு தொடர்ந்தால் வெளிமாநில மீன் வியாபாரிகள் புதுவைக்கு வருவதில் சிக்கல் ஏற்படும். இதனால் மீன்பிடித்து வந்தாலும் விற்பனை செய்ய முடியுமா? என மீனவர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

    புதுவையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாவட்டத்திற்குட்பட்ட புதுவை, மாகி பகுதியை சேர்ந்த 34 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் புதிதாக புதுவையை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முத்தியால்பேட்டை முத்தைய முதலியார் வீதியை சேர்ந்த 2 பேர், சோலைநகர், மூகாம்பிகை நகர், தர்மாபுரி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவருக்கும் என மொத்தம் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். ஏற்கனவே தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 116 பேருக்கு பரிசோதனை செய்ததில் இந்த 5 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனால் புதுவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39 ஆக உயர்ந்துள்ளது. இதில் மாகியில் சிகிச்சை பெற்று வரும் 2 பேரும் அடங்குவர்.

    இதுதவிர புதுவை ஜிப்மர் குடியிருப்பில் வசித்து வரும் டிரைவர் வீட்டிற்கு சென்னை கொடுங்கையூரில் இருந்து வந்த குடும்பத்தினர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இவர்கள் புதுவை ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே புதுவையில் சிகிச்சை பெற்று வந்த 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×