search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் அருண்
    X
    கலெக்டர் அருண்

    கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் கலெக்டர் திடீர் ஆய்வு

    புதுவை கதிர்காமம் அரசு கொரோனா மருத்துவமனையில் கலெக்டர் அருண் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    புதுச்சேரி:

    புதுவையில் உள்ள கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. அதன் 3-வது மாடியில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 2-வது மாடியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் அங்கு ஒப்பந்த டாக்டர்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவதாகவும், டாக்டர்களுக்கான சலுகைகள், செவிலியர்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. அதுபோல் மருத்துவமனையில் கழிப்பிடங்களில் உடனுக்குடன் சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்படாமல் தினமும் 2 அல்லது 3 முறை மட்டுமே சுத்தம் செய்யப்படுவதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரியில் கடந்த 2 வாரங்களாக தினந்தோறும் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் ஜிப்மர் டாக்டர் உள்பட 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய பிராந்தியங்களை தவிர்த்து புதுச்சேரியில் மட்டும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருவதையொட்டி அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது.

    இந்தநிலையில் நேற்று கலெக்டர் அருண் கதிர்காமம் கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதுபோன்ற குறைபாடுகள் வராத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவக்கல்லூரி நிர்வாகத்தினரிடம் வலியுறுத்தினார்.

    மேலும் கொரோனா மருத்துவக் கழிவுகள் சரியான முறையில் அகற்றப்பட்டு அழிக்கப்படுகிறதா? என்பது குறித்து மருத்துவமனை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
    Next Story
    ×