என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    காரைக்கால்:

    காரைக்கால் அம்மையார் நகர் அன்னைதெரசா வீதியைச் சேர்ந்தவர் சுபாஷ்குமார் (வயது 29). இவர், உடல்நிலை சரியில்லாத தனது பாட்டி சரோஜாவை (74) மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, ஒப்பிலார் மணியர்கோவில் தெருவில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்.

    பாரதியார் வீதி வேட்டைக்காரன் தெருவில் சென்றபோது, மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த சரோஜா திடீரென்று நிலை தடுமாறி கீழே தவறி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்ததும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சரோஜாவை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து காரைக்கால் நகர போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
    அரியாங்குப்பம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பாகூர்:

    அரியாங்குப்பம் காக்காயன்தோப்பு ராஜீவ்காந்தி தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 62), தனியார் நிறுவன ஊழியர். கடலூர் - புதுச்சேரி சாலையில் மோட்டார் சைக்கிளில் அரியாங்குப்பம் நான்குமுனை சந்திப்பு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது அவருக்குபின்னால் வந்த மினி லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில், தேவராஜன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி தேவராஜன் பரிதாபமாக இறந்துபோனார்.

    இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தனசேகரன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் செஞ்சிவேல் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மினி லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.
    ஜிப்மர் ஆஸ்பத்திரியில் கொரோனா கட்டுப்பாடுகள் தொடரும் என்று இயக்குனர் ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை ஜிப்மரில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட விதி முறைகள் அக்டோபர் 28-ந்தேதி முதல் படிப்படியாக தளர்த்தப்பட்டுள்ளது. இதில் தொலைபேசி மருத்துவ ஆலோசனையை அடிப்படையாக கொண்டு அவசியம் மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகள் மட்டுமே மருத்துவமனைக்கு அழைக்கப்பட்டனர். ஒரு நாளைக்கு ஒரு துறைக்கு 25 வெளிநோயாளிகள் வரவழைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதன் எண்ணிக்கை 100 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

    மேலும் மருத்துவம், அறுவை சிகிச்சை, மகப்பேறியல் போன்ற பெரிய துறைகளில் ஒரு நாளைக்கு சுமார் 250 வெளிநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அத்துடன் மருத்துவ, அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் துறைகளில் 400 வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் ஒவ்வொரு நாளும் கொரோனா அல்லாத பல்வேறு மருத்துவ பிரிவுகளில் வெளிப்புற சிகிச்சைகளை பெறுகின்றனர்.

    அவசர பிரிவுகளில் சராசரியாக 400 நோயாளிகளுக்கு எலும்பியல், இருதயவியல், நரம்பியல் அறுவை சிகிச்சை, மகப்பேறியல் போன்ற பல்வேறு அவசர சிகிச்சை பிரிவுகளிலும் சிகிச்சை அளிக்கப் படுகிறது. கொரோனா பிரிவில் சுமார் 600 நோயாளிகளுக்கு அவசர மற்றும் வெளிப்புற சிகிச்சை அளித்துவந்த நிலையில் தற்போது சுமார் 300 நோயாளிகளுக்கு அவசர மற்றும் வெளிப்புற சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    ஜிப்மரில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட படுக்கைகளில் 1,200 நோயாளிகள் பல்வேறு பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் சமூகத்திலும், மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஒட்டுமொத்த தளர்வுகள் காரணமாக நோய் பரவும் அபாயத்தை கருத்தில்கொண்டு அனைத்து நோயாளிகளும் மற்றும் அவர்களின் உதவியாளர்களும் கொரோனா கட்டுப்பாடுகளான முகக்கவசம் அணிந்து வருதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், ஒரு நோயாளியுடன் ஒருவருக்கு மட்டுமே அனுமதி மற்றும் தொலைபேசி முன்பதிவு மருத்துவ சேவை போன்றவை தொடரும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    காரைக்கால் மீனவர்கள் வலையில் மருத்துவ குணம் வாய்ந்த அரியவகை கத்தாழை மீன்கள் அதிகளவில் சிக்கியது. சுமார் 1½ டன் மீன்கள் ரூ.25 லட்சத்துக்கு ஏலம் போனது.
    காரைக்கால்:

    ‘நிவர்’, ‘புரெவி’ புயல் மற்றும் கனமழை காரணமாக காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, மண்டபத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராம மீனவர்கள் சுமார் 15 ஆயிரம் பேர், கடந்த நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை.

    மழை எச்சரிக்கை முடிந்ததை அடுத்து காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8-ந் தேதி ஆழ்கடல் பகுதிக்கு மீன் பிடிக்க விசைப்படகு மீனவர்கள் சென்றனர். அவர்கள் கடலில் தங்கி மீன்பிடித்துவிட்டு நேற்று முன்தினம் கரை திரும்பினர். அவர்களில் ஒரு சில படகுகளில் மருத்துவ குணம் வாய்ந்த அரிய வகை கத்தாழை மீன்கள் சுமார் 1½ டன் சிக்கியது.

    இந்த வகை மீன்கள் நன்றாக மழை பெய்யும் காலத்தில் அல்லது மழை ஓய்ந்த சமயத்தில், ஆழ்கடலில் சுமார் 3 அல்லது 4 நாட்கள் தங்கியிருந்து பிடித்தால் மட்டுமே கிடைக்குமாம். ஒவ்வொரு மீன்களும் 2 அடி முதல் 3 நீளமும், 10 முதல் 25 கிலோ எடையில் இருந்தது. கிலோ ரூ.1500 முதல் 2,000-க்கு விலை போனது. இந்த மீன்கள் ஏலம் விடப்பட்டது. சுமார் 1½ டன் மீன்கள் ரூ.25 லட்சத்துக்கு வியாபாரிகளால் ஏலம் எடுக்கப்பட்டது.

    நீண்ட நாட்களுக்கு பிறகு ஏற்றுமதி வாய்ந்த கத்தாழை மீன்கள் அதிகளவில் கிடைத்திருப்பது மீனவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த கத்தாழை மீன்கள், ‌ஷியானிடே என்ற மீன் வகையை சேர்ந்தவையாகும். இந்த வகை மீன்களுக்கு (ஆண் மீன்கள்) செவில் சுவாசத்தோடு, மீன்களின் அடி வயிற்றில் இருக்கும் நெட்டி என்ற காற்றுப்பை உதவியுடன் கூடுதல் சுவாசத்தை கொண்டிருக்கும். பெண் மீன்களுக்கு சிறிய அளவிலான நெட்டி இருக்குமாம்.

    இந்த நெட்டி மூலம் ஆபத்து காலத்தில் ஒரு வகை ஒலியை எழுப்பும் தன்மை கொண்டதாகும்.

    மேலும் இந்த நெட்டியானது ஐசிங்கிளாஸ் எனும் பளபளக்கும் ஒருவகை வேதிப்பொருட்களை கொண்டதாகவும், அது ஒயின், ஜெல்லி மிட்டாய் மற்றும் மருந்துகள் தயாரிக்கும் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்படுவதாகவும், அதனால், மீனவர்கள் இதனை சேமித்து தங்கத்தை போல் கிராம் கணக்கில் விற்பனை செய்வார்கள் என்றும் கூறப்படுகிறது. ஒரு மீனில் குறைந்தபட்சம் 100 கிராம் வரை நெட்டி கிடைக்கும் என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
    அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரி கவர்னரை சந்தித்து கடிதம் வழங்க உள்ளோம் என்று அன்பழகன் எம்எல்ஏ கூறினார்.
    புதுச்சேரி:

    புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமீபத்தில் பெய்த கனமழை மற்றும் புயல் காரணமாக புதுவையில் ரூ.400 கோடி சேதம் என கூறி, முதல் கட்டமாக ரூ.100 கோடி வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் முதல்-அமைச்சர் கூறியுள்ளார். ஆனால் கவர்னர் கிரண்பேடி அதிகாரிகள் ஆய்வின்படி ரூ.13 கோடி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

    புயல் காரணமாக உடமைகளை இழந்துள்ள மக்களுக்கு தேவையான நிதியை பெற்று தர வேண்டிய முதல்-அமைச்சர் கவர்னருடன் இணக்கமாக செல்லாததால் புதுவைக்கு மத்திய அரசிடம் புயல் நிவாரண நிதி கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    புதுச்சேரியில் தற்போது நடைபெற்று வரும் காங்கிரஸ்- தி.மு.க. ஆட்சியால் மக்களுக்கு எந்த ஒரு சிறு நன்மையும் பெற்றுத்தர முடியவில்லை. இந்த ஆட்சி வெகு விரைவில் அகற்றப்படும். சமீபத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. ஜான்குமார், பா.ஜ.க. பொறுப்பாளரை சந்தித்து பேசியுள்ளார். தேவைப்பட்டால் விரைவில் காங்கிரஸ் கட்சியை விட்டு விலகுவேன் என்றும் கூறியுள்ளார்.

    இதன் மூலம் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. எனவே புதுவை மாநில அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி அ.தி.மு.க. சார்பில் இன்னும் ஓரிரு தினங்களில் கவர்னரை சந்தித்து கடிதம் கொடுக்க உள்ளோம். செயல்படாத முதல்-அமைச்சர் நாராயணசாமி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

    மத்திய மருத்துவ கவுன்சில் ஆணைப்படி புதுவையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அரசுக்கு 50 சதவீத இடத்தை பெற வேண்டும். ஆனால் அதனை பெற இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த தேர்தல் வாக்குறுதி அளித்தபடி 50 சதவீத இடஒதுக்கீடு பெறுவதற்கு சட்ட மசோதா இதுவரை சட்டப்பேரவையில் கொண்டு வரவில்லை.

    தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. தி.மு.க. எம்.பி. ராசாவுக்கு தமிழக அரசை பற்றி பேச தகுதியில்லை. இனி ஒருமுறை அவர் அ.தி.மு.க. தலைமையிலான தமிழக அரசை பற்றி அவதூறாக பேசினால் அவர் புதுச்சேரி எல்லைக்குள் நுழைய முடியாதபடி எங்கள் எதிர்ப்பை தெரிவிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது கட்சியின் துணை செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
    ஒவ்வொரு மழைக்கும் பாதிக்கப்படும் ரெயின்போ நகருக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி உறுதி அளித்துள்ளார்.
    புதுச்சேரி:

    வங்கக்கடலில் உருவான நிவர், புரெவி புயலால் புதுவையில் பலத்த மழை பெய்தது. இதனால் காமராஜ் நகர் தொகுதிக்கு உட்பட்ட ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளக்காடானது. அங்கு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை ராட்சத மோட்டார் மூலம் வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுத்தது.

    இந்த நிலையில் ரெயின்போ நகர் நல்வாழ்வு சங்கத்தினர் மற்றும் ரெயின்போ நகர் மகளிர் நல்வாழ்வு சங்கத்தினர் முதல்-அமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அப்போது ‘புதுவையில் மழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், வெங்கட்டா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்குகிறது. தற்போது பெய்த மழையிலும் இதேநிலை தான் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

    அப்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி அவர்களிடம், ‘ஒவ்வொரு மழையிலும் ரெயின்போ நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பாதிக்கப்படுகிறது. எனவே அதிகாரிகளுடன் சென்று ஆய்வு நடத்தி மழைநீர் தேங்காமல் இருக்க நிரந்தர தீர்வு காண தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்.

    அப்போது தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார், காங்கிரஸ் கட்சியின் மாநில சிறப்பு அழைப்பாளர் வினோத் ஆகியோர் உடனிருந்தனர்.
    நாங்கள் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்த விரும்புகிறோம் என பிசிசிஐ-க்கு புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.
    லோதா கமிட்டி பரிந்துரையின்படி புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் பிசிசிஐ நடத்தும் முக்கியமான தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதனால் கிரிக்கெட் கட்டமைப்புகளை சிறந்த வகையில் உருவாக்கியுள்ளது. புதுச்சேரியில் மின்சார கோபுர வசதியுடன் ஆறு மைதானங்கள் உள்ளன.

    இந்த நிலையில் சர்வதேச போட்டிகளை நடத்த விரும்புகிறோம். அனுமதியுங்கள் என புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் சார்பில் பிசிசிஐ-க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    அந்தக் கடிதத்தில் பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கம் அழகான மைதானங்களை கட்டியுள்ளது. மின்சார விளக்கு கோபுரம் வசதி கொண்ட ஆறு மைதானங்கள் உள்ளது. கடந்த சில வருடங்களில் இருந்து நாங்கள் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களை நடத்தி வருகிறோம். வருங்காலத்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் அல்லது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நாங்கள் நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுகோள் விடுக்கிறோம். இது சிறிய மைதானங்கள் வளர்ச்சி அடைய உதவியாக இருக்கும்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், இரண்டு மண்டலத்தில் உள்ள அணிகளுக்கு பயோ-செக்யூர் வழங்கி, போட்டிகளை நடத்த தயாராக இருக்கிறோம். ஒட்டுமொத்த சையத் முஷ்டக் அலி டி20 தொடரையும் ஆறு தரமான மைதானங்களில் நடத்தலாம். இந்த தொடருக்கான முதல்தர போட்டிகளுக்கான ஆறு மைதானங்களை தர தயாராக இருக்கிறோம்.

    அனைத்து தயராக உள்ளது. இரண்டு மண்டல அணிகள் நான்கு முதல் ஐந்து மாதங்கள் தங்கும் வகையில் 4 ஸ்டார் ஓட்டல்கள் உள்ளன எனத் தெரிவித்துள்ளது.
    புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,492 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98.57 லட்சமாக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்பு 98,57,029 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,254 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 391 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,43,019 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,57,464 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 33,136 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,492ஆக உயர்ந்துள்ளது.
    அரியாங்குப்பம் அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் காந்திநகர் பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சிலர் சூதாடுவதாக போலீசுக்கு தகவல் வந்தது. உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன், சாம்பசிவம், முரளி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.12 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
    புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரி மாணவர்கள் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.
    சென்னை:

    புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரிகளின் மொத்த இடங்களில் 50 சதவீதத்தை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்கவேண்டும் என்றும், இந்த கல்லூரிகளில் 55 இடங்கள் மட்டுமே அரசு ஒதுக்கீடாக ஒதுக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

    2006-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை விதிகளின்படி தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே இந்த கல்லூரிகளில் உள்ள 150 இடங்களில் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசு தரப்பில், மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை வழங்க மறுக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக மனுதாரர்கள் தரப்பிலும் வாதிடப்பட்டது.

    அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்கு வழங்க 2006-ம் ஆண்டு தனியார் மருத்துவ கல்லூரிகள் ஒப்புக்கொண்டதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி, இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
    புதுச்சேரியில் இன்று 38 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,444 ஆக உயர்ந்துள்ளது.
    புதுச்சேரி:

    உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98 லட்சத்தை தாண்டியது. மொத்த பாதிப்பு 98,26,775 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 30,005 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 442 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,42,628 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,24,328 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 33,494 பேர் குணமடைந்துள்ளனர். புதிய பாதிப்புகளை விட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இந்நிலையில், புதுச்சேரியில் இன்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,444ஆக உயர்ந்துள்ளது.
    திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு பாதுகாப்பு நடைமுறை இன்று முதல் தொடங்கும் என்று கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த் மோகன் கூறினார்.
    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் கீழ் இயங்கும் காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலக புகழ்மிக்க தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அணுக்கிரஹ மூர்த்தியாக அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில், சனிக்கிழமை ்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிபெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இந்த கோவிலில், இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை வாக்கியப்பஞ்சாங்கப்படி சனிபெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி, காலை 5.22 மணிக்கு சனிபெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார். இதையே சனிபெயர்ச்சி விழா என்கிறோம்.

    விழா பாதுகாப்பு குறித்து, காரைக்கால் மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், புதுச்சேரி கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த்மோகன், நேற்று முன்தினம் மாலை ஆலோசனை கூட்டம் நடத்தினார். கூட்டத்தின் முடிவில், அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சனிப்பெயர்ச்சி விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு, முழு பாதுகாப்பு வழங்குவது குறித்து, காவல் துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்களுக்கான முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.

    விழாவையொட்டி, புதுச்சேரியில் இருந்து சிறப்பு படை வரவழைக்கப்படும். இன்று (சனிக்கிழமை) முதல் போலீசாரின் பாதுகாப்பு நடைமுறைகள் தொடங்கப்படும். கோவில் நிர்வாகம் ஆன் லைன் மூலம் முன் பதிவு செய்தவர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.

    அதன்படி உரிய சோதனைக்கு பிறகே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். பக்தர்கள் இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். காவல்துறையினர், கோவில் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை சரியாக பின்பற்ற வேண்டும். சட்டம்- ஒழுங்கு பிரச்சினை எதுவும் இன்றி செயல்பட காவல்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    மேலும், காரைக்கால் மாவட்டத்தில் காவல் நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்களை விரைவில் நிரப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து, காரைக்காலில் உள்ள அனைத்து காவல்நிலையங்களிலும் கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த்மோகன் ஆய்வு செய்து, உரிய ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சியில், மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நிஹாரிக்காபட், போலீஸ் சூப்பிரண்டுகள் வீரவல்லபன், ரகுநாயகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    ×