என் மலர்
புதுச்சேரி
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு புதுச்சேரிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்று கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பிரதமர் மோடி உறுதி அளித்தார்.
புதுவை மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மத்திய அரசு மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வழங்கி வருகிறது. இந்தநிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோனா தடுப்பு பணிகள் குறித்து பேசினார்.

புதுச்சேரிக்கு ஏற்கனவே அளித்த உதவிகளுக்கும் மேலாக மேலும் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும் என உறுதி அளித்தார். மத்திய அரசால் புதுவை மாநிலத்திற்கு வழங்கப்பட்ட வென்டிலேட்டர்கள் முறையாக பயன்படுத்தப்படுகிறதா? என்றும் பிரதமர் கேட்டறிந்தார்.
அப்போது கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பிரதமரிடம், தனது வேண்டுகோளுக்கிணங்க கொரோனா சிகிச்சைக்காக மத்திய அரசு வழங்கிய மருத்துவ உதவிகளுக்கும், உபகரணங்களும் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
மேலும் பிரதமர் மோடி, சென்னையில் சிகிச்சை பெற்று வரும் புதுச்சேரி முதல்-அமைச்சர் ரங்கசாமியின் உடல்நிலை குறித்தும் நலம் விசாரித்தார்.
அவர் விரைவில் பூரண நலம் பெற்று மக்கள் பணியாற்ற வேண்டும் என்று தன் விருப்பத்தையும் தெரிவித்துக்கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கொரோனா கட்டுப்பாட்டு மையத்தில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு வந்த புதுவையை அடுத்த பாகூரை சேர்ந்த செல்வம் மகன்கள் நிதின், மோஹித் ஆகியோர் தாங்கள் சேமித்து வைத்திருந்த ரூ.3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகையை அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக கவர்னர் தமிழிசையிடம் வழங்கினார்கள்.
அதனை பெற்றுக்கொண்ட கவர்னர் சேமிப்பு பணத்தை வழங்கிய சிறுவர்களை பாராட்டினார். அப்போது சுகாதாரத்துறை செயலாளர் அருண், கலெக்டர் பூர்வா கார்க் ஆகியோர் உடன் இருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவை சட்டமன்ற தேர்தலில் போலி மதசார்பின்மை பேசும் கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடித்து மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தனர்.
புதுவையில் தேர்தலுக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு பதவி ஏற்றுள்ளது. தற்போது மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை பயன்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியில் அமர தி.மு.க. முயற்சிக்கிறது.
எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவலை பேசுகின்றனர்.
மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காத நிலையில் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. தனது செல்வாக்கை பயன்படுத்தி 3 எம்.எல்.ஏ.க்களை நியமித்து அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து ஒரு ஜனநாயக படுகொலையை 1990-ம் ஆண்டே அரங்கேற்றியது.
எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தில் மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும், நியமன எம்.எல்.ஏ.வுக்கு வாக்குரிமை உண்டு எனவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.
தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தி.மு.க வைச் சேர்ந்த தமிழக அமைச்சர் துரைமுருகன், திராவிட கழகத்தை சேர்ந்த வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.
தீர்ப்பை விமர்சனம் செய்பவர்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். எம்.எல்.ஏ. நியமனத்தில் தவறு இருந்தால் அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய உரிமை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிக்கு மட்டுமே உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து ஆட்சியை இழந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு அந்த உரிமை இல்லை.
நியமன எம்.எல்.ஏ.க்களின் விஷயத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் தவறு செய்த தி.மு.க.விற்கு அதைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.
புதியதாக புதுவையில் அமைந்துள்ள ஆட்சிக்கு குழப்பம் ஏற்படுத்தாமல் அமைதியாக இருப்பது தி.மு.க.வுக்கு அழகாகும்.
புதுவையில் நேர் வழியில் ஆட்சியமைத்திட மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டிய அவசியம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இல்லை.
மக்களால் புறக்கணிக்கப்பட்ட தி.மு.க.தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சம்பந்தமே இல்லாத விஷயத்தில் குழப்பம் ஏற்படுத்தி ஆட்சியில் அமர துடிக்கின்றனர்.
தேர்தலின் போது சகட்டுமேனிக்கு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை விமர்சனம் செய்த தி.மு.க. உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் முதல்- அமைச்சராக பதவியேற்றுள்ள ரங்கசாமிக்கு அனுசரணையாக பேசுவது நாடகத்தனமாக உள்ளது. தி.மு.க.வின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது,.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
அப்போது என்.ஆர் காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், பா.ஜனதா செயலாளர் ஏம்பலம் செல்வம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாநில துணைச் செயலாளர் அன்பழக உடையார், மாநில பொருளாளர் ரவி, பாண்டுரங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா 2-ம் அலையில் மக்களை அச்சுறுத்தி வரும் தொற்று புதுவை மாநிலத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி, சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், இயல்பான வாழ்க்கை முறைகளை கடைபிடிக்காமல், விலகி நிற்பது மிக, மிக அவசியம் ஆகிறது.
தற்போது மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பகல் 12 மணி வரை பகுதிநேர ஊரடங்கு, நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த பெரிதாக பலனளிக்கவில்லை.
மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் மக்கள் மிக எளிதாக வெளியில் நடமாடுகிறார்கள். சமூக இடைவெளி, முக கவசம் ஆகியவை சரியாக பின்பற்றப்படாமல், அனைத்து பகுதியிலும் மக்கள் மிக இயல்பாக நடமாடுவதை காணமுடிகிறது.
அத்தியாவசியமான கடைகள் மட்டுமின்றி பலவிதமான கடைகள் பகல் 12 மணி வரையும் திறந்து இருப்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தடுக்க இயலாது.
கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த, மக்களை தொற்று பரவலில் இருந்து உடனடியாக காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை, எடுக்க வேண்டியது அவசியமாகிறது.
எனவே, உடனடியாக மிக அத்தியாவசியமான மக்கள் தேவைகளை வழங்கும் கடைகளை தவிர்த்து, முழுமையான ஊரடங்கு புதுவை மாநிலத்தில் அமல்படுத்தப்பட வேண்டும். பொது, தனியார் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்.
ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு முழு நேர ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மருந்து உள்ளிட்ட மிக அத்தியாவசியமான மக்கள் தேவைகளை மக்கள் வெளியில் வந்து வாங்காத வண்ணம், வீட்டுக்கு டெலிவரி செய்யும் சேவைகளை அரசு மற்றும் தனியார் அல்லது தொண்டு நிறுவனங்களின் சார்பில் தொடங்க வேண்டும்.
தற்பொழுது 2-ம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.
அகில இந்திய அளவில் தற்பொழுது புதுவை மாநிலம் பாதிப்பின் அளவில் 3-ம் இடத்தில் உள்ளதை மக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வதை முழுமையாக தவிர்த்து அரசின் சீரிய நடவடிக்கைகளுக்கு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
புதுவை மாநில கவர்னர் உடனடியாக புதுவையில் முழுநேர ஊரடங்கை அமல்படுத்தி நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க வேண்டும்.
இவ்வாறு சாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பின்பகுதியில் கனகன் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியை பராமரிக்க புதுச்சேரி முன்னாள் கவர்னர் கிரண்பெடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார்.
இந்த நிலையில் கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கழிவுநீர் மற்றும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீர் ஏரியில் விடப்பட்டதாக அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் நேற்று கனகன் ஏரியில் ஏராளமான மீன்கள் செத்து மிதந்தன. இதனால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து நகராட்சிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் மற்றும் சுற்றுச் சூழல் துறை அதிகாரிகள் கனகன் ஏரியை பார்வையிட்டனர். அப்போது மீன்கள் செத்து மிதந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு செய்தனர். மேலும் ஏரியில் இருந்து நீரை சோதனைக்காக எடுத்துச் சென்றனர்.
இதற்கிடையில் நவீன எந்திரம் மூலம் ஏரியில் மிதந்த குப்பைகள் அகற்றப்பட்டு, தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டது. இந்த ஏரியில் அடிக்கடி மீன்கள் செத்து மிதப்பது வாடிக்கையாக உள்ளது. இதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புதுவை முதல்-அமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ந்தேதி பதவியேற்றார்.
பதவியேற்புக்கு முந்தைய தினமே அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து பதவியேற்புக்கு பிறகும் ரங்கசாமி உடல்நலக்குறைவால் அவதிப்பட்டார்.

அங்கு பரிசோதனையில் ரங்கசாமிக்கு கொரோனா தொற்று தீவிரம் குறைவாகவும், உடல்நிலை சீராகவும் இருந்தது. தொடர் சிகிச்சையால் ரங்கசாமியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்னும் ஓரிருநாளில் புதுவைக்கு திரும்ப வாய்ப்புள்ளதாக கட்சியின் செயலாளர் ஜெயபால் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரங்கசாமி புதுவை திரும்புகிறார்.
புதுவைக்கு திரும்பினாலும் வீட்டு தனிமையில் மேலும் சில நாட்கள் இருக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
புதுவையில் கெரோனா தொற்று கோர தாண்டவம் ஆடி வருகிறது.
ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது. மாநிலம் முழுவதும் நாள்தோறும் சராசரியாக 25 பேர் தொற்றால் பலியாகி வருகின்றனர்.
கடந்த 10 நாட்களாக தொற்று பரவல் அசுர வேகமெடுத்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் பட்டியலில் தேசியளவில் புதுவை 3-ம் இடம் பிடித்துள்ளது.
ஒரு லட்சம் பேரில் 85 பேர் மரணமடைந்துள்ளனர். தொற்றிலும் புதுவை 3-ம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேருக்கு 5 ஆயிரத்து 843 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
சராசரியாக நாள்தோறும் ஆயிரத்து 545 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.
இத்தகவல் மத்திய அரசின் கொரோனா தகவல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அந்த வீடுகளை அடையாளப்படுத்தும் வகையில் அரசின் வருவாய்த்துறை தடுப்புகளை அமைத்துள்ளனர்.
ஆனாலும், நோயாளிகள் வெளியில் சாதாரணமாக சுற்றுகின்றனர். இதுவும் தொற்று பரவல் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.
வீட்டில் தனிமையில் உள்ள நோயாளிகளை கண்காணிக்க பறக்கும்படை, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முழுமையாக கண்காணிக்க முடியவில்லை.
அண்டை மாநிலமான தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரத்தில் புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மதியம் 12 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் வழக்கமாக உள்ளது. இதனால் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இதுதவிர, தனியார் நர்சிங் ஹோம்களிலும் சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளது. புதுவையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக சாதாரண படுக்கை ஆயிரத்து 567ம், ஆக்சிஜன் படுக்கை ஆயிரத்து 277-ம், வெண்டிலேட்டர் படுக்கை 192-ம் உள்ளது. இதில் பெரும்பாலான படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பி உள்ளது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் திணறி வருகிறது.
இதனால் மருத்துவமனைகளில் தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலர் நாற்காலியில் அமர வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும், விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்களிடம் தனி மனித சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம். தாங்கள் மட்டுமின்றி, தங்கள் குடும்பமும் பாதிக்காமல் இருக்க பொதுமக்கள் சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.
தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுதல், கூட்டம் சேருவதை தவிர்த்தல், விழாக்களை தவிர்த்தல், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்றினால்தான் கொரோனா சங்கிலி தொடரை அறுத்து, தொற்று பரவலை தடுக்க முடியும்.
புதுச்சேரியில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 2,007 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 27 பேர் உயிரிழந்தனர்.
இதுவரை அங்கு 77,031 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 1,045 பேர் பலியாகி உள்ளனர்.
புதுவையில் கொரோனா 2-வது அலை சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக பரவ தொடங்கியது.
தேர்தல் நேரத்தில் படிப்படியாக நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிவு வெளியாகும்போது தொற்று அதிகரித்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இல்லாததால் உறுதியான நடவடிக்கையை எடுக்க முடியாமல் அதிகாரிகள் தயங்கி வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் தி.மு.க. வெற்றி பெற்று ஸ்டாலின் பதவியேற்கும் முன்பாகவே சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து பேச தொடங்கினார்.
தொடர்ந்து பதவியேற்றவுடன் உறுதியான முடிவெடுத்து ஊரடங்கை பிறப்பித்தார். கொரோனா நிவாரணமாக இந்த மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்து தமிழகத்தில் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது.
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜனதா கூட்டணி முதல்-அமைச்சராக ரங்கசாமி மட்டும் கடந்த 7-ந் தேதி பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றவுடன் சுகாதாரத்துறை அதிகாரிகளை அழைத்து கொரோனாவை கட்டுப்படுத்த, தடுக்க ஆலோசனை நடத்துவார் என மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றைய தினம் 3 கோப்பில் ரங்கசாமி கையெழுத்திட்டு சென்று விட்டார். அதன்பின் 9-ந் தேதி சட்டசபைக்கு வந்த ரங்கசாமி 20 நிமிடம் மட்டும் பணிகளை கவனித்துவிட்டு வெளியேறிவிட்டார்.
உடல்நலக்குறைவால் பாதித்த அவருக்கு பரிசோதனை நடத்தியபோது கொரோனா தொற்று உறுதியானது. அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
புதுவையில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு அமைந்தாலும், மக்களாட்சி அதிகாரத்துக்கு வராத நிலை உள்ளது. தற்போது புதுவையில் கொரோனா பரவலை தடுக்க தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை. அதேபோல கொரோனா தொற்றுக்கு ஆளாகும் மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சென்னைக்கு சென்று தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று திரும்புகின்றனர்.
புதுவையில் உள்ள அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேருவதில்லை. இது, புதுவை மக்களிடையே அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள் மீதான நம்பிக்கையை இழக்க செய்துள்ளது.
புதுவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 26 பேர் இறந்தனர். இதுதான் உச்சபட்ச இறப்பாக இருந்தது. ஆனால், நேற்று முன் தினம் 30 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இதில் 14 வயது சிறுமி, 25 வயது கல்லூரி மாணவி உட்பட 14 பெண்களும் அடங்குவர். இதுவரை மாநிலத்தில் ஆயிரத்து 18 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியுள்ள நிலையில் அரசு பதவியேற்றும் எந்த உறுதியான நடவடிக்கையும் இல்லாதது, நிவாரணம் வழங்காதது, மருத்துவக்கல்லூரிகள் மீதான நம்பிக்கை இழப்பு போன்றவை புதுவை மக்களை வேதனை அடைய செய்துள்ளது.
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கோஷ்டி பூசல் காரணமாக நியமன எம்.எல்.ஏ.க்களை நியமிக்காமல் இருந்தனர். ஆனால், மாநிலத்தின் உரிமையை காக்கவும், மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தவும், மத்திய மாநில அரசுகளுக்கு இடை யில் இணைப்பு பாலமாக இருக்கவும், மத்திய பா.ஜ.க. அரசு 3 எம்.எல்.ஏ.க்களை நியமித்துள்ளது,

கூட்டணியில் சிறிய பிரச்சினைகள் கூட ஏற்படக்கூடாது என்பதற்காக மிகவும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறோம். 5 ஆண்டுகாலம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி புதுவையில் நீடிக்கும். கொரோனா தொற்றால் முதல்-அமைச்சர் ரங்கசாமி பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் புதுவை திரும்பிய பிறகு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பார்கள். கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.
ஆளும் கட்சியை ஆதரித்தால் தான் தங்கள் தொகுதிக்குரிய பலன் கிடைக்கும் என்பதால் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தானாக முன்வந்து ஆளும் அரசை ஆதரிக்கிறார்கள்.
தற்போது எங்கள் கூட்டணியில் 19 எம்.எல்.ஏ.க்கள் பலம் இருக்கிறது. நாங்கள் சுயேட்சை எம்.எல்.ஏ.க்களை அனுகுவதாகவும் பேசுவதாகவும் கூறப்படும் தகவல்கள் தவறானவை.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் கடந்த ஒரு மாதமாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தேசியளவில் உயிரிழப்பு பட்டியலில் புதுவை 3-வது இடம் பெற்றது வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம்.
புதுவை அரசு விழித்துக்கொண்டு மக்களை காப்பாற்ற வேண்டும். புதுவையில் ஏராளமான மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் இருந்தும், ஆக்சிஜன் படுக்கை, வெண்டிலேட்டர்கள், ஐ.சி.யூ. படுக்கை போதிய அளவில் இல்லை.

போலீசார், வருவாய்த்துறை இணைந்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். தடுப்பூசி போடுவதால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும். முதல்-அமைச்சர் ரங்கசாமி நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தற்போதைய நிலையில் வெண்டிலேட்டர்களை விட ஐ.சி.யூ. படுக்கைகளை அதிகரிக்க வேண்டும். சிறிய மாநிலமான புதுவையில் ஒரு நாளில் 30 பேர் இறப்பது அரசின் நிர்வாக திறமையின்மையை காட்டுகிறது. ஊரடங்கை கடுமையாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






