search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி ஆட்சியை கைப்பற்ற தி.மு.க. சதி- அ.தி.மு.க. கடும் கண்டனம்

    நியமன எம்.எல்.ஏ.க்களின் வி‌ஷயத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் தவறு செய்த தி.மு.க.விற்கு அதைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை என புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சட்டமன்ற தேர்தலில் போலி மதசார்பின்மை பேசும் கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடித்து மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்தனர்.

    புதுவையில் தேர்தலுக்கு பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் அரசு பதவி ஏற்றுள்ளது. தற்போது மத்திய அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தை பயன்படுத்தி தேசிய ஜனநாயக கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி குறுக்கு வழியில் ஆட்சியில் அமர தி.மு.க. முயற்சிக்கிறது.

    எம்.எல்.ஏ.க்களின் நியமனத்தைப் பற்றி எதுவுமே தெரியாமல் தமிழகத்தை சேர்ந்த தி.மு.க., திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவலை பேசுகின்றனர்.

    மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்காத நிலையில் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க. தனது செல்வாக்கை பயன்படுத்தி 3 எம்.எல்.ஏ.க்களை நியமித்து அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து ஒரு ஜனநாயக படுகொலையை 1990-ம் ஆண்டே அரங்கேற்றியது.

    எம்.எல்.ஏ.க்கள் நியமனத்தில் மத்திய அரசுக்கு தான் அதிகாரம் உள்ளது என்றும், நியமன எம்.எல்.ஏ.வுக்கு வாக்குரிமை உண்டு எனவும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது.

    தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தி.மு.க வைச் சேர்ந்த தமிழக அமைச்சர் துரைமுருகன், திராவிட கழகத்தை சேர்ந்த வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    தீர்ப்பை விமர்சனம் செய்பவர்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும். எம்.எல்.ஏ. நியமனத்தில் தவறு இருந்தால் அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டிய உரிமை தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிக்கு மட்டுமே உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்த்து ஆட்சியை இழந்த தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு அந்த உரிமை இல்லை.

    நியமன எம்.எல்.ஏ.க்களின் வி‌ஷயத்தில் 30 ஆண்டுகளுக்கு முன் தவறு செய்த தி.மு.க.விற்கு அதைப்பற்றி பேச எந்த அருகதையும் இல்லை.

    புதியதாக புதுவையில் அமைந்துள்ள ஆட்சிக்கு குழப்பம் ஏற்படுத்தாமல் அமைதியாக இருப்பது தி.மு.க.வுக்கு அழகாகும்.

    புதுவையில் நேர் வழியில் ஆட்சியமைத்திட மக்கள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க வேண்டிய அவசியம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இல்லை.

    மக்களால் புறக்கணிக்கப்பட்ட தி.மு.க.தான் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சம்பந்தமே இல்லாத வி‌ஷயத்தில் குழப்பம் ஏற்படுத்தி ஆட்சியில் அமர துடிக்கின்றனர்.

    தேர்தலின் போது சகட்டுமேனிக்கு என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை விமர்சனம் செய்த தி.மு.க. உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் முதல்- அமைச்சராக பதவியேற்றுள்ள ரங்கசாமிக்கு அனுசரணையாக பேசுவது நாடகத்தனமாக உள்ளது. தி.மு.க.வின் பகல் கனவு என்றைக்கும் பலிக்காது,.

    இவ்வாறு அன்பழகன் கூறினார்.

    அப்போது என்.ஆர் காங்கிரஸ் செயலாளர் ஜெயபால், பா.ஜனதா செயலாளர் ஏம்பலம் செல்வம் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. மாநில துணைச் செயலாளர் அன்பழக உடையார், மாநில பொருளாளர் ரவி, பாண்டுரங்கன் ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×