search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    புதுச்சேரி
    X
    புதுச்சேரி

    புதுவையில் கொரோனா நோயாளிகளால் திணறும் மருத்துவமனைகள்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    புதுவையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.
    புதுச்சேரி:

    புதுவையில் கெரோனா தொற்று கோர தாண்டவம் ஆடி வருகிறது.

    ஒரு நாளைக்கு 2 ஆயிரம் பேருக்கு புதிதாக தொற்று ஏற்படுகிறது. மாநிலம் முழுவதும் நாள்தோறும் சராசரியாக 25 பேர் தொற்றால் பலியாகி வருகின்றனர்.

    கடந்த 10 நாட்களாக தொற்று பரவல் அசுர வேகமெடுத்துள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் பட்டியலில் தேசியளவில் புதுவை 3-ம் இடம் பிடித்துள்ளது.

    ஒரு லட்சம் பேரில் 85 பேர் மரணமடைந்துள்ளனர். தொற்றிலும் புதுவை 3-ம் இடம் பிடித்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் ஒரு லட்சம் பேருக்கு 5 ஆயிரத்து 843 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.

    சராசரியாக நாள்தோறும் ஆயிரத்து 545 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

    இத்தகவல் மத்திய அரசின் கொரோனா தகவல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

    தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அந்த வீடுகளை அடையாளப்படுத்தும் வகையில் அரசின் வருவாய்த்துறை தடுப்புகளை அமைத்துள்ளனர்.

    ஆனாலும், நோயாளிகள் வெளியில் சாதாரணமாக சுற்றுகின்றனர். இதுவும் தொற்று பரவல் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

    வீட்டில் தனிமையில் உள்ள நோயாளிகளை கண்காணிக்க பறக்கும்படை, தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் முழுமையாக கண்காணிக்க முடியவில்லை.

    அண்டை மாநிலமான தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

    அதேநேரத்தில் புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. மதியம் 12 மணி வரை பொதுமக்களின் நடமாட்டம் வழக்கமாக உள்ளது. இதனால் ஊரடங்கை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

    ஜிப்மர் மருத்துவமனை

    புதுவையில் கதிர்காமம் அரசு கொரோனா மருத்துவமனை, ஜிப்மர், 6 தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படுவோர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    இதுதவிர, தனியார் நர்சிங் ஹோம்களிலும் சிகிச்சை பெற அனுமதி அளித்துள்ளது. புதுவையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கைகளின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஒட்டுமொத்தமாக சாதாரண படுக்கை ஆயிரத்து 567ம், ஆக்சிஜன் படுக்கை ஆயிரத்து 277-ம், வெண்டிலேட்டர் படுக்கை 192-ம் உள்ளது. இதில் பெரும்பாலான படுக்கைகள் நோயாளிகளால் நிரம்பி உள்ளது. நாள்தோறும் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மருத்துவமனைகள் திணறி வருகிறது.

    இதனால் மருத்துவமனைகளில் தரையில் படுக்க வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சிலர் நாற்காலியில் அமர வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    அரசு கட்டுப்பாடுகளை விதித்தாலும், விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் மக்களிடம் தனி மனித சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம். தாங்கள் மட்டுமின்றி, தங்கள் குடும்பமும் பாதிக்காமல் இருக்க பொதுமக்கள் சுய கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும்.

    தேவையின்றி வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி கழுவுதல், கூட்டம் சேருவதை தவிர்த்தல், விழாக்களை தவிர்த்தல், தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளை பின்பற்றினால்தான் கொரோனா சங்கிலி தொடரை அறுத்து, தொற்று பரவலை தடுக்க முடியும்.
    Next Story
    ×