search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்- பா.ஜனதா வலியுறுத்தல்

    புதுவை மாநில கவர்னர் உடனடியாக புதுவையில் முழுநேர ஊரடங்கை அமல்படுத்தி நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க வேண்டும் என பாஜக வலியுறுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா 2-ம் அலையில் மக்களை அச்சுறுத்தி வரும் தொற்று புதுவை மாநிலத்தில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி, சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், இயல்பான வாழ்க்கை முறைகளை கடைபிடிக்காமல், விலகி நிற்பது மிக, மிக அவசியம் ஆகிறது.

    தற்போது மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள பகல் 12 மணி வரை பகுதிநேர ஊரடங்கு, நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த பெரிதாக பலனளிக்கவில்லை.

    மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக சில கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதால் மக்கள் மிக எளிதாக வெளியில் நடமாடுகிறார்கள். சமூக இடைவெளி, முக கவசம் ஆகியவை சரியாக பின்பற்றப்படாமல், அனைத்து பகுதியிலும் மக்கள் மிக இயல்பாக நடமாடுவதை காணமுடிகிறது.

    அத்தியாவசியமான கடைகள் மட்டுமின்றி பலவிதமான கடைகள் பகல் 12 மணி வரையும் திறந்து இருப்பதால் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை தடுக்க இயலாது.

    கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த, மக்களை தொற்று பரவலில் இருந்து உடனடியாக காப்பாற்ற உறுதியான நடவடிக்கைகளை, எடுக்க வேண்டியது அவசியமாகிறது.

    எனவே, உடனடியாக மிக அத்தியாவசியமான மக்கள் தேவைகளை வழங்கும் கடைகளை தவிர்த்து, முழுமையான ஊரடங்கு புதுவை மாநிலத்தில் அமல்படுத்தப்பட வேண்டும். பொது, தனியார் போக்குவரத்து நிறுத்தப்பட வேண்டும்.

    ஒரு வாரம் அல்லது 10 நாட்களுக்கு உறுதியான நடவடிக்கை எடுக்காவிட்டால் நோய் பரவலை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு முழு நேர ஊரடங்கிற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    மருந்து உள்ளிட்ட மிக அத்தியாவசியமான மக்கள் தேவைகளை மக்கள் வெளியில் வந்து வாங்காத வண்ணம், வீட்டுக்கு டெலிவரி செய்யும் சேவைகளை அரசு மற்றும் தனியார் அல்லது தொண்டு நிறுவனங்களின் சார்பில் தொடங்க வேண்டும்.

    தற்பொழுது 2-ம் அலை வேகமாக பரவி வரும் சூழலில் மக்கள் மிக கவனமாக இருக்க வேண்டியதும் அவசியமாகிறது.

    அகில இந்திய அளவில் தற்பொழுது புதுவை மாநிலம் பாதிப்பின் அளவில் 3-ம் இடத்தில் உள்ளதை மக்கள் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும். தேவையின்றி வெளியில் செல்வதை முழுமையாக தவிர்த்து அரசின் சீரிய நடவடிக்கைகளுக்கு மக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.

    புதுவை மாநில கவர்னர் உடனடியாக புதுவையில் முழுநேர ஊரடங்கை அமல்படுத்தி நோய் தொற்றிலிருந்து மக்களை காக்க வேண்டும்.

    இவ்வாறு சாமிநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    Next Story
    ×