என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்து ஒரு மாதத்தை நெருங்கி விட்ட நிலையில், இன்னும் அங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை.
    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சட்டசபை தேர்தலை தொடர்ந்து, என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைந்து ஏறத்தாழ ஒரு மாதத்தை நெருங்கி விட்ட நிலையில், இன்னும் அங்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இருகட்சிகளுக்கும் இடையே அமைச்சர் பதவிகளை பங்கிட்டு கொள்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

    இந்த சூழலில் பிரதமர் மோடி முதல்-அமைச்சர் ரங்கசாமியை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது முதல்-அமைச்சராக பதவி ஏற்றதற்கு வாழ்த்து தெரிவித்ததுடன் ரங்கசாமியின் உடல் நலம் குறித்தும் அவர் விசாரித்தார். அப்போது அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக மோடி பேசியதாகவும் தெரிகிறது.
    கிராமத்தில் நடந்த பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார்.
    வில்லியனூர்:

    உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரசின் 2-வது அலை இந்தியாவில் சுனாமியாக பரவி தினமும் ஆயிரக்கணக்கான மக்களின் உயிரை குடித்து வருகிறது. லட்சக்கணக்கானோர் பாதித்து வருகின்றனர்.

    கொரோனாவுக்கு தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற நிலையில், இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியானது முதலில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் தடுப்பூசி குறித்த வதந்தியால் அதை போட மக்கள் தயக்கம் காட்டினர். தற்போது நிலைமை தலைகீழாக மாறி தடுப்பூசி மையங்களுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர்.

    அந்த வகையில் புதுச்சேரி அருகே 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டதன் மூலம் தங்களது கிராமத்தை மாநிலத்திலேயே முன்மாதிரி கிராமமாக மாற்றியுள்ளனர்.

    இது பற்றிய விவரம் வருமாறு:-

    புதுச்சேரி அருகே ஏம்பலம் தொகுதி புதுக்குப்பம் கிராமத்தில் 750-க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்கு 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 240 பேரும், 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்கள் 270 பேரும் உள்ளனர். இதில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    தற்போது 18 முதல் 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுவதால், அந்த வயது பிரிவை சேர்ந்தவர்களும் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். விடுபட்டவர்களுக்கு நேற்று முகாம் நடத்தி தடுப்பூசி போடப்பட்டது. இதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன்மாதிரி கிராமமாக புதுக்குப்பத்தை புதுவை அரசு அறிவித்துள்ளது.

    இதற்காக அந்த கிராமத்தில் நடந்த பாராட்டு விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு பாராட்டு சான்றிதழை வழங்கினார். அப்போது கிராம மக்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் கவர்னர் பாராட்டு தெரிவித்தார்.

    விழாவில் ஏம்பலம் தொகுதி எம்.எல்.ஏ. லட்சுமிகாந்தன், மாவட்ட கலெக்டர் பூர்வா கார்க், சுகாதாரத்துறை செயலாளர் அருண்குமார், இயக்குனர் மோகன்குமார், துணை கலெக்டர் கிரில், பாகூர் தாசில்தார் சுரேஷ்ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இந்த சாதனை குறித்து புதுக்குப்பம் கிராம மக்கள் கூறுகையில், தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம். இதை உணர்ந்து எங்கள் கிராம பெரியவர்கள் முதலில் தடுப்பூசி எடுத்துக்கொண்டனர். தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அவர்கள் கூறியதால் அடுத்தடுத்து பலரும் தடுப்பூசி போட முன்வந்தனர்.

    தற்போது 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களும் ஆர்வமாக தடுப்பூசி போட்டுள்ளனர். எங்கள் கிராமத்தில் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டது பெருமையாக உள்ளது என்றனர்.
    ஊரடங்கு கட்டுப்பாட்டால் கொரோனா தொற்று குறைந்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது.

    மார்ச் இறுதி, ஏப்ரல் மாதத்தில் வேகமெடுத்தது. ஒரு கட்டத்தில் உச்சகட்டமாக ஒரு நாளில் 2 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. நாள்தோறும் 30 பேர் பலியாகி வந்தனர். தொற்று அதிகரிக்க, அதிகரிக்க அரசு, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்தது.

    இதனால் ஆக்சிஜன், வெண்டிலேட்டர் படுக்கைகள் அதிகமாக தேவை என்ற நிலை ஏற்பட்டது. அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டது.

    தனியார் மருத்துவமனைகளில் 100 சதவீத படுக்கைகளையும் அரசே ஏற்றது. பிரதமரின் நிதியுதவியுடன் ஆக்சிஜன் உற்பத்தி மையமும் அமைக்கப்பட்டது. மத்திய அரசிடம் இருந்து ஆக்சிஜன் செறிவூட்டிகளும் பெறப்பட்டது. தனியார் நிறுவனங்களும் மருந்து, உபகரணங்களையும் வழங்கியது.

    தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு புதுவையில் பிறப்பிக்கப்பட்டது. வருகிற 31-ந் தேதியுடன் இந்த ஊரடங்கு நிறைவடைகிறது.

    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. நாள்தோறும் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. அதேநேரத்தில் நாள்தோறும் சுமார் 9 ஆயிரம் பேருக்கு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    பரிசோதனையை அதிகப்படுத்த தொகுதிதோறும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசியை அதிகளவில் மக்கள் போட்டுக்கொள்ள தடுப்பூசி திருவிழா நடத்தினர். 18 வயதுக்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட 5 மையங்களும் உருவாக்கப்பட்டுள்ளது. கிராமங்களிலும் இந்த தடுப்பூசி மையங்களை அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கொரோனா மேலாண்மை கூட்டம் கவர்னர் தமிழிசை தலைமையில் கவர்னர் மாளிகையில் நடந்தது.

    கூட்டத்தில் தலைமை செயலாளர் அஸ்வனிகுமார், கூடுதல் டி.ஜி.பி. ஆனந்த மோகன், நிதித்துறை செயலர் அசோக்குமார், உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன், சுகாதாரத்துறை செயலர் அருண் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் ஊரடங்கு கட்டுப்பாட்டால் கொரோனா தொற்று குறைந்துள்ளது குறித்து விவாதிக்கப்பட்டது. தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் சில நாட்கள் நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    மேலாண்மைகூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமியுடன் ஆலோசனை நடத்த உள்ளார். சுகாதாரத்துறை அதிகாரிகளும் ரங்கசாமியை சந்தித்து இதுகுறித்து விளக்கினர்.

    இதனால் புதுவையில் மேலும் சில வாரங்களுக்கு புதுவையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும் என தெரிகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

    சுல்தான்பேட்டை கிராமத்தில் உள்ள அனைத்து பூத்துகளையும் ஒரே கிராம பஞ்சாயத்தாக வரையறை செய்து அறிவிக்க வேண்டும். மேலும், கிராம பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் ஆகிய 2 பதவிகளையும் பொது பதவிகளாகவும் அறிவிக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தி.மு.க. தலைவர் சிவா எம்.எல்.ஏ. உள்ளாட்சித்துறை செயலர் வல்லவனை சந்தித்து மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    அரசிதழில் வெளியிடப்பட்டுள்ள நகராட்சி, கொம்யூன் வார்டு எல்லை மறுசீரமைப்பு வரைவு நகலில் பல்வேறு குறைபாடுகள் உள்ளது.

    உள்ளாட்சி வார்டுகள் சராசரி வாக்காளர்கள் எண்ணிக்கையை நிர்ணயித்து பிரிக்கப்படவில்லை. பூலோக ரீதியாகவும் எல்லைகளை ஒழுங்குப்படுத்தும் வகையிலும் பிரிக்கப்படவில்லை. வாக்காளர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தால்தான் கவுன்சிலர்களின் சேவை தரமாக இருக்கும்.

    வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்தில் ஏற்கனவே இருந்த கிராம பஞ்சாயத்துக்களின் எண்ணிக்கை 18-ல் இருந்து 24 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு பிரிக்கப்பட்ட கிராம பஞ்சாயத்துக்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை சராசரியாக 6500 என உள்ளது.

    ஆனால், 6350 வாக்காளர்கள் மட்டுமே உள்ள சுல்தான்பேட்டை கிராம பஞ்சாயத்து இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

    திமுக

    சுல்தான்பேட்டை கிராமத்தில் உள்ள அனைத்து பூத்துகளையும் ஒரே கிராம பஞ்சாயத்தாக வரையறை செய்து அறிவிக்க வேண்டும். மேலும், கிராம பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர் ஆகிய 2 பதவிகளையும் பொது பதவிகளாகவும் அறிவிக்க வேண்டும்.

    புதுவை முழுவதும் அனைத்து வார்டுகளிலும் வாக்காளர்களின் எண்ணிக்கை சராசரியாக 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் வரை இருக்கும் வகையிலும், பூலோகா ரீதியில் ஒன்றாக இருக்கும் வகையிலும் பிரிக்க வேண்டும்.

    மேலும் அந்தந்த பகுதி மக்கள் என்னென்ன ஆலோசனைகளை தெரிவித்து இருந்தார்களோ அக்கருத்துக்கள் அனைத்தையும் அமல்படுத்திய பின்னரே உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.

    ஏற்கனவே சட்டமன்ற தேர்தலும் கொரோனா தொற்று பரவலுக்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது. அதுபோல் உள்ளாட்சி தேர்தலும் கொரோனா தொற்று பரவலுக்கு காரணமாகிவிடக்கூடாது. மேலும் கொரோனா தொற்று 3-ம் அலை, 4-ம் அலை பரவலும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

    எனவே வல்லுனர்களின் கருத்தை பெற்றும், 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய பின்பு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும். இவைகளை வாய்ப்பாக பயன்படுத்தி உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை தள்ளிப்போகச் செய்யாமல், உச்சநீதிமன்றம் குறிப்பிட்ட காலத்திற்குள்ளேயே அனைத்து சீர்திருத்தங் களையும் மேற்கொண்டு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வர வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறந்ட்டுள்ளது.

    சந்திப்பின்போது தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் முகம்மது அசன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் கலிமுல்லா ஆகியோர் உடன் இருந்தனர்.

    கொரோனா பாதித்தவர்களுக்கு தொலைபேசி மூலம் மனநல ஆலோசனை வழங்கப்படுவதாக சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்தார்.
    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை செயலாளர் அருண் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா தொற்றின் 2-வது அலை தாக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ரீதியான தொந்தரவுகளை கண்டறியவும், சரி செய்யவும் போதிய விழிப்புணர்வு மக்களிடையே உள்ளது.

    அதேபோல் இந்த பெருந்தொற்று காலத்தில் மனதளவில் ஏற்படும் பாதிப்புகளை நாம் உதாசீனம் செய்துவிட முடியாது. மனநலனை பேணுவதற்காகவும் அதற்கான உதவிகளை எளிய முறையில் பெற தேசிய மனநல திட்டத்தின் கீழ் புதுச்சேரி மனநல துறையின் நிபுணர் குழு கலந்தாலோசித்தது.

    அதன்படி இலவச தொலைபேசி எண் அமைக்கவும், கொரோனா நோயாளிகளை தொலைபேசி மூலம் அழைத்து மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த எண்களில் காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை அழைத்து மக்கள் பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    தரமற்ற பாதுகாப்பு உடை புதுவையில் வழங்கப்படுவதாகவும், நன்கொடை பெற்று உடையை பெறுகிறோம் என்றும் கவர்னருக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை என்று சுகாதாரத்துறை செவிலியர்கள் சராமரியாக குற்றம் சாட்டினர்.
    புதுச்சேரி:

    கொரானோ தொற்றால் மருத்துவ அதிகாரி மோகன்குமார், செவிலிய அதிகாரி நிரஞ்சனா, சுகாதார ஆய்வாளர் ஆனந்த், நர்சிங் ஆர்டர்லி ரங்கநாதன், அனுசுயா, வார்டு அட்டெண்டன்ட் மாயகிருஷ்ணன் மற்றும் ஒய்வு பெற்ற பைலேரியா இன்ஸ்பெக்டர் பக்கிரி ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர்.

    கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் புதுவை அரசு மீதும் சுகாதாரத்துறை செயலாளர் மீதும் குற்றம் சாட்டி கோ‌ஷம் எழுப்பப்பட்டது.

    இந்த நிலையில் தரமற்ற பாதுகாப்பு உடை (பி.பி.இ. கிட்) புதுவையில் வழங்கப்படுவதாகவும், நன்கொடை பெற்று உடையை பெறுகிறோம் என்றும் கவர்னருக்கு கடிதம் அனுப்பியும் பலனில்லை என்று சுகாதாரத்துறை செவிலியர்கள் சராமரியாக குற்றம் சாட்டினர்.

    பாதுகாப்பு உடை வாங்கியது தொடர்பாக விசாரணை நடத்த தி.மு.க. வலியுறுத்தியது.

    இதையடுத்து பாதுகாப்பு கவச உடையில் குறையிருந்தால் விசாரித்து சரி செய்ய கவர்னர் தமிழிசை உத்தரவிட்டிருந்தார்.

    இதனிடேயே பாதுகாப்பு உடை தொடர்பாக புகார் கூறிய செவிலியர்கள் அனுராதா, சாந்தி மற்றும் பாக்கியவதி (புதுவை செவிலியர் சங்கத்தலைவி) ஆகிய 3 பேருக்கும் சுகாதாரத்துறை மெமோ நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

    அதில் உயர் அதிகாரிகளிடம் கலந்து ஆலோசிக்காமல் மருத்துவமனைகளுக்கு தரப்பட்டுள்ள பாதுகாப்பு உடையின் தரம் பற்றி புகார் செய்துள்ளீர்கள்.அதுதொடர்பாக தகுந்த ஆதாரங்களுடன் 48 மணி நேரத்தில் விளக்கம் தரவேண்டும்.

    இது மத்திய அரசுக்கும் பாதுகாப்பு உடை தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது? என்பதற்கு உதவும்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
    புதுவை உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஓரிரு வாரத்தில் 2டிஜி மருந்து கிடைக்கும் என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    தெலுங்கானா மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்ற கவர்னர் தமிழிசை விமானம் மூலம் புதுவை வந்தார்.

    ஐதராபாத்தில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் வழங்கிய முககவசங்கள், கவச உடைகள், பிராண வாயு செறிவூட்டிகள், கிருமிநாசினி ஆகிய பொருட்களை கவர்னர் தமிழிசை தன்னுடன் எடுத்து வந்தார். அவற்றை சுகாதாரத்துறையிடம் கவர்னர் ஒப்படைத்தார்.

    பின்னர், கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    தெலுங்கானாவில் 10 பல்கலைக்கழக துணை வேந்தர் பதவியேற்புக்கு ஒப்புதல் தர சென்றிருந்தேன். தெலுங்கானாவுக்கும், புதுவைக்கும் பல தொண்டு நிறுவனங்களிடம் இருந்து உதவிகள் பெற்றேன்.

    தெலுங்கானாவுக்கு தரும்போது புதுவைக்கும் தர கோரி பெற்றேன்.

    2டிஜி மருந்து பரிசோதனைக்கு கொண்டு வந்துள்ளேன். 10 நாட்களுக்கு தரப்படும் இந்த மருந்து சாப்பிட்டால் 4-வது நாளிலேயே ஆக்சிஜன் வெண்டிலேட்டர் துணையின்றி சுவாசிக்க இயலும்.

    புதுவை உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் ஓரிரு வாரத்தில் 2டிஜி மருந்து கிடைக்கும். தெலுங்கானா வாழ் அரியானா மக்கள் தெலுங்கானா செஞ்சிலுவை சங்கத்துக்கு நன்கொடை தந்தனர்.

    புதுவைக்கும் தரக்கோரினேன். புதுவை செஞ்சிலுவை சங்கத்துக்கு ரூ. 5 லட்சம் அளித்தனர்.

    ஸ்புட்னிக் தயாரிக்கும் ரெட்டிஸ் ஆய்வகம் 3 இடங்களில் தெலுங்கானாவில் உற்பத்தி செய்ய உள்ளனர். புதுவையில் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை நிறுவ கோரினேன். முயற்சி செய்வதாக கூறியுள்ளார்கள். தடுப்பூசி மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்தும்.

    இதுபற்றி முதல் அமைச்சரிடமும் விவாதிக்க உள்ளேன்.

    புதுவை அரசுடன் இணைந்து கொரோனா கட்டுப்பாட்டு, மாநில வளர்ச்சி ஆகியவற்றிலும் எனது பங்கு இருக்கும். கட்டுப்பாட்டு பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு நிவாரண பொருட்கள் கிடைப்பதில்லை என்ற குறையை சரி செய்ய நடவடிக்கை எடுப்போம்.

    செவிலியர்களுக்கு தரம் குறைந்த பாதுகாப்பு உடை வழங்கப்படுவதாக புகார் வந்தது. குறை இருந்தால் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தால் சரி செய்யப்படும். வெளியே சொல்வதை விட ஆய்வுக்கு நான் சென்ற போதே செவிலியர்கள் சொல்லியிருக்கலாம். அரசை களங்கப்படுத்துவதை விட களத்தில் இருக்கும் அதிகாரியிடம் சொல்லலாம்

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார். 

    புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3000 வழங்கப்படும். இதனால் 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா  2-வது அலை கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. புதுவையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாள்தோறும் 2 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சராசரியாக நாள்தோறும் 30 பேர் மரணமடைந்தனர். புதுவையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் மதியம் 12 மணி வரை அத்தியாவசியக் கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.

    புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 1,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,540 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,435 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,927 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கொரோனா ஊரடங்கால் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.

    முதல்வர் ரங்கசாமி கொரோனா சிகிச்சை பெறச் சென்றதால் எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இன்று சட்டசபைக்கு  வந்த முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பணம்

    தொடர்ந்து கவர்னர்  மாளிகைக்கு ஒரு கோப்புடன் சென்றார். அந்தக் கோப்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்க அனுமதிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கோப்புக்கு கவர்னர் தமிழிசை உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதுபற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3000 வழங்கப்படும். இதனால் 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இது விரைவில் வழங்கப்படும்.

    கொரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அச்சம் தேவையில்லை. முககவசம் அணிந்து செல்லுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். தடுப்பூசி தேவையான அளவு கையிருப்பில் உள்ளது" என கூறி உள்ளார்.

    கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில் அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் ஊரடங்கை அமல்படுத்த முடியும் என நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கை எடுத்தாலும் அதன் தாக்கம் குறையவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.

    புதுவையில் பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை ஊரடங்கு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில் அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் ஊரடங்கை அமல்படுத்த முடியும்.

    செவிலியர்களுக்கு வழங்கும் கவச உடை தரமானதா? என அரசு கண்காணிக்க வேண்டும். செவிலியர்கள் 8 மணி நேரம் கவச உடை அணிகின்றனர். அரை மணி நேரம் அணிந்து சிறப்பாக உள்ளதாக கவர்னர் கூறுவது பொறுப்பற்ற செயல். பி.பி.இ. கிட் தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டது. தற்போது கொடுக்கும் உணவு தரமாக இல்லை என புகார் வந்துள்ளது.

    முதல்-அமைச்சர் செய்ய வேண்டிய வேலையை கவர்னர் செய்து கொண்டிருக்கிறார். எங்கள் ஆட்சி காலத்தில் இதே பிரச்சனை ஏற்பட்டது. ஆட்சியில் கவர்னர் தலையிடக்கூடாது என ஐகோர்ட்டில் தீர்ப்பு பெற்றோம்.

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா வெற்றி பெற்றாலும் கவர்னர்தான் ஆட்சி செய்கிறார். இதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக்கொண்ட நேரத்தில் நிர்வாகத்தை கவனிக்க தவறிவிட்டார்.

    இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    கொரோனா பரவல் காரணமாக சபாநாயகர் அறையில் எளியமுறையில் பதவியேற்பு விழா நடந்தது. முதல்நபராக முதல்-அமைச்சர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த 2-ந்தேதி வெளியானது.

    வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு தேர்தல் துறை சான்றிதழ்களை வழங்கியது. ஆனால் எம்.எல்.ஏ.க்கள் கடந்த 23 நாட்களாக பதவியேற்கவில்லை.

    அதேநேரத்தில் ரங்கசாமி முதல்-அமைச்சராக கடந்த 7-ந் தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் 9-ந் தேதி சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று 17-ந் தேதி புதுவை திரும்பினார். டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி அவர் வீட்டு தனிமையில் இருந்தார். இதனால் அவர் வெளியே வரவில்லை.

    இதனிடையே தற்காலிக சபாநாயகராக ராஜ்பவன் தொகுதி லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ.வை பரித்துரைத்து ரங்கசாமி கடந்த 9-ந்தேதி அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை அனுமதியளித்தார்.

    இதனையடுத்து தற்காலிக சபாநாயகராக லட்சுமிநாராயணன் பதவியேற்பு விழா இன்று நடந்தது.

    காலை 9 மணிக்கு லட்சுமிநாராயணன் கவர்னர் மாளிகைக்கு வந்தார். கவர்னர் மாளிகையின் முதல் தளத்தில் பதவியேற்பு விழா நடந்தது. 9.35 மணிக்கு கவர்னர் தமிழிசை விழா நடைபெறும் இடத்துக்கு வந்தார்.

    தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணனுக்கு கவர்னர் தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    இதனையடுத்து விழா தொடங்கியது. தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணனுக்கு கவர்னர் தமிழிசை பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

    உறுதிமொழி ஏற்றுக்கொண்ட லட்சுமி நாராயணனுக்கு கவர்னர் தமிழிசை சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். லட்சுமிநாராயணன் கவர்னருக்கு நன்றி தெரிவித்தார்.

    எளிய முறையில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்றனர். கொரோனா தொற்று பரவல் காரணமாக மிக குறைந்த அளவிலான பிரமுகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

    இதனைத்தொடர்ந்து சட்டசபையில் உள்ள சபாநாயகர் அறையில் காலை 10 மணிக்கு எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு விழா நடந்தது. வழக்கமாக சட்டசபையில்தான் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடைபெறும்.

    கொரோனா பரவல் காரணமாக சபாநாயகர் அறையில் எளியமுறையில் விழா நடந்தது. முதல்நபராக முதல்-அமைச்சர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

    அவருக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் தனித்தனியே சபாநாயகர் அறைக்கு வந்து பதவியேற்றுக்கொண்டனர்.

    இதற்காக மதியம் 12 மணி வரை நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களோடு மத்திய அரசால் நியமிக்கப்பட்ட 3 நியமன எம்.எல்.ஏ.க்களும் பதவியேற்றுக்கொண்டனர்.

    எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பையொட்டி சட்டசபை வளாகத்துக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை. எம்.எல்.ஏ.க்கள், அவர்களின் குடும்பத்தினர், முக்கிய பிரமுகர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர்.

    கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பதவியேற்பு விழாவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு இருந்தது.

    புதுச்சேரியில் புதிய எம்.எல்.ஏ.க்கள் இன்று பதவி ஏற்க உள்ளனர். சபாநாயகர் அலுவலகத்தில் எளிய முறையில் பதவி ஏற்பு நடக்கிறது.
    புதுச்சேரி:

    புதுவை சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 2-ம் தேதி நடந்தது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் (10 இடங்கள்), பா.ஜ.க. (6 இடங்கள்) கூட்டணி மொத்தம் 16 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. தி.மு.க.-6, காங்கிரஸ்- 2, சுயேச்சைகள் -6 இடங்களையும் பிடித்தனர்.

    என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சராக ரங்கசாமி கடந்த 7-ம் தேதி கவர்னர் மாளிகையில் பதவி ஏற்றுக்கொண்டார்.

    இதற்கிடையே, தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று கடந்த 17-ம் தேதி முதலமைச்சர் ரங்கசாமி புதுவை திரும்பினார். வீட்டில் அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டதன் காரணமாக அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு தள்ளிப்போனது.

    இந்நிலையில், தற்காலிக சபாநாயகராக லட்சுமி நாராயணன் இன்று பதவி ஏற்க உள்ளார். கவர்னர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் அவருக்கு தற்காலிக சபாநாயகராக பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

    இந்த நிகழ்ச்சி காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்கிறது. அதைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் உள்ள சபாநாயகர் அலுவலகத்துக்கு வரும் லட்சுமி நாராயணன் அங்கு தனது பொறுப்பினை ஏற்றுக்கொள்கிறார்.

    அதன்பின் எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பதற்காக சட்டமன்ற கூட்டம் கூட்டப்பட்டு பதவி ஏற்பார்கள். ஆனால் இந்த முறை தொற்று பரவலை தடுக்கும் விதமாக சபாநாயகர் அலுவலகத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நடக்கிறது. முதலில் முதலமைச்சர் ரங்கசாமி எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக் கொள்கிறார்.

    அதைத்தொடர்ந்து மற்ற எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படுகிறது. இறுதியாக நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்க உள்ளனர்.

    பதவியேற்க வரும் எம்.எல்.ஏ.க்களுடன் 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சட்டசபைக்குள் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாது.
    புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    புதுச்சேரி:

    வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகி உள்ளது. ‘யாஸ்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது இன்று (செவ்வாய்க் கிழமை) மாலை மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    இந்தப் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதையொட்டி புதுச்சேரி துறைமுகத்தில் நேற்று 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று புதுச்சேரி மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
    ×