search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.3,000 கொரோனா நிவாரணம்

    புதுச்சேரியில் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3000 வழங்கப்படும். இதனால் 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள்.
    புதுச்சேரி:

    நாடு முழுவதும் கொரோனா  2-வது அலை கடந்த பிப்ரவரியில் தொடங்கியது. புதுவையிலும் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருந்தது. நாள்தோறும் 2 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். சராசரியாக நாள்தோறும் 30 பேர் மரணமடைந்தனர். புதுவையில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் மதியம் 12 மணி வரை அத்தியாவசியக் கடைகள் மட்டும் இயங்கி வருகின்றன.

    புதுச்சேரி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு புதிதாக 1,321 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 99,540 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 27 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,435 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் கடந்த 24 மணி நேரத்தில் 1,927 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.

    கொரோனா ஊரடங்கால் அன்றாடக் கூலித் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் கோரிக்கை வைத்துள்ளன.

    முதல்வர் ரங்கசாமி கொரோனா சிகிச்சை பெறச் சென்றதால் எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. இந்நிலையில் இன்று சட்டசபைக்கு  வந்த முதல்வர் ரங்கசாமி, தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    பணம்

    தொடர்ந்து கவர்னர்  மாளிகைக்கு ஒரு கோப்புடன் சென்றார். அந்தக் கோப்பில், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3 ஆயிரம் வழங்க அனுமதிக்க வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தக் கோப்புக்கு கவர்னர் தமிழிசை உடனடியாக ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதுபற்றி முதல்வர் ரங்கசாமியிடம் கேட்டதற்கு, "கொரோனா இரண்டாவது அலையால் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா நிவாரண நிதியாக அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.3000 வழங்கப்படும். இதனால் 3.5 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இது விரைவில் வழங்கப்படும்.

    கொரோனாவிலிருந்து பாதுகாக்க தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அச்சம் தேவையில்லை. முககவசம் அணிந்து செல்லுங்கள். சமூக இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். தடுப்பூசி தேவையான அளவு கையிருப்பில் உள்ளது" என கூறி உள்ளார்.

    Next Story
    ×