என் மலர்
புதுச்சேரி
புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது.
முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுள்ளார். கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே அமைச்சர்களை பங்கீடு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.
ஒரு மாத காலம் நீடித்த இழுபறி முதல்-அமைச்சர் ரங்கசாமி பா.ஜனதா மேலிட தலைவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து சுமூக தீர்வு ஏற்பட்டது.
இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு முதல்-அமைச்சர் தவிர்த்து 3 அமைச்சர்களும், பா.ஜனதாவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் பதவி வழங்க உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து பா.ஜனதாவில் அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி யாருக்கு? என்பது குறித்து கட்சி மேலிடம் ஆலோசித்து முடிவு செய்துள்ளது.
பா.ஜனதா தரப்பிலான அமைச்சர்கள் பட்டியல் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் இன்று வழங்கப்பட்டது. இதற்காக பா.ஜனதா தேசிய தேசிய செயலாளர் சி.டி.ரவி, ராஜூசந்திரசேகர் எம்.பி. ஆகியோர் புதுவைக்கு வந்தனர்.
அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ரங்கசாமியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.
பின்னர் அவரிடம் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அளித்தனர். பின்னர் பதவியேற்பு விழா தேதி குறித்தும் ஆலோசனை நடத்தினர்.
என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அமைச்சர்கள் ஒரேநாளில் பதவியேற்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு முதல்-அமைச்சர் ரங்கசாமியை டெல்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தனர்.
சபாநாயகர் வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா வழங்கி உள்ளதால் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.
பா.ஜனதா சார்பில் மணவெளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏம்பலம் செல்வம் சபாநாயகர் வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டம் கொண்டவர். முருக பக்தரான ரங்கசாமி ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருவார்.
தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமிக்கு கோரிமேட்டில் தனியாக கோவில் கட்டியுள்ளார். இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையில் விசேஷ பூஜை, அன்னதானம் செய்து வழிபடுவார்.
முக்கிய முடிவுகள் எடுக்கும்போது சேலம் அப்பா பைத்தியம் சாமிகள் ஜீவசமாதி சென்று வருவார். தேர்தலில் வெற்றி பெற்று ரங்கசாமி முதல்-அமைச்சரானாலும் கூட்டணியில் அமைச்சரவை பங்கீட்டில் தொடர்ந்து சிக்கல் நிலவி வந்தது.
சமீபத்தில் சிக்கலுக்கு தீர்வு ஏற்பட்டது. இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தில் உள்ள தனது குல தெய்வம் கோவிலுக்கு சென்றார்.
அய்யனராப்பன், பொற்கலை, பூரணி சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். பின்னர் கோவில் வாசலில் உள்ள குதிரை சிலையின் கால்களில் வேண்டுதல் சீட்டையும் ரங்கசாமி கட்டினார்.
புதுச்சேரி:
புதுவை என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியின் முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி ரங்கசாமி பதவியேற்றார்.
என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா இடையே அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இந்த நிலையில் பா.ஜனதா மேலிட தலைவர்களோடு ரங்கசாமி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதையடுத்து என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா இடையில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது. பாஜனதாவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவி வழங்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார்.
இரு கட்சிகளும் புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் பதவியை பெறுவதில் இரு கட்சிக்குள்ளும் போட்டா போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா, ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தின் முடிவில் மாநில தலைவர் சாமிநாதன், யாருக்கு என்ன பதவி என முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய தலைவர் நட்டா மற்றும் புதுவை பொறுப்பாளர்களுக்கு வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்.
இதனிடையே பா.ஜனதா மேலிட தலைவர்கள் சி.டி.ரவி, ராஜூ சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) புதுவைக்கு வருகின்றனர். அவர்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களோடு ஆலோசனை நடத்துகின்றனர்.
தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசுகின்றனர். அப்போது பா.ஜனதா தரப்பில் அமைச்சர்கள் பட்டியலை ரங்கசாமியிடம் அளிக்கின்றனர்.
அதே நேரத்தில் சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளரையும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
அமைச்சர்கள் பதவியேற்பு அடுத்த வாரம் இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் வருகிற 10-ந்தேதி அமாவாசை தினமாகும். மரணயோகம் என்பதால் அன்றைய தினம் பதவியேற்பு இருக்காது. 14-ந் தேதி நல்ல முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றைய தினம் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுவை பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானா காலில் ஏற்பட்ட காயத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், சட்டமன்ற கட்சித்தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்தனர். அவர்களுடன் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

திருக்கனூர் பகுதியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் திருக்கனூர் சித்தலம்பட்டு கிருஷ்ணா நகரை சேர்ந்த பூங்காவனம் (வயது 65) என்பவர் தலையில் வேப்பிலையுடன் கடைவீதிகளில் சுற்றி வருகிறார். கொரோனா பயத்தால் வேப்பிலையுடன் சுற்றுவதாக அவர் தெரிவித்துள்ளார். வேப்பிலையுடன் வலம் வரும் அவரை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்க்கின்றனர்.
புதுவையில் பல்வேறு தனியார் அமைப்புகள் சார்பில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதை சுகாதார துறையிடம், கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் ஒப்படைத்தார்.
மேலும் துப்புரவு பணியாளர்கள், ஆட்டோ தொழிலாளர்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார். நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் அருண், கவர்னரின் செயலாளர் அபிஜித்விஜய் சவுத்ரி, அரசு செயலாளர் வல்லவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுச்சேரி மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க ஊரடங்கில் சில தளர்வுகள் வழங்கப்பட்டு உள்ளன. தொற்று பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது. இந்த நாட்களில் நாம் துணிச்சலாக கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்ள வேண்டும்.
இது சவாலான காலகட்டமாக இருந்தாலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நாம் கட்டுப்பாடுகளை கடைபிடித்தால் தான் ஊரடங்கு பலன் தரும். தற்போது இறப்பு எண்ணிக்கையும் சரிந்துள்ளது. அது முழுவதுமாக குறைக்கப்பட வேண்டும்.
தொற்று பாதிப்பு, இறப்பு விகிதம் குறைந்தால் ஊரடங்கினை தளர்த்தலாம். பொதுமக்களுக்கு தெருமுனைகளில் தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கியுள்ளோம். பொதுமக்கள் தாமாக முன்வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும். ஒரு நாள் கூட தாமதிக்க கூடாது.
நம்மிடம் தற்போது 1 லட்சத்து 40 ஆயிரம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது. இன்னும் 33 ஆயிரம் தடுப்பூசிகள் வாங்க ஏற்பாடு செய்துள்ளோம். இதனை இளைஞர்களுக்கு என்று தனியாக வாங்கி உபயோகப்படுத்த உள்ளோம். 2-வது டோஸ் தடுப்பூசியை அரசு அறிவித்துள்ள இடைவெளியில் போடுவது தான் நல்லது. புதுச்சேரியில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து காந்திவீதியில் நடந்த தடுப்பூசி போடும் முகாமை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவையில் தற்போது கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களுக்கும், சிகிச்சை முடிந்த கொரோனா நோயாளிகளுக்கும் கருப்பு பூஞ்சை தாக்கம் ஏற்பட்டு வருகிறது.
புதுவையில் இதுவரை 40 நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்பட்டு அதில் 2 பேர் மரணத்தை தழுவியுள்ளனர். இதுபற்றி சுகாதாரத்துறை செயலர் டாக்டர் அருண் கூறியதாவது:-
கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் தங்களது ரத்த சர்க்கரை அளவினை பரிசோதித்து அதற்கான மருந்துகளை எடுத்து சர்க்கரை அளவினை சீராக பாதுகாத்து வந்தால் இந்த நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வீட்டிலேயே ஆக்சிஜன் உபயோகப்படுத்துபவர்கள் சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இது ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் நோய் அல்ல. கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடலில் ரத்தக்குழாயில் ஏற்படும் பாதிப்பினால் நோயின் தாக்கம் அதிகரிக்கிறது.
மருத்துவரின் பரிந்துரையின்றி ஸ்டீராய்டு மருந்து மாத்திரைகளை உட்கொள்பவர்களுக்கு இந்த நோய் ஏற்படுகிறது.
இதனை ஆரம்பகட்ட நிலையிலேயே அறிந்து கொள்ள கருப்பு பூஞ்சை நோயின் அறிகுறிகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கு தலைவலி, மூக்கடைப்பு, கருப்புநிற சளி, மூக்கு வாய் பகுதியில் கருப்பு புள்ளிகள் காணப்படுவது, கண்ணில் வலி அல்லது வீக்கம், ரெட்டை பார்வை, பல்வலி, பல் ஆடுதல் ஆகிய அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.
இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் முற்றிலும் குணப்படுத்த முடியும். அவ்வாறு இல்லாமல் கால தாமதமானால் இந்த கருப்பு பூஞ்சை நோய் மூக்கின் வழியாக மூளைக்கு பரவும் வாய்ப்பு அதிகமாகி உயிரிழப்பு கூட நேரிடலாம்.
இவ்வாறு அருண் கூறினார்.
புதுச்சேரியை அடுத்த வீராம்பட்டினம் பகுதியை சேர்ந்த தேவன் என்பவரது மனைவி எழிலரசி (வயது 62) கொரோனா தொற்று பாதிப்புக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
மருத்துவ பரிசோதனையில் இவருக்கு கருப்பு பூஞ்சை நோய் தாக்கி இருப்பது கண்டறியப்பட்டது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று காலை எழிலரசி பரிதாபமாக உயிரிழந்தார். இதன் மூலம் புதுவையில் கருப்பு பூஞ்சைக்கு முதல் பலி பதிவாகி உள்ளது.
புதுவையில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 37 பேர் ஜிப்மர் ஆஸ்பத்திரியிலும், ஒருவர் தனியார் ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவை கட்டுப்படுத்த மற்ற மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
புதுச்சேரியில் கொரோனா பாதிப்பால் பத்துக்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

கோரிமேடு பகுதியை சேர்ந்த 45 வயதான சசிபிரபா என்ற செவிலியர் கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
இவர் ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்துகளை மத்திய அரசிடமிருந்து புதுவை அரசு கேட்டுப் பெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தற்போது புதுவைக்கு 7 வெண்டிலேட்டர் கருவிகளை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதனை சுகாதாரத்துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோரிமேட்டில் உள்ள மருந்தகத்தில் நேற்று காலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கி, வெண்டிலேட்டர் கருவிகளை சுகாதாரத்துறை செயலாளர் அருணிடம் ஒப்படைத்தார். இதில் மாநில சுகாதார திட்ட இயக்குனர் ஸ்ரீராமலு மற்றும் அரசு மருந்தக பொறுப்பாளர் உடன் இருந்தனர்.
இதன்பின் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர் களிடம் கூறியதாவது:-
மத்திய அரசு இதுவரை 17 வெண்டிலேட்டர் கருவிகளை வழங்கி இருக்கிறது. அரசு மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.
இதுவரை 350 வெண்டிலேட்டர் மற்றும் 1,800 ஆக்சிஜன் படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தினமும் 9 ஆயிரத்திற்கும் அதிகமான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
ரெம்டெசிவிர் மருந்து மற்றும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்து மத்திய அரசிடம் இருந்து தேவையான அளவு பெறப்பட்டு இருப்பு வைக்கப்படுகிறது. அரசின் முயற்சியால் புதுச்சேரியில் கொரோனா பரவல் 50 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
கொரோனாவை கட்டுப் படுத்த மற்ற மாநிலங்களில் முழுமையான ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
சுகாதாரம் மற்றும் பிற துறைகளின் உதவியோடும் மக்களின் ஒத்துழைப்போடும் கொரோனா இல்லாத மாநிலமாக புதுச்சேரியை மாற்ற வேண்டும்.
தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதம். எனவே அனைவரும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். இதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.
அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தின்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 95 சதவீதம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் என்று தெரிய வந்திருக்கிறது.
ஏழை, எளிய மக்களின் பொருளாதாரம் பாதிக்கப் படக் கூடாது என்பதற்காகத்தான் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புதுச்சேரி:
புதுவையில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவியதை தொடர்ந்து ஏப்ரல் 26-ந் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல் படுத்தப்பட்டது.
காய்கறி, மளிகை, இறைச்சி உட்பட அத்தியாவசிய கடைகள் மட்டும் காலை 6 முதல் மதியம் 12 வரை திறக்க அனுமதிக்கப்பட்டது.
தமிழகத்தில் கடந்த 11-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் புதுவையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற நிலை ஏற்பட்டது.
புதுவை அரசு தொடர்ந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து வந்தது. தற்போது தமிழகத்தில் ஜூன் 7-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுவையில் கவர்னர் தமிழிசை தலைமையில் கொரோனா மேலாண்மை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க வலியுறுத்தப்பட்டது.
இதனையடுத்து புதுவையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 7-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பித்துள்ளார்.
இந்த ஊரடங்கில் மின்சாரம், குடிநீர் குழாய், நீர் சுத்திகரிப்பு, மோட்டார் பழுதுநீக்குதல் (ஒர்க்ஷாப்) போன்ற அடிப்படை தேவைகளை சுய தொழிலாக செய்பவர்களுக்கு கட்டுப்பாட்டில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசு சுகாதாரத்துறை 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முயற்சியில் உள்ளது.
இதற்கான முயற்சியாக பல்வேறு முகாம்கள் அமைத்து 45 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது. அதனைத்தொடர்ந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகள் தவிர 18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட இணையதளத்தில் முன்பதிவு தொடங்கி உள்ளது.
இதற்கு மக்கள் மிகுந்த வரவேற்பு அளித்துள்ளனர். இளம் வயதினர் ஆர்வத்துடன் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக்கொண்ட வண்ணம் உள்ளனர். இதய நோய் உள்ளவர்கள் அதற்கான சிகிச்சை எடுத்து கொள்பவர்கள், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை, ஆஸ்துமா, பக்கவாதம், சிறுநீரகம், கல்லீரல், டயாலிசிஸ், புற்று நோய், எச்.ஐ.வி., தல சீமியா, தசைநார் தேய்வு, மனநலம் குன்றியோர், மாற்றுதிறனாளிகள் ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை உள்ளது.
அவர்கள் எந்தவித தயக்கமும் பயமும் இன்றி அவர்களுக்கான முன்னுரிமையுடன் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்ள வேண்டும். தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களும் தடுப்பூசியை எடுத்துக் கொள்ளலாம்.
இந்த தகவலை சுகாதாரத்துறை செயலாளர் அருண் தெரிவித்துள்ளார்.






