search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    பா.ஜனதா மேலிட தலைவர்கள் நாளை புதுவை வருகை

    பா.ஜனதா மேலிட தலைவர்கள் சி.டி.ரவி, ராஜூ சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் நாளை புதுவைக்கு வருகின்றனர். அவர்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களோடு ஆலோசனை நடத்துகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணியின் முதல்-அமைச்சராக கடந்த 7-ந்தேதி ரங்கசாமி பதவியேற்றார்.

    என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா இடையே அமைச்சர் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால் கடந்த ஒரு மாதமாக இழுபறி நீடித்தது. இந்த நிலையில் பா.ஜனதா மேலிட தலைவர்களோடு ரங்கசாமி நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

    இதையடுத்து என்.ஆர். காங்கிரஸ், பா.ஜனதா இடையில் சமரச தீர்வு ஏற்பட்டுள்ளது. பாஜனதாவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர் பதவி வழங்க ரங்கசாமி சம்மதம் தெரிவித்தார்.

    இரு கட்சிகளும் புதிய அமைச்சர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் பதவியை பெறுவதில் இரு கட்சிக்குள்ளும் போட்டா போட்டி நிலவி வருகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பா.ஜனதா, ஆதரவு தரும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தின் முடிவில் மாநில தலைவர் சாமிநாதன், யாருக்கு என்ன பதவி என முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய தலைவர் நட்டா மற்றும் புதுவை பொறுப்பாளர்களுக்கு வழங்கி உள்ளோம் என தெரிவித்தார்.

    இதனிடையே பா.ஜனதா மேலிட தலைவர்கள் சி.டி.ரவி, ராஜூ சந்திரசேகர் எம்.பி. ஆகியோர் நாளை (வெள்ளிக்கிழமை) புதுவைக்கு வருகின்றனர். அவர்கள் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களோடு ஆலோசனை நடத்துகின்றனர்.

    தொடர்ந்து முதல்- அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசுகின்றனர். அப்போது பா.ஜனதா தரப்பில் அமைச்சர்கள் பட்டியலை ரங்கசாமியிடம் அளிக்கின்றனர்.

    அதே நேரத்தில் சபாநாயகர் தேர்தலில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளரையும் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    அமைச்சர்கள் பதவியேற்பு அடுத்த வாரம் இருக்கும் என தெரிகிறது. ஏனெனில் வருகிற 10-ந்தேதி அமாவாசை தினமாகும். மரணயோகம் என்பதால் அன்றைய தினம் பதவியேற்பு இருக்காது. 14-ந் தேதி நல்ல முகூர்த்த நாளாக இருப்பதால் அன்றைய தினம் என்.ஆர். காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுவை பொறுப்பாளரான நிர்மல்குமார் சுரானா காலில் ஏற்பட்ட காயத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இன்று புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன், சட்டமன்ற கட்சித்தலைவர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்தனர். அவர்களுடன் நிர்மல்குமார் சுரானா, அமைச்சர்கள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்தினார்.

    Next Story
    ×