search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரங்கசாமி
    X
    ரங்கசாமி

    புதுவை சபாநாயகர் தேர்தல்- பா.ஜனதா மேலிட தலைவர்கள் ரங்கசாமியுடன் சந்திப்பு

    சபாநாயகர் வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா வழங்கி உள்ளதால் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.
    புதுச்சேரி:

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா ஆட்சியை பிடித்துள்ளது.

    முதல்-அமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுள்ளார். கூட்டணி கட்சிகளான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா இடையே அமைச்சர்களை பங்கீடு செய்வதில் இழுபறி ஏற்பட்டது.

    ஒரு மாத காலம் நீடித்த இழுபறி முதல்-அமைச்சர் ரங்கசாமி பா.ஜனதா மேலிட தலைவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு பேசியதை தொடர்ந்து சுமூக தீர்வு ஏற்பட்டது.

    இதில் என்.ஆர்.காங்கிரசுக்கு முதல்-அமைச்சர் தவிர்த்து 3 அமைச்சர்களும், பா.ஜனதாவுக்கு சபாநாயகர், 2 அமைச்சர்கள் பதவி வழங்க உடன்பாடு ஏற்பட்டது.

    இதையடுத்து பா.ஜனதாவில் அமைச்சர் பதவி, சபாநாயகர் பதவி யாருக்கு? என்பது குறித்து கட்சி மேலிடம் ஆலோசித்து முடிவு செய்துள்ளது.

    பா.ஜனதா தரப்பிலான அமைச்சர்கள் பட்டியல் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் இன்று வழங்கப்பட்டது. இதற்காக பா.ஜனதா தேசிய தேசிய செயலாளர் சி.டி.ரவி, ராஜூசந்திரசேகர் எம்.பி. ஆகியோர் புதுவைக்கு வந்தனர்.

    அவர்கள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த ரங்கசாமியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர் அவரிடம் சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர், அமைச்சர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை அளித்தனர். பின்னர் பதவியேற்பு விழா தேதி குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

    என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா அமைச்சர்கள் ஒரேநாளில் பதவியேற்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். அதோடு முதல்-அமைச்சர் ரங்கசாமியை டெல்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தனர்.

    சபாநாயகர் வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா வழங்கி உள்ளதால் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என தெரிகிறது.

    பா.ஜனதா சார்பில் மணவெளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஏம்பலம் செல்வம் சபாநாயகர் வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அமைச்சர்களாக நமச்சிவாயம், ஜான்குமார் ஆகியோர் நியமிக்கப்பட உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
    Next Story
    ×