search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாராயணசாமி
    X
    நாராயணசாமி

    புதுவையில் கவர்னர் ஆட்சி- நாராயணசாமி குற்றச்சாட்டு

    கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில் அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் ஊரடங்கை அமல்படுத்த முடியும் என நாராயணசாமி கூறியுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த பல நடவடிக்கை எடுத்தாலும் அதன் தாக்கம் குறையவில்லை. கொரோனாவை கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியதை மாநில அரசு கண்டுகொள்ளவில்லை.

    புதுவையில் பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 5 மணிவரை ஊரடங்கு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. கொரோனா தொற்று பெரிய அளவில் பாதித்து வரும் நிலையில் அனைத்து துறையும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் ஊரடங்கை அமல்படுத்த முடியும்.

    செவிலியர்களுக்கு வழங்கும் கவச உடை தரமானதா? என அரசு கண்காணிக்க வேண்டும். செவிலியர்கள் 8 மணி நேரம் கவச உடை அணிகின்றனர். அரை மணி நேரம் அணிந்து சிறப்பாக உள்ளதாக கவர்னர் கூறுவது பொறுப்பற்ற செயல். பி.பி.இ. கிட் தொடர்பாக முழு விசாரணை நடத்த வேண்டும்.

    காங்கிரஸ் ஆட்சி காலத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்கப்பட்டது. தற்போது கொடுக்கும் உணவு தரமாக இல்லை என புகார் வந்துள்ளது.

    முதல்-அமைச்சர் செய்ய வேண்டிய வேலையை கவர்னர் செய்து கொண்டிருக்கிறார். எங்கள் ஆட்சி காலத்தில் இதே பிரச்சனை ஏற்பட்டது. ஆட்சியில் கவர்னர் தலையிடக்கூடாது என ஐகோர்ட்டில் தீர்ப்பு பெற்றோம்.

    புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா வெற்றி பெற்றாலும் கவர்னர்தான் ஆட்சி செய்கிறார். இதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்ல வேண்டும். கொரோனா தொற்றால் தனிமைப்படுத்திக்கொண்ட நேரத்தில் நிர்வாகத்தை கவனிக்க தவறிவிட்டார்.

    இவ்வாறு நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×